Skip to content
Home » உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

இயற்கைத் தேர்வு

எந்தப் பண்புகளை உடைய உயிரினங்கள் வாழவேண்டும் என்பதை இயற்கையே தேர்ந்தெடுப்பதுதான் இயற்கைத் தேர்வு என்றார் டார்வின். இதைப் புரிந்துகொள்வதற்கு விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது மனிதர்கள் செய்த விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.

விவசாயம் என்ற உற்பத்தி முறையைக் கண்டுபிடித்த மனிதர்கள், ஆயிரம் ஆண்டுகளாகக் காட்டில் இருந்த தாவரங்களையும் விலங்குகளையும் எடுத்து வந்து தங்களுக்கு உபயோகமான வகையில் வீட்டு உயிரினங்களாக மாற்றினர். இதை எப்படிச் செய்தனர்? காட்டு விலங்குகளை விவசாயிகள் இனப்பெருக்கம் செய்ய வைத்தனர். மியூட்டேஷன் காரணமாக அவை ஈன்றெடுத்த தலைமுறைகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன (மரபுவழி மாற்றம்). இவற்றில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்ட உயிரினங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மீண்டும் இணைய அனுமதித்தனர். இதேபோன்று தொடர்ந்து செய்த நிலையில், அசலான காட்டு வகை உயிர்கள் மனிதர்களுக்குத் தேவையான வகையில் வீட்டு உயிர்களாக மாறின. மனிதர்கள் உண்பதற்கும் வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் மாற்றப்பட்டன. இதைத்தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் (Selective Breeding) என்கிறோம்.

மேற்கூறிய செயல்முறை மெதுவானது. ஆனால் எளிமையானது. இயற்கையாகவே சாத்தியப்படக்கூடியது. ஒரு தாவரம் நூறு விதைகளைத் தருகிறது என்றால், அவற்றில் இருந்து முளைக்கும் செடிகள் தாய் செடியைப் போலவே இருந்தாலும் சிறிது வேறுபாட்டைக் கொண்டிருக்கும். சில செடிகளின் இலைகள் சிறிய அளவில் இருக்கலாம். சில செடிகளில் கிடைக்கும் காய்கள் கசப்பாக இருக்கலாம். சில செடிகள் வேறு நிறத்தைப் பெற்றிருக்கலாம். சிலவற்றின் இலைகள் இனிப்பாக இருக்கலாம். செடிகளை விதைக்கும் விவசாயிகள், தாங்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் மாற்றங்களைக் கொண்ட செடிகளை மட்டும் தேர்ந்தெடுப்பர்.

உதாரணமாக இனிப்பான இலைகளைக் கொண்ட செடிகளின் விதைகளை மட்டும் விவசாயிகள் தேர்ந்தெடுத்து மீண்டும் மீண்டும் விதைத்து அறுவடை செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இது தொடர்ச்சியாக நடைபெறும்போது அந்தப் பண்பு மட்டும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு இனிப்புச் சுவை மிக்க இலைகளை உடைய காய்கறியாகவே மாறிவிடுகிறது.

நாம் இன்று பார்க்கும் காலிஃபிளவர், முட்டைகோஸ், ப்ரோகோலி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் எல்லாம் இங்கிலாந்தில் கடற்கரையோரம் காணப்பட்ட ஒரு வகையிலான செடியில் இருந்து தோன்றிய மாறுபாடுகள்தான். அந்தச் செடியில் காணப்பட்ட மாற்றங்கள் விவசாயிகளால் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு இந்தக் காய்கறிகளாக மாற்றம் அடைந்துள்ளன. இதேபோல்தான் நாம் பார்க்கும் வெள்ளைக் கத்திரிகை, ஊதா கத்திரிகாய், கேரட், முள்ளங்கி ஆகிய அனைத்தும் உருவாக்கப்பட்டன. இதே முறையில் ஓநாய்களை மனிதர்கள் எப்படி நாயாக மாற்றினார்கள் என்பதையும் நாம் ஏற்கெனவே பார்த்தோம் இல்லையா?

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த விவசாயிகள் தானாகவே புதிதாக எந்தக் காய்கறி வகைகளையும் படைக்கவில்லை. தன்னிச்சையாக நடைபெற்ற மரபுவழி மாற்றம்தான் புதிய பண்புகளை அந்தச் செடிகளில் உருவாக்கி இருக்கிறது. இந்த விவசாயிகள் செய்தது எல்லாம் தங்களுக்குப் பிடித்த பண்புகள் கொண்ட செடிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை இனப்பெருக்கம் செய்ய அனுமதித்ததுதான். அதனால் அந்தக் குணங்கள் மட்டும் பிரதானமாக அதிகரித்தன. மற்ற வேறுபாடுகள் காணாமல் போயின. இதே தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தைத்தான் இயற்கையும் செய்கிறது என்றார் டார்வின். இயற்கையும் இதுபோல சில வகைப் பண்புகளைக் கொண்ட உயிரினங்களை மட்டும் வாழ்வதற்குத் தேர்ந்தெடுக்கிறது. மற்றவற்றை அழியவிடுகிறது. இதன் பெயர்தான் இயற்கைத் தேர்வு என அறிவித்தார். இயற்கைக்கும் தேர்வு செய்யும் ஆற்றல் உண்டு என்பதை டார்வின் நிரூபித்தார்.

இயற்கை எப்படித் தேர்வு செய்யும்? இயற்கைக்கு ஒரு விவசாயியைப்போல சிந்திக்கும் மூளை இருக்கிறதா என்ன? இயற்கையின் சூழலே அதன் சிந்திக்கும் சக்தியாக இருக்கிறது. இயற்கை வாழ்வதற்கு ஆபத்தான இடம். அங்கே சுற்றி இருக்கும் அத்தனை விஷயங்களும் ஓர் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. காட்டில் வாழும் ஓர் உயிருக்கு எந்தக் கிருமி, எந்த விலங்கு தன்னைத் தாக்கும் எனத் தெரியாது. விலங்குகள் மட்டும் அல்ல, அதிக வெப்பம்கூட ஓர் உயிரைப் பறிக்கும். அதீதக் குளிர்ச்சி வேறோர் உயிரைக் கொல்லும். இந்த அச்சுறுத்தல் எந்த உயிரினம் வாழவேண்டும், எது வாழக்கூடாது என்பதைத் தேர்வு செய்கிறது என்கிறார் டார்வின்.

ஒரு விலங்கு பல்வேறு பண்புகளை உடைய குட்டிகளை இடுகிறது என்றால், அந்தக் குட்டிகளில் எது இயற்கையின் ஆபத்தைத் தாங்கும் பண்புகளைப் பெற்றிருக்கிறதோ அது பிழைத்துக்கொள்ளும். எந்தக் குட்டிகளால் ஆபத்தைத் தாங்க முடியவில்லையோ அது இறந்துவிடும். பிழைத்த குட்டிகள் இனப்பெருக்கம் செய்து அதன் பண்புகளை அடுத்தத் தலைமுறைக்கு அனுப்பும்போது அத்தகைய பண்புகளை உடைய குட்டிகள் மட்டும் அதிகரித்து வாழத் தொடங்குகின்றன. இப்படியாக இயற்கையே எந்த உயிரினங்கள் உயிர் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்பதை முடிவு செய்துவிடுகிறது.

நாம் ஏற்கெனவே பார்த்த ஆமைகளின் எடுத்துக்காட்டில் உயரமான புற்களை உடைய தீவுகளில் முட்டையிடும் ஆமைகளின் குஞ்சுகளில் தன்னிச்சையாகவே சில குட்டிகள் கொஞ்சம் அகலமான கழுத்தைக் கொண்டவையாகவும், சில குட்டிகள் குறுகிய கழுத்தைக் கொண்டவையாகவும் இருந்திருக்கும். சிறிய கழுத்துகளை உடைய குட்டிகள் உணவு கிடைக்காமல் இறந்துவிடும் சூழலில், நீண்ட கழுத்துடைய ஆமைகள் பிழைத்துக்கொள்கின்றன. அவற்றின் பண்புகள் அடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு அந்தத் தீவு முழுவதும் நீண்ட கழுத்தை உடைய ஆமைகள் மட்டுமே வாழ வழி செய்கிறது. இப்படித்தான் புறச்சூழலுக்குப் பொருந்திய மாற்றங்களை உயிரினங்கள் பெற்றிருக்கின்றன. இதுதான் உயிரினங்களின் தன்னிச்சையான மாற்றம் சிக்கலான, ஒழுங்கமைப்புக் கொண்ட அமைப்பாக மாறவும் காரணமாகிறது என்று புரிய வந்தது. இப்படித்தான் குதிரையின் தோற்றத்தில் இருந்த ஒட்டகச் சிவிங்கிகள் உயரமான கழுத்தைப் பெற்றன. எலி அளவு இருந்த பாலூட்டி யானையாக மாறியது. டைனோசராக இருந்த ஊர்வன இறக்கை முளைத்து வானில் பறக்கும் பறவைகளாகின என்கிறார் டார்வின். லமார்க் சொல்வதுபோல அந்த உயிரினங்கள் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறவில்லை. புறச்சூழலே எந்தப் பண்பு வாழவேண்டும் என்பதைத் தீர்மானித்ததுமூலம் பல வகை உயிரினங்களைப் படைத்துள்ளது. இதுதான் பொது மரபுவழிக் கொள்கைக்கான ஆதாரம்.

இங்கே ஒரு கேள்வி வரலாம். டார்வின் சொல்வது நிஜம் என்றால் ஒரே வகையான பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் மட்டும்தான் நிரந்தரமாக இயற்கையில் வாழ முடியுமா? நிச்சயமாகக் கிடையாது. நம்முடைய இயற்கை மாறக்கூடியது. அதற்கு ஏற்றாற்போல மாற்றம் அடையும் பண்புகள் மட்டும்தான் உயிர் பிழைக்கும். புறச்சூழல் மாறிய பிறகு பழைய பண்புகள் தேவை இல்லை என்றால் அவை நீக்கப்பட்டுவிடும். ஒரு காலத்தில் இருந்த டைனோசர்கள் பிறகு வாழத் தகுதியற்ற உயிரினங்களாக மாறியது இதனால்தான். புறச்சூழலுக்கு ஏற்றாற்போல் பண்பு மாற்றங்கள் தொடரும்போது அது வேறு உயிரினமாகவே பரிணமித்து விடுகிறது. இந்தப் பார்வையை இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்வைத்தது மூலம் டார்வின் ஊர்ஜிதப்படுத்தினார்.

டார்வின் இந்தக் கருத்தை முதன்முதலில் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முன்வைத்தார். அதன்பின் இந்தச் செயல்பாடு பல்வேறு வகையில் இயற்கையாகவும் சோதனைக்கூடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் கருத்தாகத் தொடங்கிய அவரது கண்டுபிடிப்பு, இன்று கண்டு உணரும் உண்மையாக மாறியுள்ளது. இன்று பொது மரபுவழிக் கொள்கையை நாம் பல ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்கிறோம். புதைப் படிமங்கள் பற்றிய ஆய்வுகள் ஓர் உயிரினம் இன்னொன்றாக மாறி இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதுகுறித்து இன்னொரு பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

மரபணுக்கள், டி.என்.ஏ பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் உயிரினங்களுக்கு இடையே உள்ள மரபணுத் தொடர்ச்சியை வைத்துப் பொது மரபுவழிக்கொள்கை உண்மைதான் என்று நிறுவுகிறது. இதேபோல ஒப்பீட்டு உடற்கூறியல் (Comparative Anatomy), உயிரினங்களின் கரு வளர்ச்சியின் ஒப்பீடு (Embryology & Development), உயிர்வேதியியல், உயிரினங்களின் பன்முகத்தன்மை (Species Distribution) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நாம் கண்டறிந்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கூறிய பொது மரபுவழிக் கொள்கை நிரூபிக்கப்பட்ட உண்மைதான் என்ற முடிவுக்கு வருகிறோம். இப்படியாக டார்வினின் கண்டுபிடிப்பு, இயற்கை குறித்த புரிதலை பெரிய அளவில் விரிவுப்படுத்துகிறது.

இப்போது மேலே சொன்னத்தை மீண்டும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். இயற்கைத் தேர்வு என்றால் என்ன? உயிரினங்களில் தன்னியல்பாக, சீரற்ற முறையில் நடைபெறும் பரிணாம மாற்றத்தில், எது நீடித்து இருக்க வேண்டும், எது இருக்கக்கூடாது என்பதை இயற்கை சீரான, ஒழுங்குமுறையின் அடிப்படையில் தேர்வு செய்கிறது. மரபுவழி மாற்றத்தின்மூலம் புதிய பண்புகள் தன்னியல்பாகத் தோன்றுகின்றன. ஆனால் இயற்கை கவனமாக இதில் எந்தப் பண்பை வைத்துகொள்ள வேண்டும் என முடிவு செய்கிறது. இயற்கைக்கு ஏதுவான மாற்றங்கள் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து தக்கவைக்கப்படுகின்றன. இயற்கைக்கு ஒவ்வாத பண்புகள் உடனே அகற்றப்படுகின்றன. இந்த எளிமையான, தொடர்ந்து நடைபெறும் செயல்பாட்டினால், வியக்கத்தக்கவகையில் சிக்கலான அதேசமயம் அழகான உயிர்களை படைக்கும் ஆற்றலை இயற்கைப் பெற்றிருகிறது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *