டார்வின் தன் கோட்பாட்டில் ஓர் உயிர் வாழ்வதற்கான காரணிகளில் அதன் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது என்று வலியுறுத்தியிருக்கிறார். ஓர் உயிரினம், அது வாழும் நிலப்பரப்பு, பருவநிலை, சக உயிரினங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களைக் கொண்டிருக்கிறது என்கிறார் டார்வின். உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துழைக்கும் வகையில்தான் பரிணாம மாற்றம் அடைகின்றன. இதன்மூலம் உயிர்வாழ்வதற்கு ஒன்றை மற்றொன்று சார்ந்துதான் இருக்கின்றன.
உதாரணமாகக் கடல் சாமந்தி (Sea Anemones) எனப்படும் கடல்வாழ் உயிரினத்தை எடுத்துக்கொள்வோம். அந்த உயிரினம் சிறிய கடல் உயிர்களை வேட்டையாடும் தன்மை கொண்டது. தன் எதிரிகளைக் கூர்மையான விழுதுகளால் தாக்கி வீழ்த்தக்கூடியது. ஆனால், தாமரைக்காத்தான் அல்லது கோமாளி மீன் (Clown Fish) எனப்படும் ஒரு வகை மீன் மட்டும் கடல் சாமந்தியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் எதிர்ப்புணர்வைக் கடந்த காலங்களில் ஏதோ ஒரு கட்டத்தில் பரிணாம வளர்ச்சி மூலம் பெற்றுவிட்டது. இதனால் அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய அந்த மீன்களால் முடிகிறது.
சில தாமரைக்காத்தான்கள் கடல் சாமந்தியைச் சார்ந்து வாழும் தன்மையையும் உருவாக்கிக் கொண்டன. தன் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க, கடல் சாமந்தியை மறைவிடமாக பயன்படுத்தி வருகின்றன. இதற்குப் பிரதிபலனாக அந்தச் கடல் சாமந்திக்குத் தேவையான உணவு தாமரைக்காத்தான்களின் கழிவுகள்மூலம் கிடைக்கின்றன. இதை நாம் இணைவாழ்வு (Symbiosis) என்கிறோம். இந்த இணைவாழ்வு ஏன் சாத்தியமானது என வரும் பகுதியில் பார்க்கலாம். இப்போது ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ளலாம். பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் முன்பு எதிரியாக வாழ்ந்த உயிரினங்கள், இப்போது இயைந்து வாழ்கின்றன. இப்போது நாம் கடல் பகுதியில் இருந்து கடல் சாமந்திகளை அகற்றிவிட்டால், அது அந்தப் பகுதியில் வாழும் தாமரைக்காத்தான்களின் அழிவுக்கும் காரணமாகிவிடும். இதுதான் விஷயம்.
இன்று உலகம் முழுவதும் புல்வெளிகள் அழிந்து, பாலை நிலங்கள் அதிகரித்து வருவதாகச் சுற்றுச்சூழல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது எப்படி நிகழ்கிறது என்ற சரியான புரிதல் சமீப காலத்துக்கு முன்புவரை யாருக்கும் இல்லை. ஜிம்பாப்வேவிலும் அதேபோன்ற ஒரு நிலைமை வந்தது. அதிக அளவில் காட்டு மந்தை விலங்குகள் புல்வெளிகளை மெய்வதால் தாவரங்கள் அழிந்து, பாலை நிலங்கள் அதிகரிக்கின்றன என்று சொல்லப்பட்டது. இதனால் புல்வெளி நிலங்களுக்கு அருகே வாழ்ந்த மனிதர்கள் காட்டு மந்தைகளை வேட்டையாடிக் குவித்தனர். அதற்கு முன்பே காட்டு மந்தைகளின் மீதான வேட்டை தொடங்கி நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இருந்தாலும் பாலை நிலமாக மாறும் நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு அரசாங்கமே அவற்றை வேட்டையாட அனுமதி அளித்தது. கிட்டத்தட்ட 90 சதவிகித காட்டு மந்தைகள் அழிக்கப்பட்டன. ஆனாலும் புல்வெளிகள் அழிவது குறையவில்லை. அதிகரிக்கவே செய்தன. என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அரசாங்கம் குழம்பியது.
அப்போது ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஆலன் சவோரி (Allan Savory) என்ற உயிரியலாளர் விலங்குகள், தாவர வகைகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். பரிணாம வளர்ச்சியில் அவருக்கு இருந்த புரிதல், தாம் ஆய்வு செய்து வந்த உயிரினங்களின் ஆரோக்கியத்தை ஒரே சங்கிலியில் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியது. அவர், புல்வெளிகளின் அழிவு குறித்த ஆய்விலும் தன்னை இணைத்துகொண்டார். அவர் நிலைமையை ஆராய்ந்துவிட்டு புல்வெளிகளின் அழிவுக்குக் காட்டு மந்தைகளின் அழிவே காரணம் என்று கூறினார்.
ஆனால் அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. காட்டு மந்தைகள்தான் புல்வெளியில் உள்ள தாவரங்களை உண்டு அழிக்கின்றன. அதனால்தான் பாலை நிலங்கள் ஏற்படுகின்றன. இவர் என்னவென்றால் காட்டு மந்தைகளின் அழிவுதான் புல்வெளிகள் அழிவதற்கு காரணம் என்று புதுக் காரணம் கூறுகிறாரே என்றனர். ஆனால் சாவேரி தனது முடிவில் உறுதியாக இருந்தார். சரி, இப்போது புல்வெளி நிலங்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவரிடம் கேட்டது. ஒன்றும் செய்ய வேண்டாம், அந்த நிலங்களில் கால்நடைகளை மீண்டும் கொண்டு வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றார் சாவேரி. யாருக்கும் அவர்மீது நம்பிக்கை இல்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாமே என அவர் சொன்னதைப் போலவே செய்தனர்.
சாவேரியின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கால்நடைகளை அழிந்துவரும் புல்வெளி நிலப்பரப்புக்கு கொண்டு வந்தது. அவற்றை மந்தைகளாக மேயவைத்தது. முன்பு இந்தப் பகுதியில் வாழ்ந்த காட்டு மந்தைகள் எப்படி இயங்கி இருக்குமோ, அதே வகையிலான குறிப்பிட்ட நடத்தைகளைக் கால்நடைகளையும் பின்பற்ற வைத்தனர். இங்குதான் ஆச்சரியமான ஒரு நிகழ்வு நடைபெற்றது. இந்த நடவடிக்கையின் விளைவாகப் பாலைநிலங்கள் ஒரே வருடத்தில் மீண்டும் புல்வெளிகளாகக் குணமடைய தொடங்கின. மூன்று வருடங்களில் அவை பழைய நிலைக்குத் திரும்பின. பாலை நிலங்கள் செழித்து வளர்ந்த புல்வெளிக் காடுகளாக மாறின. இது எப்படி நடந்தது என்று சாவேரியிடம் கேட்டபோதுதான் அவர் இந்த விஷயத்துக்கு பின் இருக்கும் இயற்கையின் இயங்கியலை விளக்கினார்.
மேய்ச்சல் விலங்குகளால்தான் புல்வெளிகள் அழிகின்றன என்ற பார்வை தவறு. பாலை நிலங்கள் அதிகரிப்பதற்குக் காட்டு மந்தைகளின் அழிவே காரணம். புல்வெளிகளையொட்டிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியபோது அங்கே இடம்பெயர்ந்த மனிதர்கள் உணவுகளுக்காக மந்தைகளை வேட்டையாடியுள்ளனர். இதனால் அந்த விலங்குகள் அழியத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாகத்தான் புல்வெளிகளும் அழிந்துள்ளன. இதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, ஒவ்வோர் உயிரினமும் அதன் சூழலில் மற்ற உயிரினங்களுடன் கூட்டு வாழ்க்கையை மேற்கொள்கிறது. அங்கு ஒரு வகை உயிரினம் அழிந்தால்கூட, அது அங்குள்ள மற்ற உயிரினங்களையும் பாதிக்கிறது. நமது வழக்கில் கால்நடைகளின் அழிவு, அதனை நம்பி இருந்த தாவரங்களைப் பாதித்துப் பாலை நிலம் உருவாக காரணமாக அமைந்தது என்றார்.
வறண்ட நிலங்களில் வாழும் தாவரங்கள் மேய்ச்சல் விலங்குகளையே நம்பி இருக்கின்றன. மேய்ச்சல் விலங்குகள் கால்களால் உதைத்து மண்களை உழுகின்றன. அவற்றின் சாணமும் சிறுநீரும்தான் அந்தத் தாவரங்களுக்கு உரங்களாகின்றன. தாவரங்களில் காணப்படும் அதிகப்படியான இலைகளை அவை உண்டுவிடுவதால், மழை பெய்யும்போது புதிய தளிர்கள் வளர்வதற்கும் கால்நடைகள் உதவி புரிகின்றன. புல்வெளி நிலங்களுக்கும், மேய்ச்சல் விலங்குகளுக்கும் இடையேயான உறவு இது. அதனால் இப்போது நாம் கால்நடைகளைக் கொண்டு வந்தவுடன் தாவரங்களும் வளரத் தொடங்கிவிட்டன. நாம் அந்தச் சூழல்மண்டலத்தை மீட்டெடுத்துவிட்டோம் என்றார்.
இந்த அதிசயமும் டார்வினின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றது. உயிரினங்களுக்கு இடையேயான பரிணம உறவு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருப்பது, எதிர்கால சந்ததனியினருக்காகச் சுற்றுசூழலைக் காப்பதற்கும் உதவி புரிகிறது. இப்போது நாம் மேல் கேட்ட அதே கேள்விக்குத் திரும்புவோம். பரிணாம வளர்ச்சி கோட்பாடுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவை இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு சுவாரஸ்யமானது என்பதைத் தாண்டி அவற்றின்மூலம் நாம் அறிந்த ஞானம்தான் இந்தப் பூமியில் உயிரினங்கள் பிழைத்திருப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
(தொடரும்)