Skip to content
Home » வளர்ச்சியின் கதை #2 – வளர்ச்சியின் அடிப்படை

வளர்ச்சியின் கதை #2 – வளர்ச்சியின் அடிப்படை

வளர்ச்சியின் அடிப்படை

தொடரின் அறிமுகக் கட்டுரையில் பார்த்ததைப் போல, வளர்ச்சி என்கிற கருத்தாக்கம் மிகவும் சமீபத்திய ஒன்றாக இருப்பினும், வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல; சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி நடந்தேறியதற்கான சுவடுகள், சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன.

அப்படி என்ன நடந்தது 7,000 ஆண்டுகளுக்கு முன்பு? உலகின் பிரதான நதிகளான நைல், யூப்ரடிஸ், டைக்ரிஸ், சிந்து போன்றவற்றின் கரையோரங்களில் நகரங்கள் உருவாகத் துவங்கியிருந்தன. அப்படி உருவான நகர நாகரிகங்களில் சுமேரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், சிந்து நதி நாகரிகம் போன்றவை முக்கியமானவை. வளர்ச்சி என்ற ஒன்று நிகழாமல், பிற விலங்குகளைப் போல் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்து கொண்டிருந்த மனிதச் சமூகம் திடீரென்று விண்ணை முட்டும் பிரமிடுகளையும் துறைமுகங்களையும் கல் வீடுகளையும் எண்ணிலடங்கா நகரங்களையும் கட்டி எழுப்பியிருக்காது இல்லையா? அப்படியென்றால் மனித சமூகத்தின் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் என்னதான் நிகழ்ந்தது?

படம் 1: பண்டைய உலகின் மிக முக்கிய நகர-நாகரிகங்கள்
படம் 1: பண்டைய உலகின் மிக முக்கிய நகர-நாகரிகங்கள்

இந்தக் கேள்விக்கு நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பதில், விவசாயம். விதையைப் பூமியில் புதைத்தால் அது வளரும் என்பதை மனிதர்கள் இப்போது அறிந்துகொள்கின்றனர். காட்டுச் செடிகளாக இருந்த கோதுமை, பார்லி, நெல் போன்றவற்றை வளர்ப்பு தாவரங்கள் ஆக்குகின்றனர். இதன்மூலம் எப்போதும் உணவிற்கு இயற்கையைச் சார்ந்தே இல்லாமல், தமக்கான உணவை தானே உற்பத்தி செய்யும் வழிமுறைகளை மனித சமூகம் கற்றுக்கொள்கிறது. உலகம் முழுதும் ஆங்காங்கே நடைபெற்ற இந்த நிகழ்வை ‘விவசாயப் புரட்சி’ என்கின்றனர். எனில் விவசாயம்தான் வளர்ச்சிக்கான அடிப்படையாய் இருந்திருக்க வேண்டும் என்று நாம் அனுமானிக்கலாம். இவ்வாறு அனுமானித்து விவசாயத்தை வளர்ச்சியின் அடிப்படையாய் வைத்து பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் தொல்லியல் அறிஞர்களின் கூற்றுப்படி மேற்கூறிய விவசாயப் புரட்சி நடந்தது சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு (அதாவது பொயுமு 10,000). நகரங்கள் உருவானதோ பொயுமு 5000 வாக்கில்தான் (பல இடங்களில் இன்னும் தாமதமாக நிகழ்ந்தது). இரண்டு நிகழ்வுக்கும் 5,000 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. விவசாயப் புரட்சி வளர்ச்சிக்கான அடிப்படையாய் இருக்குமாயின், வளர்ச்சி நடைபெற ஏன் 5,000 ஆண்டுகள் ஆனது? இடைப்பட்ட 5,000 ஆண்டுகளில் வேறு ஏதோ நிகழ்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனைக் கண்டறிய நாம் மேற்சொன்ன நகர நாகரிகங்களில் ஒன்றினை எடுத்துக்கொள்ளலாம்.

உலகின் பழமையான நகர நாகரிகங்களில் ஒன்றான இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் நிலைபெற்றிருந்த ‘சிந்துநதி நாகரிகத்தை’ எடுத்துக்கொள்வோம். இது பொயுமு 2600 முதல் பொயுமு 1900 வரையென சுமார் ஏழு நூற்றாண்டுகள் நகர நாகரிகமாக நிலைபெற்றிருந்தது. ஹரப்பா, மொஹஞ்சதாரோ, காலிபங்கன், லோத்தல் போன்ற அன்றைய உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற நகரங்கள் இங்கு இருந்தன. ஆனால் திடீரென 1900 ஆண்டு வாக்கில் இந்த நாகரிகம் சரிவைக் கண்டது. ஒரு ஐம்பது, நூறு ஆண்டுகளுக்குள் இந்த நாகரிகத்தின் பெரும்பான்மையான நகரங்கள் காலியாகி விட்டதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிக் குறுகிய காலத்தில் இந்த நாகரிகம் வீழ்ந்ததன் காரணம் என்ன? இதற்குப் பல கோட்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணங்களைக் கூறுவன.

படம் 2: சிந்துநதி நாகரிகத்தில் பொயுமு 1900க்குப் பின் காணாமல் போகும் நகரங்கள்
படம் 2: சிந்துநதி நாகரிகத்தில் பொயுமு 1900க்குப் பின் காணாமல் போகும் நகரங்கள் (வெள்ளை புள்ளிகள்). ஆனால் கிராமங்கள் (சிவப்புப் புள்ளிகள்) எண்ணிக்கை குறைந்தாலும் தொடர்ந்து இயங்குகின்றன.

அப்போது மத்திய ஆசியாவில் மேய்ப்பர் சமூகமாக இருந்த ஆரியர்களின் வருகை (அல்லது படையெடுப்பு)1, உள்நாட்டுக் கலகங்கள், பருவநிலை மாற்றத்தினால் குறைந்து போன மழைப்பொழிவின் அளவு, வறட்சி எனப் பல்வேறு காரணங்கள் இவற்றுள் அடங்கும். தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம், பொயுமு 2000 ஆண்டுவாக்கில் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பிரதேசம் கண்ட கடும்வறட்சி2. பல்வேறு காரணிகளால் பருவமழை தொடர்ச்சியாகப் பொய்த்ததனால் இந்த வறட்சி நிகழ்ந்திருக்கிறது.

அன்றைய காலகட்டத்தில் நீர் மேலாண்மையை மிகத் தீவிரமாக செயல்படுத்திய நகரங்கள் சிந்துநதி நாகரிகத்தின் நகரங்கள்தான். இருப்பினும் ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாமல் சிந்துநதி நாகரிக நகரங்கள் ஒவ்வொன்றாக வீழ்கின்றன, கைவிடப்படுகின்றன. இந்நகரங்களில் இருந்த பலர் கங்கைச் சமவெளிக்கும் இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளுக்கும் இடம்பெயர்கின்றனர். இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், சிந்துநதி நகரங்கள்தான் காலியானதே தவிர, கிராமங்கள் அடுத்து சில நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருந்திருக்கின்றன. (காண்க படம் 2)

வளர்ச்சியின் அடிப்படை:

எதற்காக வளர்ச்சியின் அடிப்படையை அறிவதற்கு நாம் ஒரு நாகரிகத்தின் வீழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்? காரணம், வீழ்ச்சியில்தான் அதன் உருவாக்கத்தின் அடிப்படையைக் கண்டடைய முடியும். அவ்வாறு அறிஞர்கள் கண்டடைந்த ஒரு அடிப்படைக் காரணி: உபரி! (Surplus).

உபரி என்பது உற்பத்தி நடைபெறுவதால் உருவாவதுதான். உதாரணமாக விவசாய உற்பத்தியை எடுத்துக்கொண்டால், நிலம், உற்பத்தி சாதனங்கள் (ஏர், அரிவாள், ஏற்றம்) போன்றவற்றுடன் மனித உழைப்பும் சேர்கையில் விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் தேவைக்கு போக மிச்சம் இருப்பது உபரி எனப்படுகிறது. இது மிகவும் சுருக்கமான விளக்கம்தான். உற்பத்தி என்னும் செயல்பாடு (அது விவசாய உற்பத்தியாயினும் சரி, பிற வகையானதாக இருப்பினும் சரி) வளர்ச்சியின் முக்கியக் காரணிதான் எனினும், அதனையும்விட மிக முக்கிய தவிர்க்கமுடியாத காரணியாக இருப்பது உற்பத்தியால் உருவாகும் உபரி என்கின்றனர் அறிஞர்கள்.

படம் 3: உற்பத்தியில் உபரியின் உருவாக்கம்
படம் 3: உற்பத்தியில் உபரியின் உருவாக்கம்

சிந்து நதி நாகரிகத்தின் வீழ்ச்சியைப் பார்ப்போமானால், சிந்துநதி நகரங்களுக்குத் தமது விவசாய உற்பத்தியின் உபரியை அனுப்பிக்கொண்டு இருந்த கிராமங்களால் பருவமழை பொய்த்துப்போனதனால் தொடர்ந்து அனுப்ப இயலவில்லை. இந்த உபரி இல்லாமையால்தான் சிந்துநதி நகரங்கள் வீழ்கின்றன. கிராமங்களுக்குத் தேவையான தன்னிறைவான உற்பத்தி நடந்ததால் கிராமங்கள் தொடர்ந்து இயங்கியிருக்கின்றன. கட்டுரையின் துவக்கத்தில் ‘முதல் விவசாயப் புரட்சிக்கும்’ ‘முதல் நகரப் புரட்சிக்கும்’ இடையிலான ஐயாயிரம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் இதுதான் பதில்.

உபரியின் உருவாக்கம் தான் வளர்ச்சியின் துவக்கத்தை, உற்பத்தி துவங்கியும் 5,000 வருடங்கள் (சில இடங்களில் அதற்கும் மேலாக) காத்திருக்கச் செய்திருக்கிறது. அதாவது விவசாயம் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் உபரியை உருவாக்கும் உற்பத்தியை எட்டுவதற்கும் அதன்மூல நகரங்களைக் கட்டமைக்கவும் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

உபரியின் உருவாக்கம்:

விவசாய உற்பத்தி துவங்கி பல்லாண்டுகளாகத் தம் தேவைக்கு அதிகமான உபரியைச் சமூகத்தால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதற்கு உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடையாமல் இருந்தது, அதற்கான தொழில்நுட்பம் இல்லாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தன. உபரியின் உருவாக்கத்தை அடிப்படையாய் வைத்து இந்த 5,000 ஆண்டுகளை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார் ஆஸ்திரேலிய தொல்லியல் ஆய்வாளர் கார்டன் சைல்ட் (Gordon Childe). ஒவ்வொரு பகுதியின் கால வரையறை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறது.

  • முதல் காலகட்டத்தில் விவசாயமே பகுதி நேரம்தான். வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் போன்றவற்றினால் முழுமையாகாத உணவு தேவையை விவசாயம் சிறிது பூர்த்திசெய்கிறது. இந்தக் காலத்தில் மனிதர்கள் முழுநேர வேட்டையாடிகளாகவும் பகுதி நேர விவசாயிகளாகவும் இருந்தனர். வேட்டை ஆயுதங்களே இந்தக் காலத்தில் முதன்மையான கருவிகள்.
  • இரண்டாம் காலகட்டத்தில் விவசாயம் தன்னிறைவான விவசாயமாக, ஒரிடத்தில் நிலைப்பெற்ற விவசாயமாக மாறுகிறது. வேட்டையும் உணவு சேகரிப்பும் பகுதி நேரம் ஆகிறது. அல்லது நிலத்தைத் திருத்தி விவசாயத்திற்கு மாற்றமுடியாத குழுக்கள் மட்டும் தொடர்ந்து வேட்டையாடுகின்றன. இன்னொருபுறம் விவசாய உற்பத்தி முக்கிய உணவாக இந்தக் காலத்தில் மாறுகிறது. தன்னிறைவான, ஒரே இடத்தில் நிரந்தரமாக நிலைபெற்ற கிராமங்கள் உருவாகின்றன.
  • மூன்றாம் காலகட்டத்தில்தான் விவசாயத்தில் உற்பத்தி உபரி உருவாகிறது. அதாவது, தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதால் மிஞ்சுவதை வருங்காலத்திற்கு சேமித்துவைக்கும் வழக்கம் உருவானது. இந்தச் சமயத்தில்தான் ‘பானைகள்’ உற்பத்தி செய்யப்படுகின்றன. தொல்லியலில் பானைகளின் இருப்பு உபரி உற்பத்தியின் துவக்கத்தைப் பறைசாற்றும் ஒன்று. இதன் அளவு அதிகரித்து நகர நாகரிகங்களில் தானியக் கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள் கட்டமைக்கப்பட்டன. உபரியானது கிரமாங்களில் இருந்து சேகரித்து வந்து, இங்கு சேமிக்கப்பட்டு நகரங்களில் பயன்படுத்தப்பட்டது. எந்த நகர நாகரிகங்களும் பானைகளும், சேமிப்புக் கலன்களும், தானியக் கிடங்குகளும் இல்லாமல் இருக்காது.
படம் 4: அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படும் பானை
படம் 4: அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படும் பானை

உபரி உருவானதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. சில இடங்களில் மண்ணின் தன்மை, மழையின் அளவு, பயன்பாட்டில் உள்ள கருவிகள், அவற்றின் உலோகத் தன்மை போன்று பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த உபரியை அடிப்படையாய் வைத்துதான் மனித சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் உற்பத்தியில் இருந்து விலகி வாணிபம், மேலாண்மை, போக்குவரத்து, கைவினை பொருட்கள் உற்பத்தி போன்ற பிற தொழில்களை மேற்கொள்ள முடிந்தது. இதனால் பல்வேறு தொழில்களில் ஈடுபடும், பல்வேறு குழுக்களை கொண்ட மனித சமூகம் உருவாகிறது. இந்தத் தொழில் பிரிவுகள்தான் நாகரிகத்தின் அடிப்படை என்கின்றனர் அறிஞர்கள். ஆகவே இந்த உபரியில் இருந்துதான் வளர்ச்சி நிகழத் தொடங்குகிறது. வளர்ச்சியின் தன்மையைப் புரிந்து கொள்ளவதற்கு நாம் கண்டிப்பாக இந்த உபரியின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் சில கோட்பாடுகளைப் பார்க்கலாம்.

செவ்வியல் கோட்பாடுகள்:

உபரியின் தன்மையை விவரித்த செவ்வியல் கோட்பாடுகளுள் ‘ரிகார்டியன் – மல்துசியன் கோட்பாடு’ மிக முக்கியமானது. சில தொடர்புகள் இருப்பினும், இது மிகப்பரவலாக விமர்சிக்கப்படும் மல்துசியசின் மக்கள் தொகைக் கோட்பாடு அல்ல. உபரியின் தன்மையை பற்றி விளக்கும் இந்தக் கோட்பாடு இன்றளவும் ‘வளர்ச்சி’ பற்றிய புரிதலுக்கு முதன்மையானதாக இருக்கிறது3. அதே சமயம் இதன்மீது விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

இந்தக் கோட்பாட்டின்படி, உபரியில் இரண்டு காரணிகள் வினையாற்றுகின்றன. முதலாவது தொடர்ச்சியான பயன்பாட்டால் குறைந்து கொண்டே போகும் மண்ணின் வளம். இதனால் துவக்கத்தில் உபரி உற்பத்திக்குச் சாதகமாய் இருந்த மண்வளம், தொடர்ந்து பல ஆண்டுகளாக வேளாண்மை தொடர்கையில், குறையத் துவங்குகிறது. இரண்டாவது காரணி, உபரியின் உற்பத்தியால் அதனைப் பயன்படுத்தும் மக்கள் தொகையில் ஏற்படும் பெருக்கம். புராதான சமூகங்களில் உபரி அதிகரிக்கையில் மக்கள் தொகையும் கூடியிருக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகள்மூலம் நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று4. இந்த மக்கள் தொகைப் பெருக்கம் மக்களுக்குத் தேவைப்படும் தற்சார்பு உற்பத்தியின் அளவை அதிகரித்து, உபரியின் அளவைக் குறைக்கும்.

இந்த இரண்டு காரணிகளும் அவற்றின் போக்கில் மாறிக்கொண்டே செல்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உபரி இல்லாமல் போகும். அதாவது மண்ணின் வளம் குறைந்து கொண்டும், உபரியைப் பயன்படுத்தும் மக்கள் தொகையின் அளவு அதிகரித்துக் கொண்டும் போகும்போது, விரைவில் உற்பத்தியானது மீண்டும் தன்னிறைவான உற்பத்தியில் வந்து நிலைபெற்றுவிடும் என்கிறது இந்தக் கோட்பாடு. இந்தச் சமநிலையை ‘மல்துசியன் சமநிலை’ என்கின்றனர். இந்தச் சமநிலையை உற்பத்தி எட்டிவிட்டால் உபரி இல்லாமல் போகும்.

படம் 5: உபரியின் அளவும் மல்துசியன் சமநிலையும்
படம் 5: உபரியின் அளவும் மல்துசியன் சமநிலையும்

இந்தச் சமநிலையை அடைய விடாமல் உபரி உற்பத்தியைத் தொடர்ந்து உறுதி செய்வதுதான் ‘வளர்ச்சியைத்’ தக்கவைக்கும் வழியாக இந்த கோட்பாடு அறிவுறுத்துகிறது. உபரி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் இந்தச் சமநிலையை எட்ட விடாமல் பல்வேறு செயல்பாடுகள் மூலம் ‘வளர்ச்சியைச்’ சாதிக்கிறது மனித சமூகம். உதாரணமாக மண்ணின் வளத்தினை குறைக்காதவண்ணம் வேளாண்மை செய்வது. அல்லது அந்த வளத்தினைச் செயற்கையாக அளிப்பது. இன்னொருபுறம் மக்கள் தொகை உபரியை மிஞ்சி வளராமல் கட்டுக்குள் வைப்பது போன்றவை.

விடுதலை அடைந்த இந்தியாவின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை நினைவு கூர்ந்தால் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையும், மண்ணிற்குச் செயற்கையாக வளங்களைக் கொடுக்கும் ‘பசுமைப் புரட்சி’யும் இருப்பதைக் காணமுடியும். இதன் மூலம்தான் இந்தியாவின் வளர்ச்சி என்னும் நவீனக் கனவில் முதல் அத்தியாயம் எழுதப்பட்டது. இதன்படி பார்த்தால் வளர்ச்சியின் அடிப்படை என்பது ‘மல்துசியன் சமநிலைக்கு’ வரவிடாமல் உற்பத்தியைத் தொடர்ந்து நடைபெற செய்வதும்; இதனால் உபரியை தடையின்றி பெறுவதும்தான். இன்னும் ஒரு படி மேலே சென்று உபரியைக் கூட்டும் வழிமுறைகளைக் கண்டறியும் முனைப்பும் இருக்கிறது.

உபரியிலிருந்து மூலதனம்:

மேற்கண்ட இரண்டு காரணிகள் மட்டுமின்றி, இன்னும் பல்வேறு சாத்தியங்கள் மூலம் உபரியை அதிகரிக்கமுடியும் என்று இன்று நாம் கண்டறிந்திருக்கிறோம். உதாரணமாக இன்றைய வணிக மேலாண்மை இதற்குப் பல்வேறு வழிமுறைகளை வழங்குகிறது. உற்பத்தியைத் தீவிரப்படுத்துவது, விவசாய நிலங்களின் அளவை அதிகரிப்பது, புதிய நிலங்களைப் பாசனத்திற்குள் கொண்டு வருவது, ஊடுபயிர்களை அறிமுகப்படுத்துவது, ஒரு சாகுபடி காலத்திற்குள் இரண்டு சாகுபடிகள் செய்வது எனப் பல்வேறு வழிகளில் இது நடைபெறுகிறது.

மேலே நாம் பார்த்த கோட்பாட்டில் மிகவும் முக்கியமான வரம்பு அல்லது விமரிசனம் என்னவெனில் அது உற்பத்தியையும் உபரியின் உற்பத்தியையும், அதன் விநியோகத்தையும் மிகவும் சமத்துவமான சமூகத்தில் நடைபெறுவதாக ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதுதான். ஆனால் உண்மையில் சமூகம் அப்படி இருப்பதில்லை. அடக்குமுறை, அதிகாரம், ஏமாற்றுவேலை போன்ற செயல்களால் உபரியின் அளவு அதிகரிக்கப்பட்ட, ஆதிக்கத்தின் துணைகொண்டு உபரி பறிக்கப்பட்ட நிகழ்வுகளை வரலாறு முழுவதும் காண்கிறோம். இப்படிப் பறிக்கப்பட்ட உபரி இன்னொரு வடிவம் எடுத்து ஆளும் வர்க்கத்திடம் குவிகிறது. அதுதான் லாபம். இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமானால் அதுதான் ‘மூலதனம்’!

இங்குதான் காரல் மார்க்சின் ஆய்வுகளும் கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உழைப்பாளர்களின் உழைப்பினால் உருவாகும் உபரி, அவர்களுக்குப் பயனளிக்காமல் போவது எப்படி என்பதையும், அது ஆளும் வர்க்கத்திடம் மூலதனமாக குவிவது எப்படி என்பதையும் அவர் கண்டறிந்து கூறுகிறார். அவரது ‘Theories of Surplus Value’ என்னும் புத்தகம் இதனைத் தீவிரமாக ஆராய்கிறது.

இன்றும் உபரியை அதிகரிக்கப் பல்வேறு செயல்பாடுகள், வழிமுறைகள் ஆளும் வர்க்கத்தாலும் அரசாலும் காலனிய அரசுகளாலும் தேசிய, சர்வதேச அரங்கில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் பிடித்த வழிமுறை, உழைப்பவரின் உழைக்கும் நேரத்தை அதிகரிப்பது, ஓய்வைக் குறைப்பது. இதனால் உழைக்கும் நேரமும் அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் அதிகமாகும். இன்னும் உபரி பெருகும். வளர்ச்சியும் நடைபெறும். ஆனால் அந்த வளர்ச்சியினால் யாருக்குப் பலன் என்ற கேள்விதான் இறுதியில் எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான விடையை விரிவாக தொடர்ந்து வரும் கட்டுரைகளில் காண்போம். உபரியை அதிகரிக்கும் வழிமுறைகளில் மிகவும் முக்கியமான காரணியை அடுத்தக் கட்டுரையில் காணப்போகிறோம். வரப்போவது தொழிற்புரட்சி!

(தொடரும்)

_________

1. Lieberman, B. & Gordon, E. (2018). Climate Change in Human History: Prehistory to the Present. London, Bloomsbury Academic.
2. Malik, N. (2020). Uncovering Transitions in Paleoclimate Time Series and the Climate Driven Demise of an Ancient Civilization. Chaos: An Interdisciplinary Journal of Nonlinear Science, 30(8).
3. Robinson, W. & Schutjer, W. (1982). Agricultural Surplus as a Factor in Development. Journal of Rural Development, 5(1), 73-90.
4. Tisdell, C.A. & Svizzero, S. (2018). The Agricultural Revolution, Childe’s Theory of Economic Development as Outlined in Man Makes Himself, and Contemporary Economic Theories. History of Economics Review, 71(1), 55-72.

பகிர:
ஹரி பாரதி

ஹரி பாரதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தற்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். சூழல், சமூகப் போராட்டங்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துவருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *