Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #1 – உன்னதத்தின் பெயர் உமர்

வரலாறு தரும் பாடம் #1 – உன்னதத்தின் பெயர் உமர்

உன்னதத்தின் பெயர் உமர்

அவர் ஒரு பேரரசர். உரமும் திறமும் அறமும் கொண்ட சக்கரவர்த்தி. கிழக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தையும் பாரசீகப்பேரரசையும் வென்று வாகை சூடியவர். உலகம் முழுவதும் இஸ்லாம் பரவ வித்திட்டவர். கிறிஸ்தவ, யூத சாம்ராஜ்ஜியங்களின் ஆளுகையில் இருந்த ஜெருசலத்தைக் கைப்பற்றியவர். ஆனால் சக்கரவர்த்தி என்றோ, பேரரசர் என்றோ அவர் அழைக்கப்படவில்லை. கலீஃபா (பிரதிநிதி) என்று மட்டுமே அழைக்கப்பட்டார். அழைக்கப்படுகிறார்.

அங்கே ஒரு தேவாலயத்தை அவருக்குச் சுற்றிக்காண்பித்துக் கொண்டிருந்தபோது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது.

‘நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளுங்கள் கலீஃபா அவர்களே’ என்று அந்த தேவாலயத்தின் பிரதம பாதிரி சொன்னார். ஆனால் கலீஃபா ஒத்துக்கொள்ளவில்லை.

‘நான் இங்கே தொழுதுவிட்டுச் சென்றுவிட்டால், நான் தொழுத இடம் என்பதால் வருங்காலத்தில் இதை இடித்துவிட்டு இங்கே ஒரு பள்ளிவாசலை எதிர்கால ஆளும் பரம்பரை கட்டிவிடலாம். அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை. எனவே எனக்கு நபிகள் நாயகம் புனித விண்ணேற்றப்பயணத்தின்போது இங்கே வந்து எங்கே தொழுதார்களோ அங்கேயே நான் தொழுதுகொள்கிறேன்’ என்று அவர் சொன்னார்.

அவ்வளவு மனித நேயமும் மாண்பும் கொண்ட அவர் யார்? அவர்தான் இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் என்று அறியப்பட்ட ஹஸ்ரத் உமர் இப்னு கத்தாப் (கிபி 582/83 – 644).

அவருக்கு ஃபாரூக் என்று இன்னொரு பெயருண்டு. ஃபாரூக் என்றால் ‘(உண்மையையும் பொய்யையும்) பிரித்து அறிபவர்’ என்று பொருள். அவர் வாழ்வும் அத்தன்மைக்குச் சான்றாகவே உள்ளது. அவர் வாழ்வில் நமக்கான பாடங்கள் நிறைய உள்ளன. அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

உமர் ஆரம்பத்தில் இஸ்லாத்தின் பரம எதிரிகளில் ஒருவராக இருந்தார். நபிகள் நாயகத்தின்மீது கடுமையான கோபம் கொண்டிருந்தார். ஒருநாள் ஒரு வாளை எடுத்துக்கொண்டு நபிகளாரை வெட்டிக்கொல்லும் நோக்கத்துடன் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்.

ஆனால் கடைசியில் நபிகள் நாயகம் இறந்தபோது, அதைத்தாங்கிக்கொள்ள முடியாமல், முஹம்மது இறந்துவிட்டதாக யாராவது சொன்னால் சொன்னவரை வெட்டுவேன் என்று வாளை உருவிக்கொண்டு வாசலில் நின்றார்!

அவர் சென்ற வழியில் நுஐம் இப்னு அப்துல்லாஹ் என்ற நண்பரைச் சந்தித்தார். நுஐம் ரகசியமாக இஸ்லாத்தில் இணைந்திருந்தவர்களில் ஒருவர். உமரிடம் அதுபற்றி அவர் எதுவும் கூறவில்லை. அச்சம்தான் காரணம்! உமரின் வீரமும் கோபமும் அரேபியா முழுவதும் பிரசித்தம்.

ஆனால் அவரைச் சந்தித்த உமர், தான் சென்றுகொண்டிருந்த நோக்கத்தை அவரிடம் கூறினார். ‘என்ன? முஹம்மதைக் கொல்ல விரைகின்றீரா? முதலில் உம் குடும்பத்தில் உள்ள குழப்பத்தைச் சரிசெய்யும்’ என்று சொன்னார் நுஐம்.

தன் குடும்பத்தில் என்ன குழப்பம் என்று உமர் கேட்கவும், உமரின் சகோதரியும் மைத்துனரும் முஸ்லிமாகிவிட்ட தகவலை நுஐம் தெரிவித்தார். அதைக்கேட்ட உமர் பெரும் அதிர்ச்சியடைந்தார். அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நேராக தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்குள்ளிருந்து திருமறை ஓதப்படும் சப்தம் வந்துகொண்டிருந்தது. உமரின் கோபம் கொதிநிலை அடைந்தது. உமரின் சகோதரியும் மைத்துனரும் ஒரு நண்பரின் உதவியுடன் ‘தாஹா’ என்ற அத்தியாயத்திலிருந்து சில இறைவசனங்களை ஓதிக்கொண்டிருந்தனர்.

முதலில் மைத்துனரையும் சகோதரியையும் அடித்த உமர், என்ன ஓதிக்கொண்டிருக்கிறீர்கள்? அதைக்காட்டுங்கள், என்னிடம் கொடுங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால் ரத்தம் வரும்வரை காயப்பட்டபோதும் சகோதரியோ மைத்துனரோ அதைக்காட்ட ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது கதைகளில் வருவது போன்ற சுவையான காட்சி ஒன்று நடந்தது.

‘இந்த திருக்குர்’ஆனை தூய்மையானவர்கள் மட்டுமே தொடவேண்டும். எனவே முறைப்படி உடல் சுத்தம் செய்துவிட்டு வாருங்கள்’ என்று சகோதரி சொன்னதும், உமரும் ஆர்வத்தின் காரணமாகவோ என்னவோ சொன்னபடி செய்துவிட்டு வந்து அமர்ந்தார். அவரிடம் அந்த இறைவசனங்கள் ஓதிக்காட்டப்பட்டன.

அவ்வளவுதான். அவருக்குள் ஒரு ராட்சச மாற்றம், ரசாயன மாற்றம், ஆன்மிக மாற்றம், ஆத்மார்த்த மாற்றம் அப்போது ஏற்பட்டது. இது மனிதனின் பேச்சே அல்ல என்ற உண்மை அவருக்குப் புரிந்தது.

உடனே நான் முஹம்மது அவர்களைப் பார்க்கவேண்டும், முஸ்லிமாகிவிடவேண்டும் என்று கிளம்பிவிட்டார். தன்னிடமிருந்த அடிமைப்பெண் முஸ்லிமாகிவிட்டாள் என்பதற்காக தன் கைகள் நோகும்வரை, தன் சாட்டை பிய்ந்துபோகும்வரை அவளை அடித்த உமர். தன் தங்கை முஸ்லிமாகிவிட்டார் என்பதற்காக அவரையும் மைத்துனரையும் ரத்தம் வருமளவு நையப்புடைத்த உமர்!

அர்கம் என்பவர் வீட்டில் நபிகள் நாயகத்தைச் சந்தித்தது, அங்கே அவர்களின் கரங்களைப் பற்றி உமர் முஸ்லிமானதெல்லாம் வரலாறு. முதல் கலீஃபா அபூபக்கர் அவர்கள் இறந்தபோது உமரைக் கலீஃபாவாக நியமனம் செய்யச்சொல்லிவிட்டுத்தான் சென்றார். எனவே இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவாக உமர் ஆனார். தலைமுதல் கால்வரை வீரம் ஓடிய உமர். உடலில் இருந்த ஒவ்வொரு அணுவிலும் அறம் ஓடிய உமர்.

மதினாவைத் தலைநகராகக் கொண்டு உமரின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. மக்கள் தங்கள் மனதில் தன்னைப்பற்றியும், தன் ஆட்சியைப்பற்றியும் என்னவிதமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறியவும், தன் ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டியுள்ளதா என்பதை அறியும் பொருட்டும், ஒவ்வொரு நாளும் இரவில் மாறு வேஷத்தில் நகரை வலம்வரும் பழக்கம் அவருக்கிருந்தது.

அப்படி வலம் வந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டிலிருந்து பேச்சு சப்தம் கேட்டது. ஒரு அம்மாவும் மகளும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள். குறைவாக இருந்த பாலில் தண்ணீர் கலந்து வைக்கும்படி மகளிடம் அம்மா சொன்னாள். அப்படிச் செய்வது தர்மமல்ல என்று மகள் பதில் சொன்னாள்.

‘ஏன், செய்தால் என்ன? கலீஃபா உமர் என்ன இப்போது இங்கே வந்து நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டா இருக்கிறார்?’ என்று அந்த அம்மா கேட்டாள்.

அதற்கு அந்த மகள் சொன்னாள், ‘இல்லை அம்மா, கலீஃபா உமர் நம்மைப் பார்க்கவில்லை. நாம் பேசுவதும் அவருக்குத் தெரியாது. ஆனால் இறைவன் நம்மைப் பார்த்துக்கொண்டும், நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருக்கிறான் அல்லவா? மறுமையில் அவனுக்கு நாம் பதில் சொல்லவேண்டுமல்லவா?’ என்று கேட்டாள்.

அந்தப் பேச்சைக்கேட்ட உமரின் மனம் பூரித்தது. சப்தமில்லாமல் திரும்பிச்சென்ற உமர், மறுநாள் அந்த வீட்டுக்கு வந்து அப்பெண்ணை அழைத்தார். கலீஃபா அழைத்ததும் மிகுந்த அச்சத்துடன் தாயும் மகளும் வந்தனர்.

ஆனால் உமரோ அப்பெண்ணிடம், ‘நான் நேற்று இரவு நீ உன் அன்னையிடம் பேசியதைக் கேட்டேன். உன்னைப்போன்ற ஒழுக்கமான ஒருத்தியை என் மகனுக்கு மனைவியாக ஆக்க ஆசைப்படுகிறேன். என் மகன் அஸீமைத் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா?’ என்று கேட்டார்! வரலாற்றில் காணக்கிடைக்கும் ஆனந்த அதிர்ச்சிகளில் அதுவும் ஒன்று!

‘ஸ்ரீ ராமர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரது வாழ்வை நான் உதாரணமாகக் காட்டமுடியாது. ஏனெனில் அவர்கள் வரலாற்று நாயகர்கள் அல்ல. அபூபக்கர் மற்றும் உமர் ஆகியோரது பெயர்களை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் பரந்துவிரிந்த பெரும் சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்களாக, தலைவர்களாக இருந்தபோதும், மிகவும் எளிமையாக வாழ்ந்தனர். உமரைப்போன்ற ஒரு ஆட்சியாளர் இந்தியாவுக்குக் கிடைத்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்” என்று மகாத்மா காந்தி 27.07.1937 தேதியிட்ட ‘ஹரிஜன்’ வார இதழில் எழுதினார்.

காந்தி கனவுகண்ட ராமராஜ்ஜியம் என்பது லட்சிய அரசாங்கம். அந்தக் கனவுக்கு உயிர்கொடுத்ததைப்போல வரலாற்றில் நாம் காணமுடிகிற அரசர்கள், ஆட்சியாளர்கள், கலீஃபாக்கள் வெகு சிலரே. அதில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டியவர் கலீஃபா ஹஸ்ரத் உமர் இப்னு கத்தாப் என்பதை அவர் வாழ்க்கையை உன்னிப்பாகவும் ஆழமாகவும் படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்.

0

பகிர:
nv-author-image

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *