Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #2 – தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

வரலாறு தரும் பாடம் #2 – தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

தீ வைத்துக் கொல்லப்பட்ட தேவதை

ஜோன்.

அவளுக்கு வயது பதினேழுதான். படிக்காதவள். கிராமத்துப்பெண். குழந்தையைப்போன்ற குணம் கொண்டவள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல் நமக்கெல்லாம் தெரிந்ததே. ‘நீங்கள் குழந்தைகளைப்போல ஆகாமல் தேவனின் சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழைய முடியாது’ என்ற இயேசு கிறிஸ்துவின் மிகவும் புகழ்பெற்ற வாசகமும் நமக்குத் தெரியும்.

இந்த வாக்கியங்களுக்கெல்லாம் உயிர் கொடுத்ததைப்போல ஜோன் இருந்தாள். தன் குழந்தை குணத்தால் இறைவனின் சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழைந்துவிட்டவள் அவள்.

வீட்டு வேலைகள் செய்வாள். அப்பா அம்மாவுக்கு உதவியாக இருப்பாள். வீட்டிலிருந்த ஆடுமாடுகளை கவனித்துக்கொள்வாள். மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாள்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஃப்ரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் முடிவற்ற போர் நடந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் கைதான் ஓங்கியிருந்தது. ஆனாலும் ஆயுதம் தரித்த ஒரு கன்னிப்பெண்ணால் ஃப்ரான்ஸ் நாடு காப்பாற்றப்படும் என்று ஒரு கருத்தும் அக்காலகட்டத்தில் பிரபலமாக உலவிக்கொண்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் கிராமத்து ஜோனுக்கு ஓர் அதிசயம் நடந்தது. அவளது செவிகளுக்கு மட்டும் கேட்கும் வகையில் இறைவனின் தூதுவர்களான வானவர்கள் தோன்றி அடிக்கடி பேசினர். பேசினர் என்பதைவிட சில உத்தரவுகளைக் கொடுத்தனர் என்றுதான் சொல்லவேண்டும். அப்போது அவளுக்கு வயது பதிமூன்றுதான்.

ஒரு நாள் தோட்டத்தில் திடீரென்று வானவர் தலைவர் மீக்காயீல் (மைக்கேல்) தன் தேவதை சகாக்களுடன் தோன்றி அவளுக்குக் காட்சி கொடுத்தார். தேவாலயத்தின் மணிகள் ஒலித்தபோதெல்லாம் அவளுக்கு இவ்விதமான தெய்விகக் காட்சிகள் கிடைத்துக்கொண்டிருந்தன.

அவ்வப்போது ஜோனுக்குக் காட்சிகொடுத்த வானவர்கள் நீ இப்படிச் செய்யவேண்டும், அப்படிச் செய்யவேண்டும் என்று அன்புக்கட்டளைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக வானவர் தலைவர் மீக்காயீல், தூய மார்கரெட், தூய காதரீன் போன்றோர் அவ்வப்போது வந்து அவள் காதுகளில் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிந்தனர்.

ஆனால் அந்த உத்தரவுகள் யாவும் அவளது தனிப்பட்ட முன்னேற்றம் தொடர்பானவை அல்ல. எல்லாமே ஃப்ரான்ஸ் நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுப்பதற்கான, போரில் வெற்றிவாகை சூடுவதற்கான கட்டளைகளாக இருந்தன. ஃப்ரான்ஸ் நாட்டுக்கான புனிதப் பாதுகாவலராக அவள் செயல்பட வேண்டும் என்பதுதான் அவளுக்கு வானவர்கள் அடிக்கடி சொன்ன செய்தியின் சாரம். ஏனெனில் அப்போது இங்கிலாந்திடம் ஃப்ரான்ஸ் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தது.

ஃப்ரான்ஸ் நாட்டின் ஆர்லியன்ஸ் நகரம் மட்டும் கைப்பற்றப்பட்டால் ஃப்ரான்ஸைத் தன் அடிமையாக்கித் தன்னோடு இணைத்துக்கொள்ளும் இங்கிலாந்தின் கனவு நிறைவேறிவிடும். அதுதான் இங்கிலாந்து ஃப்ரான்ஸ் யுத்தப் படத்தின் கிளைமாக்ஸ். ஆனால் க்ளாமாக்ஸில் ஃப்ரான்ஸ் வென்றது! காரணம் ஜோன்! பதிமூன்று வயதுச் சிறுமி ஜோன்!

முதலில் தன் மாமாவிடம் சொல்லி உள்ளூரில் உள்ள ராணுவத் தளபதியிடம் தன்னை அழைத்துப்போகச்செய்தாள். தளபதியை ஒத்துக்கொள்ள வைத்து இளவரசர் சார்லஸைப் பார்க்க அனுமதி வாங்கினாள். தன்னோடு இறைவனின் தூதர்கள்தான் பேசிக்கொண்டுள்ளனர் என்பதை அரசவை மதகுருக்களிடம் எடுத்துச்சொல்லி ஒத்துக்கொள்ள வைத்தாள்.

அப்போது அவள் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சந்தேகப்படவில்லை. புருவம் உயர்த்தவில்லை. அப்படி ஒரு சின்னப் பெண் வந்து சொல்லும்போது அந்த அற்புதத்தை அவர்களால் நம்பாமல் இருக்கவும்முடியவில்லை. எப்படியாவது காரியம் ஆகவேண்டும் அவர்களுக்கு. வாழ்க்கையில் வாளையே பார்த்திராத ஒரு சின்னப்பெண் வந்து அப்படிச் சொன்னதால் அதில் தெய்விக ஆற்றல் ஏதோ இருக்கலாம் என்ற ஆர்வம் மட்டுமே அவளுக்கு அனுமதி கொடுத்து அவர்களை வேடிக்கை பார்க்க வைத்தது.

கூட இருந்தவர்களை ஒத்துக்கொள்ளவைத்து, ஃப்ரான்ஸ் நாட்டின் மன்னர் சார்லஸைப் பார்த்து, நாடு வெற்றிபெறத் தன்னோடு ஒரு படையை ஆர்லியன்ஸுக்கு அனுப்பவேண்டும் என்று அனுமதி கேட்டு, அவரையும் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாள் ஜோன். ஆங்கிலேயர்களைத் தோற்கடித்து, சார்லஸை ஃப்ரான்ஸ் நாட்டின் மன்னனாக்குவதுதான் திட்டம்.

இருபத்தாறு வயதான மன்னர் இளம் சார்லஸிடம் பதினேழு வயதான ஜோன் பேசியது ஐந்தே நிமிடங்கள்தான். அதற்குள்ளேயே அவளுக்குத் தேவையான ராணுவ வீரர்களை அவளோடு அவர் அனுப்பினார்.

ஆனால் இடையில் இன்னொரு விஷயமும் நடந்தது. அவள் கன்னிப்பெண்தானா என்பதைக் கண்டறிய சில பெண்களிடம் அவளை அனுப்பி வைத்தார் சார்லஸின் மாமியார்! ஏனெனில் ஒரு கன்னிப் பெண்ணால் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்ற தீர்க்கதரிசனத்தின் விளைவாக அவர்கள் பரிசோதித்துப் பார்த்தனர்.

ராணுவ உடையணிந்த கிராமத்துப்பெண் ஜோனின் தலைமையில் கிளம்பியது ஒரு படை! போரில் அனுபவம் மிக்க தளபதிகள் மற்றும் வீரர்களோடு பேசி தன் ஆணைகளை ஏற்று அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும் என்று அவர்களை ஒத்துக்கொள்ள வைத்தாள் அந்த பதினேழு வயதுப்பெண்!

நடந்த சண்டைகளில் எதிலுமே அவள் வாளை உயர்த்தவும் இல்லை, காயப்படவும் இல்லை. ஆனால் அவளுடைய உத்தரவுக்கேற்ப ஃப்ரெஞ்சு ராணுவம் செயல்பட்டு ஆர்லியன்ஸ் நகரை மீட்டனர். அவள் அவர்களோடிருந்த ஒன்பது நாட்களில் ஃப்ரெஞ்சு வீரர்கள் புதிய சக்தி பெற்றனர். அச்சம் விலகியது.

ஃப்ரெஞ்சுக்காரர்களைப் பொறுத்தவரை ஆர்லியன்ஸை மீட்டது மஹா வெற்றி. ஆங்கிலேயர்களுக்கோ மஹா தோல்வி. அதுமட்டுமல்ல, பல ஃப்ரெஞ்சு நகரங்களையும் பிரிட்டிஷாரிடமிருந்து ஜோன் மீட்டெடுத்தாள்.

அருகில் ஜோன் நிற்க, சந்தோஷத்துடன் சார்லஸ் மீண்டும் ஃப்ரான்ஸ் நாட்டின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸுக்கும் இடையில் நூறாண்டுகளாக நடந்து வந்த யுத்தத்தில் இறுதி வெற்றி ஃப்ரான்ஸுக்குக் கிடைத்தது. அதுவும் ஜோனால்.

தெய்வீக அருள் கிடைக்கப்பட்ட அவளுக்கு இறைவனின் செய்திகள் கிடைத்துக் கொண்டிருப்பதாகவும், இறைவனின் உத்தரவுப்படி தாங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும்தான் ஃப்ரெஞ்சு ராணுவம், ஃப்ரான்ஸ் மக்கள், மன்னன் சார்லஸ் அனைவரும் நம்பினர்.

இல்லையெனில் ராணுவ அனுபவமோ, யுத்த அனுபவமோ இல்லாத ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைமையில் அப்படிப்பட்டதொரு இமாலய வெற்றி எப்படி சாத்தியமாகும்? அவள் தெய்விகப் பெண் என்றே அனைவரும் நம்பினர். கத்தோலிக்கத் திருச்சபையும் நம்பியது. அது வெறும் நம்பிக்கையல்ல. சத்தியமும் அதுவாகவே இருந்தது.

மன்னராப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு செய்யப்பட்ட சில முற்றுகைகளில் சார்லஸ் தோல்வி அடைந்தார். முக்கியமாகப் பர்கண்டியில் நடந்த போரில் ஃப்ரான்ஸுக்குத் தோல்வி ஏற்பட்டது. அதில் ஜோன் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

மதத்துக்கு எதிராகப் பேசியவள் என்று அவள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. காலம்பூராவும் கடவுளுக்குச் “சேவை’ செய்துகொண்டிருந்த பாதிரிகளிடம் தேவதைகள் பேசாமல் ஒரு கிராமத்துப்பெண்ணிடம் பேசுவது முறையாகுமா? அது அந்தப் பாதிரிகளுக்கு அவமானமாக இருந்தது!

தேவதைகள்மீது கடுப்பான பாதிரிகள் ஜோன் என்ற தேவதையை சித்ரவதைசெய்து கொல்ல முடிவெடுத்தனர். ஆனால் எல்லாமே மதத்தில் பெயராலேயே! உலகெங்கிலும் மதத்தின் பெயரல்தானே ரத்தம் சிந்தப்படுகிறது!

புனித வேதாகமத்தைக் கரைத்துக்குடித்த பாதிரிகளுக்குத் தோன்றாத தேவன்களும் தேவதைகளும் ஒரு கிராமத்துப் பெண்ணின் கண்களுக்குத் தெரிவதா? என்ன அநியாயம்! ஆனாலும் ஜோனுக்கு எதிராக ஒரேயொரு சாட்சியைக்கூட எதிரிகளால் கொண்டுவர முடியவில்லை. சாட்சியா முக்கியம்? ஆட்சிதானே முக்கியம்!

மே 30, 1431ம் ஆண்டு அந்தக் கன்னிப்பெண்ணை, சின்னப் பெண்ணைக் கட்டிவைத்து உயிரோடு தீயிட்டுக்கொளுத்திச் சாகடித்தனர். தீயில் விழுந்த மலரைப்போல அவள் கருகிப்போனாள். அவ்வப்போது அவளுக்குக் காட்சிகொடுத்த தேவதைகளும் வானவர்களும் அவளுக்கு அப்போது உதவ வரவில்லை!

தீயில் கருகியபோது தேவதை ஜோனுக்கு வயது பத்தொன்பது! மதத்தில் இருப்பவர்க்கு  ‘மதம் பிடிப்பது’ நிச்சயம் என்பதையே மதங்களின் வரலாறு காட்டுகிறது. ஆனால் ஒரு மார்க்கமாக ஏற்று அதைப் பின்பற்றும்போது இப்படி நடப்பதில்லை! ஒரு ‘மார்க்கமாக’ப் பேசுவதாக நினைக்கவேண்டாம்.

மரக்கட்டையைத் தீயிலிடலாம். ஆனால் உயிரும் உணர்ச்சிகளுமுள்ள ஒரு பெண்ணை உடன்கட்டை ஏ(ற்)றுதல் என்ற பெயரில் தீயில் தள்ளிவிடும் ஆண் மனம் எவ்வளவு கொடூரமானது! பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்தனர் அரேபியர். எந்தக் கலாச்சாரமும் பெண்களை உயிரும் உணர்ச்சியும் உள்ளவர்களாக நினைக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *