Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

அன்னை தெரசா

ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி மிகுந்த கிறிஸ்தவர்கள். குழந்தைகளுக்குள்ளும் மதநம்பிக்கையை ஆழமாக விதைத்தனர்.

அதுமட்டுமல்ல. கணவனும் மனைவியும் தர்மவான்களாக இருந்தனர். ’அநாதைக் குழந்தைகளில் சிலர் நம் உறவினர்கள். அதுமட்டுமல்ல, எல்லா ஏழைகளுமே நம் குடும்பத்தினர்தான்’ என்று அம்மா அடிக்கடித் தன் குழந்தைகளிடம் சொன்னாள்.

அப்பாவுக்கும் குழந்தைகள்மீது ரொம்பப் பிரியம். வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெண் குழந்தைகளுக்குக் குட்டிகுட்டியான அணிகலன்கள், நகைகள் வாங்கிவந்தார். அடிக்கடி கதைகளும் சொல்வார். ஏழைக் குழந்தைகளுக்கு உதவும்படி வீட்டில் பணம் கொடுத்துவிட்டுத்தான் போவார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் திடீரென்று ஒருநாள் இறந்துபோனார்.

முதலில் இடிந்துபோன த்ரானா நாளடைவில் எம்ப்ராய்டரி வேலைகளெல்லாம் செய்து சம்பாதித்தாள். மீண்டும் செழுமை வந்துசேர்ந்தது. மீண்டும் தர்மங்கள் செய்யத்தொடங்கினாள். அடிக்கடி ஏழைகளுக்கு உதவி செய்தாள். வாரம் ஒருமுறையாவது கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உதவினாள். ஆறு அநாதைக் குழந்தைகளை தன் வீட்டிலேயே அழைத்து வைத்துக்கொண்டாள்.

’நல்லது செய்யும்போது அமைதியாகச் செய்யுங்கள். உங்கள் நல்ல குணத்தை மற்றவர்களுக்குத் தம்பட்டம் அடிக்காமல் இருங்கள்’ என்று குழந்தைகளுக்குச் சொன்னாள். எவ்வளவு முக்கியமான செய்தி! எவ்வளவு அற்புதமான மனுஷி! என்ன அழகான முன்னுதாரணத் தாய்!

ஒரு நாள் குழந்தைகளைக் கூப்பிட்டு ஒரு கூடையில் இருந்த ஆப்பிள் பழங்களைப் பரிசோதிக்கச் சொன்னாள். பின் அதில் ஒரு அழுகிய ஆப்பிளைப்போட்டு மூடி வைத்தாள். மறுநாள் பார்த்தபோது அதிலிருந்த பல ஆப்பிள் பழங்கள் அழுக ஆரம்பித்திருந்தன.

’நல்லவர் பலர் மத்தியில் ஒரு கெட்டவர் இருந்தால் போதும். மற்றவர்களும் விரைவிலேயே கெட்டுப்போவார்கள். இந்த ஆப்பிள்களைப்போல. எனவே கெட்டவர்களிடமிருந்து விலகியே இருக்கவேண்டும் நாம் ’ என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னாள். என்ன அழகான செய்தி!

ஆக்னஸ்தான் அருகிலிருந்த கத்தோலிக்கத் திருச்சபையின் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் காட்டினாள். முதன்முதலாக மேண்டலின் வாசிக்கக் கற்றுக்கொண்டபோது அதை தேவலாயத்தின் சேவைகளுக்காகப் பயன்படுத்தினாள். பன்னிரண்டு வயதிலேயே தெய்விகச்சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை ஆக்னஸுக்கு வந்தது! ஆச்சரியம் என்னவெனில், அதுவரை அவள் ஒரு கன்னிகாஸ்த்ரீயைக்கூடப் பார்த்ததில்லை!

இளமை எனும் பூங்காற்று காதல், பூங்கா என்று அழைத்துச் செல்லாமல் திருச்சபையின் பக்கமாக அவளை அழைத்துச்சென்றது. அந்த எண்ணம் பெற்றோர் கொடுத்த பாரம்பரியச் சொத்தின் பகுதியாகவே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

தன் மதரீதியான அனுபவங்களை ஆக்னஸ் யாரிடமும் பகிர்ந்துகொண்டதே இல்லை. அது அவளுக்கும் இறைவனுக்கும் இடையிலான ரகசியமாகவே இறுதிவரை இருந்தது. 1925-ல் அங்கிருந்த திருச்சபைக்கு வந்த ஜெம்ப்ரகோவிச் என்ற பாதிரி ஒரு மதநூலகத்தை தேவாலயத்துக்குள் அமைத்தார். அது ஒரு தெய்விக உலகை அவளுக்குத் திறந்துகாட்டியது. ஆக்னஸ் நூலகத்திலேயே மணிக்கணக்கில் அமர்ந்து கிறிஸ்தவம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

இந்தியாவிலிருந்த மிஷனரிகளின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் அடிக்கடி ஜெம்ப்ரகோவிச் விவரித்தார். ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவுக்குச் சென்று மதச் சேவைசெய்ய எண்ணிய ஆக்னஸ் இந்தியாவுக்குச் சென்றால் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினாள். அப்போதெல்லாம் அவள் அழகிய இளம்பெண்ணாகிவிட்டிருந்தாள். தன் சிந்தனைகளையும் கவிதைகளையும் ஒரு டைரியில் அவ்வப்போது எழுதி வைத்தாள். ஒரு எழுத்தாளராகவோ இசையமைப்பாளராகவோ ஆகிவிடவும் எண்ணினாள்.

தெய்விகச் சேவைக்காகவே ஒருவர் பிறந்திருக்கிறார் என்று எப்படித் தெரிந்துகொள்வது என்று ஒருநாள் ஜெம்ப்ரகோவிச்சிடம் அவள் கேட்டாள். ஒருவரை இறைவன் அந்தப்பணிக்காகவே நியமித்திருந்தால் அப்பணியில் அவருக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத சந்தோஷம் கிடைக்கும் என்று அவர் கூறினார். எவ்வளவு அழகான பதில்!

1928. ஆக்னஸுக்கு வயது 18. ஒருநாள், நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன் என்று கன்னி மரியாளுக்கான புனித ஸ்தலத்தில் மனமுருகிக் கேட்டுக்கொண்டிருந்தாள். திரும்பி வரும்போது விடைகிடைத்த திருப்தியுடன் வந்தாள். இனி வாழ்வில் கன்னிகாஸ்த்ரீயாக சேவைசெய்ய முடிவுசெய்திருப்பதாக அம்மாவிடம் சொன்னாள். நம்ம ஊர் அம்மாவாக இருந்திருந்தால் ‘வெளக்குமாறு பிஞ்சிடும்’ என்று சொல்லி அடக்கியிருப்பாள்.

ஆனால் த்ரானா அப்படியெல்லாம் சொல்லவில்லை. ’அப்படியொரு முடிவுக்கு நீ வந்தால், சந்தேகமோ, அச்சமோ, வருத்தமோ இன்றி அச்சேவையைச் செய்யவேண்டும்’ என்று ஆசி வழங்கினாள்!

’நீ உண்மையிலேயே கன்னிகாஸ்த்ரீயாக விரும்புகிறாயா’ என்று அல்பேனிய ராணுவத்தில் லெஃப்டினண்ட்டாக இருந்த சகோதரன் கேட்டபோது, ‘நீ இருபது லட்சம் குடிமக்களை ஆண்டுகொண்டிருக்கும் அரசனுக்கு சேவை செய்கிறாய். நான் இந்தப் பிரபஞ்சத்தின் அரசனுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன்’ என்று பதில் எழுதினாள்!

ஸ்கோப்யாவிலிருந்து பாரிஸுக்கு ரயில் ஏறிய ஆக்னஸைப் பார்த்து அம்மா கையசைத்தாள். அதுதான் ஆக்னஸ் அம்மாவைக் கடைசியாகப் பார்த்தது! பாரிஸிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த ஆக்னஸ் வங்காள மொழியையும் நன்றாகக் கற்றுக்கொண்டாள். ஒரு நகைச்சுவையோ சிரிப்பூட்டும் கதையோ சொன்னால் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு மனம்விட்டுச் சிரிப்பாள்!

1946-ல் பாகிஸ்தான் கேட்டு இந்தியாவில் பெரும் கலகம் ஏற்பட்டது. கல்கத்தாவில் ரத்த ஆறு ஓடியது. அப்போது ஆக்னஸ் முதன்முறையாக, விதியை மீறி, கான்வெண்ட்டிலிருந்து கிளம்பி குழந்தைகளுக்கான உணவுக்காக ஊருக்குள் சென்றாள். ஏனெனில் அவள் பொறுப்பிலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்த 300 பெண் குழந்தைகளுக்கு உணவில்லை.

பாதிக்கப்பட்ட உடல் மீண்டும் நலம்பெற டார்ஜிலிங் சென்றுகொண்டிருந்தபோது, இறைவனிடமிருந்து இரண்டாவது உத்தரவு கிடைத்தது ஆக்னஸுக்கு. ‘கான்வெண்ட்டை விட்டுவிட்டு ஏழைகளோடு வாழ்ந்து அவர்களுக்கு உதவு’ என்பதுதான் அந்த தெய்விகச்செய்தி.

கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் சேவை செய்யத் தொடங்கினார் ஆக்னஸ். பேருந்தில் செல்ல யாராவது காசு கேட்டால் தன்னிடம் இருப்பதைக்கொடுத்துவிட்டு நடந்தே செல்வார். ஒரு கட்டத்தில் இந்தியக்குடியுரிமையையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

‘நாட்டிலுள்ள பரம ஏழைகள் அனைவரும் எங்களுக்கு வேதனையின் வடிவான கிறிஸ்துதான். எங்களுடைய உணவும், உடையும் ஏழையுடையதாகவே இருக்கவேண்டும். பிறப்பினால் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏழைகளாக வாழ முடிவு செய்துள்ளோம்’ என்று ஆக்னஸ் எழுதினார்.

ஒருமுறை ஆக்னஸும் இன்னொரு கன்னிகா சகோதரியும் கல்கத்தாவின் தெருவொன்றில் ஒரு காட்சியைப் பார்த்தனர். அழுக்குத்துணி மூட்டையைப்போல கீழே கிடந்த ஒருத்தி மெள்ளத் தன்னுணர்வை இழந்துகொண்டிருந்தாள். அவள் முகத்தை எலிகளும் எறும்புகளும் பாதி தின்றுவிட்டிருந்தன. உடனே அவளைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றார் ஆக்னஸ். ஆனால் அவளை அனுமதிக்கவோ, ஒரு படுக்கை தரவோ அங்கிருந்த மருத்துவர்கள் முடியாது என்றனர். படுக்கை கொடுக்கும்வரை நகரப்போவதில்லை என்றார் ஆக்னஸ். கடைசியில் வேறுவழியின்றி தரையில் படுக்கவைக்க பாய்மட்டும் கொடுத்தனர். சில மணித்துளிகளில் அந்தப்பெண் இறந்துபோனார். ஆனால் ஆக்னஸ் அவளருகில் அமர்ந்து அவளுக்காக பிரார்த்தனை செய்தவண்ணம் இருந்தார்.

அந்த ஆக்னஸ்தான் கல்கத்தாவில் – இப்போதைய கொல்கத்தா (ஏன் இப்படிக் ’கொல்’கிறார்கள் என்று தெரியவில்லை ! – நிர்மல் ஹ்ருதய் (தூய இதயம்) என்ற பெயரில் மனிதர்கள் மரியாதையுடன் இறக்க ஓர் இடத்தை அமைத்தார். ஜெயலலிதா வந்த காரின் டயரில்கூட விழுந்து மரியாதை செய்தார் ஒரு மந்திரி. அவரை எந்திரி என்றுகூட ஜெயலலிதா சொல்லவில்லை! ஆனால் அந்த ஜெயலலிதா ஆக்னஸின் கால்களில் விழுந்து ஆசிபெற்றார். அந்த ஆக்னஸ்தான் நம் பெருமைக்குரிய அன்னை தெரசா என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

1979-ல் அன்னைக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதற்காகக் கொடுக்கப்படவிருந்த விருந்து வேண்டாமென்றும், அதற்காகும் செலவான 192,000/- டாலர் பணத்தை இந்தியாவிலுள்ள ஏழைகளுக்குக் கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டார் அன்னை தெரசா! த்ரானா இல்லாவிட்டால் தெரசா கிடைத்திருப்பாரா என்பது சந்தேகமே!

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *