அந்த மன்னரின் பெயர் சலாஹுத்தீன் அய்யூபி. ஆனால் ஆங்கிலேயர்களுக்கு மாற்று மதத்தவரின் பெயர்கள் எதுவும் வாயில் சரியாக நுழையாது. அவர்கள் எப்படத் தவறாக உச்சரித்தார்களோ அதற்கேற்றவாறு எழுத்துக்களைப்போட்டு ஒரு சொல்லை உருவாக்கிவிடுவார்கள்.
கிண்டிக்கு ஆங்கிலத்தில் Guindy என்று அசிங்கமாக எழுதிவைப்பார்கள். பரங்கிப்பேட்டைக்கு Porto Novo என்று சம்பந்தமே இல்லாத பெயரைச் சூட்டுவார்கள்! சலாஹுத்தீனின் பெயரையும் அப்படித்தான் வரலாற்றில் Saladin என்று எழுதிவைத்தார்கள். அலாவுத்தீனுக்கு Aladdin, சலாஹுத்தீனுக்கு Saladin! போகட்டும். தப்பும் தவறுமாகவாவது வரலாற்றை எழுதி வைத்ததற்காக ஆங்கிலேய நாக்குகளை மன்னிப்போம்!
சரி, யாரிந்த சலாடின், மன்னிக்கவும், சலாஹுத்தீன்? முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வரலாற்றில் பல சிலுவைப்போர்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஜெருசலத்தை மையமாக வைத்தவை. காரணம் ஜெருசலம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதத்தினருக்கும் முக்கியமான நகரம். இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு புனிதப்பிரச்சனை அது.
ஜெருசலத்தை மீட்பதற்கான அத்தகைய போரொன்றில் ‘சிங்கநெஞ்சன்’ என்று புகழப்பட்ட முதலாம் ரிச்சர்டை எதிர்த்துப் போர்செய்து வெற்றிகண்டவர் சலாஹுத்தீன். சிங்கத்தை வெற்றிகொண்ட முயலல்ல சலாஹுத்தீன். அவரும் சிங்கம்தான். தாடிவைத்த முஸ்லிம் சிங்கம்.
ஜெருசலத்தை மீட்ட மூன்றாவது சிலுவைப்போரின் கதாநாயகச் சிங்கமான சலாஹுத்தீன், யூதர்கள் குதிரைமீது போகக்கூடாது என்று ஆரம்பத்தில் தடைவிதித்தாலும், ஆட்சியாளர் என்ற முறையில் தம் பிரச்சனைகளை அவரிடம் வந்து அவர்கள் சொன்னபோது அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிசெய்தார். அவரவர் மதக்கடமைகளை அவரவர் மத பாணியில் நிறைவேற்றிக்கொள்ளவும் அவரது ஆட்சியில் வகை செய்தார்.
1169-ல் எகிப்தின் ஆட்சியாளரான சலாஹுத்தீன் ஜெருசலத்தை ஃப்ராங்க்குகள் என்று சொல்லப்பட்ட கிறிஸ்தவர்களிடமிருந்து மீட்டெடுக்க உறுதிபூண்டார். அது தொடர்பாக ஹத்தின் என்ற பகுதியில் சலாஹுத்தீனுக்கும் ரிச்சர்டுக்கும் 1187-ல் நடந்த யுத்தத்தில் மாபெரும் வெற்றிகண்டார். பரம வைரிகளாக இருந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட ஆட்சியாளராக சலாஹுத்தீன் இருந்தது வரலாற்றின் பக்கங்களில் காணக்கிடைக்கும் வியப்புகளில் ஒன்று.
எதிரிகள் ரத்த வெள்ளத்தில் கிடக்க, கர்வத்தோடு சலாஹுத்தீன் வெற்றிகொள்ளப்பட்ட ஜெருசலத்தினுள் நுழைந்தாரா? இல்லை. சாதாரண நாட்களில் தன்னுடைய ராஜ்ஜியங்களில் ஒன்றில் நுழைவதைப்போல அமைதியாக குதிரையில் அமர்ந்தபடி சென்றார். ஜெருசலத்தை வெற்றிகொண்டபோது ஹஸ்ரத் உமர் அவர்கள் அந்நகருக்குள் அமைதியாக நுழைந்ததை அது நினைவுபடுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதினர். அவநம்பிக்கையாளர்களிடமிருந்து இஸ்லாத்தையும் புனித ஜெருசலத்தையும் மீட்டெடுக்கவேண்டும் என்பதே சலாஹுத்தீனின் நோக்கமாக இருந்தது. எதிரிகள் அமைதியாகச் சரணடைவதையே அவர் விரும்பினார்.
எதிரிகளில் பாலியன் என்ற கிறிஸ்தவத் தளபதி ஒருவன் டயர் என்ற ஊரில் இருந்தான். அவனது மனைவியும் பைசாந்திய அரசியுமான மரியா தன் குடும்பத்துடன் ஜெருசலத்தில் இருந்தாள். ஜெருசலம்போய் அவர்களை அழைத்துவர சலாஹுத்தீனிடம் பாலியன் அனுமதி கேட்டான். ஓர் இரவு மட்டும் ஜெருசலத்தில் தங்கி அழைத்துவரலாம், மீண்டும் தன்னை எதிர்க்கத் திட்டமிடக்கூடாது என்றெல்லாம் சொல்லி சலாஹுத்தீன் அனுமதி கொடுத்தார்.
அப்படியே செய்வதாக சத்தியம் செய்துகொடுத்துவிட்டுச் சென்றான் பாலியன். ஆனால் அங்கிருந்த தலைமைப்பாதிரியோ, ’ஒரு அவநம்பிக்கையாளனிடம் – முஸ்லிமான சலாஹுத்தீனிடம் – நீ செய்துகொடுத்த சத்தியத்தை மதிக்கவேண்டியதில்லை. உன் பாவத்தை நான் மன்னித்துவிட்டேன், நீ சலாஹுத்தீன் சொல்படி நடந்தால் அதுதான் பெரிய பாவமாகும்’ என்று சொல்லி அவனை அங்கேயே மடக்கிப்போட்டார். அதனால் சலாஹுத்தீனுக்கு நிலமையை விளக்கிக் கடிதம் எழுதினான் பாலியன்.
அதைப்படித்த சலாஹுத்தீன் பொங்கி எழுந்தாரா? இல்லை! தனது படையிலிருந்து திறமையான ஐம்பது வீரர்களை அனுப்பி பாலியனும், அவன் மனைவியான இளவரசியும், குழந்தைகளும் பாதுகாப்பாக டயருக்குத் திரும்ப ஏற்பாடு செய்தார்.
ஜெருசலம் சலாஹுத்தீனிடம் சரணடைந்தது. எதிரிகள் எய்த அம்புகளெல்லாம் பற்களின் இடுக்கில் மாட்டிக்கொண்ட இறைச்சித்துண்டுகளை எடுக்கப் பயன்படும் குச்சிகளைப்போல இருந்தன சலாஹுத்தீனின் வீரர்களுக்கு.
ஜெருசலத்தின் பாதிரியார்கள் நீண்ட பிரார்த்தனைகள் செய்தனர். தாய்மார்கள் தம் பெண்களின் தலைகளை மொட்டையடித்தனர். பார்க்க அசிங்கமாக இருந்தால் யாரும் பாலியல் வன்முறையில் ஈடுபட விரும்பமாட்டார்கள் என்று நினைத்தனர்! ஏனெனில் இதற்குமுன் நடந்த சிலுவைப்போரில் முஸ்லிம்களுக்கு அதுதான் நடந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் கொல்லப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், கற்பழிக்கப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர். ரத்த ஆறு ஓடியது.
சலாஹுத்தீனிடம் கடைசியில் ஜெருசலம் வீழ்ந்தது.
ஆனால் முன்பு நடந்ததைப்போல ரத்த ஆறு எதுவும் ஓடவில்லை. அப்போதுகூட நன்றிகெட்ட கிறிஸ்தவத் தளபதி பாலியன், ‘எங்களிடம் 5000 முஸ்லிம்கள் அடிமைகளாகவும் பிணையக்கைதிகளாகவும் உள்ளனர். நாங்கள் தோல்வி அடையத்தான் வேண்டுமென்றால், உங்களிடம் அடிமையாக விடாமல் முதியவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் நாங்களே கொன்றுவிடுவோம். உங்களுக்கு ஒரு பைசாகூட (தீனாரோ ட்ரக்மாவோ) விட்டுவைக்க மாட்டோம். புனித அல்அக்சா பள்ளிவாசலை இடித்துவிடுவோம். (முஹம்மது நபி விண்ணேற்றம் செய்த) புகழ்பெற்ற பாறையையும் தகர்த்துவிடுவோம். எங்களிடம் உள்ள முஸ்லிம் அடிமைகளையெல்லாம் கொன்றுவிடுவோம். பின்னர் உங்களோடு சண்டையிட்டு வெல்வோம் அல்லது வீரமரணம் அடைவோம்’ என்று வசனம் பேசினான்.
ஆனால் ரத்தமின்றி, சப்தமின்றி சலாஹுத்தீன் ஜெருசலத்தை வெற்றிகொண்டார். அந்த அமைதியான வெற்றியை கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்களே புகழ்ந்து தள்ளினார்கள். முஹம்மது நபியவர்கள் எப்படிக் கத்தியின்றி ரத்தமின்றி மக்காவை வெற்றிகொண்டார்களோ அதேபோல ஜெருசலம் சலாஹுத்தீனால் வெற்றிகொள்ளப்பட்டது.
ஆண்களுக்கு பத்து தங்கக்காசுகள், பெண்களுக்கு ஐந்து காசுகள், குழந்தைகளுக்கு ஒரு காசு கொடுத்து விரும்புபவர்கள் ஊரைவிட்டு நீங்கலாம் என்று சலாஹுத்தீன் உத்தரவிட்டார். அவ்விதம் ஊரைவிட்டுப்போனவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர். அதில் ஏழாயிரம் பேர்களுக்கு உரிய தொகையை சலாஹுத்தீனே கொடுத்தார்.
மதத்தலைவராக இருந்த ஹெராக்லியஸ் என்பவன் ஊரைவிட்டு வெளியேறியபோது பத்து காசுகளை மட்டும் கொடுத்துவிட்டு அவனது ஏகப்பட்ட சொத்துக்களுடன், நகரின் தேவாலயத்தின் பொக்கிஷங்களுடன் ’ஹாய்’யாக வெளியேறினான்!
ஆனால் எதுவும் கொடுக்க வசதியில்லாத ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள், அடிமைகளின் நிலையைப்பார்த்து இரக்கப்பட்ட சலாஹுத்தீனின் தம்பி, அண்ணனிடம் பேசி தனக்கு ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்று கேட்டுவாங்கி அவர்களையெல்லாம் உடனே விடுதலை செய்தார். தம்பி, தங்கக்கம்பி! அதைப்பார்த்த மதத்தலைவரும் பாலியனும் தங்களுக்கும் 500 அடிமைகள் வேண்டுமென்று கேட்டு வாங்கி விடுதலை செய்தனர்.
தன் பங்குக்கு சலாஹுத்தீன் என்ன செய்தார் தெரியுமா? ஏழைகளாக, முதியவர்களாக, அடிமைகளாக இருந்த அனைவரையும் பைசா பெறாமல் விடுதலை செய்தார்.
புனித அல் அக்ஸா பள்ளிவாசலில் மீண்டும் தொழுகை நடக்க, உரிய வேலைகளைச் செய்தார். புனித குர்’ஆன் வசனங்களை பொன்னெழுத்துக்களில் ஆங்காங்கு மின்னும்படித் தொங்கவிட்டார். தரைமுழுவதும் விலையுயர்ந்த கம்பளங்கள் போட்டார். ஹஸ்ரத் உமர் அவர்களின் பள்ளிவாசலுக்கு ’மிம்பர்’ எனப்படும் பிரசங்கமேடை அமைத்துக்கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு ஜெருசலம் மீண்டும் முஸ்லிம்களின் கையில் வந்தது. சலாஹுத்தீனால்!
1096-99-ல் நடந்த முதல் சிலுவைப்போரில் ஜெருசலம் வீழ்ந்தபோது நகரம் கொள்ளையடிக்கப்பட்டது, கிட்டத்தட்ட 70,000 முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அல் அக்ஸா பள்ளிவாசல் ரத்தவெள்ளத்தில் மிதந்தது. இரண்டாம் சிலுவைப்போரிலும் அதுதான் நடந்தது.
சத்தமின்றி, ரத்தமின்றி சலாஹுத்தீன் மட்டுமே ஜெருசலத்தை வெற்றிகொண்டார். ஆனால் தன்னிடமிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் போர்க்கைதிகளின் தலைகளை வெட்டிக்கொன்றான் ‘அ’சிங்கநெஞ்சன் ரிச்சர்ட்!
சிங்கநெஞ்சனுக்கு ஒருமுறை உடல்நலம் சரியில்லாமல் போனபோது, எதிரியான சலாஹுத்தீன் அவன் உடல்நலனை விசாரித்து ஆளனுப்பினார். சும்மா அனுப்பவில்லை. பழங்களும் ஐஸ் கட்டிகளும் கொடுத்தனுப்பினார்!
சலாஹுத்தீன் செய்த அந்தக்காரியமும், அவரது கருணையும், வீரப்பண்பும் எதிரிகளுக்குப் பெரும் வியப்பைக்கொடுத்தது. வரலாற்று ஆசிரியர்களுக்கும்தான். எதிரிக்குக்கூட பழம்கொடுத்தனுப்பிய சலாஹுத்தீன் ஞானப்பழம் அல்லவா!
0
சிறப்பு…
எதிரிகள் எய்த அம்புகளெல்லாம் பற்களின் இடுக்கில் மாட்டிக்கொண்ட இறைச்சித்துண்டுகளை எடுக்கப் பயன்படும் குச்சிகளைப்போல இருந்தன சலாஹுத்தீனின் வீரர்களுக்கு.
உவமை வெகுசிறப்பு.
கிழக்கு தரும் விளக்கு இக்கட்டுரை…!