’லஜ்ஜாவதியே’ என்று கொஞ்சம் மலையாளம் கலந்த ஒரு தமிழ்ப்பாடல் உள்ளது. அதில் ‘ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ’ என்று ஒரு வரி வரும். அது அந்தப் பாடலின் கதாநாயகிக்குப் பொருந்துகிறதோ இல்லையே வரலாற்றின் பக்கங்களில் வரும் மறக்கமுடியாத ஒரு பெண்ணுக்குப் பொருந்தும். யார் அந்த அழகான ராட்சசி?
அவள்தான் உலகப்பேரழகி கிளியோபாட்ரா. தாலமியின் கிளியோபாட்ரா. சீசரின் கிளியோபாட்ரா. ஆண்டனியின் கிளியோபாட்ரா. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் கதாநாயகி கிளியோபாட்ரா. ஏழாம் கிளியோபாட்ரா. இன்னும் எத்தனை பேரின் கிளியோபாட்ராவோ, வரலாற்றுக்கே வெளிச்சம்! அவள் முதலில் திருமணம் செய்துகொண்டது அவள் கூடப்பிறந்த தம்பியை! அது அப்போதைய எகிப்திய கலாசாரம்!
கிமு 51. கிளியோபாட்ராவுக்கு வயது 18. அவள் தம்பி 13-ம் தாலமியின் வயது பத்து. அப்பா 12-ம் தாலமி இறந்தவுடன் அக்காவும் தம்பியும் எகிப்தின் ஆட்சியாளர்களாயினர். அதோடு திருமணமும் செய்துகொண்டனர்! தாலமி வயது குறைந்தவனாக இருந்ததால் கிளியோபாட்ராவின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் காமத்துக்கு மட்டும் தம்பியின் வயது தடையாக இருக்கவில்லை! காமமும் பாசமும் எகிப்தில் பின்னிப் பிணைந்திருந்துள்ளது!
கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசரோடு வாழ்ந்த காலத்தில் அவருக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தையை சிசேரியன் என்றே அழைத்தாள்! தன் ஆட்சிக்காலத்தில் பிறக்க இருக்கும் எல்லாக் குழந்தைகளையும் தாயின் வயிற்றைக்கீறித்தான் வெளியில் எடுக்கவேண்டும் என்று சீசர் உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. சிசேரியன் பிரசவத்தின் வரலாறு இது!
52-ம் வயதில் ஜூலியஸ் சீசர் எகிப்துக்கு வந்தபோது கிளியோபாட்ராவுக்கு வயது 21. சீசரோடு ரோமுக்குச்சென்ற கிளியோபாட்ராவால் அங்கேயே இருக்கமுடியவில்லை. சீசர் செனட்டில் வைத்து நண்பர்களாலேயே கொல்லப்பட்டது உலகப்பிரசித்திபெற்ற வரலாறு. 23 கத்திக் குத்துகள். அப்போது ’நீயுமா ப்ரூட்டஸ்!’ என்று சீசர் சொன்னது ஷேக்ஸ்பியர் நாடகத்தின் உலகப்புகழ்பெற்ற வசனம். அந்த கொலைக்குப்பின் கிளியோபாட்ரா அலெக்சாண்ட்ரியாவுக்குத் திரும்பினாள். கிமு 41ல் மார்க் ஆண்டனியோடு அவளுக்கு ’தெய்விகக்காதல்’ ஏற்பட்டது. இருவருக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரின் பெயரும் கிளியோபாட்ராதான்!
ரோமாபுரியின் இரண்டு மாவீரர்களைத் தன் அழகால் கட்டிப்போட்டவள். ஆடம்பரமான விருந்துகளுக்குப் பெயர் பெற்றவள். பல மொழிகளைக் கற்றவள். காவிய நாயகி. இவ்வளவுக்கும் அவள் கறுப்புதான்! ஆமாம், கற்பழகியாக இல்லாவிட்டாலும் கறுப்பழகி! மயக்கும் குரலும் அவளுக்கிருந்தது. ’கறுப்புதான் எனக்குப்புடிச்ச கலரு’ என்று ஆண்டனியைச் சொக்கவைத்தாள்.
சீசர் கொஞ்சம் வழுக்கைத்தலையர். ஆனால் ஆண்டனியோ ஆணழகர். முழு தாடி, அகலமான நெற்றி, நீண்ட நாசி. ஹெர்குலிஸ் சிலையைப்போல இருந்தார். ஆண்டனியோடான அவளது உறவு ஆழமானது. பகலோ இரவோ, அவரைவிட்டு அவள் பிரிந்ததே இல்லை. அவரோடு பகடை விளையாடுவாள், சேர்ந்து குடிப்பாள், சேர்ந்து வேட்டைக்குச் செல்வாள். சில நேரங்களில் அவரைத் திட்டவும், அடிக்கவும்கூட செய்வாள்! காதல் சடுகுடு!
ஆனாலும் ஆண்டனி, ஆக்டேவியனுடைய விதைவையான அக்கா ஆக்டேவியாவை முறைப்படி திருமணமும் செய்துகொண்டார்! எனவே ஆண்டனியின் மனைவி என்றால் அது ஆக்டேவியாதான், எவ்வளவு நெருக்கமாக இருந்தபோதும் கிளியோபாட்ராவுக்கு மனைவி அந்தஸ்து கிடைக்கவில்லை.
ஆக்டேவியனுக்கும் ஆண்டனிக்கும் அட்ரியம் என்ற இடத்தில் நடந்த கடல் சண்டையில் ஆக்டேவியன் வென்றார். ஐயாயிரம் வீரர்கள் மடிந்தனர். முன்னூறு கப்பல்கள் பிடிபட்டன. தோற்றுவிடுவோம் என்று உணர்ந்தவுடன் நம்பிவந்த வீரர்களையெல்லாம் விட்டுவிட்டு ஆண்டனி முந்தானையைத் தேடி ஓடிப்போனார். ஆனாலும் வீரர்கள் ஒருவாரமாக ஆக்டேவியனை எதிர்த்துப்போராடினார்கள்.
கிளியோபாட்ராவை எகிப்துக்கு அனுப்பிவிட்டு அவன் லிபியாவுக்குச் சென்று ஒரு தீவில் ஒளிந்து வாழ்ந்தார். பின்னர் மீண்டும் நடந்த ஒரு கடல்போரில் ஆக்டேவியனின் படை, தீப்பந்தம் கொண்ட அம்புகளை எய்தது. அவற்றை அணைக்க ஆண்டனியின் வீரர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் கப்பல்கள்தான் எரிந்தன! அந்த சண்டையிலும் ஆண்டனிக்குத் தோல்விதான். ஆனாலும் அவர் சாகவில்லை.
கிளியோபாட்ரா இறந்துவிட்டதாக நினைத்த ஆண்டனி தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை ’முறையாக’ச் செய்யாததால் சாகவில்லை. அங்கே ஒரு நாடகமே நடந்தது. ஈராஸ் என்ற தன் நம்பகமான அடிமையை அழைத்து, தன்னை வெட்டிக்கொல்லும்படி ஆண்டனி உத்தரவிட்டார். வாளை ஓங்கிய ஈராஸ், ஆண்டனியை வெட்டாமல் தன்னத்தானே வெட்டிக்கொண்டார். ராஜ விசுவாசம். ஆண்டனியின் பாதங்களில் அவரது உடல் விழுந்தது. சினிமாக்காட்சியைப்போல.
அதைப் பார்த்த ஆண்டனி, ‘நல்லது ஈராஸ், நான் என்னசெய்யவேண்டும் என்று காட்டிவிட்டாய்’ என்று கூறியவண்ணம் வாளை எடுத்துத் தன் வயிற்றில் வெட்டிக்கொண்டார். ஆனால் அது உயிரைக் குடிக்குமளவு ஆழமான வெட்டல்ல. பின்னர் படுக்கையில் சாய்ந்துகொண்டு, ‘என்னை வெட்டிக்கொல்லுங்கள்’ என்று அங்கிருந்த சிலருக்கு உத்தரவிட்டார். அதைக்கேட்ட ஊழியர்கள் அச்சத்தில் ஓடிவிட்டனர். வேதனையில் புரண்டுகொண்டிருந்த ஆண்டனியை கிளியோபாட்ராவின் காரியதரிசியாக இருந்த டயமீடிஸ், கிளியோபாட்ராவிடம் தூக்கிச்சென்றார்.
ஜன்னல் பக்கமாக வந்துபார்த்த கிளியோபாட்ரா கயிறுகட்டி ஆண்டனியை மேலேஅனுப்பும்படி உத்தரவிட்டாள். அப்படியே செய்யப்பட்டது. ரத்தவிளாறாக இறந்துகொண்டிருந்த ஒரு மனிதனைக் கயிற்றைக்கட்டி மேலேதூக்குவது லேசான காரியமல்ல. ஒருபக்கம் ஆண்மகனின் கனம். இன்னொரு பக்கம் கனத்துக்கொண்டிருந்த கிளியின் மனம். ஆனாலும் எப்படியோ தூக்கி, தானிருந்த மாடத்துக்குள் ஏற்றிவிட்டாள்.
ஆண்டனியைக் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அரற்றினாள், தமிழ்ப்பெண்களைப்போல. என் கணவனே, என் தலைவனே என்றெல்லாம் புலம்பினாள். தன் நகங்களால் தன்னையே பல இடங்களில் ரத்தவிளாறாகக் கீறிக்கொண்டாள்.
அழாதே என்று சைகை காட்டிய ஆண்டனி, கொஞ்சம் மது கேட்டார். அவருக்கு ரொம்ப தாகமாக இருந்தது. அதோடு, அந்த மது தன் இறுதி உணவாகவும் இருக்கலாம் என்று நினைத்தார். அவளும் கொடுத்தாள். குடித்துவிட்டு அவளுக்கு இறுதிஉபதேசம் செய்தார்: கற்புக்குக் களங்கம் வந்துவிடாமல் (?) பாதுகாப்பாக இரு; ஆக்டேவியனுடைய உதவியாளர் ப்ரொக்யூலியஸை நம்பு; நடந்ததை எண்ணி வருந்தாதே; கௌரவமான ஒரு ரோமானியனான தான், இன்னொரு ரோமானியன் கையால்தான் வெற்றிகொள்ளப்பட்டேன் என்று ஆண்டனி கூறினார்.
பின்னர் கிளியோபாட்ராவின் மடியிலேயே ஆண்டனி இறந்தார்.
ரத்தக்கறை படிந்த ஆண்டனியின் வாளை ஒருவன் எடுத்துச்சென்று ஆக்டேவியனிடம் கொடுத்து ஆண்டனி தற்கொலை செய்துகொண்டதாகச் சொன்னான். அதைக் கேட்ட ஆக்டேவியன் ஓர் உண்மையான வீரனின் இழப்புக்காக வருந்தினார். உடனே ப்ரொக்யூலியஸை அழைத்து கிளியோபாட்ரா உயிரோடு இருந்தால் அவளைக் கைதுசெய்து அழைத்துவருமாறு ஆள் அனுப்பினார்.
ஆனால் அவனை உள்ளே அனுமதிக்காமல் கதவுகளைப்பூட்டிவைத்தாள் கிளியோபாட்ரா. ஆண்டனியைக் கயிறுகட்டி மேலேற்றிய அதே ஜன்னல் வழியாக மேலேறி உள்ளே சென்றார் ப்ரொக்யூலியஸ். அவரைக் கண்டதும் மறைத்துவைத்திருந்த குறுவாளால் தற்கொலை செய்துகொள்ள கிளியோபாட்ரா முயற்சி செய்தாள். ஆனால் அதற்குள் பாய்ந்து சென்ற ப்ரொக்யூலியஸ் அதைப் பிடுங்கினார். ’நீ உனக்கும் ஆக்டேவியஸ் சீசருக்கும் துரோகம் செய்தவளாகிவிடுவாய். அவர் இரக்கமற்றவரென்று தவறாக நினைத்துக்கொண்டுள்ளாய்’ என்று சொன்னார்.
அவன் சொன்னது உண்மைதான். ஆண்டனியை உரிய மரியாதைகளுடன் கிளியோபாட்ராவே அவள் விருப்பப்படி அடக்கம்செய்ய ஆக்டேவியஸ் சீசர் ஏற்பாடு செய்தார்.
கிளியோபாட்ரா விரும்பியிருந்தால் ஆக்டேவியஸ் சீசரோடு சந்தோஷமாகத் தன் வாழ்வை மீண்டும் தொடங்கியிருக்கலாம். ஆனால் அவள் ஆண்டனியை உண்மையாகவே உயிருக்கும் மேலாகக் காதலித்திருந்தாள். மீண்டும் சந்தோஷமான ராஜ வாழ்க்கை வாழும் வாய்ப்பிருந்தும் பூநாகங்களைத் தன் தலையில்விட்டுக் கொத்தவிட்டுத் தன் வாழ்வை முடித்துக்கொண்டாள் கிளியோபாட்ரா.
நீ ஒரு ராஜா, நீ ஒரு ராணி என்றெல்லாம் நாம் சாதாரண மனிதர்களிடம் கூறுகிறோம். ஆனால் ராஜாக்களின், ராணிகளின் வாழ்வெல்லாம் பொறாமையாலும், துரோகத்தாலும், ரத்தத்தாலும் சூழப்பட்ட வாழ்வு என்பதையே வரலாறு காட்டுகிறது.
கிளியோபாட்ரா என்ற கறுப்புக் கிளியின் வாழ்வும் அதைத்தான் சொல்கிறது.
0