அந்த இளைஞர் ரொம்ப உயரமும் அல்ல; குள்ளமும் அல்ல. கருகருவென மின்னும் அகன்ற கண்கள். அழகான முகம். முழு நிலவு மாதிரி. அகன்ற தோள்கள், நீண்ட கைகள். நீண்ட தடித்த தாடி. தலையின் பின்னால் மட்டும் அடர்ந்த முடி. அவரது தோள் எலும்புகள் வலிமையான சிங்கத்துடையதைப்போல இருந்தன. அவருடைய கைகளின் பலம் காவியத்தன்மை கொண்டது என்றே சொல்லவேண்டும். இறுக்கமாகத் தன் கையால் ஒருவரை அவர் பிடித்தாரென்றால் அந்த மனிதரால் மூச்சுக்கூட விடமுடியாது. போர்க்களத்தின் நடுவே அவர் நடந்து சென்றால், அவர் நடக்கிறாரா ஓடுகிறாரா என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது. போர்க்களத்தில் அவர் கொடியைப் பிடித்துவிட்டார் என்றால் வெற்றி நிச்சயம் என்று அர்த்தம். அவர் பெயர் அலீ.
முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருந்த மக்காவின் குறைஷிகளுக்கும் பத்ர் என்ற இடத்தில் நடந்த முதல் போர் வரலாற்றுப்பிரசித்தி பெற்றது. சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை எதிரியான குறைஷிகளை வெற்றிகொண்ட முதல் போர் அது. குறைஷிகள் ஆயிரத்துக்கும் மேல். முஸ்லிம்களோ வெறும் 313 பேர்தான். சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் நடந்த முதல் போர் அது. அதில் மட்டும் முஸ்லிம்கள் தோல்வி அடைந்திருந்தால் இன்று உலகில் இஸ்லாம் இல்லாமல்கூடப் போயிருக்கலாம்.
அப்போரில் எதிரெதிர் அணியில் போரிட்டவர்களில் பலர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள். ஒரே கோத்திரத்தினர். ஒரே குடும்பத்தினர். ஆனாலும் மதநம்பிக்கை என்று வந்தபோது அது உறவைவிடவும், உயிரைவிடவும் மேலாக இருந்தது.
உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த எதிரிகளிலும் சில அறிவாளிகள் இருக்கத்தான் செய்தனர். அதில் உத்பா ஒருவர். போர் செய்யவேண்டாம் என்று அவர் தன் கோத்திரத்தினருக்கு எடுத்துச்சொல்லிக்கொண்டிருந்தார். ஏன்? ‘முஸ்லிம்கள் இறந்து போவதற்குத் தயாராக வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அச்சமற்ற கும்பலை நம்மால் வெற்றிகொள்ள முடியாது. தோல்வியின் அடிப்படையான அச்சம் அவர்களிடத்தில் இல்லவே இல்லை. இப்போது போர் செய்யவேண்டாம். போய்விடலாம்’ என்று கூறினார்.
அதைக்கேட்ட அபூஜஹ்ல் என்ற தலைவன், ‘ம்ஹும், பயந்துவிட்டாயா?’ என்று கேட்டான்.
‘அச்சம் வரும்போதெல்லாம் தொடை நடுங்கும் நீ, நான் அச்சப்படுவதாகச் சொல்கிறாயா? இன்றைக்குப் போரில் யார் பயந்தவர்கள் என்று தெரிந்துவிடும் வா’ என்று சொன்னார்.
ஆனால் அவர்களோடு போர்செய்ய முதலில் மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகள் என்றறியப்படும் நபிகள் நாயகத்தின் தோழர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்த உத்பா, ‘யார் நீங்கள்? எங்களோடு போர்செய்ய உங்களுக்குத் தகுதி இல்லை. எங்களுக்கு இணையான எங்கள் கோத்திரத்தாரரை வரச்சொல்லுங்கள்’ என்று கூறினார்!
போரில்கூட அந்தஸ்து பார்ப்பது மஹாபாரத அல்லது ஹோமரின் காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது போலும்! தேரோட்டி மகன் என்றுதானே கர்ணன் ஆரம்பத்தில் இழிவு செய்யப்பட்டான்! கடைசியில் அந்த வீரர் உத்பா முஸ்லிம் வீரரான அலீயின் வாள்வீச்சில் மாண்டுபோனார். வீரமரணம்.
தல்ஹாவை ஏன் கொல்லவில்லை?
இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாவது முக்கியான போர் உஹதுப்போர். தல்ஹா என்பவன் அலீயைப் போருக்கு அழைத்தான். ’சரி வா, ஒன்று, என் வாளால் நீ நரகத்துக்குச் செல்லவேண்டும், அல்லது உன் வாளால் நான் சொர்க்கத்துக்குச் செல்லவேண்டும்’ என்று கூறியவண்ணம் களத்தில் இறங்கிய அலீ கொஞ்சநேரத்திலேயே தல்ஹாவின் கால்களை வெட்டிப்போட்டார். தன் மர்ம உறுப்புகள் தெரியும்படி தல்ஹா கீழே விழுந்துகிடந்தார். அதைப்பார்த்த அலீ, அவரைக் கொல்லாமல் அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினார். அவரை ஏன் கொல்லவில்லை என்று கேட்டபோது, அந்த நிலையில் அவரைப்பார்த்த என்னால் கொல்ல மனம்வரவில்லை என்று கூறினார்! ஆனாலும் அந்தப் போரில் அவருக்கு பதினாறு விழுப்புண்கள் ஏற்பட்டிருந்தன. இதே காரணத்துக்காக அகழ்ப்போரில் – அந்தப் போரில் கொல்லப்பட்ட அப்து உத் என்ற பணக்கார வீரரின் உடமைகளையும் அலீ எடுத்துக்கொள்ளவில்லை.
நபிகளாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தது ஏன்?
ஹுதைபிய்யா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குறைஷிகளுக்கும் ஒரு உடன்படிக்கை எழுதப்பட்டது. அதிலிருந்த நிபந்தனைகள் முக்கால்வாசி முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தன. முஸ்லிம்களின் கை ஓங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. ஆனாலும் நபிகள் நாயகம் ஒத்துக்கொண்டார்கள். ஏனெனில் அது ஒரு ’தெளிவான வெற்றி’ என்று இறைவனின் செய்தி அவர்களுக்குக் கிடைத்திருந்தது. எனவே மனமில்லாமல் உமர், ஹம்ஸா, அலீ போன்ற வீரத்தலைவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.
உடன்படிக்கையை எழுதியவர் அலீதான். கடைசியில் கையெழுத்திடும் இடத்தில், ’இறைவனின் தூதர் முஹம்மது’ என்று எழுதியிருந்தார். ஆனால் ‘நீங்கள் இறைவனின் தூதர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால்தான் பிரச்சனையே வந்திருக்காதே? எனவே அதை அழித்துவிட்டு ’அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்’ என்று எதிர்க்குழுத் தலைவர் சொன்னார். அப்படியே செய்யுங்கள், முதலில் எழுதிய என் பெயரை அழித்துவிடுங்கள் என்று நபிகள் நாயகம் அலீயிடம் சொன்னார்கள்.
ஆனால் அலீ அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சிறுவராக இருக்கும்போதே இஸ்லாத்தையும் நபிகளாரையும் ஏற்றுக்கொண்ட அலீ. மாவீரர் அலீ. நபிகளாரின் பெரியப்பா மகன் அலீ. நபிகளாரின் அருமை மகள் ஃபாத்திமாவின் கணவர் அலீ. ஏன் மறுத்தார்? மரியாதை காரணமாகத்தான். மரியாதை காரணமாக ஒரு உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கமுடியுமா? ஆனால் நடந்தது அதுதான். தன் கையால் எழுதிய ’இறைவனின் தூதர் முஹம்மது’ என்ற பெயரை தன் கையாலேயே எப்படி அழிப்பது என்ற தயக்கம்தான். அதனால் நபிகள் நாயகம் அவர்களே தன் கையால் அதை அழித்துவிட்டு, எதிரிகள் சொன்னபடி எழுதச் சொன்னார்கள்!
கொல்லாமல் விட்டது ஏன்?
ஒருமுறை ஒரு போரில் தன்னை எதிர்த்த ஒருவனை கீழே தள்ளி அவன் மார்பின்மீது அமர்ந்து அவனை குத்திக் கொல்ல அலீ தயாரானார். அப்போது மல்லாக்கக் கிடந்த அவன் எதிர்பாராத ஒரு காரியத்தைச்செய்தான். சட்டென்று அலீயின் முகத்தில் காரி உமிழ்ந்தான். அவ்வளவுதான். உடனே அவனைக் கொல்லாமல் அலீ எழுந்துவிட்டார். ஏன் அவனைக் கொல்லாமல் வீட்டீர் என்று கேட்டபோது, ‘என் முகத்தில் அவன் காரி உமிழ்ந்தபிறகு நான் அவனைக் கொன்றால் தனிப்பட்ட முறையில் எனக்கு அவன் இழைத்த அவமானத்துக்காக நான் அவனைக் கொன்றமாதிரி ஆகிவிடும். ஆனால் அது இஸ்லாத்துக்காக நடந்த போர். அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. அதனால்தான் அவனை உயிருடன் விட்டேன்’ என்றார்!
எவ்வளவு காலம் தூங்கினார்கள்?
ஏழு இளைஞர்கள் ஒரு குகையில் தங்கள் நாயுடன் போய் பல ஆண்டுகள் தூங்கி பின்னர் உயிர்பெற்ற வரலாறு கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சிலர் வந்து நபிகள் நாயகத்திடம் சந்தேகம் எழுப்பினர். குகைத்தோழர்கள் 309 ஆண்டுகள் உறங்கியதாக குர்’ஆன் கூறுகிறது. ஆனால் எங்கள் வேதமோ 300 ஆண்டுகள்தான் என்று கூறுகிறது. இரண்டுமே இறைவனுடைய வேதமாக இருக்கும்பட்சம் எப்படி இந்த வேறுபாடு வரும் என்று கேட்டனர். அப்போது அருகிலிருந்த அலீ, ‘நான் பதில் சொல்லவா?’ என்று நபிகளாரிடம் கேட்டு அனுமதி பெற்றுவிட்டு இப்படி விளக்கினார்:
‘அது ஒன்றுமில்லை. நீங்கள் சொல்வது சூரிய காலக்கணக்கு. நாங்கள் சொல்வது பிறைக்கணக்கு. ஒவ்வொரு நூறு சூரிய வருடங்களுக்கும் 103 சந்திர ஆண்டுகள் வரும். எனவே முந்நூறு சூரிய ஆண்டுகளுக்கு 309 சந்திர ஆண்டுகள்’ என்று பதில் சொன்னார்!
நான் ஞானத்தின் பட்டணம் என்றால் அலீ அதன் தலைவாயில் என்று நபிகளார் சொன்னது சரிதானே!
0