Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

ஆர்க்கிமிடீஸ்

கிமு 213. மார்சிலஸ் என்பவனுடைய தலைமையில் ஒரு பெரும் ரோமானியப்படை சிரக்யூஸ் என்ற கிரேக்க நகரை ஒருநாள் திடீரென்று தாக்கியது. ஒரு ஐந்தாறு நாட்களில் நகரை வெற்றிகொண்டுவிடலாம் என்றுதான் மார்சிலஸ் நினத்தான். ஆனால் அவன் நினைத்தது நடக்க ஒரு ஆண்டுக்கும் மேலானது. இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும் சொல்லப்படுகிறது. ஏன் அவ்வளவு தாமதம்? அந்த ஊரிலிருந்த ஒரு முதியவர்தான் காரணம்.

அவர் முதியவர் மட்டுமல்ல; அவர் ஒரு மேதை; கணித மேதை; இயற்பியல் மேதை; ஆயுத மேதை. ஆமாம், கண்டுபுடிச்சிட்டேன், கண்டுபுடிச்சிட்டேன், யுரேகா, யுரேகா என்று கத்திக்கொண்டே நிர்வாணமாக ஊருக்குள் ஓடிய அதே ஆர்கிமிடிஸ்தான். ஒரு தாமஸ் ஆல்வா எடிசனையும் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனையும் சேர்த்து ஒரு மனிதனைச்செய்தால் அவர் ஆர்க்கிமிடீஸாகியிருப்பார் என்று சொல்லிவிடலாம். அவ்வளவு விஷயங்களை உருவாக்கி வைத்திருந்தார் அவர்.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் சிசிலி தீவிலிருந்த சிரக்யூஸ் நகரில் வாழ்ந்து வந்தார். அது ஒரு புகழ்பெற்ற நகரம். எகிப்து, கிரேக்கம், ஃபினீஷியா போன்ற நாடுகளிலிலிருந்து வியாபார நிமித்தமாகக் கப்பல்கள் வந்தவண்ணமிருக்கும்.

அப்படி அவர் என்னவெல்லாம் கண்டுபிடித்தார்? அவர் கண்டுபிடித்தது ஒன்றா இரண்டா? அவர் கணித மேதை, வானவியலாளர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் – இன்னும் எவ்வளவோ. ’என்னிடம் ஒரு நெம்புகோலைக் கொடுங்கள். நிற்க ஒரு இடம் கொடுங்கள். நான் இந்த பூமியை நகர்த்திக் காட்டுகிறேன்’ என்பது அவர் சொன்ன பிரபலமான வாக்கியங்களில் ஒன்று.

அந்த நாட்டு ராஜா ஒருநாள் ஒரு தங்கக்கிரீடத்தை அவரிடம் கொடுத்தார். அது ராஜாவுக்காக செய்யப்பட்டது. அதில் தங்கமல்லாத உலோகங்கள் கலந்துள்ளதா என்று அதை உருக்கிப் பார்க்காமல் கண்டுபிடிக்கவேண்டும். அதுதான் ராஜாவின் உத்தரவு. நாமாக இருந்தால் இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று எண்ணியிருப்போம். உருக்கிப் பார்க்காமல் எப்படிக் கண்டுபிடிப்பது? இது என்ன மாயமந்திர வேலையா என்று நினைத்திருப்போம்.

ஆனால் ஆர்க்கிமிடீஸ் அப்படி நினைக்கவில்லை. அதைத் தன் அறிவுக்கான ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். அதுபற்றி யோசித்துக்கொண்டே இருந்தார். தண்ணீர்த்தொட்டிக்குள் ஆர்க்கிமிடீஸ் குளித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு கருத்து மின்னல், அவரது ராஜபிரச்சனைக்கு வழி சொன்னது உலகப்புகழ்பெற்ற வரலாறு.

என்னைக் கேட்டால் வேறு சூழ்நிலைகளில் அந்தக் கேள்விக்கு அவரால் விடை கண்டுபிடித்திருக்கவே முடியாது என்று சொல்வேன். ஏனென்றால், ஒரு பிரச்னைக்கான தீர்வு நாம் அதையொட்டி ரிலாக்ஸ் ஆகிவிடும்போதுதான் கிடைக்கும். டென்ஷனோடு எவ்வளவு யோசித்தாலும் தீர்வை விட்டு நாம் தூரமாகிக்கொண்டுதான் இருப்போம்.

ஒரு மனிதன் ரிலாக்ஸ் ஆவதற்கு ஆகச்சிறந்த வழி அவன் உடம்பில் தண்ணீர் படுவதுதான். அதாவது குளிப்பதுதான். குளிக்கும்போதெல்லாம் நம் உடலும் மனமும் ரிலாஸ் ஆகிவிடும். தீவளிக்குத்தீவளி குளித்தாலும் சரி!
எனவே ஆர்க்கிமிடீஸ் தண்ணீர்த்தொட்டிக்குள் மூழ்கி குளித்துக்கொண்டிருந்தபோது ராஜ பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தது ஆச்சரியமல்ல; ஆனால் இங்கே நாம் பார்க்க இருப்பது வேறுவிதமான வரலாறு. அந்த யுரேகா கண்டுபிடிப்பைவிட இன்னும் அற்புதமானவை.

அப்படி என்ன கண்டுபிடித்தார் என்று கேட்டால் கேள்வி தப்பு. என்னவெல்லாம் கண்டுபிடித்தார் என்பதுதான் சரியான கேள்வி. சரி, அப்படி என்னவெல்லாம் கண்டுபிடித்தார்? ரோமானியத் தலைவன் மார்சிலஸை அசத்திய அக்கண்டுபிடிப்புகள் யாவை?

சிரக்யூஸ் மன்னனுக்கு ராணுவ ஆலோசகராக ஆர்கிமிடிஸ் இருந்தார். நகரைப் பாதுகாப்பாக வைக்க, பல ஆண்டுகளாக உழைத்து பல மர்மமான பொறிகளை அவர் உருவாக்கியிருந்தார். திடீரென ரோமானியர்கள் கிரேக்கத்தைத் தாக்கியபோது, தான் உருவாக்கிய அந்தப் பொறிகளைத்தான் அவர் பயன்படுத்தி எதிரிகளை அசத்தினார். ராட்சசர்களை வீழ்த்திய ராம லட்சுமணர்களின் தெய்விக அம்புகளைப் போல அவை செயல்பட்டன.

மாங்காய் அடிக்க நாம் சிறுவயதில் பயன்படுத்தும் கவண்களைத்தான் முதலில் பயன்படுத்தினார். ஆனால் அவை ராட்சசக் கவண்கள். மாங்காய் அடிக்கப் பயன்படும் கவண்கள் அல்ல. எதிரிகளின் மண்டைகளை உடைக்கப் பயன்பட்ட ராட்சசக் கவண்கள். அவற்றிலிருந்து கற்களுக்குப் பதிலாகப் பெரும்பெரும் பாறைகள் விசையுடன் எறியப்பட்டன. அவை எதிரிக் கப்பல்களின்மீது விழுந்து அவற்றை நொறுக்கிச் சிதைத்து கடலிலேயே மூழ்கடித்தன. அப்புறம் கொஞ்சம் சின்னக் கவண்கள். அவற்றுக்கு ’தேள்கள்’ என்று பெயர். அவைகள் விரைந்து பறந்துபோய் எதிரிகளான ரோமானியர்களைக் கொட்டின!

அப்புறம் ராட்சசத்தேளின் கொடுக்கு மாதிரி இரண்டு பக்கமும் பற்றிப் பிடுத்துத் தூக்கும் ஒரு கிடுக்கி அல்லது இடுக்கி. அவை ரோமானியக் கப்பல்களை அப்படியே அலாக்காகத் தூக்கி பாறைகளின் மீது அடித்தன! சுக்கு நூறாகக் கப்பல்கள் உடைந்து சிதறின! அப்புறம் எதிரிகள் கிரேக்கக் கோட்டைச் சுவர்களின்மீது ஏணிகள் வைத்து ஏறுவார்களேயானால் இனம்புரியாத ராட்சச கனங்கள் அவர்கள்மீது இறங்கி அவர்களைக் கொன்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக ராட்சசக் கண்ணாடிகள். அவற்றை உப்பரிகை மேலிருந்து எதிரிக் கப்பல்களை நோக்கித்திருப்பினால் போதும். சூரிய வெளிச்சம் பட்டு அக்கண்ணாடிகளிலிருந்து எதிரொலிக்கும் கதிர்களின் வெப்பத்தில் எதிரிக்கப்பல்கள் எரிந்துபோயின! சூரிய பகவானையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கண்ணாடிகள்!

தான் நினைத்த மாதிரி ஒரு நாளில் அந்நகரை வெற்றிகொள்ள முடியவில்லை என்பது மார்சிலஸ் ஒத்துக்கொண்டான். பல மாத முயற்சிகளுக்குப் பின்னரே அவனுக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியின் ஒரு பகுதியாக ஆர்க்கிமிடீஸ் கொல்லப்பட்டார். ஆனாலும் ஒரு தனி மனிதனின் மேதைமையானது ஒரு ரோமானிப் பெரும்படையையே வெல்லக்கூடியது என்பதை நிரூபித்தவராக அவர் உயிர் துறந்தார்.

‘தன் மதுக்கிண்ணங்களுக்குள் கடல் தண்ணீரை ஊற்ற ஆர்க்கிமிடீஸ் என் கப்பல்களைப் பயன்படுத்திக்கொண்டார்’ என்று பின்னாளில் தன் கப்பல்களுக்கு ஆர்க்கிமிடீஸின் பொறிகளினால் ஆன கதியைப்பற்றி மார்சிலஸ் கூறினான். ஆனால் அந்த மேதையைச் சிறைப்பிடித்து உயிருடன் வைத்து அவன் தன் படைகளுக்கு பலமூட்டிக்கொண்டிருந்திருக்கலாம். மார்சிலஸ் அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டான்.

எப்போதெல்லாம் ஒரு மரக்குச்சியோ ஒரு கயிறோ சிரக்யூஸின் சுவர்களில் தெரிந்ததோ அப்போதெல்லாம் ஆர்க்கிமிடீஸின் பயங்கரமான ஆயுதங்களில் ஏதோ ஒன்று வரப்போகிறது என்று அஞ்சி ரோமானியர்கள் பயந்துபோயினர். ஓடி ஒளிந்துகொண்டனர். கடவுளர்களோடு போர் செய்துகொண்டிருக்கிறோமோ என்று ரோமானியர்கள் பயந்தனர்.

இதெல்லாம் ஆர்க்கிமிடீஸ் என்ற ஒரு முதியவரின் வேலை என்று தெரிந்துகொண்ட மார்சிலஸ் ஆர்க்கிமிடீஸைப் பார்க்க ஆசைப்பட்டான். இருக்காதா பின்னே?! அவரை அழைத்துவர சில ராணுவ வீரர்களை அனுப்பினான். அவர்கள் போய்க் கூப்பிட்டபோது ஆர்க்கிமிடீஸ் வேறு ஏதோ கணிதப் பிரச்னையைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார். வீரர்கள் வந்து அழைத்ததைப் பொருட்படுத்தவில்லை. அதனால் வெகுண்ட ஒருவன் அவரை வாளால் வெட்டிக்கொன்றான்.

அவரை உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டான் மார்சிலஸ்.

கப்பல்களை எரித்துப் பொசுக்கும் அளவுக்கு ராட்சசக் கண்ணாடிகளைச் செய்யமுடியுமா என்று பல வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் 1747ல் ஜார்ஜ் லூயி லெக்லேர் பஃபோன் என்ற ஃப்ரெஞ்சு விஞ்ஞானி ஒரு பரிசோதனையின் மூலம் அப்படிச் செய்யமுடியும் என்று நிரூபித்தார். இருநூறு அடிகள் தள்ளி போடப்பட்டிருந்த மரக்கட்டைகளை, தான் செய்த சில கண்ணாடிகளில் சூரிய ஒளியைப் பாய்ச்சி, அவற்றை அக்கட்டைகளை நோக்கித் திசைதிருப்பியதன் மூலம் எரியவைத்துக் காட்டினார். ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமடைய அந்தப் பரிசோதனை அவருக்கு உதவியது.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

2 thoughts on “வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை”

  1. பொன்னம்பலம் விஜயகுமார்

    மிக அருமையான பதிவு ரூமி சார் அவர்களே, வாழ்த்துக்கள்,, நன்றிகள். 📗❤️📚🇨🇭📕📖

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *