15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து. இலக்கணப்பள்ளிகள் (Grammar Schools) என்ற பெயரில் பல பள்ளிக்கூடங்கள் உருவாயின. 32 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த ரோஜாக்களின் யுத்தம் என்று அழைக்கப்பட்ட சண்டை முடிவுற்றிருந்தது. ஆனால் உண்மையில் 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து சண்டை நடக்கவில்லை. அவ்வப்போது அமைதி நிலவத்தான் செய்தது. இன்னும் சரியாகச் சொன்னால், பதிமூன்று வாரங்கள் மட்டுமே உண்மையான, உக்கிரமான சண்டை நடந்தது.
ஆனால் வரலாற்றில் அது 32 ஆண்டுகால யுத்தம் என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் கொல்லப்படவில்லை, கட்டடங்கள் அழிக்கப்படவில்லை, வீடுகள் புல்டோஸர்கள் கொண்டு இடிக்கப்படவில்லை. அது தர்ம யுத்தமாக இருந்தது. ரோஜாக்களின் யுத்தம் என்று ஆங்கிலேயர்கள் ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ரோஜாக்களின் முத்தம் என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். முத்தம் முடிந்து, மன்னிக்கவும் யுத்தம் முடிந்து, மலிவான புத்தகங்கள்மீது மக்களுக்கு ஆர்வம் திரும்பியது. அந்த ஆர்வத்துக்குத் தீனி போட்டது ஒருவருடைய முக்கியமான கண்டுபிடிப்பு.
அவர் ஒரு ஆங்கிலேயத் துணி வியாபாரி. ப்ரட்ஜஸ் என்ற ஊரில் வாழ்ந்துவந்தவர். அவருக்குப் புத்தகங்கள் என்றால் உயிர். மிக அரிய புத்தகங்களை அவர் சேமித்து வைத்திருந்தார். அவரது தனிப்பட்ட ஆர்வத்துக்காக, தனிப்பட்ட சந்தோஷத்துக்காக இறகுகளைக்கொண்டு பதனிடப்பட்ட தோலில் அவரே சில புத்தகங்களை அல்லது அவற்றில் உள்ள சில பகுதிகளைத் தனியாக எழுதியும் வைத்தார்.
புராதன கிரேக்க நகரான ட்ராய் பற்றி ஒரு புத்தகத்தை அவர் அப்போது படித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்ததால் அவருக்கு அந்த வேலையில் களைப்பு மேலிட்டது. ‘என் எழுதுகோல் களைத்துவிட்டது, என் பார்வை மங்குகிறது, என் கை கனக்கிறது’ என்று எழுதிவைத்தார். நண்பர்கள் வேறு சில புத்தகங்களை அவரிடம் எழுதித் தரக்கேட்டிருந்தனர். ஆனால் அவருக்காகவே அவரால் எழுத முடியாதபோது அடுத்தவருக்காக எழுதமுடியுமா என்ன?
எனவே அவர் யோசித்தார். ஜோஹன்னஸ் குடன்பெர்க் 1440களில் செய்த மாதிரி புத்தகங்களை அச்சுப் பதித்து பிரதிகளை உருவாக்க முடியுமா என்று யோசித்தார் (Project Gutenberg என்ற வலைத்தளத்தில் ஆயிரக்கணக்காக நூல்கள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். அது அந்த ஆங்கிலேயர் வியந்த குடன்பெர்க்தான்).
ஒரு முடிவோடு இருந்த அவர் குடன்பெர்க் வாழ்ந்த ரைன் பள்ளத்தாக்குக்குச் சென்றார். ஜெர்மனியில் இருந்த கொலோன் (Cologne) என்ற மக்கள்தொகை மிகுந்த ஊருக்குச் சென்றார். அங்கு நிறைய அச்சுக்கூடங்கள் இருந்ததைப் பார்த்தார். குடன்பெர்க் அச்சுக்கலையை ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. அங்கேபோன அவர் நூல் உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை அங்கிருந்து கற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பினார்.
தன் அச்சுக்கூடத்தை ஆரம்பிக்கத் தகுந்த இடத்தை அவரது வியாபார மூளை யோசித்துத் தேர்ந்தெடுத்தது. வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனைக்குப்போகும் வழிதான் அது. அந்த வழியாகத்தான் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ராஜ பரம்பரையினர் என முக்கியஸ்தர்கள் எல்லாரும் போவார்கள். அங்கே தனது அச்சுக்கூடத்தைத் தொடங்கினார். ராஜ யோசனை! இப்படியெல்லாம் யோசித்துச் செயல்பட்ட அவர் யார்?
அவர்தான் வில்லியம் காக்ஸ்டன். துணி வியாபாரி, ராஜதந்திரி, எழுத்தாளர், இங்கிலாந்தின் அச்சுக்கலையின் பிதாமகர். ஆரம்பத்தில் ராபர்ட் லாட்ஜ் என்ற பணக்கார பட்டு வியாபாரியிடம் பணியாற்றி வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர். அதுமட்டுமல்ல. இங்கிலாந்தின் மன்னர்களான நான்காம் எட்வர்ட், மூன்றாம் ரிச்சர்ட் ஆகியோரின் சகோதரி மார்கரெட்டுக்கு நண்பரும்கூட. ராஜபரம்பரையின், அதுவும் இரண்டு ராஜாக்களின் சகோதரியோடு, நட்பு இருக்கும்போது ஒரு வியாபாரத்தைத் தொடங்கி முன்னேற முடியாதா என்ன? ஆனாலும் அவர் செய்தது அவருக்கு மட்டுமே பயன் தரக்கூடிய வியாபாரமல்ல. அறிவைப் பெருக்கக்கூடிய மகத்தான வாணிபம்.
1474 அல்லது 76-ல் இங்கிலாந்தில் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது. History of Troy என்பதுதான் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட முதல் நூல். அதுவும் ராஜகுடும்பத்து மார்கரெட்டின் ஆலோசனையின்படி. இரண்டு ஆண்டுகள் கழித்து வெஸ்ட்மினிஸ்டர் நகரில் பாராளுமன்றத்துக்கு அருகில் தன் அச்சுக்கூடத்தைக் கொண்டுபோனார் காக்ஸ்டன். The Game and the Play of the Chesse என்பதுதான் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட இரண்டாவது நூல். பிறகு தொடர்ச்சியாக ஃப்ரெஞ்சு ஆங்கில அகராதிகள், ஈசாப் கதைகள் என பல நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. ஈசாப்பின் கதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்தவரும் காக்ஸ்டன்தான். அவருடைய மொழிபெயர்ப்புகளுக்கு பர்கண்டி அரசவையிலும் பிரபு குலத்தவரிடத்தும் நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனாலும் அவர் மொழிபெயர்ப்பதில் சிறந்தவர் என்று சொல்லமுடியாது. புத்தகம் வெளிவரவேண்டுமென்பதற்காக விரைவாக மொழிபெயர்த்து த்தள்ளினர். பல ஃப்ரெஞ்சுச் சொற்களை அப்படியே ஆங்கிலத்துக்கு நகர்த்தினார். அதன் விளைவாக பல ஃப்ரெஞ்சுச் சொற்கள் ஆங்கிலச்சொற்களாயின! உதாரணமாக Apostrophe, Avant-garde, Aviation, Bachelor, Ballet, Bon voyage, Bureau போன்றவற்றைச் சொல்லலாம்.
அவர் வெளியிட்ட பல நூல்களில் சாதனை படைத்தது என்று ஆங்கிலக்கவிஞர் ச்சாஸரின் காவியமான The Canterbury Tales என்பதைச் சொல்லவேண்டும். காக்ஸ்டனின் அச்சகத்தில் அச்சிடப்பட்ட அந்தக் கவிதை நூல் ஐநூறு ஆண்டுகள் கழித்து 4.6 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது வரலாறு! அச்சிடப்பட்டுக்கொண்டிருந்த நூல்களின் எண்ணிக்கையைக்கண்டு அரசாங்கமும் திருச்சபையும்கூட கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டன. ஏனெனில் அரசுக்கும் திருச்சபைக்கும் எதிரான நூல்கள் எந்த நேரமும் வந்துவிடலாம் அல்லவா.
தான் பதிப்பித்த புத்தகங்களுக்கான முன்னுரைகளை எழுதுவதில் காக்ஸ்டனுக்கு மிகவும் விருப்பம். அந்தப் புத்தகம் எத்தகைய பின்புலத்திலிருந்து வருகிறது என்றெல்லாம் தன் முன்னுரையில் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்தின் முதல் அச்சுப்பதிப்பாளராக இருப்பதன் பின்னால் உள்ள கஷ்டங்களையும் அவர் ஒரு புத்தகத்துக்கான முன்னுரையில் குறிப்பிட்டார்.
வர்ஜிலின் ’ஈனியட்’ என்ற காவியத்தின் ஃப்ரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று அவர் கண்ணில் பட்டது. உடனே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டார். ஒன்றிரண்டு பக்கங்கள் எழுதினார். ஆனால் அதற்கு மேல் அவரால் போகமுடியவில்லை. காரணம் இங்கிலாந்தில் நிலவிய ஆங்கிலம் பற்றிய ஓர் உண்மை அவரை நிறுத்தி வைத்தது. அது என்ன உண்மை?
இங்கிலாந்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான ஆங்கிலம் பேசப்பட்டது. எனவே தன் மொழிபெயர்ப்பு எத்தனை பேருக்குப் புரியும் என்ற கேள்வி அவரை நிறுத்தியது. ஒவ்வொரு சொல்லுக்குமான ’ஸ்பெல்லிங்’கூட பகுதிக்குப்பகுதி மாறியது. ஒரு இடத்தில் முட்டைக்கு eggey என்றும் இன்னொரு இடத்தில் eyren என்றும் சொன்னார்கள், எழுதினார்கள். ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துகளும் உடைந்த முட்டையைப்போல வழுக்கிக்கோண்டே போயின!
ஆனாலும் அவர் 1491ல் தன் 69வது வயதில் இறந்து போவதற்கு முன் தன் நூறாவது நூலை வெளியிட்டுவிட்டார்! நூறு வயது வாழாவிட்டாலும் நூறில் முடிந்துள்ளது அவர் வாழ்வு! அவர் தயவால்தான் cough என்ற சொல் off என்பதோடும், bough என்ற சொல் cow என்பதோடும் சந்த உறவு கொண்டது! ஆங்கிலச் சொற்களின் எழுத்தில் உள்ள இதுபோன்ற குழப்பங்களுக்கெல்லாம் நாம் காக்ஸ்டனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! பதிப்பாளராக மட்டுமில்லாமல், படிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் காக்ஸ்டன் இருந்தார்.
துணி வணிகர், அச்சுக்கலையின் பிதாமகர், படிப்பாளி, பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என பல பெருமைகளுக்கு உரிய வில்லியம் காக்ஸ்டன் 2002-ல் பிபிசி நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் நூறு மஹா ஆங்கிலேயர்களில் (100 Greatest Britons) ஒருவராக கணிக்கப்பட்டார். அது சரியான தேர்வுதானே!
0
U hve beautifully written. Every student of English literature must know the history of printing press in England.
Assalaamu Alaikkum Warah.
Excellent article given by you.
As a literature professional, you are providing marvellous information about historical and literature based details. Please communicate to me through my wharsApp no. 7845282726..
I can acquire some knowledge from you.
Wassalaam.