Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி

வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி

ஜே.கே.ரௌலிங்

நான் பார்த்த ஓர் ஆங்கிலத்திரைப்படத்தில் ஓர் அழகான காட்சி. மனிதக் கற்பனை தன் இரு சிறகுகளையும் முழுமையாகத் திறந்து விரித்திருந்ததை அந்தக் காட்சியின் மூலம் உணர முடிந்தது.

அது ஒரு மாந்திரிகப்பள்ளிக்கூடம். மந்திரவாதிகளை, அற்புதம் செய்ய வல்லவர்களை உருவாக்கும் பள்ளிக்கூடம் என்று வைத்துக்கொள்ளலாம். அதெல்லாம் சாத்தியமா என்று கேட்கக்கூடாது. மனிதக் கற்பனைக்கு எதுவும் சாத்தியம். அது திரைப்படங்களைவிட அற்புதமானது.

அதில் படிக்கும் கதாநாயக மாணவனுக்கு அவன் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வரும். அவன் அம்மா அவன் மீது மிகவும் கோபமாக இருந்திருப்பாள் போலும். ஏனெனில் அந்தக் கடிதம் அந்தரத்தில் நின்றுகொண்டு தன்னைத்தானே அவன் அம்மாவின் குரலில் கோபமாகப் படித்துக்கொள்ளும்! படித்து முடித்த பின்னும் கோபம் அடங்காததால் அது தன்னைத்தானே கிழித்துப்போட்டுக்கொள்ளும்!

அந்தக் கற்பனையை, அந்தக் காட்சியை ரொம்ப ரசித்தேன். அது இருக்கட்டும். நான் சொல்லவந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறதா? இல்லை என்று விரைவிலேயே விளங்கிவிடும்.

ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு ரயிலில் போகக் காத்திருக்கிறீர்கள். அப்போது அந்த ரயில் நாலுமணி நேரம் தாமதம் என்று தகவல் கிடைத்தால் எப்படி இருக்கும்?! கடுப்பின் உச்சகட்டத்தில் ரயில்வே துறையைச்சேர்ந்த யாரையாவது கொன்றால்கூட சரிதான் என்று தோன்றும்.

ஆனால் இங்கிலாந்தில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அவர் மான்செஸ்டர் என்ற ஊரிலிருந்து லண்டனுக்கு ரயிலில் போக வந்திருந்தார். இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் ரயில் மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்குச் சென்றுவிடும். ஆனால், ரயில் வரவே நாலரை மணி நேரம் தாமதம் ஆகும் என்றது ரயில்வே தகவல்!

என்ன செய்யலாம் என்று அந்தப் பெண் யோசித்தார். அவர் ஒரு படைப்பாளி. ஆனால் மான்செஸ்டரில் காத்திருந்த அன்றுவரை எதுவும் பிரசுரமாகவில்லை! தன் மனதுக்குள்ளேயே அவ்வப்போது எழுதி எழுதிப் பார்த்துக்கொண்டிருப்பார் போலும். தன் திறமையை வளர்க்க ரயில் வரத் தாமதமான அந்த நேரத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார்.

ஆமாம். ஒரு முழு நாவலின் எல்லா அத்தியாயங்களையும் மனதுக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார்! இது நடந்தது 1990களின் மத்தியில். ஆனால் எல்லாமே மனதுக்குள்தான். ஒரு சிறுகதைகூட அதுவரை பிரசுரமாகவில்லை.

இதற்கிடையில் அவர் வாழ்க்கையில் பல துயரமான சம்பவங்களும் நடந்தேறிவிட்டன. அம்மா இறந்துபோனார். சகோதரிக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் இரவுப் பள்ளியொன்றில் பகுதிநேர ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆனால் எதுவுமே கதைக்கு ஆகவில்ல; அவர் கதைக்குத்தான்.

இதற்கிடையில் காதல் வேறு! காதலுக்குத்தான் நேரம், காலம் எதுவுமே கிடையாதே! போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் அராண்டஸ் என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டு 1992ல் புகுந்த வீட்டுப்பெண்ணாக உரிமையுடன் போர்ச்சுகலுக்குச் சென்றார். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஜெஸ்ஸிகா என்று பெயரிட்டனர். எல்லாமே கொஞ்ச காலம்தான். ஆனால் இந்தக் காலகட்டத்தில் தன் மனதுக்குள்ளிருந்த நாவலின் இரண்டு மூன்று அத்தியாயங்களை எழுதி அல்லது டைப் அடித்து வைத்திருந்தார்.

காதல் திருமணம் தன் உண்மையான சொரூபத்தைக் காட்டத் தொடங்கியது. பாத்திரத்தைத் திறந்து பார்ப்பதற்குமுன் உணவின் மீதிருக்கும் ஆர்வம் திறந்து பார்த்த பிறகு இதுதானா என்று ஆனதுபோல ஆனது அவர்களது மண வாழ்க்கை!

ஒருமுறை ஜார்ஜ் தன் மனைவியைக் கடுப்புடன் கன்னத்தில் அறைந்தார். மனைவி எழுதிவைத்திருந்த நாவலின் பிரதியை எடுக்கமுடியாதபடி வீட்டைப்பூட்டி வைத்தார். அவர் நிச்சயம் ஒரு ‘சைக்கோ’வாக இருந்திருப்பார். இன்னொருமுறை வீட்டைவிட்டு வெளியே போ என்று கத்தினார். போலீஸிடம் சொல்லி தன் மகள் ஜெஸ்ஸியை அழைத்துப்போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அந்தப்பெண்மணிக்கு. தூக்குப்போட்டுக் கொண்டுவிடலாமா என்றுகூட ஒருமுறை அவர் நினைத்தார். இப்படியெல்லாம் சென்றது அந்தக் காதல்வாழ்க்கை!

கடைசியில் போர்ச்சுகலைவிட்டு மீண்டும் அந்த எழுத்தாள மனைவி 1993ல் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்க் நகருக்குத் தன் மகளுடன் சென்றார். 1994ல் விவாகரத்துக்கு மனுசெய்து 1995ல் விவாகரத்தும் பெற்றார். காதல் திருமணத்துக்குப் பின் காதல் விவாகரத்து!

இவ்வளவு மன இறுக்கத்துக்கும் மத்தியில் ஒருவழியாக அந்த நாவலை எழுதியும் முடித்துவிட்டார். நம் தமிழ்ப்பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடம் அதில் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பன்னிரண்டு பதிப்பாளர்கள் அந்த நாவலை நிராகரித்தனர்! கடைசியில் ப்ளூம்ஸ்பரி பிரசுரத்துக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த பாரி கன்னிங்ஹாம் என்பவர் மட்டும் அதை வாங்கினார்.

அந்த நேரத்தில் ப்ளூம்ஸ்பரியின் தலைமைப்பொறுப்பிலிருந்த நைஜல் நியூட்டன் என்பவர் தன் எட்டுவயது மகளிடம் அந்த நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சிறுவர் சிறுமியருக்கான நாவல் அது. அவர்களுக்குப் பிடிக்கிறதா என்று பரிசோதித்தார். ரொம்ப உளவியல்ரீதியாகச் செயல்பட்டுள்ளார்.

அந்த நாவலின் முதல் அத்தியாயத்தை முடித்துவிட்டு அவர் மகள் அடுத்தடுத்த அத்தியாயங்கள் எங்கே என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். நம் கதாநாயகிக்கு அங்கிருந்து சுக்கிர திசை வேலைசெய்ய ஆரம்பித்தது.

முழுநாவலும் பிரசுரமானது. முதலில் 5,650 பிரதிகள் அச்சிடப்பட்டன. அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. அந்த நாட்டுக்கணக்கு போலும். அதற்காக அந்தப் பெண் 2800 பவுண்டு ராயல்டியும் பெற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாய்! அதன் பிறகு இத்தாலியின் பொலோன்யா உலகக் குழந்தைகள் புத்தகச்சந்தையில் அவரது நாவல் 10,5000/- டாலருக்கு ஏலம் விடப்பட்டது. கிட்டத்தட்ட 85 லட்ச ரூபாய்! அந்தப் பணத்தை வைத்து நம் கதாநாயகி எடின்பர்க் நகரில் தனக்காக ஒரு அடுக்குமாடிக் கட்டட வீட்டை, அதாவது ஃபளாட்டையே வாங்கினார்! இவ்வளவு பணம் கிடைக்குமானால் எத்தனை முறைவேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம்!

அதன்பிறகு அந்த நாவலின் தொடராக ஏழு பாகங்களை எழுதினார். ஒவ்வொரு பாகமும் வெளிவந்த அன்றே, ஒரே நாளில் உலகம் பூராவும் ஒரு மில்லியன் விற்றது. கிட்டத்தட்ட எட்டு கோடிப் பிரதிகள்!

இப்போது புரிந்திருக்கும் இவ்வளவு நேரமாக நான் யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று. ஆமாம். அவரேதான். ஹாரி பாட்டர் தொடர் நாவல்களை எழுதிய ஜே.கே.ரௌலிங் (J.K. Rowling).

அவர் ரயிலுக்காகக் காத்திருந்தபோது மனதில் எழுதி முடித்தது ஹாரி பாட்டரின் முதல் பாகத்தைத்தான். அதீதமான பொறாமையை ஏற்படுத்தும் விற்பனை. ஹாரி பாட்டர் நாவல்களாக மட்டுமின்றி திரைப்படங்களாகவும் வந்து உலகெங்கும் சக்கைபோடு போட்டது. நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடும் கற்பனை வளம் பற்றிய நிகழ்ச்சியும் ஹாரிபாட்டர் முதல் பாக படத்தில் வரும் காட்சிதான்!

ஒட்டுமொத்தமாக ரௌலிங்கின் நாவல்கள் இதுவரை 600 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதாவது ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5000 கோடிப்பிரதிகள்! இது உண்மைதானா என்று நினைக்கின்ற அளவுக்கான உலக சாதனைதான் அது. 1990லிருந்து 97 வரை. ஏழே ஆண்டுகளில் குபேரம்!

அதுமட்டுமா? 84 மொழிகளில் மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன! ஒரு தமிழ்ப் புத்தகம் இப்படி விற்குமா? அதிகபட்சமாக நாகூர் ரூமியின் ‘அடுத்த விநாடி’ 50,000 பிரதிகளைத்தாண்டி விற்பனையில் சாதனை என்று முன்அட்டையில் போடலாம்! கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியின் சாதனை அவ்வளவுதான்!

நல்ல விஷயங்களை, அழகான விஷயங்களை, அற்புதமான விஷயங்களைச் சொல்லவேண்டுமானால்கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் உலகம் மதிக்கிறது. ஞானி ரமணர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆனால் உலகம் அவரைக் கண்டுகொண்டு கொண்டாடியதா? உலகம் என்ன, தமிழ்நாடு கொண்டாடியதா? இல்லையே! பால் ப்ரண்டன் என்ற ஆங்கிலேயர் A Search in Secret India என்று ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதிய பிறகுதானே ரமணரை உலகமும் தமிழ்நாடும் நிமிர்ந்து பார்த்தது!

உலகின் ஆகச் சிறந்த மொழியான தமிழுக்கு இத்தகைய கௌரவம் கிடைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். தமிழிலும் ஹாரிபாட்டர் போன்ற ஒரு ச்சூமந்திரக்காளி அற்புதம் புத்தக உலகில் நடக்கவேண்டும்.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

1 thought on “வரலாறு தரும் பாடம் #11 – ச்சூ மந்திரக்காளி”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *