Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

முஹம்மது முஸ்தஃபா அல்பராதி

தமிழ் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாதவர். ஆனால் தெரிந்திருக்க வேண்டியவர். அவர் பெயர் முஹம்மது முஸ்தஃபா அல்பராதி. ஆங்கிலத்தில் அவர் பெயரின் இறுதிப்பகுதியை இணையத்தில் எல் பராடெய் என்றுதான் எப்போதும்போல தப்பும் தவறுமாகப் போட்டிருக்கிறார்கள்!

ஆமாம். தமிழ்ப்பெயர்கள், அரபிப்பெயர்களெல்லாம் ஆங்கிலேயர் வாயில் நுழையாது. சகட்டுமேனிக்கு அவர்களுக்குப் பிடித்த ஸ்பெல்லிங் கொடுத்துவிடுவார்கள்! இவருக்கும் இப்படித்தான் ஆங்கிலத்தில் Mohamed Mostafa ElBaradei என்று போட்டுள்ளார்கள்.

Mohamed என்பதையாவது மன்னித்துவிடலாம். அந்த ஸ்பெல்லிங் உலகம் முழுவதும் அறியப்பட்டது. ஆனால் மற்றதெல்லாம் ஆங்கிலேய அகந்தையின் வெளிப்பாடு! அதனால்தானோ என்னவோ தமிழக அரசு சமீபத்தில் 1018 இடங்களின் பெயர்களை தமிழில் உள்ளதுபோல் மாற்ற உத்தரவிட்டுள்ளது. உதாரணமாக இனிமேல் ‘Triplicane’ கிடையாது ‘Thiruvallikkeni’ தான்! Guindy மீண்டும் Gindi ஆகிவிட்டது! சரிசரி, எதையோ சொல்லவந்து எங்கோ போய்க்கொண்டிருக்கிறேன்.

நம் கட்டுரை நாயகர் முஹம்மது முஸ்தஃபா அல்பராதி யார்? எகிப்து நாட்டுக்காரர். சட்ட வல்லுனர். தன் நாட்டை அயல்நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அதாவது அரசின் அதிகாரப்பூர்வ ராஜ தந்திர நிபுணர். ஒரே ஒரு மாதம் மட்டும் எகிப்து நாட்டின் துணை அதிபராகவும் இருந்தவர்.

இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் ஒன்று 2005ல் அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு. அந்தப் பரிசின் மூலமாகக் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய்கள் பணத்தையெல்லாம் கெய்ரோவிலிருந்த அநாதை இல்லங்களுக்குக் கொடுத்தார்.

1980களில் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. அதன் விளைவாக இந்த உலகமும் மாறியது! ஆமாம். 1984ல் சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியில் (IAEA) அவருக்கொரு வேலை கிடைத்தது. அணுசக்தியை ஆக்கபூர்வமாகத்தான் உலகின் சில நாடுகள் பயன்படுத்துகின்றனவா என்று ஆராய்ந்து முடிவெடுக்க அந்த ஏஜென்ஸி இருந்தது. சில ஆண்டுகளிலேயே அதன் தலைவரானார் அல் பராதி. அதன்பிறகு அந்த ஏஜன்ஸி வேலை செய்யும் பாணியையே மாற்றி அமைத்தார்.

அந்த அமைப்புக்கான அதிகாரத்தை உயர்த்த மிகவும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். அணுசக்தியைத் தவறாகப்பயன்படுத்திய நாடுகளைக் கண்காணித்துத் தடுக்க அந்த அதிகாரம் அவருக்கு உதவியது. தங்களது அணுஆயுதப் பயன்பாடு பற்றிப் பொய்சொன்ன நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை கொடுத்தார்.

மிக முக்கியமாக, ஈராக் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டைச் சொல்லி அமெரிக்கா அத்துமீறி 2003ல் ஈராக்குக்குள் போனதை அவர் கண்டித்தார். ஈராக்கில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றும், அமெரிக்கா சென்றது தவறு என்றும் துணிச்சலாகச் சொன்னார். சதாம்ஹுசைனைக் கண்டுபிடித்துக் கைது செய்தது அமெரிக்க ராணுவம் என்று எனக்கு நடுராத்திரியில் ஃபோன்செய்து சந்தோஷப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் உண்டு! எழுத்தில் இஸ்லாத்துக்கு ஆதரவாகவும் இதயத்தில் எதிராகவும் இருக்கும் மனங்கள் அவை.

ஆனால் அல்பராதி எப்போதும் ஒரேமாதிரியான நினைப்பாடும் மனநிலையும் கொண்டிருந்தார். ‘நாம் அனைவருமே மனிதகுலம், ஒரே குலம், ஒரே இனம் என்று புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே உண்மையான அமைதியும் பாதுகாப்பும் சாத்தியம்’ என்று ஒரு நேர்காணலில் சொன்னார்.

2005ல் மீண்டும் மூன்றாவது முறையாக அவர் அணுசக்தி ஆயுத அமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். ஆனால், அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது. வேதியியல் ஆயுதங்கள் உள்ளன என்று பொய்சொல்லி அமெரிக்கா ஈராக்குக்குச் சென்றது தவறு என்று துணிச்சலாகச் சொன்னவரை அமெரிக்கா எப்படி ஆதரிக்கும்?

ஆனாலும் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ரஷ்யா என எல்லா நாடுகளும் அல்பாராதிக்கு ஆதவாக வாக்களித்தன. எனவே மூன்றாம் முறையாக அமெரிக்காவின் முகத்தில் கரிபூசப்பட்டு அந்த நான்காண்டு காலப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எகிப்திய அரபிமொழிதான் அவரது தாய்மொழி என்றாலும் அவர் பன்மொழி வித்தகராக இருந்தார். ஆங்கிலம் ஃப்ரெஞ்சு இரண்டு மொழிகளிலும் வெளுத்து வாங்குவார். ஜெர்மன் மொழியிலும் பேசக்கூடியவர்.

கெய்ரோ பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த இவர் சர்வதேச சட்டப்பாடத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருந்தார். 1964ல் அவரது அரசியல் வாழ்வு துவங்கியது. அயல்நாட்டு விவகார அமைச்சகத்தில் தூதுவராகப் பணியில் சேர்ந்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

கான்சர் நோய்க்கு எதிராக அணுசக்தியைப் பயன்படுத்துவது பற்றியும் யோசித்தார். பதினைந்து பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளன! மூன்று புத்தகங்களையும் அல் பராதி எழுதியுள்ளார். அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான இயக்கங்களுக்கு அல் பராதி ஆதரவு வழங்கினார். அடுத்த அதிபராக அவரையே நியமிக்கலாம் என்றுகூடப் பேசப்பட்டது. அதற்காகச் சில முயற்சிகளும் செய்யப்பட்டன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதுவரை நோபல் பரிசுபெற்ற முஸ்லிம்கள் பதிமூன்று பேர். அதில் அல் பராதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு அமைதிக்கான இந்திரா காந்தி பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

அணுசக்தி மற்றும் அமைதி தொடர்பாக இவர் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார் என்றும், இல்லை, பதிப்பாளராக மட்டும் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

‘ஈராக்கில் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டினால் ஒரு லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். போரில் இறந்த ஒவ்வொருவருக்காகவும் நான் துயரப்படுகிறேன். அதில் இறந்துபோன 2200 அமெரிக்க ராணுவ வீரர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். அங்கே அணு ஆயுதங்களையோ, கும்பலாக மக்களைக்கொன்றுபோடும் ஆயுதங்ககளையோ நாங்கள் பார்க்கவில்லை. ஒரு சர்வாதிகாரியைக் கொல்வதற்காக ஒன்றுமறியாத பொதுமக்களைக் கொன்று போடுவதை நாம் நியாயப்படுத்த முடியாது.

சாதாரண மக்கள் காலையில் விழித்தெழுகிறார்கள். ஈராக்கிலும், ஆப்கனிஸ்தானிலும், பாலஸ்தீனத்திலும் ஒன்றுமறியாத பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிறார்கள். அந்த அநியாயம், அந்த அவமானம் அவர்களை உசுப்புகிறது. அவர்களைக் கொதித்து எழவைக்கிறது.

காங்கோ போரில் கொல்லப்பட்ட மூன்று மில்லியன் மக்களுக்காக நான் துயருறுகிறேன். 9/11 தாக்குதலின்போது இறந்த மூவாயிரம் பேருக்காக வருந்துகிறேன். இதெல்லாம் நம் மனசாட்சியில் ஏற்பட்ட ஒரு வழு. நாம் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

அந்த பயங்கரமான நிஜங்களையெல்லாம் மக்கள் நினைவில் வைக்க விரும்புவதில்லை. ஆனால் அவை நிஜங்கள். ஒருவரையொருவர் கொன்று போடுவதை விட்டுவிட்டு, வேறுவழியில் நம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு சிறப்பான வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். போரைத் துவங்குவதற்கு முன் நம்மிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள மற்ற எல்லா வழிகளிலும் முயன்று பார்த்துவிட்டோமா என்பதை உறுதி செய்யவேண்டும்.

இன்றைக்கு ஈராக், நாளைக்கு லிபியா. அதன்பிறகு ஈரானாக இருக்கலாம். அதிகாரத்தாலும் அடக்குமுறையாலும் எதையும் சாதித்துவிட முடியாது. மக்கள் ஏன் இப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இது உடனே நடந்துவிடாது. நீண்ட காலம் எடுக்கும்.

புகைபிடிக்கும் பழக்கத்து நீங்களே அடிமையாக இருக்கும்போது, உங்கள் ஜேபியிலிருந்து ஒரு சிகரட் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, புகைபிடிப்பது கெட்ட பழக்கமென்று நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் சொல்லமுடியாது.

ராணுவத்தைப் பயன்படுத்தி எந்தப் பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு காணவே முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே இது சாத்தியப்படும்.’

– இவ்விதம் அவர் பல நேரங்களில், பல நேர்காணல்களில் கூறியுள்ளார். இதைவிடத் தெளிவாகவும் துணிச்சலாகவும் ஒரு அமைதியின் தூதுவரால் சொல்லமுடியுமா என்ன?

அந்த வகையில் அல்பராதியின் வாழ்வும் செய்தியும் நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லத்தான் செய்கிறது. உலகத்துக்கே அஹிம்சை வழியில் வெல்வது எப்படி என்று போதித்த நாடல்லவா நமது. எனவே அல்பராதியின் செய்தி நமக்குப் புதிதல்ல. அவரை எகிப்தின் காந்தி என்றே சொல்லலாம்.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *