Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்

வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்

பெர்னார்ட்ஷா

ஒரு சின்ன வெங்காயம் அளவுக்கு ஒருவருக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் இருந்தால் போதும். அவர் பெயரைச் சொன்னவுடன், ‘ஓ அவரா, அவர் ஒரு ஜீனியஸ்’ என்று சொல்வார்கள். அவர் யார்?

ம்ஹும், இப்போது சொல்லமாட்டேன். ஆனால் சில குறிப்புகளைத் தரமுடியும். இந்தக் கட்டுரை முடிவதற்குமுன்பு நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.

அப்பா ஒரு குடிகாரர். மதுவை நான் முகர்ந்துகூட பார்க்க மாட்டேன் என்று சொன்ன அவர் தனிமையில் இருந்தபோதெல்லாம் முகர்ந்து பார்க்காமலே மது பாட்டில்களை குடித்தும், விழுங்கியும் காலி செய்தார். ஒருமுறை போதையில் தன் மகனை கால்வாயில் தூக்கி எறியவும் முயன்றார். ஆனால் அந்த மகனோ தன் 70ஆவது வயதில் உலகின் பிரசித்தி பெற்ற மனிதர்களில் ஒருவராக ஆனார்.

அப்பா குடிகாரராக இருந்தது அதற்குக் காரணமல்ல. தன் எழுத்தாலும், பேச்சாலும், வித்தியாசமான சிந்தனையாலும் அந்த மகன் இவ்வுலகைக் கவர்ந்திருந்தார்.

அயர்லாந்தில் டப்லின் என்ற ஊரில் பிறந்த அவர் இருபது வயதில் லண்டனுக்கு வந்தார். எதற்கு? பிழைப்பதற்கு. ஒரு எழுத்தாளராக, ஒரு நாவலாசிரியராக, ஒரு நாடக ஆசிரியராக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு.

யாராக இருந்தாலும் கஷ்டப்படாமல் முன்னேற முடியுமா என்ன? முடியாது. எனவே அவர் தனக்குத்தானே ஆசிரியராக இருந்து பல பாடங்களைப் படித்துக்கொண்டார். நாலே ஆண்டுகளுக்குள் இசை மற்றும் நாடக விமர்சகராகத் தன்னை உருவாக்கிக்கொண்டார். நார்வே நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான இப்சன் என்பவரின் நாடகங்களைத் தன் படைப்புகளுக்கு உந்துசக்தியாக வைத்துக்கொண்டார்.

அறுபது நாடகங்கள், ஐந்து நாவல்கள், சில கட்டுரைகள், அரசியல், பொருளாதாரம், கலை தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகள், ஆயிரக்கணக்கில் கடிதங்கள் என எழுதிக்குவித்தார். ஆனாலும் அவர் எழுதிய நாடகங்களுக்காகவும், அவரது வித்தியாசமான சிந்தனைக்காகவுமே அவர் அறியப்படுகிறார். சிலாகிக்கப்படுகிறார். மேதை என்று புகழப்படுகிறார்.

தன் அப்பாவின் குடிப்பழக்கத்தைப்பற்றி அவர் இப்படி எழுதினார்: ‘அது எங்கள் குடும்பத்தின் துன்பியல் அல்லது நகைச்சுவை நாடகம்!’

பதினைந்து வயதில் வேலைபார்த்து உழைத்துச்சம்பாதிக்க அனுப்பப்பட்டார். அவர் சுத்த சைவர் மட்டுமல்ல, டீ, காஃபி, மது என எந்தப்பழக்கமும் இல்லாதவர். மதுப்பழக்கமில்லாத இந்தியராக இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அன்றாட உணவின் பகுதியாகக் கருதப்பட்ட மதுப்பழக்கமில்லாத ஆங்கிலேயராக இருப்பது பெரிய விஷயம். பெரியம்மையால் ஏற்பட்ட தழும்புகளைத் தன் பெரிய தாடியால் மறைத்தார்.

அவருடைய சிறப்புக்களில் ஒன்று வித்தியாசமான சிந்தனைகொண்ட தன் எழுத்தால் படிப்பவர்களைக் கவர்ந்தது. அது பலரின் புருவங்களை உயர்த்தியது. உதாரணமாக, திருச்சபையின் உச்சத்தலைவரான ‘போப்’பை சிலை வணக்கம் செய்யும் மோசடிக்காரன் என்று அவர் வர்ணித்தார்! உண்மையை உரக்கச்சொல்லும் தைரியம் அவரிடம் அதிகமாகவே இருந்தது.

தான் படித்த நான்கு பள்ளிக்கூடங்களையும் குழந்தைகள் காப்பகம் என்று வர்ணித்தார். அவற்றிலிருந்து தான் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை, அந்த முட்டாள்தனமான நிறுவனங்களுக்கு என் மனப்பூர்வமான சாபங்களைக் கூறுகிறேன் என்றார்! பள்ளி நாட்களில் தான் ஒரு சோம்பேறியாகவும், பயனற்றவனாகவும் இருந்ததற்காக பெருமைப்படுவதாகவும் சொன்னார்! மனைவியாகவும் தாயாகவும் இருக்கத் தகுதியில்லாதவர் என்று தன் அம்மாவைப்பற்றிக் கூறினார்.

தன் 29வது வயது வரை கற்பைக் காப்பாற்றிவந்த அவர், தன்னைவிட 15 வயது மூத்த ஜென்னி என்ற பெண்ணிடம் ஒருநாள் அதை இழந்தார்! நாற்பதாவது வயதில் உடல்நலம் சரியில்லாமலிருந்தபோது தன்னை கவனித்துக்கொண்ட டௌன்செண்ட் என்ற பெண்ணின் விருப்பப்படி அவரையே மணந்துகொண்டார். ஆனால் இருவருக்கும் சாந்திமுகூர்த்தமே நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மொத்த சொத்தையும் ஜென்னிக்கே கொடுத்துவிட்டார் போலும்!

எல்லாரையும்போல ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளைக் கொண்டாட மறுத்தார். என்னுடைய பிறந்த நாளையே நான் கொண்டாடாதபோது அவருடையதை ஏன் கொண்டாடவேண்டும் என்று கேட்டார்! நியாயம்தானே?!

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் அசைவராக இருந்தார். ’நரமாமிசம் உண்பவன்’ என்று தன்னைத்தானே வர்ணித்துக்கொண்டார். பின்னர் திடீரென்று ஒருநாள் தூய சைவராக மாறிப்போனார்!

ஒரு கலைஞனாக வேண்டும், இசையமைப்பாளனாக வேண்டும் என்றெல்லாம் விரும்பினார். ஆனால் எந்த இசைக்கருவியையும் வாசிக்கத் தெரியாது. பாடகனாக வேண்டும் என்று விரும்பினார் ஆனால் குரல்வளமில்லை. ‘என் அறிவும் குணமும் அம்மாவிடமிருந்தே வருகின்றன’ என்று கூறினார்.

Immaturity (முதிர்ச்சியின்மை) என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினார். அது அவரது முதல் நாவல். அது அவரது முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியதோ என்னவோ நிராகரிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் அவர் சம்பாதித்தது ஆறு பவுண்டுகள் மட்டுமே. கடைசியில் நாடகங்கள் எழுதியதன் மூலம் உலத்தின் கவனத்தை அவர் கவர்ந்தார். இவ்வுலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கப்படும் ஒரு நாடக ஆசிரியர் இவர்தான்.

Arms and the Man என்ற அவரது நாடகம் முதலில் வெற்றிபெற்றது. அதில் ராணுவத்தை அவர் கிண்டல் செய்திருந்தார். John Bull’s Other Island என்ற அவரது இன்பியல் நாடகத்தைப் பார்த்து சிரித்துச் சிரித்து உட்கார்ந்து கொண்டிருந்த நாற்காலியையே உடைத்துவிட்டார் மன்னர் ஏழாம் எட்வர்ட்!

அதன்பிறகு Man and Superman, Major Barbara, The Doctor’s Dilemma, Caesar and Cleopatra, Pygmalion, Saint Joan எனத் தொடர்ந்து பல நாடகங்கள் வெற்றி பெற்றன.

Saint Joan-க்குப்பிறகு 1925ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசை மட்டும் பெற்றுக்கொண்ட அவர் அதற்கான பணத்தைப்பெற மறுத்துவிட்டார்! நானாக இருந்தால் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பரிசை வேண்டாமென்று சொல்லியிருப்பேன்! (சும்மா ஒரு கற்பனைதானே!) 1241 பக்கங்கள் கொண்ட அவர் எழுதிய டயரிகள் மட்டும் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன!

இவ்வளவு தூரம் சொன்னபிறகு அவர் யாரென்று இந்நேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆமாம், அவரேதான். ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. ரொம்ப வித்தியாசமான சிந்தனைக்காக புகழ்பெற்றவர். அப்படி என்ன வித்தியாசமான சிந்தனை? அவரது மேற்கோள்களில் சிலவற்றை உதாரணமாகக் கீழே தருகிறேன்.

  • ஒன்றுமே தெரியாது, ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைப்பான். அவன்தான் அரசியல்வாதி.
  • உண்மையான காதல் என்பது உணவின் மீதான காதல்தான்.
  •  ஜன்னல் மூடியிருந்தால் தூங்க முடியாத ஒரு ஆணும், ஜன்னல் திறந்திருந்தால் தூங்க முடியாத ஒரு பெண்ணும் செய்துகொள்ளும் ஒப்பந்தம்தான் திருமணமாகும்.
  •  நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன். அதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
  •  பலர் வணங்குவதில்லை. பிச்சை மட்டுமே கேட்கிறார்கள்.
  •  எல்லாச் சுயசரிதைகளும் வேண்டுமென்றே சொல்லப்பட்ட பொய்கள்.
  •  எப்போதிலிருந்து உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது? எப்போதுமே இல்லை. மூச்சுவிட வேண்டுமென்று தோன்றியுள்ளதா? அப்படித்தான் எழுத்தும்.

இதுமட்டுமல்ல. சட்டென்று மூக்குடைக்கும் பதில்களைச் சொல்வதில் பெர்னார்ட்ஷா வல்லவர். புகழ்பெற்ற ஆங்கிலக்கட்டுரையாளரும் விமர்சகருமான செஸ்ர்டனும் ஷாவும் நண்பர்கள். செஸ்டர்டன் ரொம்ப குண்டு. ஷா ரொம்ப ஒல்லி. ஒருமுறை ஷாவைப்பார்த்து செஸ்டர்டன் சொன்னார்:

‘உன்னைப் பார்த்தால் இங்கிலாந்துக்கே பஞ்சம் வந்த மாதிரி இருக்கிறது’.

உடனே, ஆமாம் உடனே, ஷா சொன்னார்: ‘உண்மைதான். ஆனால் உன்னைப் பார்த்தால்தான் இங்கிலாந்துக்கு ஏன் பஞ்சம் வந்தது என்று தெரியும்’!

உண்மையைச் சொல்ல அவர் என்றுமே தயங்கியதில்லை. இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்களைப்பற்றி பெர்னார்ட் ஷா சொன்னது அதற்கொரு எடுத்துக்காட்டு: ‘முஹம்மதைப்போன்ற ஒரு மனிதர் இந்த நவீன உலகத்தின் சர்வாதிகாரியாக இருந்தாரென்றால் இவ்வுலகுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் அவரால் கொடுக்கமுடியும் என்று நம்புகிறேன்’.

தனது நாடகங்கள் மூலம் ஆங்கில இலக்கியத்தில் இறாவா இடம்பெற்ற பெர்னார்ட்ஷாவின் கருத்துக்களில் நாடகத்தன்மை என்றுமே இருந்ததில்லை.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *