Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #14 – முகலாய முதல்வன்

வரலாறு தரும் பாடம் #14 – முகலாய முதல்வன்

பாபர்

அவருடைய அம்மா செங்கிஸ்கானின் இரண்டாவது மகனின் வழியில் வரும் யூனுஸ்கானின் மகள். அவரின் தாத்தா தைமூரின் பரம்பரையில் வருபவர். உலகை உலுக்கிய தைமூர், செங்கிஸ்கான் என்ற இரண்டு மாவீரர்களின் ரத்தம் அவர் உடம்பில் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த இருவருமே இந்தியாமீது படையெடுத்து வந்தவர்கள்தான். ஆனால் மக்களுக்கோ, கால்நடைகளுக்கோ, பயிர்களுக்கோ ஆட்சிக்கு வருபவர்கள் துன்பம், சேதம் விளைவிக்கக்கூடாது என்று தைமூர் சொல்லியிருந்ததும் வரலாற்று வினோதங்களில் ஒன்று.

முகலாயப் பேரரசின் வாரிசாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டபோது அவருக்கு வயது பதினான்குதான். அதுகூடத் தவறு. பதினோறு வயது முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் மஜூம்தார். யாரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது இந்நேரம் புரிந்திருக்கும்.

ஆமாம். பாபரேதான். ஜாஹிருத்தீன் முஹம்மத் பாபர். இந்தியாவில் முகலாய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பாபர்.

தைமூர், செங்கிஸ்கான் இருவருமே இந்தியாவின்மீது படையெடுத்து வந்தவர்கள்தான். அதில் செங்கிஸ்கானின் படை இந்தியாவின் உடையை மட்டும் தொட்டுவிட்டுச்சென்றது. ஆனால் தைமூரின் படைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களின் குலக்கொழுந்தான பாபர் ஆட்சிக்கு வருமுன்னர் கிட்டத்தட்ட ஏழுமுறை இந்தியாமீது படையெடுப்பு செய்துள்ளார்.

முதல் பானிபட் யுத்தத்தின் மூலமாகத்தான் பாபர் இந்தியாவுக்குள் தன் ஆட்சியை ஸ்தாபிக்கிறார். அவரை எதிர்த்த இப்ராஹீம் லோடியின் படையில் ஒரு லட்சம் பேரும் ஆயிரம் யானைகளும் இருந்தன. ஆனாலும் லோடி தோற்றுப்போனார். அவருக்கு அருகிலேயே அவரைச் சுற்றி ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் பேர் இறந்து கிடந்தனர். அவரோடு சேர்ந்து நாற்பது அல்லது ஐம்பதாயிரம் வீரர்கள் மடிந்துபோனதாகவும், உண்மையில் இப்ராஹீம் லோடி இறந்தாரா இல்லையா என்று முதலில் சந்தேகமாக இருந்ததாகவும், பகல் நேரத் தொழுகைக்குப்பிறகு தாஹிர் திப்ரி என்பவர் லோடியின் தலையைக் கொண்டுவந்து காட்டியதாகவும் பாபரே தன் நாட்குறிப்பில் எழுதினார்.

அங்கே துவங்கியது முகலாயர்களின் ஆட்சி. பானிபட்டிலிருந்து டெல்லிக்கு ராஜநடை போட்டார் பாபர். அங்கிருந்து ஹுமாயூன் பிடித்துவைத்திருந்த ஆக்ராவுக்குச் சென்றார். அதுவே அவரது புதிய சாமர்கண்ட் ஆனது. 14ம் நூற்றாண்டில் தைமூரின் தலைநகராக இருந்த சாமர்க்கண்ட். அங்கே அவருக்கு உலகப்புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தைப் பரிசாக ஹுமாயூன் கொடுத்தார். அதை எடை போட்டவர்கள் எல்லாரும் இப்படிக் கூறினர்: இந்த வைரத்தை விற்றால் இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இரண்டரை நாளைக்கான உணவு கிடைக்கும்! ஆனால் பாபர் அதைத் தன் மகனிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார்.

துருக்கி மொழியில் அவர் எழுதிய சுயசரிதை இலக்கியத்துக்கு அவர் கொடுத்த ஒரு நல்ல பரிசாகும். இஸ்லாமிய சட்டம் தொடர்பாக மஸ்னவி என்று சொல்லப்படும் ஈரடிப்பாடல்கள் பலவற்றை அவர் எழுதியுள்ளார். ராஜகவி!

தன் மகன் ஹுமாயூனை பாபர் அவ்வப்போது கடுமையாகக் கடிந்துகொள்வார். கடுமையாகத் திட்டிக் கடிதங்கள் எழுதுவார். தான் குறித்த நாளில் வரவில்லை என்பதற்காகத் தாமதமாக வந்த மகனைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

ஆனால் பாபர் ஒரு கவிஞரும்கூட! ஆமாம். அவ்வப்போது தோன்றும் கருத்துகளையெல்லாம் ஓரிரண்டு அடிகளில் கவிதை மாதிரி எழுதி வைக்கும் பழக்கம் அவரிடமிருந்தது. அவற்றை அவர் ’முபீன்’ என்று கூறினார்.

ஒருமுறை கடுமையான இருமல் சளி இருந்தது. இருமும்போதெல்லாம் கொஞ்சம் ரத்தம் வந்தது. அந்த நிலைக்குத்தானே காரணம் என்று சொல்லி திருக்குர்’ஆனிலிருந்து அதற்கொரு வசனத்தையும் உதாரணம் காட்டினார்.

இன்னொருமுறை ஒரு காண்டாமிருகத்தை அனைவரும் பார்த்தார்கள். அதில் பாபருக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. அதை இரண்டு மைல் தூரத்துக்கு விரட்டிக்கொண்டே கொஞ்ச தூரம் சென்றார்கள். முதன் முதலாகத்தன் மகன் ஹுமாயூன் காண்டாமிருகத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டதைப் பார்த்து பாபர் சந்தோஷப்பட்டார்.

அதேபோல முதன்முறையாக மகன் ஹுமாயூன் போர் செய்து களம் கண்டு ஏழெட்டு யானைகளையும் நூறு பேரையும் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு வந்தபோது பாபர் ரொம்ப சந்தோஷப்பட்டார். அந்த நூறு பேரையும் சுட்டுக்கொல்லும்படி அலீகுலீ என்பவருக்கு உத்தரவிட்டார். என்ன ஒரு கருணையுள்ளம்!

டெல்லியில் நிஜாமுத்தீன் அவ்லியாவின் தர்காவுக்குச்சென்று அதை பக்தி சிரத்தையோடு சுற்றி வந்ததாகவும் தன் நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். மனிதன் உண்மையிலேயே ஒரு புதிர்தான். ஒரு ஞானியை மதிக்கவும் முடிகிறது; போரில் வென்ற ஊரில் இருந்த மக்களை அல்லது கைதிகளைக் கொல்லவும் முடிகிறது!

இந்தியாவைப்பற்றி பாபர் தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளது வேடிக்கையானதாகவும் சிரிப்பை வரவழைப்பதாகவும் உள்ளது. அவர் கூறுகிறார்:

‘இந்துஸ்தானில் அழகு ரொம்ப குறைவு. அதன் மக்கள் அழகாக இல்லை. சமூகப்பேச்சு வார்த்தை, கொடுக்கல், வாங்கல் எதுவுமில்லை. ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொள்வதே இல்லை. அவர்கள் செய்யும் கைவினைப்பொருள்களில் கலையழகோ மதிப்போ இல்லை. நல்ல குதிரைகளோ, நல்ல நாய்களோ, நல்ல திராட்சைகளோ இல்லை. சந்தைகளில் நன்கு சமைக்கப்பட்ட உணவு இல்லை. கல்லூரிகளோ, மெழுகுவர்த்திகளோ இல்லை. மெழுகுவர்த்திக்கு பதிலாக இருட்டைப் போக்க தீவட்டி என்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். அதைத் தூக்கிக்கொண்டு ஒருவர் செல்கிறார். பெரும் பணக்காரர்களிடம் இவ்விதம் தீவட்டி தூக்கிகள் நூறு அல்லது இருநூறு பேர் பணி செய்கின்றனர். விளக்குகளுக்கும் மெழுகுவர்த்திகளுக்கும் பதிலாக இந்தியா கொடுப்பது இதைத்தான்! ஆட்சியாளர்களுக்கு இரவில் பணி இருக்குமானால் தீவட்டித்தூக்கிகளைத்தான் பயன்படுத்த வேண்டும்!

‘விவசாயிகளும், ஏழைகளும் நிர்வாணமாகச் செல்கிறார்கள். ரெண்டு கஜ நீளமுள்ள லங்கோடு என்று சொல்லப்படும் துணியை இடுப்புக்குக்கீழே தொங்க விட்டுக்கொண்டு போகிறார்கள். அது தொடைக்கு நடுவில் சென்று பின்னால் கட்டப்பட்டுள்ளது. பெண்களும் இடுப்பைச் சுற்றி ஒரு துணியையும் தலைக்கு மேலே ஒன்றையும் போட்டுக்கொண்டு போகிறார்கள்.

‘ஆனாலும் இந்தியா மிகப்பெரிய நாடு. நிறைய தங்கமும் வெள்ளியும் கிடைக்கிறது. மழைக்காலத்தில் இந்தியாவின் காற்று மிகவும் இதமாக உள்ளது. சில நேரங்களில் ஒரு நாளிலேயே பத்திருபது முறைகள் மழை பெய்கிறது. வில் அம்பெல்லாம் இந்த நாட்டின் மழைக்காலத்தில் பயன்படுத்த முடியாமல் வீணாகிவிடும்.

‘வில் மட்டுமல்ல, போர்க்கவசம், புத்தகம், துணிமணி, பாத்திரங்கள் எதையுமே பயன்படுத்த முடியாமல் போய்விடும். ஒரு வீடுகூட நிரந்தரமானதல்ல. மக்கள் இந்தக் காற்றை ‘ஆந்தி’ (வானத்தைக் கருப்பாக்கும் புயல்) என்று கூறுகின்றனர். மழையல்லாத காலங்களில் தட்பவெப்பம் மிகவும் சூடாக உள்ளது.

‘இந்துஸ்தானத்தில் எல்லா மாதிரியான வேலை செய்வதற்கும் எண்ணற்றவர்கள் உள்ளனர். இன்ன வேலைக்கு இன்ன ஜாதி என்றும் உள்ளது. பரம்பரை பரம்பரையாக அப்பாவிலிருந்து பிள்ளைவரை அந்த வேலையைத்தான் செய்வார்கள்.

‘இந்த நாடுகளிலிலிருந்து எனக்கு 52 க்ரூர் வருமானம் கிடைக்கிறது. (ஒன்றரை மில்லியன் ஸ்டெர்லிங் என்று இது கணக்கிடப்பட்டுள்ளது! க்ரூர் என்பதை கோடி என்றும் புரிந்துகொள்ளலாம்.)’

பொதுவாக தந்தைமார்களுக்கு பெண் குழந்தைகள்மீதுதான் பிரியம் அதிகமாக இருக்கும். ஆனால் பாபருக்குத்தன் மகன் ஹுமாயூன்மீது ஒரு காவியப்பிரியம் இருந்தது. அது அவரது உயிர் பிரியவும் காரணமாக இருந்தது.

ஹுமாயூனுக்கு ஒருமுறை ரொம்ப உடம்புக்கு முடியாமல் போனது. அனுபவமிக்க அரசவை வைத்தியர்களெல்லாம் பார்த்தும் சரியாகவில்லை. இருப்பதிலேயே மிகவும் உயர்ந்ததை ஹுமாயூனுக்காகத் தியாகம் செய்வதாக இருந்தால் அவர் உயிர் பிழைப்பார் என்று மீர் அபூபக்கர் என்ற ஞானி சொன்னதன்பேரில் தன் மகனை மூன்று முறை சுற்றிவந்த பாபர் தன்னை எடுத்துக்கொண்டு அவரைப் பிழைக்க வைக்கும்படி இறைவனிடம் முறையிட்டுக்கொண்டார்.

அதன்பிறகு ஹுமாயூன் நலமடைந்தார். தனக்குப்பின் சக்கரவர்த்தியாக ஹுமாயூனை பாபர் நியமித்தார். அப்படிச்செய்த சில நாட்களில் முகலாய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பாபரின் உயிர் பிரிந்தது. அது 1530, டிசம்பர் 30.

சாதனை செய்வதற்கு ஒரு மனிதன் நீண்டகாலம் வாழவேண்டும் என்ற அவசியமில்லை. நீண்ட ஆயுளுக்கும் சாதனைக்கும் தொடர்பில்லை என்பதை பாபரின் வாழ்விலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம். முகலாய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த முதல்வனான பாபர் இறந்தபோது அவருக்கு வயது நாற்பத்தெட்டுதான்.

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *