1954இல் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் இருந்த ஒரு பண்ணையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மா பெயர் வெர்னிசா லீ. அப்பா வெர்னான். ஆனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணமாகவில்லை! இதெல்லாம் அமெரிக்காவில் ரொம்ப சாதாரணமப்பா என்று யாரோ சொல்வது என் காதில் விழுகிறது! அதுமட்டுமா? திருமணம் செய்வதன் நோக்கம்தான் அதற்கு முன்பே நிறைவேறிவிட்டதே! இனி தேவையில்லாமல் ஏன் திருமணம் வேறு ஏன் செய்துகொள்ளவேண்டும் என்று ரொம்ப அறிவுப்பூர்வமாக யோசித்தார்களோ என்னவோ இருவரும் பிரிந்துவிட்டார்கள்! குழந்தையை அம்மாவழிப் பாட்டிதான் தன் பண்ணையிலேயே வைத்து வளர்த்தாள்.
குழந்தை என்று பிறந்தால் பெயர் என்று ஒன்று வைக்கவேண்டுமல்லவா? அவர்களும் வைத்தார்கள். ஆனால் அதை இப்போது சொல்லமாட்டேன்! கொஞ்சம் பொறுத்திருங்கள். அம்மாவும் அப்பாவும் கருப்பினத்தவர்கள் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
நம் கதாநாயகிக் குழந்தைக்கு நடிப்பதில் ரொம்ப ஆர்வம். எனவே, தான் வளர்ந்த பண்ணையிலேயே தன்னை ஒரு நடிகையாக பாவித்து நடிக்க ஆரம்பித்தாள். பார்வையாளர்கள் யார் தெரியுமா? பாட்டியும் அம்மாவும் என்று நினைக்கிறீர்களா? அதுதான் கிடையாது. அந்தப் பண்ணையிலிருந்த ஆடு, மாடு, பன்றிகள்தான்!
ஆனால், பாட்டியின் கவனிப்பில் இரண்டரை வயதிலேயே எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டாள். ஆறுவயதில் அம்மா இருந்த ஒரு பயங்கரமான சேரிக்கு அனுப்பப்பட்டாள். பன்னிரண்டு வயதில் அப்பா இருந்த டெனஸிக்கு அனுப்பப்பட்டாள்.
அவளுக்கு பேச்சுத்திறமை இருந்தது. தேவாலயங்களிலும் மக்கள் கூடுமிடங்களிலும் அவள் பேசினாள். கேட்டவர் ரசித்தனர். ஒருமுறை அவள் பேசியதற்காக அவளுக்கு 500 டாலர் கிடைத்தது! அன்றிலிருந்து, நான் பேசுவதானால் எனக்கு பணம் தரப்படவேண்டும் என்று அவளுக்குத் தோன்றிவிட்டது!
அவள் அம்மா அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டாள். ஆனால் அவளிருந்த சேரியானது ரொம்ப ஆபத்தானதாக இருந்தது. ஒன்பது வயதிலிருந்தே அவளைச் சேரியிலிருந்த, குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில ஆண்கள் திரும்பத் திரும்ப வன்புணர்ச்சி செய்தனர். 14 வயதிலேயே கர்ப்பிணியாகக்கூட ஆனாள்! ஆனால் அந்த மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்துபோனான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவிடம் மீண்டும் அனுப்பப்பட்ட அவள் ஒரு டிவி நிகழ்ச்சியில் தான் வன்புணர்ச்சி செய்யப்பட்ட அனுபவத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தாள்.
அப்பாதான் தன்னைக்காப்பாற்றினார் என்று அவள் பிற்காலத்தில் கூறினாள். அவர்தான் அவளுக்கு ஒழுக்கம், படிப்பு எல்லாம் சொல்லிக்கொடுத்தார், அவருக்கே ஒழுக்கமில்லாவிட்டாலும்! ஒவ்வொரு நாளும் ஐந்து புதிய சொற்களைத் தெரிந்துகொள்ளாவிட்டால் சாப்பாடு கிடையாது என்று சொன்னாராம்!
இப்படி நம்மையும் நம் பெற்றோர் வளர்த்தால் நாமனைவருமே பெரிய அறிஞர்களாகி இருக்கலாம். டெனஸ்ஸி பல்கலைக்கழகத்தின் ‘ஸ்காலர்ஷிப்’ வாங்குமளவுக்கு அவள் படித்தாள். ஒருமுறை வெள்ளைமாளிகையில் நடந்த ஒரு விழாவுக்கு அழைக்கப்பட்டாள். அங்கே உள்ளூர் வானொலி நிலையத்தில் பிற்பகல் செய்தி வாசிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஒரு லோக்கல் டிவியில் மாலைநேர நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வேலை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
ஒருவழியாகக் கல்லூரியில் படித்துப் பட்டமொன்றைப் பெற்ற பிறகு, மேரிலாண்ட் மாநிலத்திலிருந்த ஒரு டிவி சேனலில் ‘குட்மார்னிங் அமெரிக்கா’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. 1984இல் ஒரு டிவி சேனலில் காலைநேர நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. எப்பப் பார்த்தாலும் பெண்களின் பிரச்னை என்று எதையாவது பேசிக்கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியின் கருவை, அன்றைய நாளில் எது சூடாகப்போய்க்கொண்டிருந்ததோ அதைப்பற்றிய நிகழ்ச்சிகளாக மாற்றினாள். மூன்றே மாதங்களில் அவளது நிகழ்ச்சிகள் பயங்கர ‘ஹிட்’ ஆகி அந்நிகழ்ச்சியின் பெயரையே அவள் பெயராக்கினார்கள்! அப்படித் தொடங்கியதுதான் உலகப் புகழ்பெற்ற ஓப்ரா வின்ஃப்ரே ஷோ!
ஆமாம். நாம் ஓப்ராவைப்பற்றித்தான் பேசிக்கொண்டுள்ளோம்! அவளுக்கு அம்மா ஓர்பா என்றுதான் பைபிளில் இருந்த ஒரு பெயரை வைத்தார். ஆனால் அப்பெயரை ஓப்ரா என்று எல்லாரும் தவறாக உச்சரித்து உச்சரித்து அதுவே அவருடைய புகழ்ப்பெயராகிப்போனது!
25 ஆண்டுகளாக அந்நிகழ்ச்சி அமெரிக்காவையே கலக்கிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அரசி என்று ஓப்ரா வர்ணிக்கப்பட்டார். உலகின் அதிகத்தாக்கம்கொண்ட பெண்களில் ஒருவர் என்று 2007இல் கணிக்கப்பட்டார். தன் பிரச்னைகளை விருந்தினர் சொல்லும்போது ஓப்ரா அழுதுவிடுவார். அதைப் பார்க்கும் விருந்தினர் டிவியில் சொல்லக்கூடாத தனிப்பட்ட பிரச்னைகளையெல்லாம் சொல்லிவிடுவார்கள். இப்படிப்போன அந்நிகழ்ச்சிகள் அமெரிக்காவையே மட்டுமல்லாமல் உலகையே மூக்கில் விரலை வைக்கவைத்த நிகழ்ச்சியாகிப்போனது.
எலிசபெத் டெய்லர், மைக்கேல் ஜாக்ஸன், எக்ஹார்ட் டாலி என ஓப்ரா நேர்காணல் செய்யாத விஐபிகளே இல்லை எனலாம். மைக்கேல் ஜாக்சனின் நேர்காணலை மட்டுமே மூன்றரை கோடிப்பேர் பார்த்தார்கள்! அமெரிக்காவின், ஏன், உலகின் கோடீஸ்வரிகளில் ஒருவராக இருக்கும் ஓப்ரா தர்ம காரியங்களுக்காக நிறைய கொடுத்துள்ளார். ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய The Color Purple என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். O, The Oprah Magazine என்ற மாத இதழை கொஞ்சகாலம் நடத்தினார். பின்னர் Oprah Daily என்று அது பெயர்மாற்றம் செய்யப்பட்டது. Oprah.com என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு 60 லட்சம் பேர் அதைப் பயன்படுத்தினார்கள். வாரத்துக்கு 20,000 மின்னஞ்சல்கள் வந்தன. அவரது வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட செய்தியின் நல்ல விளைவாக, குழந்தைகளைக் கடத்திக் கொடுமைப்படுத்திய இரண்டு பேர் இரண்டு நாளில் கைதுசெய்யப்பட்டனர்.
உலகக்கோடீஸ்வரர்களில் ஒருவராகிவிட்ட ஓப்ரா பல வீடுகளை வாங்கினார், விற்றார். குறைந்தது ஐந்து காண்டோக்களை வாங்கி, பின்விற்றார். கடைசியாக 2022இல், மாண்டிசிட்டோ என்ற நகரில் 42 ஏக்கர் நிலம்கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டை வாங்கினார். அங்குதான் இப்போது வசிக்கிறார்.
அட்லாண்டா, ஜார்ஜியா, ஹவாய் போன்ற ஊர்களில் பல அபார்ட்மெண்ட்டுகளையும் வாங்கிப்போட்டார். 2000-வது ஆண்டில் அமெரிக்காவின் ஆகப்பெரிய பணக்காரர் என்ற இடத்துக்கு வந்தார். அப்போது அவருடைய சொத்து மதிப்பு 800 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
‘எனக்குள்ளே ஒரு தேவாலயம் உள்ளது. நமக்குள்ளிருக்கும் இறை ஆற்றலைத் தட்டி எழுப்புங்கள். அதன்பின் உங்களால் எதையும் செய்யமுடியும்’ என்று ஓப்ரா கூறினார். அது அவர் சொன்ன ஆன்மிக உண்மையாகும். நமக்குள்ளேயே எல்லா ஆற்றலும் இருப்பதை உணர்ந்துகொண்டவர்களின் பேச்சு அது.
‘சந்தேகமாக இருக்கும்போது எதையும் செய்யாதீர்கள். அது உங்களுக்குள் இருக்கும் ஆண்டவனின் குரலாகும். இப்படித்தான் நான் ஆன்மிகரீதியாக வழிகாட்டப்பட்டுள்ளேன். சந்தேகத்துக்கு மதிப்பு கொடுங்கள்’ என்றும் கூறினார்.
உலகில் மிக அதிகமான தாக்கம் ஏற்படுத்திய பெண்மணி அவர்தான் என்று ‘Time’ பத்திரிக்கையும் CNN செய்தி சேனலும் கூறின. அமெரிக்காவின் மிக அதிகமான தாக்கம்கொண்ட பெண் என்று ‘Life’ பத்திரிக்கை கூறியது. அமெரிக்க வரலாற்றின் ஆகச்சிறந்த பெண் என்றும் ஓப்ரா 2005இல் கணிக்கப்பட்டார்.
ஒருவர் புகழடைவதற்கு பணம் மட்டும் காரணமல்ல. திறமைதான் எல்லாவற்றையும்விட முக்கியம். அத்திறமை பேச்சாக, எழுத்தாக, குரலாக, விரலாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தனி மனித ரகசியங்கள் என்று நினைக்கப்பட்டதையெல்லாம் பிரபலங்களைச் சொல்லவைத்ததன் மூலம், உணர்ச்சி மேலிட அவர்கள் அதைச்சொன்னபோது தானும் அழுது அந்நிகழ்ச்சியையே வேறு தளத்துக்கு ஓப்ரா நகர்த்தினார். அதை ’ஓப்ராப்படுத்துதல்’ (Oprahfication) என்று The Wall Street Journal என்ற அமெரிக்க தினசரி சொன்னது.
தொலைக்காட்சியில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்துவதன் மூலமாகவே ஒரு கருப்பினப்பெண் தன் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அந்த நிகழ்ச்சியையும் தன்னையும் உயர்த்திக்கொள்ள முடியும்; கோடிகோடியாகச் சம்பாதிக்க முடியும்; உலகப்புகழ் அடைய முடியும். புகழின் உச்சிக்குப் போவதற்கு ஜாதியோ, மதமோ, இனமோ, நிறமோ தடையாக இருக்க முடியாது என்பதற்கு ஓப்ரா வின்ஃப்ரேயின் வாழ்வு ஒரு நல்ல உதாரணம்.
0