Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #16 – இரண்டு பெண்கள் ராணுவம்

வரலாறு தரும் பாடம் #16 – இரண்டு பெண்கள் ராணுவம்

இரண்டு பெண்கள் ராணுவம்

வரலாறு விநோதமானது. சில நேரங்களில் அதில் நடந்த சில நிகழ்வுகள் கற்பனைக் கதைகளைவிட அற்புதமானதாக இருக்கும். அப்படி ஒரு வரலாறுதான் இது. இரண்டே சிறுமிகளைக்கொண்ட ஒரு ராணுவம்!

ஆமாம். இது நடந்தது 1814 ஜூன் மாதம் அமெரிக்காவில். ராணுவத்தில் எப்படி சிறுமிகள் இருக்க முடியும்? அதுவும் இரண்டே இரண்டு சிறுமிகளைக்கொண்ட ஒரு ராணுவம் எப்படி அமைக்க முடியும் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அமெரிக்க வரலாற்றில் உள்ளது. ஆமாம். வாருங்கள் பார்க்கலாம்.

மசாச்சுசெட்ஸ் என்று ஒரு மாகாணம் உள்ளது. அதில் சிச்சுவிட் (Scituate) என்று ஒரு நகரம் உள்ளது. கடலோரத்தில் அமைந்த ஊர். என்ன ஒரு இருபதாயிரம் பேர்தான் அங்கே இருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான். மீன்பிடித்தொழில்தான் அங்கே பிரதானம். கடலையும் அதில் கிடைக்கும் மீன்களையும் நம்பி மக்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

சிச்சுவிட் துறைமுகத்தின் வடக்குப்பக்கமாக 1810-ல் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. சிச்சுவிட் லைட் அல்லது பழைய சிச்சுவிட் லைட் என்று அது அழைக்கப்படுகிறது. ஒரு கலங்கரை விளக்கத்தைப்பற்றி ஏன் இவ்வளவு சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? காரணம் உள்ளது. அங்கேதான் 1814-ல் ஒன்று நடந்தது. அது அமெரிக்கர்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துவதாகவும் பிரிட்டிஷாரின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.

எச்.எம்.எஸ். புல்வார்க் என்ற பெயர்கொண்ட ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பல், எழுபத்து நான்கு துப்பாக்கிகளுடன், மேலேசொன்ன சிச்சுவிட் துறைமுக நகரைத் தாக்கியது. அமெரிக்கர்களுடைய ஆறு கப்பல்களை வேறு தீவைத்துக்கொளுத்தியது. உடனே நகரைக் காப்பாற்ற ஒரு குட்டி ராணுவம் அமைக்கப்பட்டது. கலங்கரை விளக்கத்தின் மீதிருந்து ஆண்கள் அல்லும் பகலும் எதிரிக்கப்பப்பல் வேறு ஏதாவது வருகிறதா என்று பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோடைக்காலம் முழுவதும் போய்விட்டது. வேறு போர்க்கப்பல் எதுவும் வரவில்லை. விட்டது சனியன் என்று அமைதியாக இருந்தார்கள். ஆனாலும் அவ்வப்போது சென்று கவனிப்பதை மட்டும் விடவில்லை.

ஒரு செப்டம்பர் மாதம் அந்த பிரிட்டிஷ் புல்வார்க் சாத்தான் மீண்டும் வந்தது. அப்போது ஆண்கள் யாரும் கலங்கரைவிளக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் ஒரு பெண் மட்டும் இருந்தாள். அவள் பெயர் ரெபெக்கா. வயது பதினெட்டு. அவள் அந்தக் கலங்கரை விளக்கத்தின் பொறுப்பாளரின் மகள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இரண்டு பெண்களிருந்தனர், ரெபெக்காவும் அவள் தங்கையும்.

பிரிட்டிஷ் புல்வார்க் வருவதை ரெபெக்காதான் பார்த்தாள். அதிலிருந்து ஒரு நீண்ட படகு ஏராளமான ராணுவ வீரர்களுடன் கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. கரையில் இரண்டு வணிகக் கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. அவற்றைத் தாக்கினால் லட்டு லட்டாகப் பல பொருள்களை அள்ளலாம்.

கலங்கரை விளக்கத்தின் பொறுப்பாளரான ரெபெக்காவின் அப்பா அப்போது அங்கே இல்லை. ஊருக்குள் போய் விஷயத்தைச்சொல்லி உள்ளூர் ராணுவத்தை அழைத்துவர நேரமெல்லாம் கிடையாது. உடனடியாக என்ன செய்யலாம் என்று அவள் இளம் மூளை யோசித்தது. அப்போதுதான் அவள் அதைக் கவனித்தாள். ஒரு புல்லாங்குழலும் ஒரு பேரிகையும் அவளருகில் இருந்தன . ராணுவ வீரர்கள் வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். சட்டென்று அவள் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.

அந்தக் கோடைகாலத்தில் ராணுவ வீரர்கள் அவளுக்குச் சில பாடல்களைச் சொல்லிக்கொடுத்திருந்தனர். இப்போது அதில் ஒன்றை இசைத்தால் அந்த பிரிட்டிஷாரை ஏமாற்றலாம் என்று அவளுக்குத் தோன்றியது. உடனே தன் தங்கையை நோக்கி, ‘அவர்கள் கண்ணில் படாமல் மறைந்துகொள்’ என்று சொல்லிவிட்டு, அங்கே இருந்த மணல் குன்றுமாதிரியான ஒன்றின் பின்னால் சென்று இருவரும் மறைந்துகொண்டார்கள்.

ஆனால் அதோடு ரெபெக்கா சும்மா இருந்துவிடவில்லை. அக்கா சொல்லச்சொல்ல, இருவரும் சேர்ந்து ‘யாங்கி டூடுல்’ என்ற புகழ்பெற்ற அமெரிக்கப் போர்ப்பாடலை வாசித்தார்கள்.

யுத்தப்பாடல்! போர்ப்பரணி. நமது ‘சாரே ஜஹான்ஸெ அச்சா’ மாதிரி. தமிழிலக்கியத்தில் ஆயிரம் யானைகளைக்கொன்று – போரில்தான் – வெற்றிபெறும் வீரரைப் புகழ்ந்து பாடப்படும் பாடல். யானைகள், குதிரைகளெலெல்லாம் வந்து யுத்தம் செய்தது ஒரு காலம். இந்த நிகழ்ச்சி நடந்தபோது துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை நம்பியே ராணுவம் இருந்தது.

சரி, யாங்கி டூடுலுக்கு வருவோம். ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய போர்ப்பாடல் ஒன்று இருக்கத்தானே செய்யும்! அப்படிப்பட்ட உணர்ச்சிமயமான பாடல்தான் யாங்கி டூடுல். யாங்கி என்பது அமெரிக்கர்களைக் குறிக்கும் சொல்லாகும். அந்தப் போர்ப்பாடலை தங்களால் முடிந்த அளவு சரியான மெட்டில் ரெபெக்காவும் அவளது தங்கை அபிகேயிலும் சேர்ந்து இசைத்தனர்.

பிரபலமான அந்த தேசபக்திப்பாடல், யுத்த முழக்கப்பாடல் காற்றில் மிதந்து பிரிட்டிஷ் கப்பல்களில் இருந்தவர்களுக்குக் கேட்டது. போர்வீரர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் போர்ப்பாடல் மட்டும் கேட்டது.

அதற்கு அர்த்தம் ஒன்றுதான். அமெரிக்க ராணுவவீரர்கள் எதிர்த்துத் தாக்கத் தயாராக உள்ளனர்! பிரிட்டிஷ் கப்பலில் ‘இப்போது போர் வேண்டாம், திரும்பிவிடுங்கள்’ என்று உணர்த்தும் வகையில் ஒரு நீண்ட கொடி பறக்கவிடப்பட்டது. அதோடு பிரிட்டிஷ் கப்பல்கள் தங்கள் கொடிகளை சுருட்டிக்கொண்டு வந்த திசையை நோக்கித் திரும்பிச் செல்லத்தொடங்கின.

ரெபக்காவா மற்றும் அவளது தங்கை அபிகேயில் பேட்ஸால் சிச்சுவிட், அதாவது அமெரிக்கா, அன்று காப்பாற்றப்பட்டது. அன்றிலிருந்து இருவரையும் ‘இருவர் ராணுவம்’ என்று வரலாறு புகழ்ந்தது.

ரெபெக்கா நீண்டகாலம் வாழ்ந்தார். பல பேரிடம் தானும் தன் தங்கையும் சேர்ந்து எப்படி அன்று பிரிட்டிஷ் ராணுவம் ஊருக்குள் நுழையாதபடி போர்ப்பரணி இசைத்துக் காப்பாற்றினோம் என்று சொல்லிக் காட்டினார். இது கதையல்ல, நிஜம் என்பதை நீருபிக்கும் பொருட்டு ரெபெக்காவும் அவர் தங்கையும் பல ‘அஃபிடவிட்’டுகளில்கூட கையெழுத்திட்டுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

போர்ப்பரணியை இசைக்கவேண்டும் என்று ரெபெக்காவுக்குத் தோன்றிய அந்தக் கணம்தான் இந்த அற்புதமான வரலாற்றின் க்ளைமாக்ஸ் காட்சியாகும். யுத்த அனுபவம் எதுவும் இல்லாத, ராணுவத்தில் இல்லாத, ஒரு இளம்பெண்ணுக்கு அப்படித்தோன்றியது ஓர் அற்புதம்தான். இறைவன்தான் அப்படி ஒரு எண்ணத்தை அவளுக்குள் செலுத்தியிருக்கிறான் என்று சொல்லவேண்டும். ரெபெக்கா (அமெரிக்க உள்ளங்களில்) வாழ்க! யாங்கி டூடுல் வாழ்க! முறத்தால் புலியை விரட்டினாள் தமிழ்ப்பெண். தன் திறத்தால் பகைவரை விரட்டினாள் அந்த அமெரிக்கப்பெண்.

0

பகிர:
nv-author-image

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *