அவர் ஒரு சிரிய முஸ்லிம். பெயர் அப்துல் ஃபத்தாஹ் அல் ஜந்தலீ. விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது ஷீபில் என்ற ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவப்பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேருக்கும் மதம் தாண்டிய தீவிரக்காதல். தீ பற்றிக்கொண்டது. விளைவு? ஷீபில் கர்ப்பம்!
விஷயம் தெரிந்த ஷீபிலின் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. எப்படி அவர் ஒத்துக்கொள்வார்? காதல் மனங்களில் தடைகள் இல்லையென்றாலும் காவல் மதங்களில் அவை உண்டுதானே? எனவே குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே ஷீபில் சான்ஃபிரான்சிஸ்கோவுக்குச் சென்றார். ஏன் அந்த நகருக்குச்சென்றார் என்று தெரியவில்லை. முறைதவறிப் பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் நகரமா அது?!
அங்கே ஷீபிலுக்குப் பிறந்த ஆண் குழந்தையை பால், க்ளாரா தம்பதியரிடம் ஷீபில் தத்துக்கொடுத்துவிட்டார். பிற்காலத்தில் அந்தக் குழந்தை வளர்ந்து உலகப்புகழ் பெற்றது. தன் உண்மையான பெற்றோரைப்பற்றி இப்படிச் சொன்னது: ‘அவர்கள் எனக்கான விந்து மற்றும் கருமுட்டை வங்கி!’
பத்து வயதாக இருந்தபோதிருந்தே பையனுக்கு எலக்ட்ரானிக்ஸில் பயங்கர ஆர்வம் ஏற்பட்டது. அவன் ஆர்வத்துக்கு ஏற்றவாறு அவன் (வளர்ப்புத்) தந்தையும் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் ஒரு காரேஜில் ஒரு மேஜையை ஒதுக்கிக்கொடுத்தார். ஊரிலிருந்த பொறியியலாளர்களையெல்லாம் அந்த வயதிலேயே பையன் நண்பர்களாக்கிக்கொண்டான். ஆனாலும் வகுப்பில் அவன் தனியாக இருப்பதாகவே மற்ற மாணவர்கள் உணர்ந்தனர். பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலமெல்லாம் பையன் பெண்களைப்போல நீளமான முடி வளர்த்துக்கொண்டான்.
உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது பையனுக்கு இரண்டு விஷயங்களின்மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆங்கில இலக்கியம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ். குறிப்பாக ஷேக்ஸ்பியர் மற்றும் ஹெமிங்வே போன்றவர்களின் நாவல் இலக்கியம். அதோடு, எலக்ட்ரானிக்ஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட வோஸ்னியாக் என்பவனோடு பழக்கம் ஏற்பட்டது. ஆறு மாதம் உழைத்து அவர்கள் ’நீலப்பெட்டி’ என்ற ஒன்றை உருவாக்கினார்கள். அதன் மூலமாக தொலைபேசி நெட்வொர்க்கில் நமக்குப் பயன்படும் வகையில் பல ஒலிகளை உருவாக்க முடிந்தது. அதை இருவரும் சேர்ந்து ரகசியமாக விற்று நிறையைப் பணம் சம்பாதித்தனர். அன்றிலிருந்து இவனுக்கு ஒன்று விளங்கியது. மின்னணுவியல் கருவிகளால் நிறையப் பயனும் உண்டு, பணமும் உண்டு.
மேற்கொண்டு படிக்க நிறைய பணம் தேவைப்பட்டது. ஆனால் இவன் மிகவும் கஷ்டப்பட்டான். தன் வளர்ப்புப் பெற்றோருக்குத் தொல்லை கொடுக்கவும் விரும்பவில்லை. அடிக்கடி அருகிலிருந்த கிருஷ்ணர் கோயிலுக்குப்போய் இலவசமாகத் தரப்படும் பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டான்.
1973 வாக்கில் நண்பன் வோஸ் ’போங்’ என்ற வீடியோ விளையாட்டை உருவாக்கியிருந்தான். 1974 வாக்கில் நம் கதாநாயகன் இந்தியாவுக்குப் போவதற்காக பணம் சேர்க்கத் தொடங்கினான். ஏன்? ஆன்மிகத்தில் அவனுக்கு நாட்டம் வந்துவிட்டது! அந்த ஆண்டே இந்தியா வந்து நீம்கரோலி பாபா என்பவரின் ஆசிரமத்துக்குச் சென்றான். ஆனால் 73-லேயே பாபா இறந்திருந்தார்.
பின்னர் ஹைதகான் பாபாஜி என்பவரின் ஆசிரம் இருந்த தொலைதூர இடத்துக்கும் சென்றான். ஏழு மாதங்களுக்குப்பிறகு திரும்ப அமெரிக்கா சென்றான். அந்த ஏழு மாதங்கள் அவனுக்கு என்ன கொடுத்தன என்று தெரியவில்லை. ஒருவேளை ரமணரையோ பரமஹம்சரையோ பார்த்திருந்தால் பயன் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் ஏற்கெனவே காலமாகியிருந்தனர். ஓஷோவையோ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையோ சந்தித்திருந்தாலும் பயன் ஏற்பட்டிருக்கும். ஏனோ நம் கதாநாயகனுக்கு அது தோன்றவில்லை.
ஆனால், ஒன்று நடந்தது. தலையை மொட்டை அடித்துக்கொண்டு வேஷ்டி மாதிரி ஒன்றைச் சுற்றிக்கொண்டான்! அதுமட்டுமல்ல. அவனுக்கும் அவன் காதலிக்கும் ஜென் பௌத்தத்தின்மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. கொஞ்ச காலம் அந்தப்பாதையில் செல்ல முயன்றனர். அங்கிருந்த ஜென் மடாலயங்களுக்குச்சென்று தியானங்கள் செய்தான். நம் கதாநாயகனுக்கு ஏதோ ஒரு தேடல் மட்டும் இருந்துகொண்டே இருந்தது.
1976ல் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஆப்பிள் இங்க் என்றழைக்கப்பட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பனியைத் தொடங்கினர். நான் இவ்வளவு நேரமும் யாரைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று இந்நேரம் புரிந்திருக்கும். ஆமாம். அவரைப்பற்றித்தான். ஆப்பிள் கம்ப்யூட்டரையும் அலைபேசியையும் வடிவமைத்த ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றித்தான்.
வோஸ்னியாக்கும் ஸ்டீவும் வடிவமைத்த ஆப்பிள் II என்ற கணிணி உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான கணிணியானது! இதற்கிடையில் ப்ரென்னன் என்ற தன் காதலிக்கு ஒரு பெண் குழந்தையையும் வழங்கினார் ஜோப்ஸ்! தன் முஸ்லிம் அப்பாவைப் போலவே, தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ளாமலே! அதுவும் அப்பாவைப் போலவே மிகச் சரியாக தன் 23வது வயதில்! அப்பாவின் ‘விந்து வங்கி’க்கணக்கு மகன்வரை தொடர்ந்து வந்துள்ளது! ஒருபக்கம் ஆன்மிகம், இன்னொரு பக்கம் ஆண்மிகம்!
மகளை அம்மாவின் விருப்பப்படி லிசா என்று அழைத்தனர். தான் வடிவமைத்த ஒரு கணிணிக்கும் லிசா என்றே ஜோப்ஸ் பெயரிட்டார். அதற்கு Local Integrated Software Architecture என்று விளக்கம் வேறு சொன்னார்! உரிய விசா இல்லாமல் பூமிக்கு வந்து சேர்ந்தாள் லிசா!
1978-ல் ஜோப்ஸுக்கு 23 வயதிருந்தபோது அவரது சொத்து மதிப்பு ஒரு மில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் அது 250 மில்லியன் டாலராக உயர்ந்தது (2022-ல் அதன் மதிப்பு 805 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது)!
1985ல் NeXT என்று ஒரு கம்ப்யூட்டர் கம்பனியையும் 1986-ல் Pixar என்ற கம்பனியையும் ஜோப்ஸ் தொடங்கினார். 1996-97ல் NeXT கம்பனியை ஆப்பிள் கம்பனி வாங்கியது. மீண்டும் அதன் சி.இ.ஓ.வாக ஆனால் ஜோப்ஸ். 2007-ல் அலைபேசி வடிவமைப்புக்கு ஆப்பிள் கம்பனி சென்றது. அதன் பின்னர்தான் ஆப்பிள் ஐஃபோன், ஐபேட் என எல்லாம் வர ஆரம்பித்தன.
2003-ல் அவருக்குக் கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன் கணையத்தில் கான்சர் கட்டி இருப்பதாகத் தன் ஊழியர்களிடம் ஜோப்ஸ் சொன்னார். ஆனால் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், அறுவை சிகிச்சை வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார்.
மாற்று மருத்துவத்தை நாடினார். சைவ உணவு, அக்யுபஞ்சர், மூலிகை மருத்துவம், குடலைக் காலியாக்கி சுத்தப்படுத்துதல், திட உணவு இன்றி பானங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுதல் போன்ற மருத்துவ முறைகளை மட்டும் நம்பிச் செயல்பட்டார். வழக்கமாகக் கொடுக்கப்படும் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை என எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. இறுதியில் 2004-ல் வேறுவழியின்றி அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அவர் மேற்கொண்ட மாற்று மருத்துவம் அவரது உயிரை நிச்சயம் குடித்துவிடும் என்று ஆங்கில மருத்துவர்கள் நம்பினர், கூறினர். ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளாதது கிட்டத்தட்ட தற்கொலை செய்துகொள்வது மாதிரி என்று ஒரு தலைமை மருத்துவர் சொன்னார்.
2006-ல் அவருக்கு மீண்டும் கான்ஸர் வந்துவிட்டது என்று அவர் மனைவி, டாக்டர்கள் எல்லாரும் நம்பினர், கூறினர். அந்த ஆண்டு நடந்த ஆப்பிள் தொடர்பான மாநாட்டில் அவர் பேசினார். எலும்பும் தோலுமாக இருந்த அவரைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருந்தது.
2008-ல் ப்ளூம்பெர்க் (Bloomberg) என்ற அமைப்பின் பத்திரிகையில் ஜோப்ஸ் இறந்துவிட்டதாக 2500 சொற்களில் ஒரு செய்தியைத் தவறாகப் பதிவிட்டது. பின்னர் தவறு திருத்திக்கொள்ளப்பட்டது. ’எனது இறப்பைப்பற்றிய செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை’ என்று மார்க் ட்வைன் சொன்னதை ஜோப்ஸ் மேற்கோள் காட்டினார்! ஆனால், அந்த செய்தி 2011ல் உண்மையாகிப்போனது!
2009-ல் ஓய்வுக்காகவும், உடலில் ஏற்பட்ட சில பிரச்னைகளுக்காகவும் ஜோப்ஸ் வேலையிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஓய்வு, அதே ஆண்டு ஒரு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை, 2011 ஜனவரியில் மீண்டும் வேலை என்று போன ஜோப்ஸ் ஆகஸ்ட் 24ம் தேதி, தான் சி.ஈ.ஓ. பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அக்டோபர் 05, 2011 அன்று தன் கலிஃபோர்னியா வீட்டில் மதியம் மூன்று மணியளவில் காலமானார். ஆப்பிள், மெக்கிண்டோஷ், நெக்ச்ட் கணிணி, ஐ மாக், ஐ ட்யூன்ஸ், ஐபாட், ஐ பேட், ஐ ஃபோன் – எல்லாமே அவர் உருவாக்கியவை. பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப்பெற்றுள்ளார்.
இடுகாட்டில் அதிபயங்கர, பணக்காரப் பிணமாக இருப்பது எனக்கு முக்கியமில்லை. ஆனால் இரவு படுக்கப்போகும்போது இன்று அருமையான ஒன்றை ஏதோ கொஞ்சம் செய்திருக்கிறோம் என்ற எண்ணமே போதும் என்று சொன்னார் ஆப்பிளுக்குள் உலகையே காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ்!
0
Reference: Steve Jobs by Walter Isaacson