Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #18 – சுருட்டு சுந்தரம் பிள்ளை

வரலாறு தரும் பாடம் #18 – சுருட்டு சுந்தரம் பிள்ளை

சர்ச்சில்

சின்ன வயதில் அந்தச் சிறுவனுக்குப் பேசவரவில்லை. ஆனால் அவன் வளர்ந்து அரசியல் உலகில், அரசாங்கத்தில் மிகவும் பெரிய ஆளான பிறகு, உலகமே வியந்து பார்க்கும் ஒரு தலைவனான பிறகு, ஒரு நாட்டின் பிரதம மந்திரியான பிறகு, அவன் முன்னால், மன்னிக்கவும், அவர் முன்னால், பல பேருக்குப் பேச்சே வரவில்லை!

பேச்சுவராத தன் மகனைக் கவனித்துக்கொள்ள எலிசபத் எவரஸ்ட் என்ற அம்மையாரை அப்பா நியமித்தார். அப்பாவும் அம்மாவும் தன்மீது பிரியம் காட்டவில்லை, கடுமையாகவே நடந்துகொண்டனர் என்பதையும் சிறுவர் உணர்ந்தார். அந்த எவரஸ்ட் அம்மையார்தான் இவர்மீது உண்மையான பாசம் காட்டிக் கவனித்தார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஹாரோ பள்ளிக்கூடத்தில் அவர் சேர்ந்தபோதுகூட கடைசி மேஜை மாணவராகத்தான் இருந்தார். அங்கே அவரைச் சேர்த்துக் கொண்டதே ஆச்சரியமான விஷயம்தான். இங்கே ஹிந்தியைத் திணிப்பது மாதிரி அங்கே லத்தீனைத் திணித்தார்கள்.

ஆனால் லத்தீன் பாடத்தில் அவர் ஒரு கேள்விக்குமே பதில் எழுதவில்லை. முதல் கேள்விக்கான எண்ணை ஒன்று என்று போட்டு அதைச்சுற்றி இரண்டு அடைப்புக்குறிகளை மட்டும், அதுவும் ரொம்ப யோசித்தபிறகு, (1) என்று போட்டிருந்தார்! என்ன ஒரு சாதனை!

ஆனாலும் அவரிடம் ஏதோ இருப்பதை உணர்ந்துகொண்ட தலைமை ஆசிரியர் அவருக்கு அப்பள்ளியில் இடம் கொடுத்தார். ஆஹா, தலைமை ஆசிரியர் என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்! ஆனால் தலைமை ஆசிரியரின் நம்பிக்கை வீண்போகவில்லை. ஒரு போட்டியில் மெக்காலே எழுதிய 1200 வரிகள் கொண்ட ஒரு கவிதையை பிழையில்லாமல் ஒப்பித்து அச்சிறுவர் பரிசு பெற்றார்!

பதின்ம வயதில் இருந்தபோது ராணுவப்பள்ளியில் சேர முயன்றார். ஆனால் நுழைவுத்தேர்வில் மூன்றுமுறை தோற்றார். ஆனாலும் அவர் விடாக்கண்டன். தொடர்ந்து முயன்று அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவனானார். பின்னர் ராயல் மிலிடரி கல்லூரியில் படித்த 150 பேரில் எட்டில் ஒருவராகப் புகழுடன் வெளிவந்தார். மிகச் சின்ன வயதிலேயே ராணுவ வீரர்களைக்கொண்ட பொம்மைகளை வைத்துத்தான் விளையாடினார். விளையும் பயிர் முளையிலேயே தெரியுமல்லவா?!

மதம் என்பது  ‘சுவையான போதைப்பொருள்’ என்று அவர் சொன்னார்! கத்தோலிக்க கிறிஸ்தவத்தைவிட பிராடஸ்டாண்டிஸம் அவருக்குப் பிடித்திருந்தது. அது அறிவுக்கு ‘நெருங்கி இருப்பதாக’ அவர் கருதினார்!

நம்ம ஊரில் எப்படி திமுக, அதிமுக என்று இரண்டு பெரிய கட்சிகள் மக்கள் மனங்களை ஆட்சி செய்தனவோ அதேபோல இங்கிலாந்திலும் இரண்டு பெரிய கட்சிகள் இருந்தன. ஒன்று டோரி. இன்னொன்று விக். நம்ம கதாநாயகர் ஒரு டோரி ஆதரவாளர்.

அவருடைய நாக்கு மிகவும் வலிமையானது. ஒரு சில சொற்களினால் நாட்டு மக்களின், ராணுவத்தின் உணர்வுகளைத் தூண்டி, இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றிபெற்று உலகத்தின் சரித்திரத்தையே மாற்றிப்போட்டது. அந்த அளவுக்கு அவருடைய நாக்கு வலிமையானது. போரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி அவர் நிறைய எழுதினார்.

1953ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கொடுக்கப்பட்டது! இந்த உலக வரலாற்றில் ஒரு நாட்டின் பிரதமருக்கு அப்படிக் கொடுக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதுவே கடைசியாகவும் இருக்கலாம். இவ்வளவும் சொன்னபிறகு அவர் யார் என்பதை யூகித்திருப்பீர்கள். ஆமாம். அவர்தான். வின்ஸ்டன் சர்ச்சில்!

ராணுவத்தில் இருந்தபோது கொடுக்கப்பட்ட வேலைகளில், பலரும் தயங்கும் அபாயகரமான வேலைகளையே அவர் தேர்ந்தெடுத்தார்! அதனால் ராணுவத்தின் மிக உயர்ந்த பதவிகளை மிக விரைவில் அடைந்தார். தன் ராணுவ சாகசங்களைப்பற்றிக் கட்டுரைகளும் கதைகளும் எழுதிப் பிரபலமடைந்தார்.

பல பதவிகளுக்கும் அனுபவங்களுக்கும் பிறகு, 1940-ல் இங்கிலாந்தின் பிரதம மந்திரியானார். முதன் முதலாக பாராளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சு உலகப்புகழ் பெற்றது.

‘நான் இந்த மன்றத்துக்குச் சொல்வேன்…என்னிடம் உங்களுக்குத் தருவதற்கு ரத்தம், உழைப்பு, கண்ணீர், வியர்வை இவற்றைத்தவிர வேறெதுவும் இல்லை… நமது கோட்பாடு என்ன என்று கேட்கிறீர்கள். நமக்கு இறைவன் கொடுத்துள்ள பலத்தைக்கொண்டு நிலத்தில், நீரில், வானத்தில் என எல்லா வழிகளிலும் போர் செய்வது, மிருகத்தனமான கொடுங்கோன்மையை எதிர்த்துப் போர்செய்வது, குற்றங்களினால் என்றுமே வெல்லப்படாமல் இருப்பது — இவைதான் நமது கோட்பாடு’ என்று பாராளுமன்றத்தில் அவர் சொன்னது உலகப்புகழ் பெற்ற பேச்சாகும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, ஹிட்லரை எதிர்த்து நடந்த போரில் இங்கிலாந்து வெற்றிபெறக்காரணமாக இருந்த பேச்சு அது.

எதையும் பேசுவதற்குமுன் அதை அவரே தாளில் எழுதி வைத்துக்கொள்வார். அதைப் பலமுறை பேசிப்பார்த்துக்கொள்வார். சில நேரங்களில் முக்கியமான பகுதிகளை மனப்பாடமும் செய்துகொள்வார். உழைப்பின்றி யாருக்குமே எதுவுமே கிடைப்பதில்லை என்பதற்கு அவர் ஒரு நல்ல சான்று.

முதல் உலகப்போரில் டாங்க் என்று சொல்லப்படும் பீரங்கிப்படையைச் சிறப்பாகப் பயன்படுத்த உதவினார், ஊக்குவித்தார். 1899ல் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு பத்திரிகையாளராகச் சென்றார். அங்கே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஆனால் சிறைக்காவலர்களை ஏமாற்றிவிட்டு சில சாக்லேட்டுகளை மட்டும் தன் கோட்டுக்குள் போட்டுக்கொண்டு, சுவர் ஏறிக்குதித்து, சரக்கு ரயிலில் ஏறித்தப்பித்தார்!

சர்ச்சிலுடைய ஆங்கிலம் அற்புதமானது, அழகானது. பிரம்பாட்டி சொன்னபடி ஆடும் குரங்கைப்போல ஆங்கிலம் அவருக்குக் கட்டுப்பட்டது. நாற்பத்திரண்டு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவை அறுபது பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆதரவளிக்கும் விஷயமாக எழுத்தை அவர் பார்த்தார்.

அவர் எழுதிய முதல் புத்தகம் இந்தியாவில் எழுந்த போராட்டத்தைப்பற்றியது என்று சொன்னால் நம்பமுடியுமா? The Story of The Malakand Field Force என்பதே அந்நூலின் பெயர். ‘ஒரு புத்தகம் எழுதுவது ரொம்ப சந்தோஷமான விஷயம். நாம் அதோடு வாழ்ந்துவிடுகிறோம். அது நம் நண்பனாகிவிடுகிறது’ என்றார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! உலகப்புகழ்பெற்ற ஒரு நாட்டின் தலைவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் இருந்துள்ளது வரலாறு நமக்குத்தரும் வியப்புகளில் ஒன்று.

சர்ச்சில்

சர்ச்சிலுக்கும் ஹிட்லருக்கும், நம்ம ஜெயலலிதா அம்மையாருக்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது. குணாம்சத்தில் அல்ல. தேதியிலும் விரலிலும். ஆமாம். மே 10, 1940 அன்றுதான் ஹிட்லரின் ராணுவம் லக்சம்பர்க், ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. அதே நாளில்தான் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமரானார்!

ஆனால் எதிரிகளைத் துவம்சம் செய், வெற்றி நமக்கே என்பதைக்குறிக்க சர்ச்சில்தான் முதன்முதலில் இரண்டு விரல்களை ஆங்கில எழுத்தான ‘வி’ மாதிரி காட்டினார். நம்ம ஜெயலலிதா அம்மையாரும் அப்படித்தான் காட்டினார், நினைவிருக்கிறதா?! அது சர்ச்சில் கொடுத்த வெற்றிக்கொடை!

1965 ஜனவரி 24 அன்று சர்ச்சில் காலமானார். ஆனால் ஜூன் 1963ல் கென்னடியால் அமெரிக்காவின் கௌரவக் குடிமகனாக சர்ச்சில் ஆக்கப்பட்டார். வரலாற்றில் கொடுக்கப்பட்ட மிக அரிய கௌரவமாகும் இது.

கிண்டலாகப்பேசுவதில் சர்ச்சில் நிபுணர். ரஷ்யாவின் ஸ்டாலினை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு சர்வாதிகாரியை யாருக்குத்தான் பிடிக்கும்?! சர்ச்சில் சொன்ன சில நல்ல ஆலோசனைகளைக்கூட அவர் ஏற்கவில்லை. ஹிட்லர் தாக்குவான் என்று ஏற்கனவே எச்சரித்தும் ஸ்டாலின் அதைப் பொருட்படுத்தவில்லை. அதுபற்றி சர்ச்சில் இப்படிக் கூறினார்: ‘ஹிட்லர் நரகத்துக்குப் படையெடுப்பானெனில், சாத்தானுக்குச் சாதகமான சில விஷயங்களை நான் சொல்வேன்’!

உடனுக்குடன் மூக்குடைக்கும் பதில்களைச் சொல்வதில் சர்ச்சில் நிபுணர். ஒருமுறை பாராளுமன்றத்தில் அவரைப்பிடிக்காத ஒரு பெண் உறுப்பினர், ‘மிஸ்டர் சர்ச்சில், நீங்கள் மட்டும் என் கணவராக இருந்தால், நீங்கள் குடிக்கும் காஃபியில் நான் விஷம் கலந்து கொடுத்திருப்பேன்’ என்றார்!

யோசிக்காமல் உடனே அப்பெண்மணிக்கு சர்ச்சில் இப்படி பதில் சொன்னார்: ‘அம்மையே, நீங்கள் மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால் அந்தக் காஃபியை நான் நிச்சயம் குடித்திருப்பேன்’!

அதேபோல தனக்குப் பிடிக்காதவர்களை விமர்சிப்பதிலும் தாட்சண்யம் காட்டமாட்டார். நம்ம மகாத்மாவைப்பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அரைநிர்வாண ஃபகீர்’ என்றார்!

எப்போதும் வாயில் ஒரு சுருட்டை வைத்துப் புகைத்த வண்ணம் இருப்பார் இங்கிலாந்தின் சுருட்டு சுந்தரம் பிள்ளை!

0

இக்கட்டுரை எழுத உதவியவை:
https://en.wikipedia.org/wiki/Winston_Churchill
The Life of Winston Churchill, The Churchill Centre
Winston Churchill, Rene Kraus

பகிர:
nv-author-image

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *