பிலால் இப்னு ரபாஹ். மயக்கும் குரலை அவருக்கு ஆண்டவன் கொடுத்திருந்தான். அதனால் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான பணி அவருக்கு அளிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அவர் ஓர் கருப்பின அடிமை.
அரேபியாவில் அடிமைகளாக இருந்த குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அரேபியாவில் அடிமையாக இருப்பது எப்படிப்பட்டதென்று நமக்கு நிச்சயம் புரியாது.
ஒரு அடிமையை எஜமானன் கோபத்தில் என்னவேண்டுமானாலும் செய்யலாம். சாட்டையால் அடித்தே ரத்தவாறாக உடலைக் கிழிக்கலாம். அடி தாங்காமல் ஒரு அடிமை மயங்கி விழுந்து இறந்தால் ஏன் இப்படிச்செய்தீர் என்று கேட்க நாதி கிடையாது. ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்.
அம்மார் என்பவரின் அன்னை சுமய்யா வயதான அடிமைத்தாய். அவரை நிர்வாணமாக்கி அவரது பெண்குறியில் ஈட்டியைச் செலுத்தி அவரைக் கொன்றான் அபூ ஜஹ்ல் என்பவன். சுமய்யாவின் கணவர் யாசிரின் கால்களை இரண்டு ஒட்டகங்களில் கட்டி எதிரெதிர் திசைகளில் செலுத்தி அவரை இரண்டாகப்பிளந்து இறக்கச்செய்தான்.
இப்படியெல்லாம் கொல்லப்பட்ட பெற்றோரின் மகனாகிய அம்மார் ஒருநாள் பிலால் இருந்த இடத்துக்கு வந்தார். அப்போது அபூலஹப் என்ற கொடுங்கோலனும் அபூசுஃயான் என்ற தலைவரும் அங்கே இருந்தனர். உங்கள் முஹம்மது என்ன சொல்கிறார் என்று அவரிடம் கிண்டலாகக் கேட்டனர்.
ஆண்டவன் ஒருவன்தான், அவனை மட்டுமே வணங்கவேண்டும் என்றும் இறுதித்தூதர் என்றும் கூறுகிறார் என்றார் அம்மார். அதைக்கேட்டு அவர்கள் கடுப்பாயினர். ஏற்கனவே பல ஆண்டுகளாக க’அபா எனும் புனித ஆலயத்தினுள்ளே 360 சிலைகளை வைத்து அவர்கள் வணங்கியும் வியாபாரம் செய்தும் பிழைத்து செழித்து வந்தனர். இப்போது ஒருவனே இறைவன் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டால் அது அவர்கள் பிழைப்பில் மண்ணைப்போடுவதற்குச் சமம். ம்ஹும், இதை விடவே கூடாது.
ஆனால் அம்மார் சொன்னதைக்கேட்ட ஒல்லியாகவும் உயரமாகவும் இருந்த அடிமை பிலாலுக்கு சந்தோஷமாக இருந்தது. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற குறிப்பு அதிலிருந்தது.
கடுப்பான உமய்யா, ‘இதோ இங்கே என் அடிமை பிலால் இருக்கிறான். இவனும் நானும் ஒன்றா?’ என்று அம்மாரிடம் கேட்டான். எல்லா மனிதர்களும் சமம் என்றுதான் நபிகள் நாயகம் கூறுகிறார்கள் என்று பதில் சொன்னார் அம்மார்.
அவ்வளவுதான். உமய்யாவின் முகத்தில் கோபத்தீ. தன் சாட்டையை பிலாலின் கையில் கொடுத்து அம்மாரின் முகத்தில் அடி என்று கூறினான். அம்மாரும் அமைதியாகத் தன் முகத்தை பிலாலை நோக்கித் திருப்பி நின்றுகொண்டார். உண்மையைச் சொன்னால் என்ன நடக்கும் என்று கொடுமையான முறையில் பெற்றோரை இழந்திருந்த அம்மாருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் உயிரைவிட சத்தியமே முக்கியம் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர்.
பிலாலுக்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது. தன் உடலுக்கு மட்டுமே உமய்யா எஜமானன். ஆன்மாவோ முஹம்மதோடு ஒன்றிவிட்டது. அவரையறியாமல் அவரது கையிலிருந்த சாட்டை நழுவிக்கீழே விழுந்தது. அது அம்மாருக்கும் வியப்பளித்தது. சாட்டையைக் குனிந்து எடுத்து என்னை அடியுங்கள் என்று சொல்லி மீண்டும் பிலாலிடம் கொடுத்தார். அடிக்காவிட்டால் பிலாலைக் கொன்றுவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் பிலால் அதை மீண்டும் கீழேபோட்டார்! அப்போது அவர் முகத்தில் ஓர் அசாதாரண அமைதி நிலவியது. மக்காவின் தலைவரான அபூசுஃப்யான் மற்றும் அவர் மனைவியின் முன்னால் தனக்கு நேர்ந்த அவமானமாக உமய்யா அதைக் கருதினான்.
உடனே உத்தரவின்பேரில் பிலாலின் கைகள் கட்டப்பட்டன. அவரது கழுத்திலும் ஒரு கயிறு சுற்றி இறுக்கப்பட்டு ஓர் அறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் எப்படியும் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்பது பிலாலுக்குத்தெரியும். ஆனாலும் அவர் அமைதியாகக் காத்திருந்தார்.
மறுநாள் வந்த எஜமானர்கள் நினைத்தபடி அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. இறைவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டிருந்தார். அவனுக்காக எதையும் சகித்துக்கொள்ளத் தயாராக இருந்தார்.
சங்கிலியிட்டுத் தெருக்கள் வழியாக அவர் இழுத்துச்செல்லப்பட்டபோது மக்காவினர் தங்கள் வீட்டு ஜன்னல்களைச் சாத்திக்கொண்டனர். என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியும். அப்படிச்செய்தால்தான் மற்ற அடிமைகள் ஒழுங்காக இருப்பார்கள் என்று உமய்யா நினைத்தான். அவனைப்பொறுத்தவரை பிலால் மனிதனல்ல, இரண்டு கால் மிருகம்.
பாலைவனத்தின் கொதிமணலில் நிர்வாணமாக பிலாலைப் படுக்கவைத்தனர். அவர் நெஞ்சின்மீது சிறுவர்களை நடனமாட விட்டனர். உமய்யா பிலாலை விடாமல் சாட்டையால் அடித்துக்கொண்டே இருந்தான். அடித்துக் களைப்புற்றபின் சிறுவர்களை அழைத்து பிலாலின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றை இழுத்துக்கொண்டே தெருக்களில் போகச்சொன்னான். ரத்தம் வழிந்தோட பிலால், ‘இறைவன் ஒருவன்’, என்ற பொருள்படும்படி அரபியில், ‘அஹதுன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அது எஜமானர்களுக்கு பயங்கரமான அவமானமாக இருந்தது.
பிலாலின் நெஞ்சின்மீது ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்தனர். கடுமையான சுடுமணலால் அவரது முதுகை எரித்தனர். பயங்கரமான தாகமெடுத்தது பிலாலுக்கு. இப்போதாவது லாத், மனாத், உஸ்ஸா என்று எங்கள் கடவுளர்களின் பெயர்களைச்சொல் என்று உமய்யா கூறினான். ஆனால் அப்போதும் பிலால் ‘அஹதுன்’ என்று மட்டுமே கூறினார்.
மக்காவின் இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே இப்படியும் அப்படியுமாக பிலாலை இழுத்துக்கொண்டே சென்றனர். ஏதோ ஒரு புழுவைக்கட்டி இழுத்து விளையாடுவதைப்போல. எனினும் பிலாலின் மன உறுதி மக்காவாசிகளுக்கு ஆச்சரியம் கொடுத்தது.
இப்படியே சில நாட்கள் சென்றன. பிலால் இறந்துவிடவில்லை. ஆனால் மயக்கத்திலேயே இருந்தார். ஒருநாள் அந்த நிலையில் அவரை நபிகள் நாயகத்தின் உயிர்த்தோழரான அபூபக்கர் பார்த்தார். பிலாலுக்கு உதவ எண்ணினார்.
எத்தனை நாளைக்கு நீ இப்படிச்செய்துகொண்டிருப்பாய் என்று உமய்யாவிடம் கேட்டார். அவர்கள் பேசிக்கொண்டது மட்டும் பிலாலுக்குக் கேட்டது.
பிலால் செத்துவிட்டார், 100 திர்ஹம் கொடுத்தால் பிணத்தை ஒப்படைப்பேன் என்று உமய்யா கூறினான். அபூபக்கர் பிலாலின் அருகில் அமர்ந்து அழைத்தபோது பிலால் கண்களை மெல்லத் திறந்து பார்த்தார். பிலால் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்ட உமய்யா, ‘இப்போது 200 திர்ஹம்’ என்றான்.
அவன்கேட்ட பணத்தைக்கொடுத்து அபூபக்கர் பிலாலை விலைகொடுத்து வாங்கி, சங்கிலித்தளைகளையெல்லாம் விடுவித்து அழைத்துக்கொண்டு போனார். பத்து தங்கக்காசுகளைக் கொடுத்து விடுவித்தார் என்றும் சொல்லப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனான ஜைத் என்பவர்தான் பிலாலை அணைத்துத் தாங்கிகொண்டு சென்றார்.
‘நூறு திர்ஹமே இவனுக்கு அதிகம்’ என்று உமய்யா சொன்னான்.
‘நீ இவருக்காக ஆயிரம் திர்ஹம் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்’ என்றார் அபூபக்கர்!
கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் மயக்க நிலையிலேயே பிலால் இருந்தார். பின்னர் எழுந்துநடக்கும் நிலைக்கு வந்தார். உன் அருகிலேயே நபிகள் நாயகம் மூன்றுநாள் அமர்ந்து, உனக்காக பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள் என்று அபூபக்கர் கூறினார்! எழுதப்படிக்க பிலாலுக்கு அபூபக்கரே சொல்லிக்கொடுத்தார்.
ஐவேளைத்தொழுகை கடமையாக்கப்பட்டபோது, பாங்கு சொல்லி தொழுகைக்கு அழைக்கும் பணி பிலாலிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் இஸ்லாத்தின் முதல் முயெஸ்ஸின் (பாங்கு சொல்பவர்).
பிலாலுக்கு அரபி எழுத்தான ‘ஹ’ சொல்லவராது. ‘அஷ்ஹது’ என்பதை அவர் ‘அஸது’ என்றுதான் சொன்னார். அதை அரபிகள் கிண்டல் செய்தபோது, அவர் உள்ளத்தைப் பாருங்கள், உச்சரிப்பைப் பார்க்காதீர்கள் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். தன் காந்தக்குரலில் பிலால் பாங்கு சொல்லி அழைத்தபோது அந்த அழைப்புக்கு வானவர்களும் பதில் சொன்னார்கள்.
முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் பத்ர் என்ற இடத்தில் நடந்த முதல் போரில் தன்னைத் துன்புறுத்திய பழைய எஜமானாகிய உமய்யாவை பிலால் தன் கையாலேயே வெட்டி வீழ்த்தினார்!
இன்றும்கூட கருப்பின மனிதரின் கழுத்தில் தன் முழங்காலை வைத்து அழுத்திக்கொல்கிறது அமெரிக்க வெள்ளை போலீஸ். ஆனால் எங்கள் தலைவர் பிலால் என்று பொருள்படும்படி ‘சையதினா பிலால்’ என்று முதன்முதலாக பிலாலை அழைத்தார் கலீஃபா ஹஸ்ரத் உமர். தங்கம் கருப்பாகவும் இருக்கும் என்பதை இஸ்லாம் உலகுக்கு உணர்த்தியது.
0