ஒருவர் ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இருக்க முடியுமா? உலக வரலாற்றில் சிலர் அப்படி இருந்துள்ளனர். ஹிட்லர், முசோலினி மாதிரி. சில ஆண்டுகளுக்கு முன்வரைகூட ஒருவர் இருந்துள்ளார். சிலருக்கு அவர் ஹீரோ. பலருக்கு வில்லன். உலகத்தையே கலக்கிக்கொண்டிருந்தார். குறிப்பாக, அமெரிக்காவை… அதன் ஆணவத்தை.
கதாநாயகனைப் பிடிக்குமளவுக்கு வில்லன்களையும் பிடித்துப்போவது மனித வாழ்க்கையின் அழகிய முரண்களில் ஒன்று!
ஆனால் அந்த ஹீரோவை அல்லது வில்லனைப் பிடிக்கவும் முடியவில்லை, புரிந்துகொள்ளவும் முடியவில்லை. அவர் என்ன மாதம், என்ன தேதி பிறந்தார் என்பதுகூடப் பதிவாகவில்லை. ஆனால் அவர் பெயர் மட்டும் உலகம் முழுவதும் பிரபலாமாகிவிட்டது. பல உலகத்தலைவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.
1996-லிருந்து இந்த உலகில் அவரைத் தெரிந்திருக்காத மனிதரே கிடையாது என்று சொல்லிவிடலாம். அதிலும் குறிப்பாக 9/11 என்று சொல்லிவிட்டாலோ எழுதிவிட்டாலோ அது ஒரு சோகக்காவியமே பாடிவிடும்.
இப்போது தெரிந்திருக்குமே! ஆமாம். அவர்தான். ஒசாமா பின் லேடன். (அது ‘பின்’ இல்லை, ‘இப்னு’ என்று எத்தனை முறை சொன்னாலும் ஆங்கில மூளைக்கு அது உரைக்காது. அதோடு ‘ட’ சப்தமும் அரபியில் கிடையாது. அவரது பெயரின் ஒழுங்கான உச்சரிப்பு ஒசாமா இப்னு லாதன்)!
சிலருக்கு அவர் ஜிஹாது (புனிதப்போர்) செய்தவர். பலருக்கு தீவிரவாதி. குறிப்பாக உலக நாட்டாமையான அமெரிக்காவுக்கு! அதிபயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒரு சில நேர்காணல்களை ஒசாமா கொடுத்துள்ளார்.
அவரைப் பிடிக்கவும் முடியவில்லை, புரிந்துகொள்ளவும் முடியவில்லை என்கிறார் வரலாற்று ஆசிரியர் Thomas R. Mockaitis! சத்தியமான வார்த்தைகள்! தீவிரவாத அமைப்பு என்று சொல்லப்பட்ட அல்-காயிதாவின் தலைவர் அவர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அவரைப்பற்றி அவர் குடும்பத்தினர் யாரும் வாய்திறக்கவில்லை.
பத்து ஆண்டுகளாக ஒசாமாவைப் பிடிக்க அமெரிக்கா முயன்றுகொண்டிருந்தது. அவருக்கு 21 வயதாகும்வரை, அவர் எங்கு பிறந்தார், எங்கு படித்தார், பெற்றோர் யார், நண்பர்கள் யார், எப்படி, ஏன் அல்காயிதாவை ஆரம்பித்தார் போன்ற தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை.
இஸ்லாத்தில் அது ஹராம், இது ஹராம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் வஹ்ஹாபிகள் கூட்டம் சவுதியை ஆண்டவர்களில் அதிகமாக இருந்ததால் ஒசாமா பற்றிய தகவல்களை யாராலும் அறிந்துகொள்ள முடியாமல் போனது. ஒசாமாவுக்கு பிறப்புச்சான்றிதழ்கூடக் கிடையாது! ‘அல்காயிதா’ என்றால் ‘அடித்தளம்’ என்று அர்த்தமாம். ரொம்ப பலமான அடித்தளமாக இருக்கும்போலும்!
‘அல்காயிதா’ தொடங்கப்பட்ட பிறகு கொடுக்கப்பட்ட சில நேர்காணல்கள் மூலமாகத்தான் ஒசாமா பற்றிய தகவல்களை வரலாற்றாசிரியர்கள் அறிந்துகொண்டார்கள். எண்ணெய் வளம்மிக்க நாடாக சவுதி ஆனபிறகே பின்லேடனின் அப்பா உள்ளே வருகிறார்.
கோடீஸ்வரரான அவருக்கு 22 மனைவிகள், 54 குழந்தைகள்! ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்துகொள்ள நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதிக்கிறது. இரண்டுபேரை உரிய முறையில் விவாகரத்து செய்துவிட்டால் மீண்டும் இரண்டு பேரை மணக்கலாம். பின்லேடனின் அப்பா தொடர்ந்து அதே வேலையாக இருந்திருப்பார் போலும்; ரொம்ப புதுமையான வாழ்நாள் சாதனை!
நிறைய சம்பாதித்த பிறகு ஒரேயொரு வேலையில் மட்டும் தன்னை அமிழ்த்திக்கொண்டு இருந்திருக்கிறார் அப்பா முஹம்மது பின்லேடன். ‘லேடனும் லேடிகளும்’ என்று ஒரு புத்தகமே எழுதலாம் போல. 1967இல் ஒரு விமான விபத்தில் இறந்து போனார். இருந்திருந்தால் இன்னும் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்திருப்பார். அவரது சொத்துக்களையெல்லாம் அரசு அறக்கட்டளையாக்கிவிட்டது. அரச கட்டளை!
முஹம்மது லேடனின் மூத்த மகன் சலீம் பல சவுதி அரசர்களோடு நல்லுறவையும், பரம்பரை சொத்தையும் பெருமளவு வளர்த்தார். வெளிநாட்டில் தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த அவரும் 1986இல் ஒரு விமான விபத்தில் இறந்துபோனார். பல பெண்களுக்கு வாழ்க்கை வசதிகளை தானம் கொடுத்த இருவருக்கும் வானம் கொடுத்துள்ளது நித்திய மோனம். வனப்பிரஸ்தம் மாதிரி வானப்பிரஸ்தம்! 1957இல் ரியாதில் பிறந்த பின்லேடன் 17/18வது குழந்தை.
பின்லேடனும் சகோதரர்களும் ஸ்வீடனுக்குச் சுற்றுப்பயணம் சென்றபோதெல்லாம் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டல் வாசலில் தங்களது ரோல்ஸ் ராய்ஸ் காரை வேண்டுமென்றே நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தி அபராதம் கட்டிக்கட்டி மகிழ்ந்தனர். மிக உயர்ந்த வெள்ளைச் சட்டைகளை வாங்கி ஒரே ஒருமுறை அணிந்துவிட்டுத் தூக்கிப்போட்டனர். அவ்வளவு சொத்து!
அரசர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த பின்லேடன் பட்டம் பெறவில்லை. 1974இல் முதல் திருமணம். இசை, சினிமா எல்லாம் அவருக்கு ஹராம். கட்டட வேலைகள் நன்கு தெரியும். ரஷ்யாவுக்கெதிரான ஆப்கன் போரில் குகைகளில் தங்குமிடங்களை உருவாக்கவும், சூடானில் சாலைகளை அமைக்கவும் அந்த அறிவு உதவியது.
பின்லேடனுக்கு நான்கே மனைவிகள்தான்! திருமணத்துக்கு வெளியிலும் ‘அந்த மாதிரி’ உறவுகளை வைத்துக்கொண்டதில்லை. அவரது மனைவிகளில் ஒருவர் உளவியல் பேராசிரியையாகவும் இன்னொருவர் அரபி இலக்கணம் சொல்லித்தருபவராகவும் இருந்தார்கள். பின்லேடனுக்கு மொத்தம் 19 குழந்தைகள்! நான்கு மனைவிகளும் தனித்தனி அபார்ட்மெண்ட்களில்.
1994இல் அவரது சவுதி குடியுரிமை பறிக்கப்பட்டபோது, நான்காவது மனைவி விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். அதன்பிறகு பின்லேடன் ஒருவரை மணந்தார். நான்கு என்ற கணக்கு எப்போதும் சரியாக இருக்கவேண்டுமல்லவா?!
அமெரிக்க உதவியுடன் இஸ்லாமிய வரலாற்றுச்சின்னங்களை ஆக்கிரமிக்கவும் அழிக்கவும் இஸ்ரேலிய யூதர்கள் இன்றுவரை முயன்றுகொண்டுள்ளனர். இஸ்ரேலை முழுமையாகக் கைப்பற்றிவிட்டால் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழும் என்று அவர்கள் நம்புகின்றனர். அந்த நிலையில்தான் அமெரிக்காவுக்கு எதிரான வெறுப்பு பின்லேடனுக்கு உருவானது.
‘முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் பாதுகாப்பாக இல்லாதவரை அமெரிக்கர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது’ என்று அவர் கூறினார். யூதர்களை எதிர்த்து ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கினார். ‘எங்கள் குழந்தைகளைக் கொன்றார்கள். அதனால் பொதுமக்களை நாங்கள் கொல்கிறோம்’ என்றார். தாங்கள் வாழும் நாட்டை ஆதரிக்கும் அறுபது லட்சம் முஸ்லிம்கள் அமெரிக்காவில் உள்ளதை மறந்துவிட்டார்.
பின்லேடன் உருவானதற்கு ஒருவகையில் ரஷ்யாதான் காரணம். 1979இல் அது ஆப்கனிஸ்தானுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த பத்தாண்டுகளும் அதை எதிர்த்துப் போராடத்தான் பின்லேடன் போனார்.
எகிப்தின் அதிபர் நாசரால் கொல்லப்பட்ட குதுப் என்ற தலைவர் எழுதிய Milestone என்ற நூலைப் படித்துத்தான் ஒசாமா உந்தப்பட்டார். 1984-85 அல்லது 88இல் ஆஜம் என்பவரோடு சேர்ந்து ‘அல்காயிதா’ இயக்கம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 110,000 பேர் அதன்மூலம் பயிற்றுவிக்கப்பட்டனராம். பயிற்சியாளர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
அல்காயிதாவின் தலைமைச்செயலகம் மட்டும்தான் ஆஃப்கானிஸ்தானில் இருந்தது. ஆனால் 2001 வாக்கில் கிட்டத்தட்ட 76 நாடுகளில் அதற்குக் கிளைகள் இருந்தன. இணையம் வழியாகவும் அல்காயிதா பரவியது; கருத்துகளைப் பரப்பியது. விருப்பமுள்ளோர் உள்ளூரிலிருந்த அல்காயிதாவின் கிளையில் சேர அது வழிவகுத்தது. பின்லேடன் பெரும் கோடீஸ்வரராக இருந்த காரணத்தால் அல்காயிதா உருவாகவும், உறுதிப்படவும் கோடிகோடியாக டாலர்களைச் செலவுசெய்தார்.
அவர் அல்காயிதாவின் மூளையாகச் செயல்படவில்லை. இதயமாகவோ ஆன்மாவாகவோ செயல்பட்டார் என்கிறார் ஒரு வரலாற்று ஆசிரியர்.
1994இல் சவுதி அரசு பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்தபின் சூடானிலிருந்து காந்தஹாருக்குக் குடும்பத்துடன் குடியேறினார். ரொம்ப நாளைக்கு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஜெருசலத்திலிருந்த அல்அக்சா பள்ளிவாசலையும், க’அபாவையும் காப்பாற்ற அமெரிக்க ராணுவத்தினரையும், பொதுமக்களையும் கொல்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்று ஃபத்வா (மார்க்கக் கட்டளை) கொடுத்தார்.
அமெரிக்க அதிபர்கள் புஷ், பில் கிளிண்டன் இருவரின் காலகட்டத்திலும் ஒசாமாவைப் பிடிக்க முடியவில்லை. பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு, மே 02, 2011 அன்று, பாகிஸ்தானில் ஒரு மறைவிடத்தில் அமெரிக்கப்படையினர் ஒபாமாவைச் சுட்டுக் கொன்றதை வெள்ளை மாளிகை அறிவித்தது.
சிலருக்கு ஹீரோவாகவும் பலருக்கு வில்லனாகவும் இருந்த ஒருவரின் வாழ்வு அத்துடன் முடிந்தது.
0