Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்

வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்

Samuel Johnson

ஒருநாள் காலை. ‘சாம்’ என்று மகனை அழைத்தார் மைக்கேல். ‘எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. இன்னிக்கி எனக்கு பதிலா உட்டாக்ஸ்டர் கிராமத்துக்கு நீ போயி அங்க உள்ள சந்தையிலே புத்தகங்களை வித்துட்டு வர்றியா?’ என்று கேட்டார் அப்பா. லிச்ஃபீல்டு என்ற பகுதியிலே புத்தகங்களை விற்று வயிற்றைக் கழுவிவந்தவர் அவர்.

அவர் மகனான சாமுவேல் ரொம்ப அறிவார்ந்த பையன். ஆனால் பிடிவாதக்காரன். அதோடு, கண்டமாலை நோயால் அவன் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். முகத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறத்தில் தோல் வீங்கி தடித்திருக்கும். சில நேரங்களில் அவனுக்குக் கண் பார்வைகூடச் சரியாகத்தெரியாது. அதோடு பக்கவாதம் வந்த மாதிரி அவன் தலையும் யானையின் தலையைப்போல இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருக்கும்.

இந்த நிகழ்ச்சி நடந்த நேரத்தில் அவனிடத்தில் ஒரு கௌரவமான கோட்டுகூடக் கிடையாது. ஷூகூட முன்பக்கம் கிழிந்து விரல்கள் வெளியே தெரியும். ஆனால் இவ்வளவுக்கு அவன் தன் பள்ளித்தோழர்களிடையே மிகவும் பிரபலமானவனாக இருந்தான். அவனை யாரும் கிண்டல் செய்ததில்லை. அதுமட்டுமல்ல. ஒவ்வொரு நாள் காலையிலும் அவனை அழைத்துப்போக மூன்று நண்பர்கள் வந்தனர். அதில் ஒருவனின் முதுகில் இவன் ஏறிக்கொள்வான். மற்ற இருவரின் கைகளையும் பிடித்துக்கொள்வான். அப்படியே பள்ளிக்கூடம்வரை யானை சவாரி இருக்குமா அல்லது கொஞ்ச தூரத்துக்குத்தானா என்று தெரியவில்லை.

இப்படியெல்லாம் இருப்பதானாலோ தன் உடல் நிலையைக் கருத்தில்கொண்டோ அந்த கிராமத்துக்குப்போய் புத்தகங்கள் விற்கும் வேலை பிடிக்காததினாலேயோ அல்லது இந்த எல்லாக் காரணங்களும் சேர்ந்தோ அவனை அந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு விடவில்லை. நாள்பூராவும் அந்தக் கிராமத்து வெயிலில் நின்று, புத்தகங்களின் அருமை தெரியாத மனிதர்களை புத்தகம் வாங்கச்சொல்லி அழைக்கும் வேலை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

‘அப்பா, என்னால் உக்கஸ்டர் கிராமத்துக்குப் போகமுடியாது.’

ரொம்ப உறுதியாகவும், தீவிரமாகவும் மறுத்துவிட்டான். சில ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் இப்படி ஏதாவது மறுத்துப்பேசியிருந்தால் பிரம்படி வாங்கியிருப்பான். ஆனால் இப்போதெல்லாம் அப்பா அவனை அடிப்பதில்லை.

‘அப்படியாப்பா, சரிப்பா. உடம்பு சரியில்லாத உன் அப்பா படுக்கையில் படுத்து ஓய்வெடுக்க வேண்டிய காலமிது. ஆனால் நீ என்னை இந்த வயதிலும் அந்த கிராமத்துக்குப்போய், நடுவீடுதியில் வெயிலில் நின்று நாள் பூராவும் புத்தகம் வாங்கச் சொல்லி கத்தச்சொல்கிறாய். சரிப்பா. நான் போகிறேன். என் அருமை இப்போது உனக்குப் புரியாது. ஆனால் நான் போனபிறகு நிச்சயம் புரியும். நீ இந்த நாளை நினைத்துப்பார்ப்பாய்’ என்று சொல்லிவிட்டு, திட்டாமல் அடிக்காமல் போய்விட்டார்.

அவர் கண்களில் கண்ணீர் வந்ததோ இல்லையோ அவருடைய இதயம் மகனின் மறுப்பால் வலிக்கத்தான் செய்தது.

அவர் போனபிறகு மகனுக்கு அந்தக் காட்சி மனதில் பெரும் வேதனையைக் கொடுக்கத்தான் செய்தது. அந்த வெயிலில், அந்த கிராமத்தில் நின்று, குழந்தைகள், பெரியவர்கள், பிரபுக்கள் என போவோர் வருவோரையெல்லாம் புத்தகம் வாங்கிப்படித்துப் பயனடைந்துகொள்ளுங்கள் என்று தொண்டை வறள அவர் உரக்கச் சொல்வதை கற்பனை செய்து பார்த்துக்கொண்டான். ஆனாலும் மனம் மாறி அவன் போய்விடவில்லை.

அம்மாவிடம் போய், ‘அம்மா, அப்பாவுக்கு உடம்புக்கு முடியவில்லையா?’ என்று கேட்டு வைத்தான்.

‘ஆமாம்ப்பா. அவருக்கு வயசாயிடுச்சு. இப்ப ரொம்ப உடம்புக்கு முடியல. வீட்ல இருந்த ஓய்வெடுத்திருக்கணும். ஆனா போயிருக்கார். அவருக்கு பதிலா நீ போயிருக்கலாம்’ என்று சொன்னாள். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் அவளுக்குத் தெரியாது. தன் மகனை உத்தம புத்திரன் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தாள்.

அப்பா அந்த கிராமத்து வெயிலில் புத்தகம் வாங்கச்சொல்லி கத்திக் கத்திக் களைப்படைந்து மயங்கிக் கீழே விழுவதாகவும், அவர் செத்துவிட்டாரா என்று மக்கள் பார்ப்பதாகவும் கற்பனைகூட அவனுக்கு வந்தது. ஆனாலும் அவன் போய்விடவில்லை. ‘அய்யோ, நான் ஒரு மோசமான மகனாகப்போய்விட்டேனே! கடவுள் என்னை மன்னிப்பாரா’ என்று கொஞ்ச நேரம் புலம்பினான்.

ஆனால் அவனது மனவருத்தம் தீவிரமானதாக இல்லை. இருந்திருந்தால் அவன் உட்டாக்ஸ்டர் கிராமத்து விரைந்திருப்பான். அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டிருப்பான். ஆனால் அவன் கடைசிவரை போகவே இல்லை.

பொழுது சாய்ந்த பிறகு அப்பா திரும்பி வந்தார். தள்ளாடித் தள்ளாடி நாற்காலியில் போய் அமர்ந்தார். மகனிடம் ஒரு வார்த்தைகூடப்பேசவில்லை. சில ஆண்டுகளில் அவர் இறந்தும் போனார். அந்த மகன் வளர்ந்து பெரியவனாகவும், மிகவும் புகழ்பெற்றவனாகவும் ஆனான். ஆனாலும் அந்த உட்டாக்ஸ்டர் கிராமத்துத் தான் போகமறுத்த அந்த நாளை, அந்த நிகழ்வை அவனால் மறக்கவே முடியவில்லை.

‘என் அப்பா உடல் நலமில்லாமலிருந்தபோது நான் மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறேன்’ என்ற எண்ணம் அவன் வாழ்க்கை பூராவும் அவனைத் துரத்திக்கொண்டே இருந்தது.

பல ஆண்டுகள் கழித்து ஒருநாள் உட்டாக்ஸ்டர் கிராமத்தில் ஏதோ விசேஷம். ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கடைகளெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு நகரத்தில் வசதிகளெல்லாம் அங்கே வந்துவிட்டிருந்தன. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். என்னென்னவோ வாங்கிக்கொண்டும் விரைந்துகொண்டும் இருந்தனர்.

அப்போது அங்கே ஒரு மனிதர் வந்தார். நெட்டையாகவும் கொஞ்சம் குண்டாகவும் இருந்தார். இரண்டு மனிதர்கள் போவதற்குத் தேவையான இடம் அவர் ஒருவருக்கே தேவைப்பட்டது ஒரு பழுப்பு நிறக்கோட்டை அணிந்திருந்தார். கொக்கி உள்ள ஷூ அணிந்திருந்தார். தலையில் ஒரு தொப்பி. உலகப்புகழ் பெற்ற ஒரு மனிதராகியிருந்தார். இங்கிலாந்தின் மன்னரும் பிரபுக்களும் அவரோடு தோழமை கொள்வதில் பெருமையடைந்தனர். ஆனால் அவரை அங்கே யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. என்றாலும் அவருக்கு வழிவிட்டு மக்கள் நகர்ந்து சென்றனர். அவரது ஆளுமை அப்படியானது.

அவர் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றபோது மிகச் சரியாக தேவாலயத்தின் கடிகாரம் பன்னிரண்டடித்தது. அவர் நின்ற இடம்தான் மைக்கேல் ஜான்சன் புத்தகக்கடை வைத்திருந்த இடம். அவரிடத்தில் புத்தகங்கள் வாங்கில பல குழந்தைகள் இன்று தாத்தாக்களாகி விட்டிருந்தன. சில முதிய குடிமகன்களுக்கு மட்டும் அது தெரிந்திருந்தது.

அங்கே நின்ற அந்தப் பெரியவர் பிரார்த்தனை செய்வது போல வானத்தைப் பார்த்தார். சில கணங்களுக்குத் தலையைக் குனிந்து பூமியைப்பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு இனம் புரியாத வேதனை அவரை அழுத்துவதைப்போலத் தோன்றியது.

ஒரேயொரு குதிரை வண்டிக்காரருக்கு மட்டும் அவரை அடையாளம் தெரிந்தது. ‘இவர் யாருன்னு எனக்குத்தெரியும். சொல்லட்டுமா?’ என்றார் அருகிலிருந்தவரிடம்.

‘சொல்லு, யாரிவர்?’ என்று ஆர்வமுடன் அவரும் கேட்டார்.

‘இவர்தான் உலகப்புகழ்பெற்ற சாமுவேல் ஜான்ஸன். இவரை நான் பாஸ்வெல் என்பவரோடு லண்டனில் பார்த்திருக்கிறேன்’ என்றார். ஆமாம் அது டாக்டர் சாமுவேல் ஜான்சன்தான். தன் தாய்மொழிக்கு ஒரு வடிவத்தையும், நிரந்தரத்தன்மையையும் தன் அகராதி மூலம் கொடுத்தவர். அவரது எழுத்துகளை உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் படித்து ரசித்திருந்தனர். இங்கிலாந்தின் அரசரும் அவரது நட்பை விரும்பினார். தான் மன்னராக இருக்கும் காலத்தில் சாமுவேல் ஜான்சன் வாழ்வது தனக்கு இறைவன் கொடுத்த கௌரவம் என்று சொன்னார்.

எட்டு ஆண்டுகளில் தனியொரு மனிதனாக உழைத்து உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்து 1755ல் வழங்கினார். நாற்பது ஆண்டுகளாக நாற்பது பேர் அடங்கிய குழு ஃப்ரெஞ்சு அகராதியைத் தொகுத்தது. அதுபற்றிக் குறிப்பிடும்போது, ‘ஒரு ஆங்கிலேயன் நாற்பது ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குச் சமம்’ என்றார்!

அப்படிப்பட்ட மேதை சின்ன வயதில் தன் அப்பாவுக்கு உதவாமல் போன குற்ற உணர்வில் காலம் பூராவும் வாழ்ந்திருக்கிறார். எல்லா சாதனைகளுமே வேதனையில் குழந்தைகள்தானே! அவர் அகராதி பிடித்தவர் மட்டுமல்ல; அகராதி வடித்தவர்!

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

1 thought on “வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *