Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

அழகாபுரி என்கிற அழகிய தேசத்தை ஆண்டுவந்த மன்னன் சித்ரசேனன் என்பவன் மிகவும் திறமையானவன். நற்குணங்கள் கொண்டவன். மதுராபுரி நாட்டைச் சுற்றியுள்ள அத்தனை மன்னர்களையும் தனது வீரத்தினால் வென்று பகைவர்களே இல்லாமல் செய்து, ராஜ்ஜியத்தை மிக நல்லமுறையில் அரசாட்சி செய்து வந்தான்.

சித்ரசேனனின் மனைவி, பட்டத்து ராணி நந்தினி தேவி. இவர்களது ஒரே மகன் மணிமாறன்.

பராக்கிரமசாலியான மன்னன் சித்ரசேனனுக்குப் பக்க பலமாக நின்று வழிநடத்தியவர் அமைச்சர் காசிபனார். ஆட்சி அதிகாரத்தின் எல்லாத் தருணங்களிலும் மந்திரியின் ஆலோசனையைத் தவறாமல் கேட்டுக்கொள்வது மன்னனின் வழக்கம்.

இதுநாள்வரையில் அமைச்சர் காசிபனார் வழிகாட்டலில், அவரது ஆலோசனையில் மன்னனுக்கும் தேசத்துக்கும் நல்லதுதான் நடந்திருக்கிறதே தவிர எந்தக் கெடுதலும் நேர்ந்ததில்லை.

ஆனால் இப்போதோ… அவர் சொன்ன ஒரு சிறிய ஆலோசனை; அதன்படி வரையப்பட்ட ஓர் ஓவியம் அப்பாவி ராஜகுருவுக்கு மரணத்தையே கொண்டு வந்துவிட்டது!

ராஜகுருவுக்கு மரணதண்டனை விதித்தவன் மன்னன் சித்ரசேனன்.

இத்தனைக்கும் மன்னன் சித்ரசேனன் கொடுங்கோலனோ, சர்வாதிகாரியோ அல்ல! மிக நல்லவன்தான்!

அவனிடம் ஒரேயொரு சிறிய பலவீனம் உண்டு. அந்தப் பலவீனம் காரணமாக மந்திரி காசிபனார் எடுத்த நடவடிக்கைதான் இப்படியோர் சிக்கலில் வந்து முடிந்துவிட்டது.

அது என்னவென்றால், சித்ரசேனனின் மனைவி நந்தினி மிக மிக அழகானவள்! தேவலோகத்துப் பெண்களுக்கு நிகராக வனப்பும், வசீகரமும் கொண்டவள்.

இதுதான்… இந்த அழகுதான் மன்னன் சித்ரசேனனின் மிகப் பெரிய பலவீனம்!

அழகின் அரசியான நந்தினியை விட்டுச் சிறிது நேரமும் பிரிந்திருக்கச் சம்மதிக்க மாட்டான் சித்ரசேனன். நந்தினி எப்போதும் சதா சர்வ காலமும் அவன் அருகிலேயே இருக்க வேண்டும்.

தினப்படி ராஜ சபைக்குக்கூட நந்தினியை உடன் அழைத்துக்கொண்டுதான் வருவான். சிம்மாசனத்தில் தனக்குப் பக்கத்திலேயே அமர்த்திக் கொள்வான். (அந்தக் கால கட்டத்தில் மகாராணிகள், இளவரசிகள் போன்ற அரண்மனைப் பெண்கள் யார் கண்களுக்கும் படாமல் அந்தப்புரத்திலேயே இருப்பதுதான் வழக்கமாக இருந்தது. வெளியில் செல்லும்போதும் மூடு பல்லக்குதான்.)

மன்னன் சித்ரசேனனின் இந்தப் பலவீனம்தான் மந்திரி காசிபனாருக்குப் பிடிக்கவேயில்லை.

‘நாளெல்லாம் ராஜ சபைக்கு எவன் எவனோ வந்து போகிறான். எல்லோர் பார்வையும் ஒன்று போலவே இருக்கும் என்பது என்ன நிச்சயம்? இதில் கள்ளப்பயலும் இருப்பான், காமாந்திரனும் இருப்பான். பார்வையிலேயே அழகை அள்ளி விழுங்கி மனத்திலேயே படுக்கை போட்டு விடுவார்களே’ என்று புலம்பித் தவித்தார். மகாராணி நந்தினிக்கும் இது பிடிக்கவில்லை என்பதையும் உணர்ந்தார்.

எத்தனைநாள்தான் மனத்துக்குள்ளேயே வைத்திருந்து புலம்பித் தவிப்பது? மன்னனிடம் இது சரியல்லவென்று சொல்லிவிடத் தீர்மானித்தார்.

ஒருநாள், அரசே! நான் தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேச வேண்டும்!’ என்று தொடங்கினார்.

‘நான் சொல்லப் போகும் விஷயம் தங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனாலும் சொல்ல வேண்டியது எனது கடமை என்பதால், அதை எப்படிச் சொல்வது என்றுதான்…’ மந்திரி இழுக்க…

‘அமைச்சரே, தயங்க வேண்டாம்; நீங்கள் எதைச் சொன்னாலும், அது நாட்டுக்கும், எனக்கும் நன்மை அளிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். தைரியமாகச் சொல்லுங்கள்’ ஊக்கமளித்தான் சித்ரசேனன்.

‘நன்றி மன்னவா. ராஜ குடும்பத்தின் நற்பெயர் காரணமாகவே இதை நான் தங்களுக்குச் சொல்கிறேன். மகாராணியின் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பு நான் அறியாததல்ல. ஆனாலும் தாங்கள் ராஜ சபையிலும் மகாராணியைக் கூடவே அழைத்து வந்து சிம்மாசனத்தில் அமர்த்திக்கொள்வது அவ்வளவு நல்லதென்று எனக்குப்படவில்லை. சபைக்கு வரும் நபர்களில் சில பேர் மகாராணியின் அழகை விழுங்கும் விதத்தில் பார்ப்பதும், அதன் காரணமாக மகாராணியார் நந்தினி சங்கடத்தில் தவிப்பதும், மிகவும் கொடுமை அரசே!’ என்று சொல்லி முடித்தார்.

‘மந்திரியாரே, தாங்கள் சொல்ல வருவது எனக்கும் புரிகிறது. ஆனால் நான் என்ன செய்வேன்? நந்தினியைப் பார்க்காமல் என்னால் கணநேரம்கூட இருக்கமுடியவில்லையே. ராஜ சபையில் நாளெல்லாம் அவளைக் காணாமல் நான் தவித்துப் போய்விடுவேன் மந்திரியாரே!’ பரிதாபமாகச் சொன்னான் சித்ரசேனன்.

மந்திரி காசிபனார் சிந்தித்தார். சட்டென்று ஒரு யோசனை பளிச்சிட்டது.

‘சரி, அப்படியானால் ஒன்று செய்வோம் மன்னா! ஒரு நல்ல ஓவியனை அழைத்து மகாராணியார் நந்தினியாரை ஆளுயரத்துக்கு உயிரோவியமாகத் தீட்டச் சொல்வோம். அதை ராஜ சபையில் உங்கள் கண் முன்பாகத் தொங்கவிடலாம். இதனால் தங்கள் எண்ணமும் ஈடேறும். மகாராணியின் தர்மசங்கடமும் தீரும்!’ என்றார்.

மன்னன் சித்ரசேனனுக்கு இந்த யோசனை பிடித்துப் போனது. உடனேயே சிறந்த ஓவியனைத் தேடி அழைத்து வரக் கட்டளையிட்டான்.

அரண்மனை ஆட்கள் அலசி ஆராய்ந்து ஓவியன் ஒருவனை அழைத்து வந்து மன்னன் முன் நிறுத்தினார்கள்.

மன்னன் அவனிடம், ‘ஓவியரே, நமது மகாராணியை மிகத் தத்ரூபமாக ஆளுயரத்தில் தாங்கள் வரைந்து தர வேண்டும். முடியுமா?’ என்று கேட்டான்.

‘மகாராஜா! நான் மலர் ஒன்று வரைந்தால் பட்டாம்பூச்சிகள் நிஜமென்று ஏமாந்து போய் அம்மலரினுள் தேன் உண்ண வந்து விடும். அத்தனை தத்ரூபமாக இருக்கும் எனது படைப்பு. மகாராணியை ஒருமுறை பார்த்தால் போதும். அச்சு அசலாக அவரை அப்படியே வரைந்து கொடுத்து விடுவேன்.’ என்றான்.

மன்னன் அவனை அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தான்.

மகாராணி நந்தினியைப் பார்த்ததுமே, முதல் பார்வையிலேயே அவள் சாமுத்திரிகா லட்சண சாஸ்த்திரத்தின்படி, நால்வகைப் பெண்களான பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினியில் முதல் தரமான பத்தினி வகையைச் சேர்ந்தவள் என்பதை ஓவியன் உணர்ந்துகொண்டான்.

ஓவியன் அந்த அங்க சாஸ்திர சாமுத்திரிகா லட்சணங்களின்படியே நந்தினியை வரைந்து எடுத்துக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்தான்.

ஓவியத்தைப் பார்த்த மன்னன் சித்ரசேனன் பிரமித்துப் போனான். ‘ஆஹா! அற்புதம்! பிரமாதம்!! ஓவியனே, இந்தத் தத்ரூபமான ஓவியத்தால் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டாய்! பரிசாக உனக்கு என்ன வேண்டும் கேள்!’ என்று மனம் திறந்து பாராட்டிச் சொன்னான்.

இதனால் கர்வம் கொண்ட ஓவியன், ‘அரசே நான் தங்கள் அரண்மனைக்கு வந்ததே தங்களது அதிர்ஷ்டம்தான். ஏனெனில் என்னை நாலாதிசைகளிலும் பல மன்னர்களும் வேண்டி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். காரணம், ஓவியத் திறமையில் என்னைப் போல இந்த உலகில் வேறு யாருமே கிடையாது!’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான்.

அப்போது இதைக் கேட்டுக் கொண்டே மன்னனின் குருநாதரான ராஜகுரு பிரபுபாதர் ஒரு புன்முறுவலுடன் உள்ளே வந்தார்.

ஓவியன் வரைந்திருந்த மகாராணி நந்தினியின் ஓவியத்தை நிதானமாகப் பார்த்தவர், ஓவியனிடம் திரும்பி, ‘ஓவியனே, நிஜமாகவே நீ திறமைசாலிதான். அரசியாரின் ஓவியத்தை மிகத் தத்ரூபமாக வரைந்திருக்கிறாய் என்பது உண்மைதான் என்றாலும் மகாராணியின் தோற்றத்தில் ஒரு முக்கிய அம்சத்தை நீ குறிப்பிடத் தவறிவிட்டாயே!’ என்றார்.

‘இருக்காதே! மிகத் துல்லியமாகவே நான் வரைந்திருக்கிறேன். அப்படி எந்த அம்சத்தை நான் வரையத் தவறி விட்டேன் என்பதைத் தாங்கள் எனக்குச் சொல்ல முடியுமா?’

‘மகாராணியாரின் இடது தோள்பட்டையில் எள் அளவு மச்சம் உண்டு. அந்த மச்சத்தை நீ குறிப்பிடத் தவறிவிட்டாய்!’ என்று ராஜகுரு சொல்ல ஓவியன் தலை குனிந்தான்.

ராஜகுரு பிரபுபாதர் இவ்வாறு கூறியதுமே மன்னன் சித்ரசேனனுக்கு தூக்கிவாரிப் போட்டது. மகாராணியின் இடது தோள்பட்டையில் உள்ள எள் அளவு மச்சத்தை மிகவும் நெருங்கி நின்று பார்த்தால்தான் தெரியும். இது ராஜகுருவுக்கு எப்படித் தெரிய வந்தது.

பிறகு அங்கு ஓவியனுக்குச் சன்மானம் அளித்து அனுப்பியதோ, ராஜகுரு விடைபெற்றுக் கொண்டதோ எதுவுமே நினைவில் தங்காமல், அந்தப்புரம் சென்றான்.

அன்றெல்லாம் அவன் மனது கொந்தளித்தது. மகாராணியின் மச்சத்தை ராஜகுரு எப்படி அறிந்திருக்க முடியும்? அப்படியானால் அவருக்கும், மகாராணிக்கும் இடையில் ஏதோ ரகசியத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மச்ச சமாச்சாரம் அவருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை!’

நினைக்க நினைக்க அவன் நெஞ்சு கொதித்தது.

மன்னன் சித்ரசேனன் உடனடியாக மந்திரி காசிபனாரை வரவழைத்து நடந்தது அனைத்தையும் தெரிவித்தான்.

மன்னன் என்ன நினைக்கிறான் என்பது மந்திரிக்குப் புரிந்து போனது.

‘நிச்சயமாகத் தவறு நடந்திருக்கிறது மந்திரி. நான் அப்படித்தான் சந்தேகப்படுகிறேன். யாரையும் நான் நம்பத் தயாராயில்லை. காமத்திலும், மோகத்திலும் இந்த உலகில் யாரும் உத்தமர் இல்லை. நந்தினியின் மேல் நான் அளவு கடந்த பாசம் வைத்துவிட்டேன். அவளை என்னால் தண்டிக்க முடியாது. ஆனால் இந்த ராஜகுருவைக் கண்டிப்பாகத் தண்டித்தே தீரவேண்டும். அவனுக்கு மரண தண்டனை அளித்து விடுங்கள்.’

அவ்வளவுதான், மன்னன் விநாடி நேரத்தில் தீர்ப்பெழுதி விட்டான். மந்திரி காசிபனாருக்கும் வேறு வழியிருக்கவில்லை! அரசன் இப்போது ஆத்திரத்தில் அறிவிழந்திருக்கும்போதுதான் என்ன சொன்னாலும் அது தவறாகத்தான் தோன்றும் என்பதால் மன்னன் கட்டளைப்படியே ராஜகுருவைக் கைது செய்ய, தானே வீரர்களுடன் புறப்பட்டார்.

ராஜகுருவின் வீட்டை அடைந்து அவரிடம் மன்னனின் கட்டளையைத் தெரிவித்தார் காசிபனார்.

இதைக் கேட்ட ராஜகுரு மனம் உடைந்து போனார். ‘ராஜ்ஜியத்தை ஆளும் அரசனுக்கு நட்பு, நன்றி, அன்பு, பாசம், உறவு ஏதும் கிடையாது என்பது எத்தனை உண்மை’ என்று எண்ணினார்.

கைது செய்யப்பட்டு வீரர்களுடன் புறப்பட முனையும்போது ராஜகுரு பிரபுபாதர், மந்திரியிடம், ‘மந்திரியாரே, ஒரு நல்ல மனிதன் என்பவன் எத்தனைச் சிக்கல்களில் சிக்கினாலும், துன்பங்களில் வதைபட்டாலும், சாகும் தறுவாயிலும்கூட, அவனவன் செய்த நற்காரியங்களின் பலாபலன்களாலேயே காப்பாற்றப்படுகிறான்! நான் எந்தத் தவறும் செய்யாத உத்தமன் என்பது உண்மையானால் நானும் காப்பாற்றப்படுவேன்!’ என்று சூசகமாகக் கூறினார்.

மந்திரி காசிபனார் ஒரு கணம் யோசித்தார். ராஜகுருவின் மேல் தவறு இருக்குமென்று அவருக்குத் தோன்றவில்லை. எது ஒன்றையும் ஆராயாமல் கண்மூடித்தனமாக மன்னன் விதித்த தண்டனையிலிருந்து, ராஜகுருவைக் காப்பாற்றத் தீர்மானித்தார்.

இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் ராஜகுருவை தனது மாளிகைக்கே அழைத்துச் சென்று ஓர் அறையில் பதுக்கி வைத்தார். காலம் கனியும்போது வெளிப்படலாம் என்று ராஜகுருவுக்கு ஆறுதல் கூறி எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.

காலம் உருண்டது. மாதங்கள் கடந்தன.

ஒருநாள், மன்னன் சித்ரசேனனின் மகனான மணிமாறன் வேட்டையாடுவதற்காகப் படை, பரிவாரங்களுடன் காட்டுக்குப் புறப்படத் தயாரானான். அவனுடைய நெருங்கிய நண்பனான ராஜசேகரன் வழியனுப்புவதற்காக வந்திருந்தான். மந்திரி காசிபனாரின் மகன்தான் இந்த ராஜசேகரன்.

அரசகுமாரன் கிளம்ப எத்தனிக்கும்போது, சில கெட்ட சகுனங்கள் தென்பட்டன. கறுப்புப் பூனை ஒன்று குறுக்கே போனது. ஒற்றை பிராமணர் ஒருவர் எதிரே வந்தார். காலம் கெட்ட காலத்தில் ஆந்தையின் அலறல் சப்தம் கேட்டது. ஒருவன் தலை மீது விறகுக்கட்டைகளைச் சுமந்துகொண்டு போனான். திடீரென்று மேகங்கள் திரண்டு மூடி வானம் இருண்டு போனது.

ராஜசேகரனின் மனதில் சஞ்சலம் மிகுந்தது. அவன் மணிமாறனிடம், ‘நண்பா, அரசகுமாரா, நீ இன்று வேட்டைக்குச் செல்ல வேண்டாம். புறப்படும்போதே துர்ச்சகுனங்கள் தென்படுகின்றன. இதனால் ஏதாவது கேடு விளையுமோ என்று தோன்றுகிறது. இன்னொரு நாள் செல்லலாம்.’ என்றான்.

ஆனால் மணிமாறனுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையுமில்லை. உடன்பாடும் இல்லை. அவன் ராஜசேகரனிடம், ‘நண்பா, முடிவெடுத்த பிறகு எதையுமே தள்ளிப் போடுவது எனக்குப் பிடிக்காது. அப்படியே ஆனாலும், இந்தச் சகுனத்தடைகளால் என்னதான் நேருகிறதென்று அதையும்தான் பார்த்து விடுகிறேனே!’ என்றான்.

‘எதைத்தான் சோதிப்பது என்று வரைமுறை கிடையாதா மணிமாறா? விஷம் குடித்தால் என்னவாகும் என்று குடித்துப் பார்த்தா சோதனை செய்வது? எந்த ஒரு புத்திசாலியும் இது போன்ற விஷயங்களைப் பரீட்சை செய்து பார்க்க முன்வரமாட்டான். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!’ என்றான்.

ஆனாலும் மணிமாறன் அவன் பேச்சை மறுத்து விடாப்பிடியாக வேட்டைக்குப் புறப்பட்டான்.

வேட்டையில் பலவிதமான மிருகங்களையும் கொன்று விட்டு, குதிரையில், ஒரு மானைத் துரத்திச் சென்றபோது மணிமாறன் தனது படை, பரிவாரத்தை விட்டுவிட்டு வெகு தொலைவு சென்று விட்டான். மானும் இவனுக்குப் போக்குக் காட்டிவிட்டு மறைந்து விட, மணிமாறன் நடுக்காட்டில் சிக்கிக் கொண்டான். திக்குத் திசை தெரியவில்லை. எங்கிருக்கிறோம் என்றோ, எந்தப் பக்கம் போவது என்றோ வழி புலப்படவில்லை. தாகத்தால் தொண்டை வறண்டது.

அரசகுமாரன் குதிரையை அங்கும் இங்குமாகச் செலுத்தி தண்ணீரைத் தேடினான். சற்று தூரத்தில் தண்ணீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றைக் கண்டான். மனம் குதூகலித்தான். குதிரையை விட்டுக் குதித்து மிகுந்த ஆவலுடன் ஓடோடிச் சென்று கை, கால் முகம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ஆற்று நீரை அள்ளி அள்ளிப் பருகி தாகம் தணிந்தான்.

பின் குதிரையைத் தண்ணீர் பருக விட்டு விட்டு சற்றுத் தள்ளி ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் நிழலில் போய் அமர்ந்து கொண்டான்.

அப்போதுதான் அரசகுமாரனை நோக்கி அந்த ஆபத்து பாய்ந்து வந்தது!

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *