Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

விக்கிரமாதித்தன் கதைகள்

ஆற்றில் நீர் பருகிக் கொண்டிருந்த குதிரை திடீரென்று பயந்து போய் கால் உயர்த்தி பயங்கரமாகக் கனைத்தது. அரசகுமாரன் மணிமாறன் குழம்பிப் போய் சுற்று முற்றும் பார்த்தான். திடுக்கிட்டான்! குதிரையின் பயத்துக்கான காரணம் புரிந்தது.

அவன் அமர்ந்திருந்த மரத்தின் நேரெதிரே இருந்த அடர்ந்த புதரிலிருந்து புலி ஒன்று பயங்கர உறுமலுடன் வெளிப்பட்டது. பாய்ச்சலுக்குத் தயாரானது. குதிரை அதைப் பார்த்த கணமே சிட்டாகப் பாய்ந்தோடி விட, புலியின் பார்வை அரசகுமாரன் மேல் திரும்பியது.

மணிமாறன் பயமும் திகைப்புமாக புலியிடமிருந்து தப்பிக்க வழி தேடினான். எந்தப் பக்கம் ஓடினாலும் புலியின் பாய்ச்சலுக்குத் தான் இரையாகி விடுவோம் என்று தோன்ற, சட்டென்று பொறி தட்டியது. அதுவரை தான் அமர்ந்திருந்த அடர்ந்த மரத்தின் மீது மளமளவென்று ஏறினான்.

அடக் கடவுளே! அங்கே அவன் எதிர்பாராத இன்னொரு அபாயம் காத்திருந்தது!

மரத்தின் மேற்புறக் கிளையொன்றில் ஒரு பெரும் கரடி அமர்ந்திருந்தது!

அரசகுமாரன் வெலவெலத்துப் போனான். இதென்ன சோதனை? வாணலிக்குத் தப்பிய மீன் தீயில் விழுந்ததுபோல, புலிக்குப் பயந்து மேலே ஏறினால் கரடி! கரடிக்குப் பயந்து கீழே இறங்கினால் புலிக்குப் பலியாகிப் போவது நிச்சயம். அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. திகிலில் மூர்ச்சையாகிப் போய் விடுவோம் என்று தோன்றியது.

அப்போது அரசகுமாரனைப் பார்த்து அந்தக் கரடி பேசியது:

‘ராஜகுமாரா, பயப்படாதே. இந்த மரம் நான் வசிக்கும் வீடு. புலிக்குப் பயந்து என் வீட்டுக்குள் நுழைந்த நீ என் விருந்தாளி. எனவே நான் உனக்கு அபயம் அளித்துக் காப்பாற்றுகிறேன். புலியைக் கண்டு கவலை கொள்ளாதே! அது போகும்வரை நீ இங்கேயே இருக்கலாம்!’ என்றது.

அரசகுமாரன் நிம்மதியடைந்தான். கரடியின் கீழே இன்னொரு அடர்ந்த கிளையின் மீது அமர்ந்தபடி, ‘கரடியே, மிக்க நன்றி. ஓர் உயிரைக் காப்பதென்பது தர்மத்திலேயே மிகப் பெரிய தர்மமாகும். இதனால் உனக்கு ஏழு பிறப்புக்கும் புண்ணியம் கிட்டும்.’ என்றான்.

அதற்கும் மேல் புலி அவ்விடத்தை விட்டுச் செல்வதற்காக அரசகுமாரனும், கரடியும் காத்திருந்தார்கள். ஆனால் புலி அங்கிருந்து கொஞ்சமும் நகர்வதாயில்லை. சூரியன் மறைந்து நிலவு வந்த பிறகும் புலி அங்கேயே காத்திருந்தது.

நேரம் கரைந்து கொண்டேயிருக்க, நிலவு உச்சிக்கு வந்து நடு இரவாகியது. பசியும், களைப்புமாக மணிமாறன் சோர்வடைந்து போனான். தூக்கம் அவன் கண்களைச் சுழற்றியது. உட்கார்ந்தபடியே தூங்கி வழியத் தொடங்கினான்.

இதைப் பார்த்த கரடி, ‘ராஜகுமாரா, உனக்குத் தூக்கம் வந்துவிட்டது. ஆனால் நீ இப்படி உட்கார்ந்தவாறு தூங்குவது சரியல்ல. ஆழ்ந்த தூக்கத்தில் நீ கிளையிலிருந்து சரிந்து கீழே விழுந்து விட்டால் சரியாகப் புலியின் வாயில் சிக்கிக் கொள்வாய். பயப்படாதே, இங்கே வா. என் மடியில் படுத்துக் கொண்டு பயமில்லாமல் நிம்மதியாக உறங்கு!’ என்றது.

அரசகுமாரனும் கரடியின் மடியில் படுத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கத் தொடங்கினான்.

அவன் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போனதும் கீழிருந்த புலி, மரத்திலிருந்த கரடியிடம் சமத்காரமாகப் பேசத் தொடங்கியது.

‘கரடியே, உனக்கென்ன பைத்தியமா? நாமெல்லாம் ஒரே இனம். மிருக இனம். வன விலங்குகள் நாம். மனிதன் என்பவன் நமது இனத்துக்கு எதிரியாவான். அதுவும் இவன் நமது இனத்தை, மிருகங்களை வேட்டையாட வந்தவன். அப்படிப்பட்ட பாதகனுக்குப் போய் உதவி செய்கிறாயே, இது தகுமா? நான் சொல்வதைக் கேள்; உன் மடியிலிருக்கும் ராஜகுமாரனைக் கீழே தள்ளி விடு. நான் இன்னும் ஏதும் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடக்கிறேன். எனக்கு உணவிட்ட புண்ணியம் உனக்குச் சேரட்டும்!’ என்றது.

‘புலியே, உன் சாமர்த்தியமான பேச்சு என்னிடம் எடுபடாது. இந்த அரசகுமாரன் எதிரியோ, நண்பனோ; நான் இவனுக்கு வாக்களித்திருக்கிறேன். அதை நம்பித்தான் இவன் என் மடியில் படுத்திருக்கிறான். எனவே நான் கண்டிப்பாக நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன். அப்படிச் செய்பவன் ஏழு பிறப்பிலும் நரகத்தில் உழலுவான் என்பார்கள் பெரியோர். அந்தப் பாவம் எனக்கு வேண்டாம்! வீணாகக் காத்திருக்காதே. வேறெங்காவது சென்று உன் உணவுக்கு வழி பார்த்துக்கொள்’ என்றது கரடி.

இதனால் ஏமாற்றமடைந்த புலி, பிறகும் அவ்விடத்தை விட்டுப் போகாமல் அங்கேயே இருந்தது.

ஒரு ஜாமத்துக்குப் பின் அரசகுமாரன் விழித்துக் கொண்டான். அப்போது கரடி அவனிடம், ‘ராஜகுமாரா, இப்போது நான் சற்று நேரம் உறங்குகிறேன். எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டது.

‘ஓ! பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். கவலையில்லாமல் உறங்கு’ என்றான் அரசகுமாரன்.

கரடி நன்றாக உறங்கியதும், புலி, ராஜகுமாரனிடம் தனது நைச்சியமான பேச்சைத் தொடங்கியது.

‘ராஜகுமாரா, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ இந்தக் கரடியை நம்பாதே. கொண்ட பிடியை விடாதது கரடி. அதன் கூரிய நகங்களைக் கவனி. நிச்சயமாக அது உன்னை விடாது. நான் இங்கிருந்து போனதும், சற்று நேரத்தில் இதன் மனைவி கரடி வந்து விடும். இரண்டுமாகச் சேர்ந்து கண்டிப்பாக உன்னைக் கொன்று தின்று விடும். அதற்காகத்தான் இது காத்திருக்கிறது. பாவம் அப்பாவியான உனக்கு இது தெரியவில்லை. ஆபத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்!’ என்றது.

அரசகுமாரன் புலியின் பேச்சைக் கேட்டுக் குழம்பினான்.

புலி மேலும் சொன்னது: இப்போதும் காலம் கடந்து விடவில்லை. உன் அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் கரடியைச் சத்தமில்லாமல் கீழே தள்ளி விடு. அதைக் கொன்று தின்று என் பசியைத் தீர்த்துக் கொள்கிறேன். உனக்கும் ஆபத்து நீங்கி விடும். அதன் பின் நானும் போய் விடுவேன். நீயும் சந்தோஷமாக உன் அரண்மனைக்குச் சென்று விடலாம். ’ என்றது.

அரசகுமாரன் கொஞ்சமும் யோசிக்காமல் அதன் பேச்சை நம்பி, தூங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான்.

கீழே விழுந்த கரடி பாதி வழியில் உறக்கம் கலைந்து சுதாரித்துக் கொண்டு, அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தப்பியது.

அது, கோபத்துடன் அரசகுமாரனைப் பார்த்து, ‘நம்பிக்கை மோசம் செய்த துரோகியே, ஒரு பைத்தியம் கூடச் செய்யாது இந்தத் தவறை! இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும். திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக்கொண்டு இந்தக் காட்டில் பைத்தியமாகச் சுற்றித் திரிந்து வா.’ என்று சாபமிட்டது.

கரடியின் கோபத்தைப் பார்த்துப் பயந்து போன புலி, அது தன்னை எங்கே சபித்து விடப் போகிறதோ என்று மிரண்டு ஓடிப் போனது.

அரசகுமாரன் மரத்திலிருந்து இறங்கி பைத்தியம் பிடித்தவனாகி, ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைச் சொன்னபடி காட்டுக்குள் அலைந்து திரியத் தொடங்கினான்.

0

அழகாபுரி நகரத்திலோ அரண்மனை அல்லோகலப்பட்டது. காட்டுக்கு வேட்டைக்குப் போன அரசகுமாரனின் குதிரை மட்டும் தனியே அரண்மனைக்குத் திரும்பி வர, ராஜகுமாரனுக்கு என்ன நேர்ந்ததோ என்று மன்னனும், மகாராணியும் பதறிப் போயினர்.

மந்திரி காசிபனார் உடனடியாக ராஜகுமாரன் மணிமாறனைத் தேடுவதற்காக ஒரு பெரும் குழுவைக் காட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஆட்கள் நாலாபுறமும் தேடித் திரிந்து கடைசியாக மணிமாறனைக் கண்டுபிடித்தார்கள். ‘பித்துப் பிடித்த நிலையில் ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று புலம்பியபடியே காட்டுக்குள் திரிந்துகொண்டிருந்தவனை கட்டித் தூக்கி அரண்மனைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மன்னன் சித்ரசேனனும் மகாராணி நந்தினியும் தங்களது ஒரே மகனின் நிலைமையைக் கண்டு பதை பதைத்துப் போனார்கள். என்னாயிற்று? இவன் ஏன் இப்படி ஆனான்? என்று புரியாமல் துயரத்தில் தவித்தார்கள்.

மந்திரி காசிபனார் உடனடியாக நாட்டிலேயே மிகச் சிறந்த வைத்தியர்கள், வைதிகர்கள், மந்திரவாதிகள், பேய் ஓட்டுபவர்கள் என சகலவிதமானவர்களையும் அரண்மனைக்கு வரவழைத்தார்.

எல்லோரும் அவரவர் திறமையைக் காட்டி அரசகுமாரனைக் குணப்படுத்த முயற்சித்தார்கள். ம்ஹூம்! எந்த வைத்தியமும், மந்திர தந்திரமும், பூஜை புனஸ்காரங்களும் அவனிடத்தில் பிரயோஜனப்படவில்லை.

மணிமாறன் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பைத்திய நிலையில் ‘ஸஸேமிரா’ எனப் பிதற்றிக் கொண்டிருந்தான். மன்னன் சித்ரசேனன் நிலை குலைந்து போனான். மந்திரி காசிபனார் முன்பு தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

‘அமைச்சரே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜகுரு பிரபுபாதர் மட்டும் இருந்திருந்தால் வெகு சுலபமாக என் மகனைக் குணப்படுத்தியிருப்பார். நான் ஒரு முட்டாள். சந்தேகத்திலும், கோபத்திலும் அவசரப்பட்டுத் தீர விசாரிக்காமலும்கூட அவரைத் தண்டித்து விட்டேன். எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்பு எவனொருவன் தீர ஆலோசிக்காமல் செயல்படுகிறானோ அவன் கண்டிப்பாகப் பின்னாளில் வருந்தத்தான் வேண்டும் என்பார்கள். எனக்கு இந்தத் தண்டனை வேண்டியதுதான்!’ என்று கதறினான்.

மந்திரி காசிபனார் அவனுக்கு ஆறுதல் கூறும்படியாக, ‘அரசே! விதி மிக வலிமையானது. எது ஒன்று நடைபெற வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். அதற்கேற்பவே விதி மனிதனை நகர்த்துகிறது. எனவே கடந்து போனவைகளுக்காக வருத்தப்படுவது வீண். இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.’ என்றார்.

மந்திரியின் வார்த்தைகளால் ஆறுதலடைந்த சித்ரசேனன், ‘ஆம்! அதுவே சரி! மந்திரியாரே உடனே, நாடெங்கும் பறை சாற்றுங்கள். எனது மகனைக் குணப்படுத்துபவர்க்கு ராஜ்ஜியத்தில் பாதியைப் பரிசாகத் தருவதாக மூலை முடுக்கெல்லாம் அறிவிக்கச் சொல்லுங்கள்!’ என்றான்.

0

மந்திரி காசிபனார் அன்று வீட்டுக்குப் போனதுமே ராஜகுரு பிரபுபாதரிடம் அரண்மனையில் நடந்த அனைத்தையும் சொல்லி வருத்தப்பட்டார்.

‘பாவம் மன்னர்! தனது மகனுக்காகப் பாதி ராஜ்ஜியத்தைத் துறக்கவும் தயாராகி விட்டார்’ என்று பெருமூச்சு விட்டார்.

எல்லாவற்றையும் கேட்ட ராஜகுரு பிரபுபாதர், மந்திரியாரே, நாளை மன்னரிடம் போய், ‘என் வீட்டில் உறவுக்கார இளம் பெண் ஒருத்தி இருக்கிறாள். அந்தப் பெண் மிகுந்த திறமைசாலி. அவள் அரசகுமாரனை நேரில் பார்த்தால் நிச்சயமாகக் குணப்படுத்தி விடுவாள்!’ என்று சொல்லி ராஜகுமாரனை இங்கே அழைத்து வாருங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்றார்.

மறுநாள் அரண்மனைக்குச் சென்ற மந்திரி காசிபனார், ராஜகுரு சொன்னபடியே மன்னரிடம் சொல்ல, எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்றிருந்த சித்ரசேனன் தனது மகன் மணிமாறனை அழைத்துக் கொண்டு மந்திரியின் மாளிகைக்கு விரைந்து வந்தான்.

மந்திரியின் மாளிகையில் ஒரு பெரிய அறையொன்றின் நடுவே ஒரு திரையைத் தொங்கவிட்டு அதன் முன்பாக ராஜகுமாரன் அமர வைக்கப்பட்டான். திரைக்கு மறுபுறம் ராஜகுரு அமர்ந்திருந்தார். ராஜகுமாரன் இடைவிடாமல் ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று பிதற்றிக் கொண்டேயிருந்தான்.

ராஜகுரு பிரபுபாதர் கண்மூடி கடவுளைத் தியானித்தார். பின் ஸ, ஸே, மி, ரா, என்கிற எழுத்தில் தொடங்கும் நான்கு ஸ்லோகங்களைப் பெண்ணின் குரலில் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறினார்.

முதல் சுலோகமான ‘ஸ‘ என்கிற எழுத்தில் தொடங்கிய சுலோகத்தின் அர்த்தமானது நட்பையும், நம்பிக்கையையும் எத்தனை உயர்வாகப் போற்ற வேண்டும் என்பதைக் குறித்துச் சொல்லப்பட்டது. அந்தச் சுலோகத்தைச் சொன்னதுமே அரசகுமாரன் ‘ஸ’ என்கிற எழுத்தைச் சொல்வதை விட்டு விட்டான். ‘ஸேமிரா’ என்று மட்டும் சொன்னான்.

பின் ராஜகுரு மற்ற ஸே, மி, ரா எழுத்துக்களுக்கு உண்டான சுலோகங்களைக் கூறினார். அந்தச் சுலோகங்களும், துரோகத்தையும், கடமையையும், சத்திய மீறலையும் குறித்துச் சொல்லப்பட்டவைதான்.

ஒவ்வொரு சுலோகங்கள் சொல்லி முடித்த பிறகும், அந்தந்த எழுத்துகளைச் சொல்வதை நிறுத்திய அரசகுமாரன், நான்கு சுலோகங்களும் சொல்லி முடித்ததும் ஏதும் பேசாமல் சிலை போல் அமர்ந்திருந்தான்.

ராஜகுரு கடைசியாகக் காட்டில் நடந்த புலி, கரடி, மனிதனுக்கிடையில் நடந்த முழுக் கதையையும் சுருக்கமாகக் கூற அரச குமாரன் திடுக்கிட்டு, பித்தம் தெளிந்து சுயநிலைக்கு மீண்டான்.

மன்னன் சித்ரசேனன் சந்தோஷத்தின் உச்சத்துக்குப் போனான்.

திரையின் பின்னால் இருப்பது ஓர் இளம்பெண் என்று நினைத்துக்கொண்டு, மிகுந்த பரவசத்துடன், ‘பெண்ணே, உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நான் சொன்னபடியே உனக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியைத் தந்து விடுகிறேன்’ என்று தழுதழுத்தான்.

‘மன்னவா, நான் தங்களுடைய பாதி ராஜ்ஜியத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. தேசத்தின் உண்மையான பிரஜை என்கிற முறையில் எனது கடமையென்றே இதைச் செய்தேன்.’ என்றதும், மன்னன் தொடர்ந்து கேட்டான்.

‘சரி, அது போகட்டும் பெண்ணே! நீயோ இங்கு நகரத்தில் இருக்கிறாய்; ஆனால் எங்கோ காட்டில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்ததுபோலச் சொல்கிறாயே! எப்படி?’ என்றான் ஆச்சரியத்துடன்.

‘எனது தேவ குரு பிரஜாபதியின் அருளால் சரஸ்வதி தேவி எனது இதயக் கமலத்தில் வீற்றிருக்கிறாள். அவளைத் துதித்து மகாராணியார் நந்தினியின் மச்சத்தை ஞானதிருஷ்டியினால் அறிந்தது போலவே, காட்டில் நடந்த நிகழ்வையும் அறிந்து கொண்டேன்!’ என்றபடி ராஜகுரு பிரபுபாதர் வெளிப்பட்டார்.

மன்னன் சித்ரசேனன் திகைத்துப் போனான். ஆச்சரியப்பட்டான். கண்ணீர் மல்கினான். பின் சுதாரித்துக் கொண்டவன், ‘குருநாதரே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்’ என்றபடி அவர் பாதம் தொட்டு வணங்கினான்.

மந்திரி காசிபனார் நடந்தவற்றை முழுதும் மன்னனிடம் தெரிவித்து விட்டு, அவரது கட்டளையை மீறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆனால் மன்னனோ, மந்திரியின் கையைப் பற்றிக்கொண்டு, மிகுந்த நெகிழ்ந்த குரலில், ‘அமைச்சரே, தாங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமேயில்லை. நான் மிகப் பெரும் தவற்றைச் செய்யவிருந்தேன். நீங்கள் மட்டும் அதைத் திருத்தி ராஜகுருவைத் தப்பிக்க வைக்காமல் இருந்திருந்தால் நான் பெரும் பழிக்கு ஆளாகியிருப்பேன். ராஜகுருவைக் கொன்று, ஓர் அந்தணரைக் கொன்றதனால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாகி பிரம்மராட்சஸாக மாறி அலைந்து கொண்டிருந்திருப்பேன்.’ என்று தழுதழுத்தவன் மேலும் தொடர்ந்து, ‘அதுமட்டுமல்ல, உங்களால்தான் எனது மகன் மிகப் பெரிய ஆபத்திலிருந்து ராஜகுருவின் மூலமாகத் தப்பிக்க முடிந்தது. எனவே எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது நான்தான்.’ என்று பலவிதமாகப் புகழ்ந்து மந்திரி பிரபுபாதருக்குப் பரிசுகளை அள்ளித் தந்து கௌரவித்தான்.

0

மேற்கண்ட காசிபனார் கதையை நீதிவாக்கிய மந்திரி சொல்லி முடிக்க, போஜராஜனும் கதையில் மகிழ்ந்து போய் மந்திரிக்குப் பலவிதமான சன்மானங்கள் தந்து சிறப்பித்தான். பின் எல்லோரும் சிம்மாசனத்துடன் அரண்மனைக்குப் புறப்பட்டார்கள்.

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *