Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

சூரியசேனனும் தாசி தேவயானியும்

காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தினச் சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டினான். அதைப் பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச் சரிகைகளாலும், தோரணங்களாலும் அலங்கரித்து மண்டபத்தின் நடுவில் கம்பீரமாகச் சிம்மாசனத்தை அமர்த்தினான்.

வேத விற்பன்னர்கள் காசி, ராமேஸ்வரம் முதலான பலப்பல திவ்யக்ஷேத்திரங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதத் தீர்த்தங்களால் அந்தச் சிங்காதனத்தை அபிஷேகித்து, யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்கப் பூஜைகள் செய்து புனிதப்படுத்தினார்கள். எல்லாம் முடிந்ததும் ஒரு நல்ல முகூர்த்த நேரத்தில் போஜ மன்னன் முப்பத்திரண்டு படிகள் கொண்ட சிம்மாசனத்தின் மீது ஏறி அமரப் போனான்.

அப்போது சிம்மாசனத்தின் முப்பத்திரண்டு படிகளிலும் உள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் ஏக காலத்தில் கலகலவெனச் சிரித்தன.

இதைக் கண்டு திகைத்துப்போன போஜ மன்னன், பதுமைகளைப் பார்த்து, ‘சிம்மாசனத்தின் வினோதப் பதுமைகளே, நான் சிம்மாசனம் ஏறப் போகும் சமயத்தில் எதற்காகச் சிரித்தீர்கள்? எனக்கொன்றும் விளங்கவில்லையே!’ என்று கேட்டான்.

உடனே முதல் படிக்குக் காவலாக நின்றிருந்த சுகேசி என்கிற வினோதப் பதுமை தனது இனிமையான பெண் குரலில், ‘போஜ ராஜனே, எங்களது சக்ரவர்த்திக்குள்ள வீரம், வேகம், தைரியம், நற்பண்பு, உயர்குடிப் பெருமை, நுண்கல்வி, மனதிட்பம் போன்ற குணங்கள் உனக்கிருக்கிறது என்று நினைத்தால் நீ இந்தச் சிம்மாசனத்தில் ஏறலாம்.’ என்றது.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட போஜராஜன் அந்தப் பதுமையிடம், ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்? நீ கூறிய எல்லாக் குணங்களும் என்னிடமும் உள்ளன. தவிர ஈகையில் என்னைப் போல எவரும் இந்தப் பூவுலகில் இல்லை. யாசிப்பவர் எவராயினும் இல்லையென்று மறுத்துக் கூறாமல் அள்ளி அள்ளித் தருபவன் நான்!’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான்.

சுகேசி மேலும் சிரித்தபடி, ‘இதோ இந்தச் சொல்லிக் காட்டும் தன்மையே உனது கீழ்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்குணம் கொண்ட ஒருவன், தான் செய்த உதவிகளைப் பெரிதுபடுத்திப் பேசுவும் மாட்டான்; மற்றவர்களது தவறுகளை உரக்கச் சொல்லித் திரியவும் மாட்டான். அது கீழானவர்களின் செயலாகும். எவனொருவன் தன்னைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொள்ளாமலும், மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி தண்டோரா போடாமலும் இருக்கிறானோ அவனே மனிதர்களில் சிறந்தவன் ஆவான்!’ என்றது.

சுகேசியின் சொற்களால் வெட்கமடைந்த போஜமகாராஜன், ‘ஆம்! நீ சொன்னது மிகவும் சரிதான். வலது கை கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்பார்கள் பெரியோர். நான் என்னைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டது முட்டாள்தனம்தான்!’ என்று ஒப்புக் கொண்டான்.

சுகேசி மேலும் சொன்னது: ‘கேள்! போஜராஜனே! எங்கள் சக்கரவர்த்தி விக்கிரமாதித்த மகாராஜா ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் பணிந்து வணங்கி கப்பம் கட்டும்படியாகத் திகழ்ந்தவர். அவரது சகோதரரும், அறிவாளியுமான பட்டி என்கிற மதியூக மந்திரியுடன் இந்தப் பூலோகத்தைத் தேவலோக இந்திரனுக்கு நிகராக ஆட்சி செய்து ராஜ்ஜியப் பரிபாலனம் செய்தவர். அவரைப்போல வீரதீர மகாராஜனல்லவோ இந்தச் சிம்மாசனத்தில் ஏறவேண்டும்!’ என்றது.

‘பதுமையே இந்தச் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரனான அந்த மகா வீரர் விக்கிரமாதித்த பூபதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என மிகுந்த ஆவலாக இருக்கிறேன். அவரது வரலாற்றைச் சொல்வாயா?’ என்று கேட்டான் போஜராஜன்.

‘ஆஹா! அதற்கென்ன? அவரது பூர்வீகத்திலிருந்து சொல்கிறேன், கேளுங்கள் மகாராஜனே!’  சுகேசி பதுமை சொல்லத் தொடங்கியது.

0

அந்தணன் சூரியசேனனும் தாசி தேவயானியும்

ராஜமகேந்திரபுரம் அழகான ஊர். அந்த நகரத்தில் சூரியசேனன் என்னும் பிராமணன் வாழ்ந்து வந்தான்.

சூரியசேனன் மிகச் சிறந்த பண்டிதன். வேத விற்பன்னன். சகல சாஸ்திரப் புராணங்களைக் கரைத்துக் குடித்தவன். அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவன். ஆனாலும், தான் கற்ற வித்தைகளில் அவனுக்குத் திருப்தியில்லை. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை, தெரிந்துகொள்ள வேண்டியவை அநேகம் உள்ளதாகக் கருதினான். அதையெல்லாம் கற்றுத் தருவதற்குத் தகுந்த குருவைத் தேடிப் புறப்பட்டான்.

நாடோடியாக ஊர் ஊராகக் குருவைத் தேடித் திரிந்த சூரியசேனன் ஒருநாள், கிராமம் ஒன்றைக் கடந்து காட்டு வழி செல்லும்போது, அங்கிருந்த குளம் ஒன்றில் முகம் கை கால்களைக் கழுவிக் கொண்டு தாகம் தீர தண்ணீர் அருந்தினான். பின் மிகுந்த களைப்பின் காரணமாக அந்தக் குளத்தின் கரையில் இருந்த ஆலமரத்தின் அடியிலேயே படுத்துத் தூங்கிப் போனான்.

சூரியசேனன் படுத்து ஓய்வெடுத்த அந்த ஆலமரத்தில்தான் ஒரு பிரம்மராட்சஸன் வசித்து வந்தான். ரிஷியாக இருந்து சாபத்தினால் பிரம்மராட்சஸனாக மாறிப் போனவன் அவன். சாபவிமோசனம் வேண்டி, அந்த ஆலமரத்தில் தங்கித் தவம் செய்து கொண்டிருந்தான். அன்றைய தவத்துக்குப் பிறகு கண் விழித்த பிரம்ம ராட்சஸன், மரத்தினடியில் உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து வியந்தான். அவன் யார் என்று தெரிந்துகொள்வதற்காக, ஓர் அந்தணனைப் போல் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு வந்து சூரியசேனனை எழுப்பினான்.

‘ஐயா! பிராமணரே! யார் நீங்கள்? கள்வர்களும், கொடிய விலங்குகளும் நடமாடும் இந்தக் காட்டுப் பிரதேசத்துக்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

சூரியசேனன் அவனை வணங்கி, ‘ஸ்வாமி! நான் ராஜமகேந்திரபுரம் என்கிற ஊரிலிருந்து வருகிறேன். வேத, சாஸ்திரப் புராணங்களில் மிகுந்த பாண்டித்யம் பெற்றவன் நான். ஆனாலும் கற்றுக் கொள்ள வேண்டிய சாஸ்திரங்கள், வித்தைகள் இன்னும் ஏராளம் உள்ளதால் அதற்கான தகுந்த குருவைத் தேடியே புறப்பட்டேன். தங்களைப் பார்த்தால் மாபெரும் பண்டித விற்பன்னர் என்று தோன்றுகிறது. என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக் கொண்டு மேலும் பல வித்தைகளையும் சொல்லித் தர வேண்டும்’ என்று வேண்டினான்.

பிரம்மராட்சஸனாகிய ரிஷி, புன்னகையுடன், ‘சூரியசேனா, உன்னை என் சீடனாக ஏற்றுக்கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. ஆறு மாதக் காலம், உணவு, உறக்கம் இரண்டையும் துறந்து நீ விரதம் இருக்கவேண்டும். நான் இந்த ஆலமரத்தின் மீதிருந்தபடியே அனைத்து வித்தைகளையும் உனக்குக் கற்பிக்கிறேன்!’ என்றார். முதல் காரியமாக, ஆறு மாதக் காலத்துக்குப் பசி, தூக்கம் இரண்டும் சூரியசேனனை பாதிக்காமல் இருக்க மந்திரம் ஒன்றை உபதேசித்தார். பின் வித்தை போதிக்கத் தொடங்கினார்.

பிரம்ம ராட்சஸன், மரத்தின் மீது அமர்ந்தபடியே ஆலமர இலைகளில் பாடங்களை எழுதிப் போட அவைகளைச் சேகரித்துக் கொண்டு, சூரியசேனன் பசி, தூக்கம் முற்றும் துறந்து சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான்.

ஆறு மாதக் காலம் விரைந்தோடிப் போனது. பிரம்ம ராட்சஸன், சூரியசேனனுக்குக் கல்வி கற்பித்தபடியே தனது தவத்தையும் முடிக்க, அவரது சாபம் நீங்கியது. தேவலோகத்திலிருந்து இந்திர விமானம் இறங்கி வந்தது. சாப விமோசனம் பெற்ற ரிஷி விமானத்தில் ஏறும் முன்பாக சூரியசேனனிடம், ‘குருவுக்குப் பெருமை சேர்க்கும் சிஷ்யன் நீ. இந்த உலகத்தில் உன்னளவுக்கு அறிஞர் வேறு யாருமில்லை. இனி நீ நகரம் திரும்பி ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு, இல் வாழ்க்கையைத் தொடங்கு!’ என்று வாழ்த்திச் சென்றார்.

சூரியசேனன் தனது ஊரான ராஜமகேந்திரபுரத்துக்கே புறப்பட்டான். வழியில் உத்கலம் என்னும் நகரத்தை நெருங்கும்போது மாலைப் பொழுது முடிந்து இரவுப் பொழுது தொடங்கியது. நீண்ட தூரம் நடந்து வந்ததில் மிகவும் களைப்படைந்து அங்கே கண்ணில்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தான். சிறிது நேரத்திலேயே நினைவு தப்பி விழுந்தான். ஆறு மாதக் காலமாகப் பசி, தூக்கம் இல்லாமல் கிடந்ததன் காரணமாக அவனது உடல் கட்டை போல் ஆகிப்போனது.

சூரியசேனன் விழுந்த கிடந்த வீடானது தேவயானி என்னும் தாசியினுடையது. ராக்காலப் பூஜை முடிந்து கோயிலிருந்து திரும்பி வந்த தேவயானி திண்ணையில் கிடந்த சூரியசேனனைப் பார்த்து ஏதோ வழிப் போக்கன் என்று நினைத்து அவனுக்கு உணவிட்டு உபசரிப்பதற்காக எழுப்பினாள். திடுக்கிட்டாள்.

சூரியசேனன் பிணம் போலக் கிடந்தான். மூச்சுக் காற்று மட்டும் வந்துகொண்டிருந்ததே தவிர உடலில் சிறிதும் அசைவில்லை. பதறிப் போன தேவயானி உடனடியாக வைத்தியரை வரவழைத்தாள்.

அவர் சூரியசேனனைப் பரிசோதித்து விட்டு, தேவயானியிடம், ‘அம்மா! இந்த அந்தணன் நீண்ட காலங்களாக உணவும், உறக்கமும் இல்லாமல் கிடந்திருக்கிறான். அதன் காரணமாகவே இவன் இப்படி மூச்சு விடும் பிணம் போலாகி விட்டான். நான் ஒரு தைலம் காய்ச்சித் தருகிறேன். அதை இவன் உடல் முழுக்க நாளுக்கு மூன்று முறை தடவி வாருங்கள். உடலின் ரத்தநாளங்களில் உணர்வு வந்து விடும். தவிர நான் தரும் இன்னொரு மருந்தை இவனுக்குப் புகட்டுங்கள். அது இவனுக்கு ஜீவ சக்தியைத் தந்து சுய நிலைக்கு மீட்டு விடும்!’ என்றார்.

தேவயானி, வைத்தியர் சொன்னது போலவே தைலம் தேய்த்து, மருந்து புகட்டி வர, ஐந்தாம் நாள், சூரியசேனன் பிரக்ஞை மீண்டான். நடந்தவற்றை அறிந்து தேவயானிக்கு நன்றி சொல்லி விட்டு ஊருக்குப் புறப்படத் தயாரானான்.

அப்போது தேவயானி, ‘ஸ்வாமி! நீங்கள் செய்வது நியாயமா? எனது வீட்டின் திண்ணையில் கிடந்த தங்களை எனது கணவனாகவே பாவித்துத்தான் வீட்டுக்குள் வைத்து இந்த ஐந்து நாட்களாகப் பணி விடை செய்து வந்தேன். இப்போது உடல் குணமானதும் என்னை விட்டுப் போகிறேன் என்கிறீர்களே! நான், உங்களை விடவே மாட்டேன். தயவுசெய்து என்னை மணந்து உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.’ என்று வேண்டினாள்.

சூரியசேனன் அதிர்ந்து போனான். ‘அடடா! என்னது இது! இது எப்படி நடக்கும்? பெண்ணே! நானோ அந்தணன்; நீயோ தாசி குலத்தவள். எப்படி உன்னை மணந்துகொள்வேன்? என்னால் முடியாது! சாஸ்திரம் இதை அனுமதிக்காது!’ என்று மறுத்தான்.

தேவயானி கேட்பதாயில்லை. அவள் சூரியசேனனை அழைத்துக்கொண்டு அந்த நகரத்து மன்னனிடம் சென்று தன் வழக்கைக் கூறினாள். நீதி வழங்குமாறு கேட்டாள்.

மன்னன் ரவிமாறவர்மன் இருதரப்பு நியாயங்களையும் கேட்டான். பின் அவன் மந்திரியிடமும் ராஜ பிரதானிகளிடமும் கலந்தாலோசிக்க, ராஜகுரு எழுந்து,

‘அரசே! அந்தணன் ஒருவன், தாசி குலத்துப் பெண்ணை மணந்து கொள்வதைச் சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது என்பது உண்மைதான். ஆனால் அப்படி ஓர் அந்தணன் தனது குலத்தைத் தவிர வேறு குலத்துப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் நேர்ந்தால் அப்போது அவன் நான்கு வர்ணத்திலுள்ள பெண்களையும் ஒரே சமயத்தில் ஒரே முகூர்த்தத்தில் மணந்து கொள்ளவேண்டும் என்று சாஸ்திரம் வழி சொல்கிறது!’ என்று கூறினார்.

வழக்குக்குத் தீர்வு கிடைத்ததென்று மன்னன் மகிழ்ந்து போனான்.

அவன் தனது ராஜகுருவிடம், ‘அப்படியானால் சத்ரியக் குலத்தவளான எனது மகள் சித்ராங்கியையும், பிராமணக் குலத்துப் பெண்ணான உமது மகள் காஞ்சனையையும், வைசிய குல சோமசுந்தர செட்டியாரின் மகள் கோமளவல்லியையும், இவர்களுடன் தாசி தேவயானியையும் சேர்த்து நால்வரையும் ஒரே முகூர்த்தத்தில்  இந்த அந்தணனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோம்! எல்லோருக்கும் சம்மதம்தானே?’ என்று கேட்டான்.

மன்னன் சொல்லை யாரால் மறுக்க முடியும்!

ஒரு சுபமுகூர்த்த நாளில் சூரியசேனன் நால்வரையும் மனைவிகளாக்கிக் கொண்டான். அந்நகரிலேயே தங்கி தனது நான்கு மனைவிகளுடன் சுக போகமாக வாழ்க்கை நடத்தினான்.

அவனது இனிய இல்வாழ்க்கையின் பயனாகப் பிராமணப் பெண்ணுக்கு வல்லப ரிஷி என்கிற மகனும், அரசகுமாரி சித்ராங்கியின் மூலமாக விக்கிரமாதித்தன் என்னும் புதல்வனும், வைசியப் பெண்ணுக்கு பத்ரி எனும் புத்திரனும், கடைசியாக தாசி தேவயானிக்கு பர்த்ருஹரி என்னும் தனயனுமாக நான்கு குமாரர்கள் பிறந்தார்கள்.

இந்த இடைக்காலத்தில் ராஜா ரவிமாறவர்மன் உடல்நலம் குன்றி இறந்துபோக மருமகனான சூரியசேனனே அந்நகரத்தின் மன்னனாகி நல்லாட்சி நடத்தினான்.

0

வருடங்கள் கடந்தன. சூரியசேனனின் புதல்வர்கள் நால்வரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள். பெரும் அறிஞர்களிடம் கல்வி கற்ற அவர்கள் அனைவரும் சிறந்த புத்திமான்களாகவும், இணையில்லா வீரர்களாகவும் திகழ்ந்தார்கள்.

நாளடைவில் சூரியசேனனும் வயோதிகம் அடைந்து உடல்நலம் குன்றினான்.

அவனது முடிவுநாள் நெருங்கும் நேரத்தில் நான்கு மகன்களும் சுற்றிச் சூழ்ந்திருக்க, சூரியசேனன் தனது கடைசி மகனும் தாசி தேவயானியின் புதல்வனுமான பர்த்ருஹரியைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினான். என்ன காரணமென்று மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும் பர்த்ருஹரிக்குப் புரிந்து போனது.

‘தந்தையே தங்கள் வேதனை எனக்குப் புரிகிறது! தாசியின் மகனான நான் திருமணம் செய்துகொண்டு என் மூலம் சந்ததி ஏற்பட்டால் மேலுலகில் தங்களுக்கு மோட்சம் கிடைக்காது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதுதானே தங்கள் துன்பத்துக்குக் காரணம்? நான் உங்களுக்குச் சத்தியம் செய்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டாலும் என் மூலமாக சந்ததி ஏற்படாது என்பது நிச்சயம்!’ என்று வாக்களித்தான்.

இதனால் மனத் திருப்தியடைந்த சூரியசேனன், தனது மற்ற மகன்களிடம், ‘என் அன்பு குமாரர்களே, எனது மேலுலக நலனுக்காகத் தனது குல விருத்தியையே தியாகம் செய்த பர்த்ருஹரிக்கு நானும் பிரதிபலனாக ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். எனவே நான் இறந்த பிறகு இந்த நாட்டை ஆளும் அரசனாக பர்த்ருஹரிக்கே பட்டம் சூட்ட நினைக்கிறேன். நிறைவேற்றுவீர்களா?’ என்று கேட்க மற்ற மூன்று மகன்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

சூரியசேனன் மன நிம்மதியுடன் இறந்து சொர்க்கம் போனான்.

தந்தை சொற்படியே பர்த்ருஹரி அந்நாட்டின் மன்னனானான். மற்ற மூன்று மகன்களுள் அந்தண குமாரனான வல்லபரிஷியோ தனது குல வழக்கப்படி தவம் செய்ய விரும்பி, மற்ற இரு சகோதர்களான பட்டி, விக்கிரமாதித்தனை ராஜா பர்த்ருஹரிக்கு பக்க பலமாக இருக்கச் சொல்லி விட்டு, விடை பெற்றுக் கொண்டு தவம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்.

0

ராஜா பர்த்ருஹரியின் ஆட்சியில் அவனது ராஜ்ஜியம் மிகுந்த செல்வச் செழிப்போடு திகழ்ந்தது.

பிரதம மந்திரியான பட்டியின் துணையோடு மன்னன் நீதி நெறி வழுவாமல் தருமப் பரிபாலனம் நடத்தினான். இன்னொரு தம்பியான விக்கிரமாதித்தன் தனது வீரத்தால் அண்டை தேசத்து மன்னாதி மன்னர்களையெல்லாம் ஜெயித்து அனைவரையும் ராஜா பர்த்ருஹரியின் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டி பணிந்து நடக்கச் செய்தான். குடிமக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் சுபிட்சமாக வாழ்ந்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் ராஜா பர்த்ருஹரியின் வாழ்க்கையையே திசை மாற்றிப் போட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது!

ஓர் இனிப்பான பழத்தின் மூலம் கசப்பான நிகழ்வுக்கு வித்திட்டவன் சோமசர்மன் என்கிற ஓர் அந்தணன்!

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *