Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

ராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விடப் பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத் திருப்தியில்லை.

உத்கலம் என்கிற சிறிய ராஜ்ஜியத்துக்குள் கிணற்றுத் தவளைபோல உழலும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய கனவுகள் பிரம்மாண்டமானவை. அவற்றைச் சாத்தியப்படுத்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

தனது தம்பியும் ராஜ்ஜியத்தின் மகா மந்திரியுமான பட்டியை அழைத்த விக்கிரமாதித்தன், ‘பட்டி, எனது ஆட்சி இந்தச் சிறிய உத்கலம் நகரத்துடன் குறுகிப் போவதில் எனக்கு விருப்பமில்லை. இன்னும் பலப்பல நாடு நகரங்களையும் எனது குடையின் கீழ் கொண்டுவரத் தீர்மானித்துள்ளேன். எனவே அதற்குத் தகுந்தபடி நமது தலைநகரம் இன்னும் விஸ்தாரமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

உறுதியான கோட்டைக் கொத்தளங்கள், அகழிகள், மாட மாளிகைகள், விஸ்தாரமான வீதிகள், குடிமக்கள் வசிக்க அழகிய வீடுகள், அற்புதமான நந்தவனங்கள், மிகப்பெரிய ஏரிகள், குளங்கள் என்று ஒரு குறையும் இல்லாதபடி அந்தத் தலைநகரம் அமையவேண்டும். ஆறும் மலையும் வனமும் சூழ்ந்த வளமான பகுதியாக இருக்கவேண்டும். அதுபோலொரு இடத்தை நீ போய் தேர்ந்தெடுத்து வா!’ என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அண்ணன் சொல்லைத் தட்டாத பட்டி அப்போதே இடம் தேடிப் புறப்பட்டான்.

நாலா திசைகளுக்கும் சென்றான். பலப்பல இடங்களைப் பார்த்தான். எதுவும் அவன் மனத்துக்குத் திருப்தியளிக்கவில்லை. நாட்கள் விரைந்தன. அவனது பயணமும் தொடர்ந்தது. ஒருநாள் விஷாலி மலையடிவாரத்தில் சிப்ரா நதியை ஒட்டி ஒரு பெரும் வனப்பகுதியைக் கண்டான் பட்டி. அந்தக் காட்டுப் பிரதேசமானது மிக மிகப் பரந்து காணப்பட்டது. மலைகளும், அருவிகளும், சுனைகளும், எங்கெங்கும் ஆளுயர மரங்களும், செடி கொடிகளும் படர்ந்து இயற்கை எழில் ததும்பி வழிந்தது. பட்டியின் மனத்தில் மகிழ்ச்சி பிரவாகித்தது.

அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தான். குதிரையில் இன்னும் சற்றுத் தொலைவு சென்றதும் நட்ட நடுக் காட்டில் ஒரு கோயில் தென்பட்டது. பட்டி ஆச்சரியமானான். ‘அட! இதென்ன அதிசயம்? இந்த அடர்ந்த வனத்தில் இப்படியொரு கோயில் எப்படி வந்தது? குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு கோயிலை நெருங்கினான்.

அதுவொரு அம்மன் கோயில். பெரும் மலையடிவாரத்தின் கீழ் அழகுற அமைந்திருந்தது. கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் கொலுவீற்றிருந்தாள். கோயிலைச் சுற்றிலும் ஆளுயர ஆலமரங்கள் அடர்த்தியாகச் சுற்றிலும் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி கம்பீரமாக நின்றிருந்தன. கோயிலின் எதிரே அழகான தாமரைக் குளம் நீர் ததும்ப அலையடித்துக் கொண்டிருந்தது. மலையின் பாறை வழியே அருவியொன்று வழிந்தோடி அந்தக் குளத்தில் வந்திறங்கி ததும்பி சலசலத்துக் கொண்டிருந்தது.

அந்த இடமே மிக ரம்மியமாகக் காணப்பட்டாலும் ஓரிரு விசித்திரக் காட்சிகளும் தென்பட்டன. ஓர் ஆலமரத்தின் மீது கிளைகளில் வட்ட வடிவமாக ஏழு உறிகள் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த உறிகள் மிகச் சரியாகத் தாமரைக் குளத்துக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் நேர் கீழே தாமரைக் குளத்தில் நடுவில் மிகக் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது.

பட்டிக்கு ஒன்றும் புரியவில்லை! என்ன அந்த உறிகள்? குளத்தின் நடுவே எதற்கு அந்தக் கூரிய வேல்?

பட்டி கருவறைக்குச் சென்று காளியம்மனை வழிபட்டு, கோயிலைச் சுற்றி வந்தான். அப்படி வந்தபோது ஒரு பெரிய பாறையொன்றில் சில வாசகங்கள் செதுக்கப்பட்டிருந்ததைக் கண்டான். நெருங்கிச் சென்று படித்தான்.

‘வீரனோ, சூரனோ, புத்திமானோ, பலவானோ, யாராயிருந்தாலும், எந்தக் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்தத் தைரியசாலி இந்தத் தாமரைக் குளத்தில் குளித்து அம்மனைத் தொழுது, மேலே ஆலமரத்தின் மீது இருக்கும் ஏழு உறிகளையும் ஒரே வீச்சில் துண்டித்து வீழ்த்தி, அந்த உறிகள் கீழே விழும் முன்பாகவே குளத்தின் நடுவில் இருக்கும் கூரிய வேலின் மீது தனது உடலைத் தயங்காமல் பாய்ச்சுகிறானோ அத்தகைய அபூர்வனுக்கு தேவி காளியம்மனே காட்சியளிப்பாள். அப்படி அவளது தரிசனம் கண்டவன் பெரும் சக்கரவர்த்தியாக ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களையும் வென்று இந்தப் பூவுலகை அரசாளுவான்! இது உறுதி!

இதைப் படித்த பட்டி பெரும் ஆச்சரியத்துடன் உடனடியாக உத்கலம் நாடு திரும்பி, விக்கிரமாதித்தனிடம் சகலத்தையும் தெரிவித்தான். கூடவே பத்ரகாளியம்மன் வீற்றிருக்கும் அந்தப் பிரதேசமே புதிய தலைநகரம் அமைக்கச் சிறந்த இடமென்றும் கூறினான்.

பட்டி சொன்னதில் மிகுந்த ஆர்வம் கொண்ட விக்கிரமாதித்தன் அதற்குமேல் தாமதிக்காமல் உடனே பட்டியுடன் அந்த இடத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தான்.

தாமரைக் குளத்தில் மூழ்கிக் குளித்து மாகாளியம்மனை மனதாரத் தொழுதான். பின் தனது வாளுடன் மரத்தின் மீது ஏறியவன் சக்கர வட்டமாகக் கட்டப்பட்டிருந்த உறிகளை நெருங்கியபோது, பட்டி, விக்கிரமாதித்தனைப் பார்த்து, ‘மன்னா, அந்த உறிகளில் ஏதேனும் ஒன்றின் மீது கால் வைத்து ஏறி வட்டமாகச் சுழலுங்கள்’ என்றான்.

விக்கிரமாதித்தன் அதுபோலவே சுழல, ஏழு உறிகளின் கட்டப்பட்டிருந்த கயிறுகளும் ஒன்றன் மீது ஒன்றாகப் பின்னிக் கொண்டு ஒரே கயிறாக முறுக்கிக்கொண்டு தொங்கின.

‘மன்னா இப்பொழுது அதை ஒரே வெட்டில் வெட்டி விட்டு, உடனே நீங்கள் வேலின் மீது குதித்து விடுங்கள்’ என்றான் பட்டி.

விக்கிரமாதித்தன் அவன் சொன்னது போலவே செய்தான். இதோ வேலின் நுனி மார்பில் துளைத்து முதுகின் புறம் வெளிப்படப் போகிறது என்று நினைத்தபடியே வீழ, அப்படியேதும் நேரவில்லை.

தேவி மாகாளி அங்கே பிரத்தியக்ஷ்மாகி விக்கிரமாதித்தனைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றினாள்.

தேவியின் தரிசனம் கண்ட பட்டியும், விக்கிரமாதித்தனும் பரவசமானார்கள். தேவியை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளைப் பலப்பல தோத்திரங்களால் துதித்துப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

அவர்களது உன்னதப் பக்தியினால் மனம் மகிழ்ந்த காளி தேவி, அவர்களை வாழ்த்தி, ‘விக்கிரமா, உனது பணிவும், பக்தியும், வீரமும் என்னை மகிழச் செய்துவிட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள்.

‘தாயே! பராசக்தி! நீ வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்தத் திருக்கோயிலின் பிரதேசத்திலேயே எனது தலைநகரை அமைத்துக் கொண்டு ராஜ்ஜியம் ஆள ஆசைப்படுகிறேன். வரமளிக்க வேண்டும் தாயே!’ என்று வேண்டினான்.

‘அப்படியே ஆகட்டும்!’ என்று வரமளித்த பத்ரகாளியம்மன், தேவலோகக் கலைஞனான விஸ்வகர்மாவை அழைத்தாள்.

‘இந்த வனப்பிரதேசத்தை விண்ணுலகின் இந்திரலோகம் போல உருவாக்கிக் கொடு’ என்று கட்டளையிட்டாள்.

அதன்படியே அந்த மலையடிவாரக் கானகப் பிராந்தியத்தை ஒரு மாயாலோகம் போல வடிவமைத்தான் விஸ்வகர்மா. அந்தப் பரந்த பிரதேசத்தை நொடி நேரத்தில் ஓர் அதிசயத் தலைநகராக உருவாக்கினான். விக்கிரமாதித்தன் விரும்பியபடியே மிகப்பெரிய ஏரிகள், குளங்கள், அற்புதமான நந்தவனங்கள், உறுதியான கோட்டைக் கொத்தளங்கள், அகழிகள், மாட மாளிகைகள், விஸ்தாரமான வீதிகள், குடிமக்கள் வசிக்க எண்ணற்ற அழகிய வீடுகள், மன்னனுக்கென மாபெரும் அதிசய விசித்திர அரண்மனை என்று ஒரு குறையும் இல்லாதபடி அந்நகரம் சொர்க்கம்போல ஜொலித்தது.

‘விக்கிரமா, உனது ராஜ்ஜியத்தைச் சீரும் சிறப்புமாக ஆள இதோ இந்தப் பொக்கிஷத்தையும் வைத்துக்கொள்!’ என்று சொல்லி பொன்னும், மணிகளும், வைர வைடூரியங்களும், தங்கக் காசுகளும் நிரம்பி வழிந்த ஏராளமான திரவியக் குவியலைப் பெட்டிப் பெட்டியாகப் பரிசளித்த மாகாளியம்மன், ‘நீண்ட நெடிய காலம் தர்மப் பரிபாலனம் செய்வாயாக!’ என்று வாழ்த்தி மறைந்தாள்.

விக்கிரமாதித்தன் அந்த நகருக்கு ‘உஜ்ஜயினி மாகாளிப்பட்டணம்’ என்று பெயர் சூட்டி, தனது குடிமக்களை அங்கே வரவழைத்துக் குடியமர்த்தி அங்கிருந்தே தனது ராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கினான். கல்வெட்டில் பொறித்திருந்ததைப் போலவே ஐம்பத்தாறு தேசத்து அரசர்களையும் வென்று, எல்லோரும் தன்னை வணங்கிப் பணிந்திருக்கும்படியாகச் செய்தான்.

அவனது ஆட்சியின்கீழ் குடிமக்கள் மனநிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் எந்தவிதப் பயமோ கவலையோ இல்லாமல் சுகமாக வாழ்ந்தார்கள். தேசத்தில் நியாயமான வரியை வசூலித்து, மக்களுக்குத் தேவையானவற்றை அளித்து நீதி தவறாமல் விக்கிரமாதித்தன் ஆட்சி புரிந்தான். அவனது புகழ் பூலோகத்தில் மட்டுமல்லாது ஈரேழு உலகங்களிலும் பரவியது.

அதனாலேயே அவன் தேவலோகம் செல்லும்படி நேர்ந்தது!

0

தேவலோகத்தில் இந்திரனுக்கு ஓர் ஆபத்தான சூழல் உருவாகிக் கொண்டிருந்தது!

என்னவென்றால், பூலோகத்தில் அப்போது விசுவாமித்திரர் தவம் செய்து கொண்டிருந்தார். கடுமையான அவரது தவத்தினால் இந்திரனுடைய இந்திர பதவிக்கே ஆபத்து வந்து விடும் போல் தோன்றியது.

பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியுமா? விசுவாமித்திரனுடைய தவத்தை உடனடியாகக் கலைத்தே தீரவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தான் இந்திரன். அதொன்றும் கஷ்டமில்லை! தவத்தைக் கலைக்கத்தான் அட்டகாசமான உத்தி இருக்கிறதே! ஏற்கெனவே மேனகைக்கு மயங்கியவர்தானே முனிவர். இம்முறை ரம்பா, ஊர்வசி யாரையாவது அனுப்ப வேண்டியதுதான்!

சரி, இருவரில் யாரை அனுப்புவது? இதில்தான் சிக்கல் எழுந்தது!

ஆட்டத்தில் சிறந்தவள் எவளோ அந்தப் பேரழகியை விசுவாமித்திரரை மயக்க அனுப்பலாம் என்று எல்லோரும் சொல்ல, ‘பரதத்தில் நான் தான் சிறந்தவள்’ என்றாள் ரம்பா. ‘இல்லையில்லை நான் தான் சிறந்தவள்’ என்றாள் ஊர்வசி.

தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லோரும் அமர்ந்து, ரம்பா, ஊர்வசி இருவரையும் தனித் தனியே ஆடச் சொல்லியும், ஒருசேர ஆடவைத்துப் பார்த்தும்கூட நடனத்தில் யார் சிறந்தவள் என்று யாராலும் தீர்ப்பு சொல்ல முடியவில்லை.

அப்போதுதான் நாரதர் அந்த ஆலோசனையை அளித்தார். ‘இந்திரா இங்கிருக்கும் யாராலும் இதைக் கண்டு பிடிக்க முடியாது. பூலோகத்தில் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணம் என்கிற ராஜ்ஜியத்தை ஆளும் விக்கிரமாதித்தன் என்னும் மன்னவன் சகல சாஸ்திரங்களும் கற்ற விற்பன்னன். பரதக்கலையின் சகல சூட்சுமங்களும் அறிந்தவன். அவனை இங்கு அழைத்து வந்தால் ரம்பா, ஊர்வசி இருவரில் நடனக் கலையில் சிறந்தவர் யார் என்பதை அவன் கண்டுபிடித்துச் சொல்லி விடுவான்!’ என்றார்.

இந்திரன் உடனடியாகத் தனது தேரோட்டியான மாதலியைப் பூலோகம் அனுப்பி, விக்கிரமாதித்தனைத் தேவலோகத்துக்கு வரவழைத்தான்.

தேவ விமானத்தில் இந்திரலோகம் வந்திறங்கிய விக்கிரமாதித்தனைப் பூரண கும்ப மரியாதைகளுடன் வரவேற்ற இந்திரன் தனக்கு ஏற்பட்ட சிக்கலைப் பற்றி அவனிடம் விளக்கமாகச் சொல்லி, ’ரம்பா. ஊர்வசி இருவருள் யார் பரதத்தில் சிறந்தவர் என்று எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை விக்கிரமாதித்தரே! தாங்கள்தான் இதைக் கண்டுபிடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்!’ என்று கோரினான்.

அன்றே இந்திர சபையில், விக்கிரமாதித்தன் முன்னிலையில் முதலில் ரம்பையும், அடுத்து ஊர்வசியும் தனித் தனியே நடனமாடினர். இருவர் நடனத்தையும் பார்த்து ரசித்துப் பாராட்டிய விக்கிரமாதித்தன் மறுதினம் இருவரையும் ஒருசேர ஆடவைத்துப் பார்த்துத் தீர்ப்பளிப்பதாகக் கூறினான்.

அதற்கு முன் விக்கிரமாதித்தன் ஒரு சிறு முன்னேற்பாட்டைச் செய்துகொண்டான். யாருக்கும் தெரியாமல் நந்தவனத்துக்குச் சென்ற விக்கிரமாதித்தன் தேவலோகத்து மலர்களைப் பறித்து இரண்டு பூச்செண்டுகள் கட்டினான். பின் அந்தப் பூச்செண்டுகளுக்குள் சில வண்டுகளைப் பொதித்து வைத்தான்.

மறுநாள் இந்திர சபையில் ஏழு லோகத்துப் பிரஜைகளும் ஆர்வத்துடன் வந்து குவிந்து விட்டனர். நடனப் போட்டி தொடங்கும் நேரம் நெருங்கியது. ரம்பாவும், ஊர்வசியும் சபையின் மையத்துக்கு வந்து நடனமாடத் தயாரானார்கள். அப்போது அவர்களிடம் வந்த விக்கிரமாதித்தன் இருவருக்கும் ஆளுக்கொரு பூச்செண்டு அளித்து வாழ்த்தி அந்தப் பூச்செண்டுடனே அவர்களை நடனமாடும்படிக் கேட்டுக் கொண்டான்.

நடனம் தொடங்கியது. இருவரும் தங்கள் முழுத் திறமையையும் காட்டிச் சுழன்றாடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நடனம் வேகமெடுத்து உச்சக்கட்டத்துக்குச் சென்றது. ஒருவரையொருவர் வெல்ல வேண்டும் என்கிற நோக்கில் இருவரும் பம்பரமாகச் சுழன்றாடினார்கள். ஊர்வசியை வென்று விட வேண்டும் என்கிற ஆக்ரோஷத்தில் ரம்பா தன் கையிலிருந்த பூச்செண்டைச் சற்று இறுக்கிப் பிடித்து விட, பூச்செண்டிலிருந்த வண்டுகள் அவளது கையை பதம் பார்த்து விட்டன. வண்டுகள் கொட்டியதால் சுரீர் என்ற வலியில் ரம்பாவின் ஆட்டத்தில் சற்றே ஜதி விலகிப் போனது. ஆனாலும் யாருக்கும் தெரியாமல் சுதாரித்துக் கொண்டு ரம்பா தனது ஆட்டத்தைத் தொடர்ந்தாள். ஆனால் ஊர்வசியோ நடனத்தில் மிகுந்த லாகவமாகப் பூச்செண்டை மிருதுவாகப் பிடித்தபடியே ஆடியதால் கடைசிவரை வண்டுகள் கொட்டாமல் ஆடி முடித்தாள்.

பரதநாட்டியப் போட்டி முடிந்ததுமே தனது ஆசனத்திலிருந்து எழுந்த விக்கிரமாதித்தன் நடனத்தில் சிறந்தவள் ஊர்வசியே எனத் தீர்ப்பளித்தான்.

‘எப்படி? எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நீங்கள் எந்தவிதத்தில் இந்தத் தீர்ப்பைச் சொல்கிறீர்கள்?’ சபையோர் அனைவரும் ஒருமித்த குரலில் ஆச்சரியத்துடன் கேட்டனர். ஏனெனில் இருவரது ஆட்டத்திலும் அவர்களால் எந்தக் குறையும் காணமுடியவில்லை.

விக்கிரமாதித்தன் சபையோரிடம் காரணத்தை விவரிக்கத் தொடங்கினான். முதலில் தனது பூச்செண்டுகள் குறித்த ஏற்பாட்டைப் பற்றி விளக்கமாகச் சொல்லி விட்டு, இந்திரனிடம் திரும்பி, ‘தேவர் கோமானே! நடனத்தில் நளினம் முக்கியம். முகபாவம் முக்கியம். உணர்ச்சிவசப்படுதல் கூடவே கூடாது. இது அனைத்திலும் ரம்பா தவறி விட்டாள். ஊர்வசியை வெல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி வேகத்தில் நளினமாகப் பற்றிக் கொள்ள வேண்டிய பூச்செண்டை அவள் அழுத்தமாகப் பிடிக்க அதனால் அவளை வண்டுகள் கொட்டியது. அதன் காரணமாக அவளது நடனத்தில் ஜதி தவறிப் போனது. வண்டுகள் துளைத்த வலியின் வேதனையால் நொடி நேரம் அவளது முகபாவமும் மாறிப் போனது. அதனால் ஊர்வசியே ஜெயித்தாள்.’ என்று அறிவித்தான்.

‘ஆஹா! அற்புதம்! மிக அற்புதம்!’ எல்லோரும் வியப்புடன் விக்கிரமாதித்தனைப் புகழ்ந்தார்கள். இத்தனை காலம் யாராலும் தீர்மானிக்க முடியாமல் இருந்ததை விக்கிரமாதித்தன் தெள்ளத் தெளிவாக்கி விட்டான்.

இந்திரன் மிகவும் மகிழ்ந்து போனான். விக்கிரமாதித்தனுக்கு அளவில்லா பரிசுகளை அள்ளிக் கொடுத்த தேவேந்திரன் அதனுடன் விலைமதிப்பில்லாத நவரத்தினச் சிம்மாசனம் ஒன்றையும் பரிசளித்தான்.

அந்த அதிசயச் சிம்மாசனம் முப்பத்திரண்டு படிகள் கொண்டதாக, படிக்கொரு பதுமைகள் அமைந்ததாகப் பொன்னால் செய்யப்பட்டு, வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்டு, நவரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தகதகத்தது. ‘விக்கிரமாதித்தா! இந்தச் சிம்மாசனம் சிவபெருமான் எனக்குத் தந்தது. அன்பின் மிகுதியால் இதை நான் உனக்குத் தருகிறேன். ஆயிரம் ஆண்டுகள் நீ இந்த அதிசயச் சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆட்சி புரிவாயாக!’ என்று வாழ்த்தி வரமளித்தான்.

விக்கிரமாதித்தன் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு சகல பரிசுப் பொருள்களுடனும், சிம்மாசனத்துடனும் தேவ விமானத்தில், தனது உஜ்ஜயினி மாகாளி பட்டணம் திரும்பினான்.

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *