Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் வஜ்ரகவசன். பயமறியா இளங்கன்று. அழகில் மன்மதன். கலா ரசிகன்.

இந்த வஜ்ரகவசனின் ஆருயிர் நண்பன் விசாகன். அந்நாட்டு மந்திரியின் மகன். நண்பர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த பிரியம் கொண்டிருந்தார்கள். எங்கும் எப்போதும் இணை பிரியாமல் சுற்றி வந்தார்கள்.

ஒருநாள் இருவரும் வேட்டையாடலாம் என்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ஆசை தீரும் வரை மிருகங்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடினார்கள். பின் களைத்துப் போய் தாகம் தீர்த்துக் கொள்ள நீர்நிலை தேடி அலைந்தார்கள். சற்று தூரத்திலேயே அவர்கள் ஒரு பெரும் அருவித் தடாகத்தைக் கண்டார்கள். அதை நெருங்கியவர்கள் திகைத்துப் போனார்கள்.

அங்கே, தடாகத்தில் பூத்திருந்த அழகழகான தாமரைப் பூக்களுக்கு மத்தியில் கலகலவென்று சிரிப்பொலியுடன் அநேகம் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். அந்த அழகுப் பெண்களுக்கு மத்தியில் ஈடு இணையற்ற அழகுப் பெட்டகமாக அந்தப் பெண்களின் தலைவி போல் ஒருத்தி தனியே ஜொலித்தாள்.

அவளைப் பார்த்த கணம் இளவரசனான வஜ்ரகவசன் திகைத்துப் போனான். அபாரமான அவளது அழகுக்கு அடிமையாகிப் போனான். தேவலோகப் பெண்களுக்கே சவால் விடுவது போன்ற அவளது வனப்பில் மெய்மறந்து நின்றான்.

அந்தப் பெண்ணும் வஜ்ரகவசனைப் பார்த்தாள். வஜ்ரகவசன் தனது அழகில் மலைத்து நிற்பதைக் கண்டு வெட்கப்பட்டு, மயங்கி நின்றாள். முதல் பார்வையிலேயே அவளுக்கும் வஜ்ரகவசனை மிகவும் பிடித்துப் போனது. அவனைத் தனது இதயத்திலே வைத்துப் பூட்டிக்கொண்டாள்.

அந்தப் பெண்ணின் பெயர் ரத்னாவதி. அவள் வஜ்ரகவசனுக்கு தன்னைப் பற்றிய தகவலைத் தெரிவிக்க நினைத்தாள். குறிப்பால் உணர்த்த முயன்றாள். நீரில் பூத்திருந்த ஒரு தாமரை மலரைப் பறித்து தனது காதில் வைத்துக் காண்பித்தாள். பின் அந்தத் தாமரையைக் காதில் அணிந்துகொள்வதுபோல பாவனை காட்டி, காதணியான தந்தபத்திரம் என்னும் அணிகலனைப் போல அதைச் சுருட்டிக் காண்பித்தாள். பின் தனது கழுத்தில் அணிந்திருந்த ரத்னஹாரத்தைத் தொட்டுக் காண்பித்தாள். அடுத்து தனது மற்றொரு கையை அவளது இதயத்தில் வைத்து வஜ்ரகவசனைப் பார்த்துச் சிரித்து வெட்கத்துடன் தலை குனிந்தாள். இந்தத் தனது குறிப்புச் செயல்களை அந்தப் பெண் விளையாட்டுப் போலச் செய்ததால் அவளது தோழிகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வஜ்ரகவசனின் பக்கத்திலிருந்து விசாகன் அனைத்தையும் கவனித்துப் பதிய வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் நீராடி முடித்த அந்தப் பெண் தனது தோழிகளுடன் வஜ்ரகவசனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே புறப்பட்டுச் சென்றாள். வஜ்ரகவசனோ அவள் செல்வதைப் பார்த்தபடியே தவிப்புடன் நின்றான்.

இயலாமையுடன் தனது நண்பன் மந்திரிகுமாரனிடம் புலம்பினான். ‘தோழா, விசாகா! எனது இதயம் அவளுடனேயே சென்று விட்டது. ஆனால் அவள் யாரென்றோ, எங்கிருக்கிறாள் என்றோ ஒன்றும் தெரியவில்லை. அவளில்லாமல் இனி என்னால் ஜீவிக்கவே முடியாது. ஆனால் இனி நான் அவளை மீண்டும் எப்படிக் காண்பேன்?’ என்று புலம்பினான்.

விசாகன் திகைத்துப் போனான். ‘என்ன இப்படிச் சொல்கிறாய் வஜ்ரகவசா! அந்தப் பெண் தன்னைப் பற்றிய தகவல்களைக் குறிப்பால் உணர்த்தினாளே, நீ அதைக் கவனிக்கவில்லையா?’ என்று கேட்டான்.

‘அப்படியா? இல்லையே! ஏதொன்றையும் நான் கவனிக்கவில்லையே! அடடா! அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லையே! நான் அவள் அழகிலேயே மதிமயங்கி இருந்துவிட்டேன் நண்பா! அவள் சொன்னது உனக்கு ஏதும் புரிந்ததா?’ என்றான்.

‘ஆம்! வஜ்ரகவசா! அவள் சொன்ன குறிப்புகளிலிருந்து எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன் கேள். அவள் தாமரைப் பூ ஒன்றைத் தன் காதில் வைத்துக் காண்பித்ததால், ‘தான் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள்’ என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதில் அணிந்து கொள்வது போலச் செய்து, தந்தபத்திரம் என்னும் காதணியைப் போலச் சுருட்டிக் காண்பித்ததால், ‘அந்நாட்டில் உள்ள தந்தச் சிற்பி ஒருவனின் மகளாக அவள் இருக்க வேண்டும். அடுத்தும் அவள் தனது கழுத்தில் அணிந்திருந்த ரத்னஹாரத்தைத் தொட்டுக் காண்பித்ததால் ரத்னாவதி அல்லது ரத்னகுணவதி என்பது அவளது பெயராக இருக்கலாம். கடைசியாகத் தனது கையை மார்பின் மீது வைத்துக் கொண்டு அவள் உன்னை வெட்கப்பார்வையுடன் நோக்கித் தலை குனிந்ததால் காதல் வயப்பட்டு அவளது இதயத்தை உனக்கே தந்துவிட்டாள் என்று அர்த்தமாகிறது!’ என்று விளக்கம் சொன்னான்.

வஜ்ரகவசன் ஆனந்தத்தில் விசாகனைக் கட்டித் தழுவி அவனது புத்திக்கூர்மையைப் பாராட்டினான். ‘என் வயிற்றில் பால் வார்த்தாயடா நண்பா! உன்னை நண்பனாகப் பெற்றது என் பாக்கியம்!’ என்றவன், ‘நண்பா விசாகா! நான் உடனே அவளைச் சந்தித்துப் பேச வேண்டும்! நீதான் அதற்கு வழி காட்டவேண்டும்!’ என்று வேண்டினான்.

‘வஜ்ரகவசா! கலங்காதே! கர்ணோத்பலன் என்னும் மன்னன் ஒருவன் கலிங்க நாட்டை ஆண்டு வருவதை நான் அறிவேன். அந்நாட்டின் சிறந்த தந்த சிற்பிகளுள் ஒருவர் ஸ்ரீராமவர்த்தனன் என்பவர். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்றும், அவள் மிகுந்த பேரழகி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அநேகமாக இந்த ரத்னாவதி அவரது மகளாகத்தான் இருக்க வேண்டும்!’ மந்திரி குமாரன் இப்படிச் சொன்னதுமே ராஜகுமாரன் பொறுமையிழந்து துடிக்கத் தொடங்கிவிட்டான்.

‘நண்பா! அப்படியானால் ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? எனக்கு அவளை உடனே பார்த்தாக வேண்டும். இப்போதே புறப்படுவோம் வா!’

இருவரும் கலிங்க நாட்டை நோக்கிக் குதிரையை விரட்டினார்கள்.

0

மன்னன் கர்ணோத்பலன் ஆண்ட கலிங்க நாட்டை அடைந்த வஜ்ரகவசனும், விசாகனும் மிகச் சுலபமாகவே தந்த சிற்பி ஸ்ரீராமவர்த்தனன் இல்லத்தைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் நேரடியாகச் சிற்பியின் இல்லத்துக்குள் சென்று ரத்னாவதியைப் பார்த்து விட முடியுமா என்ன? சமய சந்தர்ப்பம் பார்த்துத்தானே அவளைச் சந்திக்க வேண்டும். அதற்குத் தகுந்தபடி அக்கம் பக்கத்தில் தங்க இடம் தேடினார்கள்.

சிற்பியின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வயதான மூதாட்டி ஒருத்தி தனியே வசித்திருந்தாள். வஜ்ரகவசனும், விசாகனும் அவளைச் சிநேகம் பிடித்துக்கொண்டு அவளுக்கு நிறையப் பொன்னையும், பொருளையும் கொடுத்து வசப்படுத்திக் கொண்டு அவளது வீட்டிலேயே தங்கினார்கள்.

ஒருநாள் சமயம் பார்த்து மந்திரி குமாரன் மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான். ‘அம்மா, இவ்வூரில் சிற்பி ஸ்ரீராமவர்த்தனன் என்பவர் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?’

‘என்ன தம்பி இப்படிக் கேட்டு விட்டாய்! நான் அவரது வீட்டில்தான் வேலை பார்க்கிறேன். தாயில்லாத அவரது மகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே செவிலித் தாயாக இருந்து வளர்த்தது நான்தானே!’

‘ஆஹா! தாயே! பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல ஆயிற்று! அம்மா! எங்களுக்காக தாங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். சிற்பியின் மகள் ரத்னாவதியிடம் சென்று, ‘நீ அருவித் தடாகத்தில் பார்த்த இளவரசன் உன்னைத் தேடி வந்திருக்கிறான். அவன் உன்னைத் தனிமையில் சந்தித்துப் பேச ஆவலாக உள்ளான்.’ என்று தகவல் சொல்லி அவளது பதிலைக் கேட்டு வரவேண்டும்!’ என்று கெஞ்சிக் கேட்டான்.

ஏற்கெனவே அவர்கள் தந்த பொன் பொருளில் மயங்கிய மூதாட்டி, மறுமொழி பேசாமல் கிளம்பிப் போனாள். போனவள் சிறிது நேரத்தில் அழுது அரற்றியபடி வீடு வந்து சேர்ந்தாள்.

‘அம்மா, ஏன் அழுகிறீர்கள்? என்ன நடந்தது?’ பதறிப் போய் கேட்டான் ராஜகுமாரன் வஜ்ரகவசன்.

‘என்ன சொல்வது தம்பி? அவளிடம் போய் நீங்கள் சொன்னதை அப்படியே சொன்னேன். முதலில் எல்லாவற்றையும் சிரித்தபடியே கேட்டுக் கொண்டவள், ‘தனிமையில் எப்போது சந்திக்கலாம்? என்று இளவரசன் கேட்டு வரச் சொன்னார்’ என்றதுமே, மிகுந்த கோபத்துடன், என்னைத் திட்டித் தீர்த்ததுடன், கற்பூரக் கரைசலில் அவளது இரண்டு கைகளையும் முக்கியெடுத்து எனது இரண்டு கன்னங்களிலும் அடித்து விட்டாள். இதோ பாருங்கள்!’ என்று காட்டினாள்.

ஆம்! மூதாட்டியின் இரண்டு கன்னங்களிலும் பத்து விரல்களின் அடையாளம் பளிச்சென்று அச்சாகப் பதிந்திருந்தது.

இதைப் பார்த்ததுமே அரசகுமாரன் வஜ்ரகவசன் முகம் வாடிப் போனது.

உடனே மந்திரி குமாரன் அவனிடம், ‘நண்பா! கலக்கம் கொள்ளாதே! அவள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. நீ அவளை எப்போது சந்திக்கலாம் என்பதைத்தான் இப்படிப் பூடகமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாள்! இப்போது பௌர்ணமி காலம் என்பதால் நிலா வெளிச்சம் பூரணமாக ஜொலிக்கும் இந்தப் பத்துநாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கலாம் என்பதைத்தான் கிழவியின் கன்னங்களில் கற்பூரம் தொட்டு அடித்து உணர்த்தியிருக்கிறாள்!’ என்றான்.

அது போலவே பத்து நாட்களுக்குப் பிறகு ரத்னாவதி, மூதாட்டியிடம் தனது வீட்டின் நந்தவனத்துக்கு ராஜகுமாரனை நள்ளிரவில் வரும்படி பூடகமாகச் சொல்லியனுப்பினாள். அதை மந்திரி குமாரன் புரிந்து ராஜகுமாரனிடம் சொல்ல, அதன்படியே வஜ்ரகவசன், இரவில் நந்தவனத்தில் ரத்னாவதியைச் சந்தித்தான்.

காதலர்கள் இருவரும் நேரம் போவதே தெரியாமல் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார்கள். கட்டித் தழுவி முத்தமழை பொழிந்தார்கள். இறுதியில் காந்தர்வ விவாகம் புரிந்து கலவியில் மூழ்கித் திளைத்தார்கள்.

விடியும் நேரம்… வஜ்ரகவசன் புறப்படத் தயாரானபோது, ரத்னாவதி அவனிடம், ‘அன்பரே நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். அன்று அருவிக்கரை தடாகத்தில் நான் தெரிவித்த சங்கேதக் குறிப்புகளை தாங்களே புரிந்து கொண்டீர்களா அல்லது தங்களது நண்பர் விளக்கினாரா?’ என்று கேட்டாள்.

‘அதையேன் கேட்கிறாய் தேவி? நீ சொன்ன சங்கேதக் குறிப்புகளின் பொருள் எதுவும் எனக்கு விளங்கவேயில்லை. எனது நண்பன் மந்திரி குமாரன் விசாகன் தான் எனக்கு அவைகளின் பொருளை விளக்கினான்!’ என்று உண்மையைத் தெரிவித்தான்.

‘நல்லவேளை இப்போதாவது சொன்னீர்களே! கடைசியில் அவரால்தானே உங்களை நான் அடைய முடிந்தது. அதனால் அவர் என் சகோதரர் ஆவார். நான் அவருக்கு மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இருங்கள், தங்கள் தோழருக்கு என் அன்பின் காணிக்கையாகக் கொஞ்சம் பலகாரங்கள் தருகிறேன். அவரிடம் தந்து சாப்பிடச் சொல்லுங்கள். அவருக்குக் கொடுத்து விட்டு உடனே இங்கே வந்து விடுங்கள். எனது தாய் தந்தையர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் எந்தப் பயமுமில்லாமல் இங்கே நாமிருவரும் சேர்ந்து சாப்பிடுவோம்!’ என்றாள்.

வஜ்ரகவசனும் ரத்னாவதி தந்த பலகாரங்களை எடுத்துப் போய் விசாகனிடம் கொடுத்து விட்டு, நடந்த விஷயங்களைத் தெரிவித்தான்.

எல்லாவற்றையும் கேட்ட விசாகன், ‘நண்பா ராஜகுமாரா! நீ பெரும் தவற்றைச் செய்து விட்டாய். ரத்னாவதியின் குறிப்புகளுக்கான விளக்கத்தை நான்தான் உனக்குச் சொன்னேன் என்பதை நீ அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது. அந்த விஷயத்தை நீ மறைத்திருக்க வேண்டும்!’ என்று கூறினான்.

‘அதனால் என்ன? அவளொன்றும் தவறாக நினைக்கவில்லை. அதனால்தானே உன்னைச் சகோதரன் என்று ஏற்றுக் கொண்டாள். போகட்டும், உன் சகோதரி கொடுத்தனுப்பிய பலகாரத்தை நீ சாப்பிடு. என்னை உடனே வரச் சொன்னாள்; நான் அவளுடன் உணவருந்தச் செல்கிறேன்!’ என்று சொல்லிப் புறப்பட்டான்.

‘சற்றுப் பொறு நண்பா! இதைக் கவனித்து விட்டுச் செல்!’ என்ற விசாகன், ரத்னாவதி தனக்குக் கொடுத்து அனுப்பிய பலகாரங்களிலிருந்து கொஞ்சத்தை எடுத்து அருகிலிருந்து நாய்க்குப் போட்டான். அதைச் சாப்பிட்ட நாய் உடனே சுருண்டு விழுந்து செத்துப் போனது.

வஜ்ரகவசன் அதிர்ந்து போனான். ஆத்திரம் கொண்டான்.

‘அட! நாசகாரி! இத்தனை கொடியவளா அந்த ரத்னாவதி? அவள் எதனால் இப்படிச் செய்தாள்? எனது உயிர் நண்பனையே கொல்லப் பார்த்தாளே! அவளை என்ன செய்கிறேன் பார்!’ என்று கொதித்தான்.

‘பொறுமை நண்பா, கோபப்படாதே! உன் உயிர் நண்பன் என்பதால்தான் அவள் என்னைக் கொல்ல நினைத்தாள். அவளது குறிப்புகளைப் புரிந்து கொண்டதால் எனது புத்திசாலித்தனத்தை உணர்ந்து கொண்ட ரத்னாவதி, அதனாலேயே பயந்துபோய், எங்கே அவளிடமிருந்து நான் உன்னைப் பிரித்து விடுவேனோ என்ற சந்தேகத்தில் இதைச் செய்திருக்கிறாள். உன் மீது கொண்ட அவளது அபரிமிதமான காதல்தான் இதற்குக் காரணம்! அதனால் பாவம் அவளை வெறுத்து விடாதே. அவளுக்கு ஒரு சிறு பாடத்தை நான் கற்பிக்கிறேன்! அதற்கு நீ உதவி செய்தால் போதும்!’ என்றான்.

‘என்ன செய்யவேண்டும் சொல். செய்கிறேன்!’ வஜ்ரகவசன் சொல்ல, இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நகரத்தின் வீதிகளில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டது.

இருவரும் வெளியே வந்து பார்க்க, மக்கள் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

‘நமது ராஜாவின் குழந்தை இறந்து போயிற்றாம்’ என்று எல்லோரும் பதற்றத்துடன் பேசிக் கொண்டார்கள்.

விசாகன் துள்ளினான். ‘ஆஹா! ரத்னாவதிக்குப் பாடம் புகட்ட வழி கிடைத்து விட்டது. நண்பா, வஜ்ரகவசா! நான் சொல்லும்படி செய்தால் ரத்னாவதியை அவள் சொந்தபந்தங்களிடமிருந்து பிரித்து ஒரேயடியாக நாம் அழைத்துச் சென்று விடலாம். செய்வாயா?’ என்று கேட்டான்.

‘இதென்ன கேள்வி. சொல், அப்படியே செய்து முடிக்கிறேன்!’ என்றான் வஜ்ரகவசன்.

‘நண்பா ராஜகுமாரா, நீ இப்பொழுதே புறப்பட்டு ரத்னாவதியிடம் செல். அவளுடன் அன்பாகப் பேசிச் சல்லாபித்துச் சந்தோஷமாக இருந்துவிட்டு, மெல்ல மெல்ல அவளுக்கு மதுவைப் புகட்டி விடு. மது மயக்கத்தில் அவள் நினைவிழந்து கிடக்கும்போது அவளது இடுப்பில் உனது நகங்களால் திரிசூலம் போலக் கீறல் போட்டு அடையாளம் ஏற்படுத்தி விட்டு அவளது நகைகளில் விலையுயர்ந்த நகை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துவிடு. பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று சொல்லியனுப்பினான்.

வஜ்ரகவசன் அதுபோலவே செய்து முடித்து, ரத்னாவதியின் நகைகளில் விலை உயர்ந்ததான முத்துமாலையை எடுத்துக் கொண்டு வந்து மந்திரிகுமாரனிடம் கொடுத்தான்.

0

அடுத்தநாள் காலையில் மந்திரி குமாரன் ஒரு சந்நியாசிபோல வேடமிட்டுக் கொண்டு அவ்வூர் மயானத்துக்குச் சென்று அமர்ந்து கொண்டான். ராஜகுமாரன் சந்நியாசியின் சீடன் போல வேடம் பூண்டிருந்தான்.

மந்திரிகுமாரன், வஜ்ரகவசனிடம் ரத்னாவதியின் முத்துமாலையைக் கொடுத்து, ‘நண்பா, இந்த முத்துமாலையைக் கடைத் தெருவுக்குக் கொண்டு சென்று எல்லோரும் பார்க்கும்படியாகக் காண்பித்து விலை பேசு. நகையை வாங்க வருபவர்களிடம் வேண்டுமென்றே மிக அதிகமாக விலை கூறு. இதனால் கடைத் தெருவில் சலசலப்பு ஏற்படும். அரசாங்கக் காவலர்கள் உன்னை வந்து விசாரிப்பார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. இதை என் குருநாதர்தான் கொடுத்தனுப்பினார் என்று சொல்லி விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று சொல்லியனுப்பினான்.

வஜ்ரகவசன், மந்திரி குமாரன் சொன்னபடியே செய்தான். அவன் முத்துமாலைக்கு மிக மிக அதிகமாக விலை கூறியதும் காவலர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டு சென்று நகரக் காவல் தலைவன் முன் நிறுத்தினர்.

காவல் தலைவன் முத்துமாலையை வாங்கிப் பார்த்தான். இது தந்த சிற்பி ஸ்ரீராமவர்த்தனன் வீட்டு முத்துமாலைதான் என்பது அவனுக்கு ஊர்ஜிதமாகத் தெரிந்தது. அந்த முத்துமாலை காணாமல் போய் விட்டதாக முன்னதாகவே அவனுக்குப் புகார் வந்திருந்தது.

காவல் தலைவன் தன் முன் நின்றிருந்த வஜ்ரகவசனிடம் ‘சந்நியாசியே பொய் சொல்லாமல் சொல். உனக்கு ஏது இந்த முத்துமாலை?’ என்று கேட்டார்.

‘ஐயா, எனது குருநாதர்தான் இந்த முத்துமாலையை என்னிடம் தந்து விற்று வரச் சொன்னார். அவர் இப்போது இவ்வூர் மயானத்தில்தான் இருக்கிறார். நீங்கள் எதைக் கேட்க வேண்டுமானாலும் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்!’ என்றான்.

நகரக் காவல் தலைவன் வீரர்கள் சிலருடன் புறப்பட்டு, வஜ்ரகவசனுடன் மயானத்துக்கு வந்தான்.

அங்கே சந்நியாசி வேடத்திலிருந்த மந்திரி குமாரனிடம் முத்துமாலையைப் பற்றி விசாரித்தான்.

அப்போது சந்நியாசிக் கோலத்திலிருந்த மந்திரி குமாரன் அவனிடம், ‘காவல் தலைவரே நேற்று நள்ளிரவில் நான் மயானப் பூஜைக்காக இங்கே வந்தபோது சில மோகினிப் பிசாசுகள் இருப்பதைக் கண்டேன். அதிலொரு மோகினி தனது மடியில் இவ்வூர் அரசனின் மகனைக் கிடத்திக்கொண்டு, அவளது கூரிய நகங்களால் அந்தப் பாலகனுடைய நெஞ்சைக் கிழித்து அவனது இதய மலரை எடுத்து காலபைரவனுக்குச் சமர்ப்பித்துப் பூஜித்துக் கொண்டிருந்தாள்.

அதை நான் பார்த்துவிட்டதால் தனது கூட்டத்தாருடன் வந்து எனக்கும் தொல்லை கொடுக்க முனைந்தாள். உடனே நான் கோபத்துடன், எனது திரிசூலத்தால் அவளது இடைப் பகுதியில் சூடு வைத்துத் துரத்தி விட்டேன். அப்போது அந்த மோகினியின் கழுத்திலிருந்து அறுந்து விழுந்த முத்துமாலைதான் இது! சந்நியாசியான நான் இந்த ஆபரணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? அதனால்தான் எனது சீடனிடம் கொடுத்து விற்று வரும்படிச் சொன்னேன்! ’ என்றார்.

இதைக் கேட்ட காவலர் தலைவன் பதறிப் போனான். திகிலில் ஆழ்ந்தான்.

இந்த முத்துமாலைக்குச் சொந்தக்காரி ரத்னாவதி. அப்படியானால் அவள் மோகினிப் பிசாசா? அவள்தான் மன்னனின் மகளைக் கொன்றாளா?

அடுத்த நொடி காவல் தலைவன் அரண்மனைக்குப் பறந்தோடிப் போய் மன்னனிடம் நடந்தது அனைத்தையும் கூறினான்.

மன்னனும் அதிர்ந்து போனான். சந்நியாசி சொன்னது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ரத்னாவதியை அழைத்து வரச் சொல்லி, பணிப்பெண்களை விட்டு அவளைச் சோதிக்கச் சொன்னான்.

பணிப்பெண்கள் பரிசோதித்து விட்டு சந்நியாசி சொன்னதுபோலவே ரத்னாவதியின் இடுப்பில் அவர் சூடு போட்ட திரிசூலக் குறி இருக்கிறது என்று கூற, ரத்னாவதி மோகினிப் பிசாசுகளில் ஒருத்தி என்கிற முடிவுக்கு வந்தான் அரசன்.

அவள்தான் தனது மகனைக் கொன்றவள் என்பதால் அவளுக்கு என்ன தண்டனை விதிப்பது என்று ஆலோசித்தபோது, போலி சந்நியாசியான மந்திரி குமாரன் சபைக்கு வந்து மன்னனிடம் கூறினான்.

‘அரசே, இந்தப் பெண் பூர்வ ஜென்ம சாபத்தால் மோகினிப் பிசாசு ஆனவள். இவளைக் கொன்று நீ பெரும் பழிக்கு ஆளாகி விடாதே. இப்பெண்ணை உனது நாட்டை விட்டுத் துரத்தி விடு. அது போதும்!’ என்று சொல்ல மன்னனும் அது போலவே ரத்னாவதியை நாடு கடத்த உத்தரவிட்டான். ரத்னாவதியின் பெற்றோர்கள் அழுது கதறி முறையிட்டும், அவன் மனம் இரங்கவில்லை.

காவலர்கள் ரத்னாவதியைக் கட்டிய புடவையுடன் இழுத்துச் சென்று நடுக்காட்டில் விட்டு விட்டு ஊர் திரும்பினார்கள்.

அடர்ந்த காட்டில் தன்னந்தனியே நிர்க்கதியாக விடப்பட்ட ரத்னாவதிக்கு இது அத்தனையும் மந்திரிகுமாரன் சூழ்ச்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தாலும், வேறு போக்கிடம் இல்லாததால் எதிர்காலத்தை நினைத்துப் பயந்து கண்ணீர் விட்டாள்.

அப்போது அங்கு வந்த வஜ்ரகுமாரனும், விசாகனும் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். ரத்னாவதிக்குச் சிறு பாடம் கற்பித்து அரசகுமாரனுடன் ஒன்று சேர்ப்பதற்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகச் சொல்லி ரத்னாவதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் விசாகன்.

பின் வஜ்ரகவசன் ரத்னாவதியைத் தனது ராஜ்ஜியத்துக்கு அழைத்துப் போய் அவளை மணந்து கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தான்.

ஆனால், இது எதுவும் தெரியாமல் காட்டில் ரத்னாவதியை தேடித் திரிந்த அவளது பெற்றோர்கள் காட்டு மிருகங்கள் அவளைக் கொன்று தின்று விட்டதாக முடிவெடுத்துக் கலங்கிப் போனார்கள். அந்த வருத்தத்திலேயே தந்த சிற்பி மனம் உடைந்து இறந்து போனார். கணவன் இறந்த துயரத்திலேயே மனைவியும் அடுத்த சில நாட்களில் மாண்டு போனாள்’ என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், கேள்வி கேட்டது.

‘இந்தக் கதையில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உண்டு. அதை நீர்தான் தீர்த்து வைக்க வேண்டும். ரத்னாவதியின் பெற்றோர்கள் இறந்த தோஷமானது யாரைச் சேரும்? வஜ்ரகவசனையா? விசாகனையா? ரத்னாவதியையா? பதில் சொல்! விடை தெரிந்தும் நீ சொல்லாவிட்டால் உனது தலை வெடித்துச் சிதறி விடும்!’ என்றது.

விக்கிரமாதித்தன் மெல்லச் சிரித்தபடி, ‘பெரும் சாமர்த்தியசாலியான வேதாளமே சொல்கிறேன் கேள்! ரத்னாவதியின் பெற்றோர்கள் இறந்த பாவமானது நீ சொன்ன மூவரையுமே சேராது. அந்தப் பாவம் கர்ணோத்பல மன்னனையே சேரும்.’ என்றான்.

‘உன் பதில் விசித்திரமாயிருக்கிறது! நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் இந்த மூவர்தான். அதனால்தானே அந்த முதியோர்கள் மனம் உடைந்து மாண்டு போனார்கள்? பாவம்! இதில் அரசன் என்ன செய்தான்?’

‘சொல்கிறேன் கேள் வேதாளமே! மந்திரிகுமாரன் தனது நண்பனும் எஜமானனுமான அரசகுமாரனுடன் ரத்னாவதியைச் சேர்த்து வைப்பதற்காகத்தான் அனைத்தையும் செய்தான். அது அவனது கடமையும்கூட! அதேபோல ராஜகுமாரனும் ரத்னாவதியும் ஆழ்ந்த காதல் மோகத்தின் காரணமாகவே இப்படி நடந்து கொண்டார்கள். அவர்களைப் பொருத்தவரை வாழ்க்கையில் தாங்கள் ஒன்று சேர்வதற்காகவே செய்த எதுவும் பாவமில்லை.

ஆனால் ஒரு நாட்டின் மன்னன் என்பவன் எது ஒன்றையும் தீர விசாரிக்காமல் செயல்படக்கூடாது. அதைக் கர்ணோத்பல மன்னன் மறந்துவிட்டான். அவன் தனது ராஜதர்மத்தைக் கைவிட்டு ஆழ்ந்து யோசிக்காமலும் தீர விசாரிக்காமலும் தவறான முடிவுக்கு வந்து அநியாயமாகத் தீர்ப்பளித்து விட்டான். அதனாலேயே ரத்னாவதியின் பெற்றோர் உயிர் இழக்க நேர்ந்தது. எனவே அந்தப் பழி பாவம் முழுவதும் மன்னனையே சேரும்!’ என்றான்.

விக்கிரமாதித்தனுடைய இந்தச் சரியான பதிலாலும், அவனது மௌனம் கலைந்து போனதாலும் அவனுடைய தோளில் இருந்த வேதாளம் புறப்பட்டு மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்று ஏறிக் கொண்டது.

விக்கிரமாதித்தனும் விடாமுயற்சியுடன் மீண்டும் முருங்கை மரத்துக்குச் சென்று தலைகீழாகத் தொங்கிய வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

பாதிதூரம் கடந்ததும் ‘கேள், விக்கிரமாதித்தா…’ என்று வேதாளம் மீண்டும் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *