Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். பெயர் பிரபாவதி. மிகச் சிறந்த அழகி.

பாசத்துக்குரிய தனது மகளின் மேல் உயிரையே வைத்திருந்த விஷ்ணுசர்மா, பிரபாவதி பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் செய்துவைப்பதற்காகப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடத் தொடங்கினார்.

உற்றார், உறவினர் அறிந்தோர் தெரிந்தோர் அனைவரிடமும் சொல்லி வைத்திருந்து அநேக வரன்கள் வந்ததில், ராஜகுப்தம் என்னும் ஊரிலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களை விஷ்ணுசர்மாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மூவருமே நன்கு படித்த அறிவாளிகள். நற்குணம் கொண்டவர்கள். மிகுந்த திறமைசாலிகள். ஒவ்வொருவருமே பிரபாவதிக்கு மிகவும் பொருத்தமானவர்கள்தான். சரி, இவர்களில் யாரை பிரபாவதிக்குக் கணவனாகத் தேர்ந்தெடுப்பது?

விஷ்ணுசர்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பிரபாவதியின் அழகில் மனம் பறி கொடுத்திருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தான் பிரபாவதியை திருமணம் செய்து தரவேண்டுமென்று விஷ்ணுசர்மாவை வற்புறுத்தினார்கள். அவளில்லாமல் தங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று கெஞ்சினார்கள். அதற்கும் மேலாக பிரபாவதியைத் தனக்குத் திருமணம் செய்து தராமல் வேறு யாருக்காவது மணம் செய்துதந்தால் அந்த நிமிடமே தனது உயிரை விட்டுவிடுவதாகத் தற்கொலை மிரட்டலும் செய்தனர்.

விஷ்ணுசர்மா அதிர்ந்து போனார். அவருக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. யோசித்து பதில் சொல்லச் சில காலம் அவகாசம் அளிக்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுசர்மாவின் முடிவு தெரியாமல் அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தீர்மானித்து இளைஞர்கள் மூவரும் அங்கேயே தங்கி விட்டனர்.

நாட்கள் ஓடின. இளைஞர்களில் எவன் ஒருவனுக்குச் சாதகமாக முடிவெடுத்தாலும் மற்ற இருவர் உயிர் துறந்து விடுவார்களோ என்கிற பயத்தில் விஷ்ணுசர்மாவும் நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.

இளைஞர்களோ தினமும் பிரபாவதியைக் காண்பதும், அவளது அழகை ரசித்து மகிழ்வதுமே தங்களது பாக்கியமாகக் கருதி நாட்களை இனிமையாக நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரும் துக்கம் நிகழ்ந்தது.

ஒருநாள் சாதாரண ஜுரத்தில் பாதிக்கப்பட்ட பிரபாவதி போகப் போக ஜுரவேகம் அதிகமாகிப் பின் முற்றிலும் சுயநினைவு இழந்து மூன்றாம் நாள் இறந்தே போனாள்.

பிரபாவதியை நேசித்த மூன்று இளைஞர்களும் இடிந்து மனம் உடைந்து நொறுங்கிப் போனார்கள்.

மூவரில் ஒருவன் பிரபாவதியைத் தகனம் செய்த மயானத்திலேயே ஒரு குடிசை போட்டுத் தங்கி, பிச்சையெடுத்து சாப்பிட்டுக்கொண்டு அவளது சாம்பலின் மீதே படுத்துறங்கி, காலம் கழிக்கத் தொடங்கினான்.

மற்றொருவன், பிரபாவதியின் அஸ்திகளை எடுத்துக்கொண்டு கங்கையில் சேர்ப்பிப்பதற்காகக் காசிக்குப் புறப்பட்டுப் போனான்.

இன்னொருவனோ மனம் வெறுத்து சந்நியாசியாகி தேசாந்திரம் போனான்.

அப்படி தேசாந்திரம் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று சந்நியாசி ஒருநாள் சந்திரபிரஸ்தம் என்னும் ஊரை அடைந்தான். அவ்வூரின் அந்தணர் ஒருவர் இவனைக் கண்டு சந்நியாசியைத் தனது வீட்டுக்கு உணவருந்த அழைத்துச் சென்றார்.

அந்தணரின் மனைவியும் துறவியை வரவேற்று வேண்டிய உபசரணைகள் செய்து, சாப்பிடுவதற்காக மனையில் அமர்த்தினாள். பின் அவர் முன் பெரும் வாழையிலையிட்டு சாதம், கறிகாய்கள், பழங்கள் வைத்துப் பரிமாறி, தேவையானதைக் கேட்டுக் கேட்டு உபசரித்தாள்.

அப்போது அவளின் குழந்தை அழுது அடம் பிடித்து விடாமல் கத்திக் கதறியது. எவ்வளவோ சமாதானம் செய்தும் அடங்காமல் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அந்தப் பெண்மணி கோபத்துடன் குழந்தையைத் தூக்கி அடுப்பு நெருப்பில் வீசியெறிந்து விட்டாள். வீசிய மாத்திரத்தில் குழந்தை நெருப்பில் பொசுங்கிப் போய் சாம்பலாகிப் போனது.

இதைக் கண்ட வாலிபத் துறவி திடுக்கிட்டுப் போய், அப்படியே சாப்பாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்துகொண்டு அலறினான். ‘அடிப்பாவி! நீ பெண்தானா? அல்லது பிரம்மராட்சஸியா? தாய் உருவில் வந்த பேயே, ஒரு சிறு குழந்தையைப் போய் இப்படி நெருப்பிலிட்டுப் பொசுக்கி விட்டாயே? ஐயோ! இந்த வீட்டில் சாப்பிடுவதே பெரும் பாவம்! இதற்கு மேல் ஒரு விநாடியும் இங்கிருக்க மாட்டேன்!’ என்று கதறிப் புலம்பியபடி அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

அப்போது அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான அந்தணன், ‘சந்நியாசியைத் தடுத்து நிறுத்தி, சிறு புன்னகையுடன் கூறினார்: ஸ்வாமி! பதறாதீர்கள்! இது இந்த வீட்டில் சகஜமாக நடப்பதுதான். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. இதோ இப்போதே எனது மந்திரத்தினால் குழந்தையை உயிர்ப்பித்து விடுகிறேன்! பாருங்கள்.’ என்று சொல்லி, அந்தணன் சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து, நெருப்புச் சாம்பலின் மீது கலச நீரைத் தெளிக்க, குழந்தை ஒரு சிறு காயமும் இன்றி எழுந்து வந்தது.

வாலிபத் துறவி மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அன்றைய இரவை அங்கேயே கழித்த சந்நியாசி, அந்தணனிடம் தனக்கும் அந்தச் சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லித் தரும்படி மன்றாடிக் கேட்டான். மாண்டு போன தனது காதலியை உயிர்ப்பிக்க வேண்டுமென உண்மையைக் கூறி, அவன் அந்தணனிடம் கெஞ்ச, ‘துறவியாரே! நீங்கள் இத்தனை தூரம் கெஞ்சுவதால் நான் உங்களுக்கு அந்தச் சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!’ என்றான் அந்தணன்.

‘என்ன நிபந்தனை சொல்லுங்கள். எதுவானாலும் செய்கிறேன்!’ துடிப்புடன் கேட்டான் துறவி.

‘இந்தச் சஞ்சீவி மந்திரத்தை ஒருமுறை மட்டுமே அதுவும் உனது காதலியை உயிர்ப்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொரு முறை பயன்படுத்தக் கூடாது. சம்மதமா?’

‘சம்மதம். அப்படியே செய்கிறேன். அந்த ஒருமுறைக்கு மேல் சஞ்சீவி மந்திரத்தைப் பயன்படுத்த மாட்டேன்! இது சத்தியம்!’

அந்தணன், துறவியின் காதில் சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்து அனுப்பி வைத்தான்.

வாலிபத் துறவி மிகுந்த சந்தோஷத்துடன் இரவு பகலாக நடந்து இடையில் எங்குமே தங்காமல் பிரபாவதியைத் தகனம் செய்த மயானத்துக்கு வந்து சேர்ந்தான்.

அதே சமயம் பிரபாவதியின் அஸ்திகளைக் கங்கைக்குக் கொண்டு சென்ற இளைஞனும் அஸ்திகளைப் புனித நீராட்டிக் கொண்டு அங்கே ஊர் திரும்பியிருந்தான்.

முதலாம் வாலிபன் எப்போதும்போல் பிரபாவதியின் சாம்பலைப் பாதுகாத்துக்கொண்டு அங்கேயே இருந்தான்.

வாலிபத் துறவி, மற்ற இருவரிடமும் நடந்ததைக் கூறி, ‘நண்பா, நீ பிரபாவதியின் சாம்பலைக் குவித்து வை. காசிக்குச் சென்று வந்த நீ அவளது அஸ்திகளைச் சாம்பலிலேயே போடு. நான் சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி அவளை உயிர் பிழைக்க வைத்து விடுகிறேன்!’ என்று சொல்லி அது போலவே செய்தான்.

துறவி, சஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து நீர் தெளித்ததுமே பிரபாவதி மாறாத பேரழகுடன் முன் போலவே எழுந்து வந்தாள்.

அதிசயம் நிகழ்ந்த அடுத்த கணமே அங்கே பெரும் சண்டை மூண்டது!

ஆம்! பிரபாவதியின் அழகில் மயங்கிக் கிறங்கிப் போன மூவரும், உயிருடன் வந்த பிரபாவதி தனக்குத்தான் சொந்தம் என்றும், அவள் தன்னைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருமே தன்னால்தான் பிரபாவதி உயிர்பிழைத்தாள் என்று கூறி உரிமை கொண்டாடினார்கள்.

‘எனது சஞ்சீவி மந்திரத்தால்தால் பிரபாவதி உயிர் பிழைத்தாள். எனவே அவள் என்னைத்தான் மணந்துகொள்ள வேண்டும்!’ என்றான் ஒருவன். அவளது அஸ்திகளை காசியில் திருமுழுக்காட்டிக் கொண்டு வந்தவனோ, ‘நான் அவளது அஸ்திகளைக் கங்கை நதியில் முழுக்காட்டிய புண்ணியத்தால்தான் உயிர் பிழைத்தாள். ஆகையால் அவள் எனக்கே மனைவியாவாள்!’ என்று வாதிட்டான். இன்னொருவனோ, ‘நான் பிரபாவதியின் சாம்பலைப் பாதுகாத்து வந்ததால்தானே அவள் உயிருடன் வருவது நிகழ்ந்தது! இல்லாவிட்டால் அவள் உயிர் பிழைத்தது எங்ஙனம் நிகழ்ந்திருக்கும்? எனவே அவள் எனது உடமை’ என்று அடித்துச் சொன்னான்.’

இந்த விதமாகக் கதையை முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது, ‘சொல்லுமய்யா மகாராஜனே! அந்தப் பெண் பிரபாவதி யாருக்குச் சொந்தமாவாள்? அவர்களது வாதத்தில் உள்ள நியாயம் என்ன? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உனது தலை சிதறி விடும்!’ என்று கேட்டது.

விக்கிரமாதித்தன் விளக்கமாகப் பதில் கூறினான்: வேதாளமே, மந்திரத்தால் அந்தப் பெண்ணை உயிர் பெறச் செய்தவன் நிச்சயமாக அவளது கணவனாக மாட்டான். ஏனென்றால் அவளுக்கு உயிர் கொடுத்தவன் தந்தை ஸ்தானத்துக்கே ஒப்பானவன் ஆவான். அதுபோலவே பிரபாவதியின் அஸ்தி எலும்புகளைக் கங்கைக்கு எடுத்துச் சென்றவன் அவளுக்கு மகனாவான். அவளது சாம்பலை விட்டுப் பிரியாமல் கட்டித் தழுவி மயானத்திலேயே தங்கிப் பாதுகாத்துக் கொண்டிருந்தவனே அவளது கணவன் ஆவான்!’ என்று கூறினான்.

விக்கிரமாதித்தனுடைய இந்தச் சரியான பதிலால் வேதாளம் அவனது தோளிலிருந்துப் புறப்பட்டு முருங்கை மரத்துக்கே சென்று சேர்ந்தது.

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *