மனத்தின் உறுதி சற்றும் தளராமல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து விடுவித்து, தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன்.
பாதி வழி கடந்ததும் வழக்கம் போல வேதாளம், ‘விடாமுயற்சியைக் கைவிடாத கட்டழகு ராஜனே! வழிக்களைப்பு தெரியாமல் இருக்க இன்னொமொரு விசித்திரக் கதையொன்று சொல்கிறேன். கேள்!’ என்று தனது அடுத்த கதையைத் தொடங்கியது.
‘அங்கதேசத்தின் அக்ரஹாரம் ஒன்றில் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தனர். மூவரும் அவரவர் ரசனைக்கேற்ப தங்களது வாழ்க்கையைச் சுகானுபவமாக அனுபவித்து வாழ்ந்தனர். அவர்கள் மூவரிடமும் ஆளுக்கு ஆள் அலாதியான திறமையொன்று இருந்தது.
மூத்த சகோதரன் அட்டகாசமான சாப்பாட்டுப் பிரியன். சாப்பாடு குறித்த ரசனையில் அவனுக்கு நிகராக யாருமே கிடையாது. இரண்டாமவன் சிற்றின்பப் போகப் பிரியன். பெண்களின் சாமுத்திரிகா லட்சணம் முதல் அவர்களை ஆட்கொள்ளும் காம சாஸ்திரம் வரை சகலமும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவன். மோக தாப விரக விளையாட்டுகளில் வல்லவன். கடைசி சகோதரன் நித்திரை சுகத்தில் ரசனைக்காரன். உறக்கத்தை மோகிக்கும் ரசனையாளன். கட்டில், படுக்கை, மெத்தை அனைத்தையுமே மிகுந்த கச்சிதமாகவும் தரமாகவும் தேர்ந்தெடுத்துத் தூக்கத்தில் மூழ்குபவன்.
ஒருநாள் அவர்களது தந்தையார் யாகம் ஒன்று நடத்தப் போவதாகச் சொல்லி, அந்த யாகத்துக்குத் தேவைப்படும் ஆமை ஒன்றைக் கொண்டு வருமாறு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்.
சகோதரர்கள் மூவரும் கடலோரமாகவே தேடித் திரிந்து கடைசியாக ஆமை ஒன்றைக் கண்டுபிடித்தனர். ஆனால் அதைக் கையில் தூக்கிக் கொண்டு வருவது யார் என்று சண்டையிட்டுக் கொண்டனர்.
ஆமையை முதலில் பார்த்த மூத்த சகோதரன் தனது தம்பிகளிடம், ‘கரடுமுரடாகவும் வழுவழுப்பாகவும் உடல் தசைகள் சுருங்கியும் காணப்படும் இந்த ஆமையைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே நீங்கள் இதைத் தூக்கி வாருங்கள்!’ என்றான்.
‘இல்லையில்லை எனக்கும் இதைப் பார்த்தால் குமட்டுகிறது. நான் தூக்கிவர மாட்டேன்’ என்று இரண்டாமவன் சொல்ல, ‘எனக்கும் அப்படித்தான் இருக்கிறது!’ என்று மறுத்தான் மூன்றாமவன்.
‘இதை நீங்கள் தூக்கி வராவிட்டால் தந்தையின் யாகம் பூர்த்தியாகாத பாவம் உங்களையே சேரும்!’ என்று பயமுறுத்தினான் அண்ணன்.
‘அதே பாவம் உன்னைச் சேராதா என்ன?’ என்று தம்பிகள் அண்ணனை ஏளனம் செய்தார்கள்.
‘நான் எப்பேர்ப்பட்ட ரசனையாளன். போஜன கலாரசிகனான என்னைப் போய் நாற்றமடிக்கும் ஆமையைத் தூக்கி வரச் சொல்கிறீர்களே! இது நியாயமா?’ என்று முகம் சுளித்தான் மூத்தவன்.
இரண்டாமவன், ‘நான் மட்டும் என்ன? பட்டுப் போன்ற மேனியையுடைய கட்டிளம் கன்னிகளைக் கட்டித் தழுவி அங்குலம் அங்குலமாக ரசித்து காமத்தைக் கலையாக நுகரும் என்னைப்போய் இந்தக் கேவலமான ஆமையைத் தூக்கி வரச் சொல்கிறீர்களே! உங்கள் மனசாட்சிக்கே உறுத்தவில்லையா?’ என்றான்.
‘உறக்கத்தின் உன்னதத்தை உளப்பூர்வமாக உணர்ந்து அனுபவிக்கும் நான் இந்த ஆமையைச் சுமந்து வந்தால் அதன் பிறகு எனது வாழ்நாளில் ரசனையான நித்திரை என்பது வசப்படுமா? நீங்களே சொல்லுங்கள். எனவே தயவுசெய்து இந்த வேலையை என்னைச் செய்யச் சொல்லாதீர்கள்!’ என்று தீர்மானமாக மறுத்தான் கடைசிச் சகோதரன்.
இப்படியாக அவர்களது வாதம் தொடர்ந்து கொண்டே போய் ஒரு முடிவுக்கு வர முடியாமல், கடைசியாக அவ்வூர் மன்னனிடம் தங்கள் வழக்கைக் கொண்டு சென்றனர்.
இவர்களது வழக்கைக் கேட்ட மன்னன் பிரசேனன், இந்த மூன்று கலாரசிகர்களின் விதவிதமான திறமையைக் கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் மூழ்கினான்.
பின் சகோதரர்களிடம், ‘நீங்கள் மூவரும் இங்கு எனது அரண்மனையிலேயே தங்குங்கள். உங்களை நானே சோதித்துப் பார்த்து விட்டு எனது முடிவைத் தெரிவிக்கிறேன்!’ என்றான்.
அரண்மனைப் பணியாட்கள் சகோதரர்கள் மூவரையும் அழைத்துச் சென்று விருந்தினர் அறைகளில் தங்க வைத்து சகல வசதிகளும் செய்து தந்து உபசரித்தனர்.
மன்னன் பிரசேனன் அன்றைய மதிய உணவுக்கே சகோதரர்கள் மூவரையும் தன்னுடன் உணவு அருந்த வரும்படி அழைப்பு விடுத்தான்.
சகோதரர்கள் மூவருடன் மன்னனும், மந்திரிகள், பிரபுக்கள் என அநேகர் சேர்ந்து உணவருந்தினர். அறுசுவையுடன் விதவிதமான ருசிகரமான ராஜ உணவுகள் பரிமாறப்பட்டன. அனைவரும் ரசித்து ருசித்து உண்டு மகிழ, சகோதரர்களில் மூத்தவனான சாப்பாட்டுப் பிரியன் மட்டும் ஏதொன்றையும் சாப்பிடாமல் முகம் சுளித்து அமர்ந்திருந்தான்.
அதைக் கண்ட மன்னன் பிரசேனன், ‘ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறாய்? உடல்நிலை சரியில்லையா?’ என்று விசாரித்தான்.
‘இல்லை மன்னவா! இந்தச் சாதத்தில் பிணவாடை அடிக்கிறது. அருவருப்பினால் என்னால் ஒரு வாய்கூட சாப்பிடமுடியவில்லை!’ என்றான்.
‘சாதத்தில் பிண வாடையா? எனக்கொன்றும் தெரியவில்லையே!’ என்ற மன்னன், மற்றவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு ஏதேனும் வாடை தெரிகிறதா? எல்லோரும் சாதத்தை எடுத்து முகர்ந்து பாருங்கள்!’ என்று சொன்னான்.
மந்திரிகள், பிரபுக்கள் எல்லோருமே எடுத்து முகர்ந்து பார்த்து, ‘மன்னவா மல்லிகைப் பூ போன்ற இந்தச் சாதத்தில் எந்தக் கெட்ட மணமும் எங்களுக்குத் தெரியவில்லை. சுவையும் நன்றாகவே உள்ளது!’ என்றனர்.
ஆனால் சாப்பாட்டுப் பிரியனோ, தீர்மானமாகச் சொன்னான். ‘கண்டிப்பாக இந்தச் சாதத்தில் பிண வாடை படிந்திருக்கிறது! இது மிக உண்மை!’
உடனே மன்னன் பிரசேனன், மடப்பள்ளியிலிருந்து ஆட்களைத் தருவித்து எல்லா வகையிலும் துருவித் துருவி விசாரித்தான். விசாரணையின் முடிவில் ஆச்சரியகரமான உண்மை ஒன்று வெளியானது.
ஆம்! அன்றைய தினம் சமைக்கப்பட்டிருந்த அரிசி, ஒரு மயானத்தின் அருகிலிருந்த விளைநிலத்தில் விளைந்த அரிசி என்பது தெரிய வந்தது.
மன்னன் பிரசேனன் ஆச்சரியப்பட்டுப் போனான். ‘போஜனப் பிரியனே, உண்மையில் உனது இந்த ரசிகத் திறமை மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான். உன்னைப் போல் சாப்பாட்டு வல்லவராக வேறு யாரும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள்.’ என்று மனம் திறந்து பாராட்டினான்.
பின் வேறு அரிசியில் வடிக்கப்பட்ட சாதம் சாப்பாட்டுப் பிரியனுக்குப் பரிமாறப்பட்டு, விருந்து நிறைவடைந்தது.
பின் சகோதரர்கள் மூவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள்.
மன்னன் அடுத்தபடியாகப் பெண் சுகம் அறிவதில் வல்லவனான இரண்டாவது சகோதரனைச் சோதிக்க நினைத்தான். அன்றைய இரவு சந்திரன் உதயமானதும் தனது அரண்மனைப் பெண்களில் அழகில் மிகச் சிறந்தவளான தாசிப்பெண் ஒருத்தியை இரண்டாமவன் அறைக்கு அனுப்பி வைத்தான்.
அந்தத் தாசிப் பெண் இரண்டாவது சகோதரனை நெருங்கிச் சல்லாபத்துக்கு இழுத்துக் கட்டியணைக்க, அந்தச் சிற்றின்பப் பிரியனோ, தனது மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘பெண்ணே! நீ முதலில் இந்த அறையை விட்டு வெளியேறி விடு! உன்னோடு மோகம் கொள்ள என்னால் முடியாது! உன் உடல் மேலிருந்து வெள்ளாட்டின் நீச்சவாடை வீசுகிறது! அது என்னைக் குமட்டுகிறது!’ என்று சொல்லி அவளை விடாப்பிடியாக வெளியே துரத்தினான்.
இதைக் கேள்விப்பட்ட மன்னன் வியந்து போனான். அந்தப் பெண்ணின் மீதிருந்து அப்படியொரு வாடை வருவதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அந்தச் சிற்றின்பப் பிரியன் சொன்னதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று கருதிய மன்னன் விடாப்பிடியாக அந்தப் பெண்ணின் முழுப் பூர்வீகத்தையும் தூண்டித் துருவி விசாரித்தான். கடைசியில் அந்த ஆச்சரியகரமான உண்மை வெளியானது.
தாசிப் பெண் பிறந்தபோது அவளின் தாய் பிரசவத்தின்போதே இறந்துவிட, தாய்ப்பால் இல்லாமல் அவள் வெள்ளாட்டுப் பாலை குடித்து வளர்ந்த குழந்தை என்பது தெரியவந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் மன்னன் பிரசேனன் பெரிதும் திகைத்துப் போனான். பெண் சுகம் அறிவதில் இந்த இளைஞனுக்கு நிகரானவன் ஈரேழு உலகங்களிலும் யாரும் இருக்கமுடியாது என்று இரண்டாம் சகோதரனைப் பாராட்டினான்.
இந்தச் சூட்டுடனே உறக்க சுகத்தில் வல்லவனான மூன்றாமனுடைய ரசனையையும் சோதித்துப் பார்த்து விட எண்ணி, தூக்க ரசிகனுடைய அறையில் அவனது சௌகரியப்படியே அவன் கேட்டவாறே, மென்மையான ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் ஆறேழு மெத்தைகள் போடச் சொல்லி உத்தரவிட்டான்.
மனத்துக்கு இதமான நல்ல மணம் வீசும் நறுமணப் புகை போடப்பட்டு, சுகமான காற்றும், இதமான குளிரும் நிலவியபோதும் நித்திரைப் பிரியனால் ஒரு ஜாமம் கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்து முடியாமல், ‘ஐயோ! எனது முதுகில் ஏதோ உறுத்துகிறதே! வலிக்கிறதே!’ என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு கதறினான்.
இதைக் கண்ட சேவகர்கள் அணுகி விவரம் விசாரிக்க, மூன்றாமவன் அவர்களிடம் திரும்பி தனது முதுகைக் காண்பித்தான். அவனது முதுகில் ஒரு மெல்லிய முடியளவுக்கு ஒரு வளைவுக் கீறல் சிவக்கத் தென்பட்டது.
இது எப்படி வந்தது? சேவகர்கள் மெத்தைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க, ஆறாம் மெத்தைக்குப் பிறகு ஏழாவது மெத்தைக்கு மேல் ஒரு மெல்லிய தலைமுடியொன்று இருந்தது. நித்திரைப் பிரியனின் முதுகில் இருந்த கீறல் அடையாளம் அதனுடன் கச்சிதமாகப் பொருந்தியது.
சேவகர்கள் ஓடோடிச் சென்று மன்னனிடம் சென்று இத்தகவலைத் தெரிவித்தனர்.
மன்னனும் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏழாவது மெத்தையில் கிடந்த தலைமுடியானது ஏழு மெத்தைகள் தாண்டியும் இவனது முதுகில் பதிகிறதென்றால், அதையும் இவன் உணர்கிறானென்றால், நிச்சயமாக உறக்கத்தைக் கலாபூர்வமாக அனுபவித்து ரசிப்பதில் வல்லவன் இவன்தான். இவனுக்கு நிகர் வேறு யாருமில்லை என்று புகழ்ந்தான்.
மறுநாள் தனது அரசவையில் அவர்கள் மூவருக்கும் ஏராளமான பொன் பொருள் வழங்கி கௌரவித்து, அவர்களது தந்தையின் யாகத்துக்காக ஆமையைச் சுமந்து செல்ல ஒரு வேலையாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தான் என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது.
‘போஜன ரசனை, பெண் ரசனை, நித்திரை ரசனை என்கிற மூன்று ரசனைகளில் வல்லவர்களான அந்தச் சகோதரர்களில் மிகவும் வல்லவன் யார்? எந்த விதத்தில் அவன் மேன்மையானவன் ஆவான்? பதில் தெரிந்தால் சொல் பார்ப்போம்!’
‘போஜன ரசனை கொண்டவனும், பெண் சுகம் காண்பனும் அவரவர் பூரண சுய உணர்வுடன் ஐம்புலன்களால் அனுபவித்துத் தெரிந்துகொண்டதைத்தான் சொன்னார்கள். ஆனால் நித்திரை சுகம் காண்பவனோ, எல்லாப் புலன்களும் உறக்கத்தில் மூழ்கி உணர்வற்ற ஜட நிலையில் தான் அனுபவித்ததை உணர்த்தினான். எனவே அவனே மிகப் பெரும் கலாரசிகன்! ரசனையில் வல்லவன்!’
விக்கிரமாதித்தனின் சரியான பதிலால், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்துக்கே பறந்து சென்றது.
(தொடரும்)