சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல வேதாளம், ‘கேளுமைய்யா விக்கிரமாதித்தரே!’ என்று தனது அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கியது.
‘விசாலி என்னும் நகரத்தை புண்ணியசேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது அரசவை பண்டிதராகப் பணியாற்றியவர் ஹரிதாஸர் என்னும் அந்தணர்.
ஹரிதாஸர் தனது மனைவி, மகன், மகளுடன் விசாலி நகரத்தின் அக்ரஹாரம் ஒன்றில் குடியிருந்தார். மனைவி பத்மாவதி. மகன் பெயர் தேவஸ்வாமி. அவரது மகளின் பெயர் தேவப்பிரபா.
ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபாவுக்கு தான் ஒரு பேரழகி என்பதில் மெல்லிய கர்வம் உண்டு. அவள் அப்போது திருமண வயதை எட்டியிருந்ததால் கூடிய சீக்கிரமே அவளுக்குத் தகுந்தவாறு மாப்பிள்ளை தேடவேண்டும் என்று, தேவப்பிரபாவின் தாயும், தந்தையும், அண்ணனும் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டாள்.
தேவப்பிரபாவுக்கு மனத்தில் மெல்லிய பயம் ஏற்பட்டது. தனது அழகுக்கும் அறிவுக்கும் தகுந்தபடி இல்லாமல் தனது பெற்றோர் ஏதோவொரு மாப்பிள்ளையைப் பிடித்து வந்து கட்டி வைத்து விடுவார்களோ என்று கவலைப்பட்டாள்.
எனவே தன் மனத்தில் இருப்பதை வெளிப்படையாகவே சொல்லி விடத் தீர்மானித்து, ஒருநாள் வீட்டில் அனைவரும் சேர்ந்திருந்த சமயத்தில் மெல்லப் பேச்சைத் துவக்கினாள்.
‘அம்மா, நீங்கள் என் திருமணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?’ என்று வெட்கத்துடன் கேட்டாள்.
‘ஆம் மகளே! அது எங்கள் கடமையல்லவா? வயதுக்கு வந்த பெண்ணை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது அம்மா! அதனால்தான் விரைவிலேயே உனக்குக் கணவராகத் தகுந்த ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!’ அம்மா அன்புடன் கூறினாள்.
அதற்குள் அவளது தந்தையார் ஹரிதாஸர் குறுக்கிட்டு, ‘மகளே தேவப்பிரபா, நீ எங்களிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய் என்று தோன்றுகிறது! எதுவானாலும் தைரியமாகச் சொல் அம்மா!’ என்று கேட்டார்.
‘ஆம் அப்பா! எனக்குக் கணவராக வரப் போகிறவரைப் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். நீங்கள் எனக்குத் தேர்ந்தெடுக்கும் மணமகன் வீரத்திலோ, ஞானத்திலோ, விஞ்ஞானச் சூத்திரத்திலோ ஏதோ ஒன்றில் வல்லவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்! இதற்கு மாறாக எந்தத் திறமையும் இல்லாத எவரையேனும் தேர்ந்தெடுத்துவிட்டு தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்! இது என் கோரிக்கை!’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் விரைந்தோடிச் சென்றுவிட்டாள்.
இதைக் கேட்டதுமே ஹரிதாஸரும், மனைவி ரத்னாவதியும், மகன் தேவஸ்வாமியும் மலைத்துப் போனார்கள்.
தேவப்பிரபா குறிப்பிட்டபடியான மாப்பிள்ளையை எங்குப் போய் தேடி, எப்படிக் கண்டுபிடிப்பது என்று கவலை கொண்டார்கள்.
இந்தச் சமயத்தில்தான் ஹரிதாஸர் வசித்த அந்த விசாலி நகரத்துக்கு வேறொரு அபாயமும் வந்து சேர்ந்தது!
தட்சிணதேசத்து மன்னன் பிரத்யுங்கன் என்பவன் விசாலி தேசத்தின் மீது படையெடுத்து வந்து எல்லைப்புறத்தில் முகாமிட்டிருந்தான்.
விசாலி நாட்டின் மன்னன் புண்ணியசேனன் பதறிப் போனான். தட்சிணதேசத்து மன்னனின் பெரும் படையுடன் விசாலி நாட்டின் சிறிய படை மோதி வெற்றி கொள்வதென்பது நடக்காத காரியம். எனவே மன்னன் பிரத்யுங்கனுடன் சமாதானமாகப் போக விரும்பினான்.
அவனிடம் யாரை சமாதானத் தூதுக்கு அனுப்புவது என்று யோசித்து தனது அரசவைப் பண்டிதரான ஹரிதாஸரைத் தேர்ந்தெடுத்துப் போர் முகாமுக்கு அனுப்பி வைத்தான்.
ஹரிதாஸர் விசாலி மன்னன் புண்ணியசேனனின் சார்பாகத் தட்சிண மன்னனிடம் சமாதானம் பேசினார். அவனது மனத்துக்கு உகந்தபடியாகப் பிரத்யுங்கனைப் புகழ்ந்து பேசி வசப்படுத்திக் காரியம் சாதித்தார். விசாலி மன்னனுடன் நட்புக்கரம் நீட்ட தட்சிண மன்னனும் ஒப்புக் கொண்டான். ஹரிதாஸரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால் தன்னுடன் இரண்டொரு நாள் தங்கிச் செல்லும்படியாகக் கேட்டுக் கொண்டான்.
அதன்படியே தட்சிண மன்னன் பாசறையில் தங்கியிருந்தபோது ஹரிதாஸரை வந்து சந்தித்தான் ஒரு பிராமண இளைஞன். தட்சிண மன்னனின் அரசவையைச் சேர்ந்தவனான அந்த இளைஞனின் பெயர் சூத்திரவான்.
அவன் ஹரிதாஸரை வணங்கி, ‘ஸ்வாமி, என் பெயர் சூத்திரவான். நான் தங்களது மகள் தேவப்பிரபாவைப் பற்றியும் அவளது பேரழகு குறித்தும் அநேகர் சிலாகித்துப் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதிலிருந்தே மனத்தில் தங்கள் மகள் மீது மிகுந்த பாசம் கொண்டுவிட்டேன். எனவே தாங்கள் தங்கள் மகளை எனக்கு மணம் செய்வித்துத் தந்தால் மிகவும் மகிழ்வேன்!’ என்று வேண்டினான்.
ஹரிதாஸருக்கு இளைஞன் சூத்திரவானைப் பிடித்துப் போனாலும், மகள் தேவப்பிரபா தனக்கு இட்ட நிபந்தனையை நினைத்துப் பார்த்தார். அதை சூத்திரவானிடமும் கூறினார்.
‘இளைஞனே உன்னை எனது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வதில் சிறு சிக்கல் இருக்கிறது. எனது மகள் தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞானச் சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டார்.
‘ஆஹா! ஸ்வாமி அதிலொன்றும் பிரச்னையில்லை. நான் விஞ்ஞானச் சூத்திரத்தில் கரை கண்டவன். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நிரூபிக்கிறேன், பாருங்கள்!’ என்றவன் சில தினங்களிலேயே இயந்திரப் பொறிகளால் ஆகாயத்தில் பறக்கும் அதிசய விமானம் ஒன்றை உருவாக்கி, அதில் ஹரிதாஸரையும் ஏற்றிக் கொண்டு விண்ணில் பறந்து காண்பித்தான்.
மீண்டும் தரையிறங்கிய மறுகணமே மனம் மகிழ்ந்து போன ஹரிதாஸர், இளைஞன் சூத்திரவானிடம், ‘நீர்தான் எமக்கு மாப்பிள்ளை. இன்றிலிருந்து ஏழாவது நாள் உமக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடைபெறுவது உறுதி’ என்று வாக்களித்து விடை பெற்றார்.
இவர் இங்கே வாக்குறுதி தந்த அதே சமயத்தில் உஜ்ஜயினியில் ஹரிதாஸரின் மகனான தேவஸ்வாமியையும் ஓர் இளைஞன் சந்தித்து அவனது தங்கையைத் தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினான்.
அதற்கு தேவஸ்வாமி, ‘நண்பரே எனது தங்கை தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞானச் சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உம்மிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டான்.
சூரசேனன் என்கிற அந்த இளைஞன் பெயருக்குத் தகுந்தபடி தான் ஒரு வீரன் என்றும், வில் வித்தை, வாள் வித்தை, மற்போர், ஆயுதச் சண்டை அனைத்திலும் ஈடில்லாத திறமை கொண்டவன் என்றும் சொல்லி அதை தேவஸ்வாமியின் முன் நிரூபித்தும் காண்பித்தான்.
சூரசேனனின் திறமையைக் கண்டு மகிழ்ந்த தேவஸ்வாமி தனது தங்கை தேவப்பிரபாவை சூரசேனனுக்கே மணம் முடித்து வைப்பதாக அவனுக்கு வாக்குறுதி தந்தான். அதற்காக அவன் குறித்த மணநாளும், முகூர்த்தமும், அவனது தந்தை ஹரிதாஸர் சூத்திரவானுக்கு நிச்சயித்திருந்த அதே முகூர்த்த நாளிலேயே அமைந்தது.
இவர்கள் மட்டுமா, தேவப்பிரபாவின் தாய் ரத்னாவதியும்கூட ஞானதேசிகன் என்கிற இளைஞனிடம் அதைத்தான் கூறியிருந்தாள்.
ஆம்! தேவப்பிரபாவின் அழகில் மனம் பறிகொடுத்த ஞானதேசிகன் என்கிற இளைஞன் அவளது தாயான ரத்னாவதியை அணுகி நமஸ்கரித்தான். பின் மிகுந்த பணிவுடன், தேவப்பிரபாவைத் தனக்கு மணம் செய்து தருமாறு அவளிடம் கேட்டான்.
அதற்கு ரத்னாவதி அவனிடம், ‘தம்பி! எனது மகள் தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞானச் சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் ஏதாவது திறமை உள்ளதா?’ என்று கேட்க,
‘அம்மா! நான் ஒரு ஞானி! முக்காலமும் உணர்ந்தவன். சந்தேகமிருந்தால் தாங்கள் என்னைப் பரீட்சை செய்து பார்க்கலாம்!’ என்று கூறினான்.
அதன்படியே ரத்னாவதி அவனைப் பலவிதத்தில் சோதித்துப் பார்க்க, ஞானதேசிகன் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் சொல்லி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.
அந்த ஆச்சரியத்துடனே ரத்னாவதி ஞானதேசிகனுக்குத் தனது மகள் தேவப்பிரபாவை மணம் முடித்துத் தருவதாக வாக்களித்து விட்டாள். அவள் ஜோசியரிடம் சென்று கேட்டு நிச்சயித்த முகூர்த்தம், அவளது கணவரும், மகனும் நிச்சயித்திருந்த அதே தினம்தான்!
தட்சிண மன்னனின் பாசறையில் இருந்து விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிய ஹரிதாஸர், தனது மனைவியிடமும், மகனிடமும் மகள் தேவப்பிரபாவுக்கு தான் மாப்பிள்ளை நிச்சயம் செய்து விட்ட தகவலைக் கூறினார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட ரத்னாவதியும், தேவஸ்வாமியும் தாங்களும் தேவப்பிரபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வாக்களித்து விட்ட தகவலைத் தெரிவித்தனர்.
இப்போது வீட்டில் அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டது. இப்படி ஆளுக்கு ஆள் வாக்களித்து விட்டோமே! யாருக்குத்தான் தேவப்பிரபாவை மணம் முடித்துக் கொடுப்பது என்று சஞ்சலத்தில் ஆழ்ந்தார்கள்.
நாட்கள் விரைந்தோடி திருமண நாள் வந்தது. வீரத்தில் வல்லவனான சூரசேனனும், விஞ்ஞானச் சாஸ்திரத்தில் விற்பன்னனான சூத்திரவானும், ஞானத்தில் வல்லமை மிக்க ஞானதேசிகனும் என மூன்று மாப்பிள்ளைகளும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
மூன்று மாப்பிள்ளைகளுக்கும் இடையில் பெரும் மோதல் நிகழப் போகிறது என்று ஹரிதாஸரின் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்க, அப்போதுதான் பெரும் திருப்பம் நேர்ந்தது.
‘கல்யாணப் பெண்ணைக் காணோம்!’ என்று கூக்குரல் எழுந்தது.
‘என்னது தேவப்பிரபாவைக் காணோமா?’ அவளது பெற்றோரும், தமையனும் அதிர்ந்துபோய் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார்கள். ஊஹூம்! எங்குமே காணோம்! அவள் வெளியில் செல்லவில்லை. வீட்டினுள்ளும் இல்லை. காற்றில் கரைந்தது போல் மறைந்து விட்டாள்!
பதைபதைத்துப் போன தேவப்பிரபாவின் தாய் ரத்னாவதி, ஞானதேசிகனிடம், ‘தம்பி! உங்களது ஞானத்தால் இப்போது எனது மகள் எங்கிருக்கிறாள் என்று அறிந்து சொல்ல முடியுமா?’ என்று வேண்டினாள்.
‘அம்மா! பதறாதீர்கள். இதோ இப்போதே அறிந்து சொல்கிறேன்!’ என்ற ஞானதேசிகன் கண் மூடி அமர்ந்து தனது ஞானத்தால் தேடிப் பார்த்து உணர்ந்து, ‘விந்திய மலைக் காட்டின் குகையில் வசிக்கும் அரக்கன் ஒருவன்தான் தேவப்பிரபாவைத் தூக்கிச் சென்று வைத்துள்ளான்’ என்று கூறினான்.
தேவப்பிரபாவின் பெற்றோர், திடுக்கிட்டுப் போனார்கள். ‘ஐயோ! எங்கள் செல்ல மகளை அரக்கன் கொண்டு போனானா? அவள் எப்படி தவிக்கிறாளோ தெரியவில்லையே. அரக்கனிடமிருந்து எங்கள் மகளை எப்படி மீட்பது? வழி ஒன்றும் தெரியவில்லையே!’ என்று கலங்கினார்கள்.
அப்போது சூத்திரவான் அவர்களிடம், ‘கவலைப்படாதீர்கள். இப்போதே நான் வானில் செல்லும் விமானம் மூலம் நொடிப் பொழுதில் அரக்கன் தேவப்பிரபாவை வைத்திருக்கும் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்!’ என்று ஆறுதல் கூறினான்.
அதன்படியே விமானத்தை அவன் துரிதமாகத் தயார்ப்படுத்த, சூரசேனன் அரக்கனை எதிர்ப்பதற்குத் தேவையான பலவிதமான ஆயுதங்களை, விமானத்தில் எடுத்து வைத்தான். பின் சூத்திரவானும் ஞானதேசிகனும்,சூரசேனனும், தங்களுடன் தேவப்பிரபாவின் தந்தை ஹரிதாஸரையும், அண்ணன் தேவஸ்வாமியையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். விந்திய மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
சூத்திரவான் விமானத்தைக் காட்டில் இறக்கியதுமே இவர்களைப் பார்த்துவிட்ட அரக்கன் மிகுந்த கோபத்துடன் பெரும் பாறைகளை வீசியெறிந்து தாக்கத் தொடங்கினான். வீரனான சூரசேனன் மற்ற அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்திருக்கச் செய்து தான் ஒருவனாகவே அரக்கனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டான். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நீண்ட நேரம் நடந்த போரின் முடிவில் சூரசேனன் தனது முழுத் திறமையையும் காட்டி, இறுதியாக பிரம்ம பாணத்தின் மூலமாக அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். தலையும் உடலும் இரண்டு துண்டுகளாக்கப்பட்டு அரக்கன் மாண்டு போனான். தேவப்பிரபாவை மீட்டுக்கொண்டு அதிசய விமானத்தில் ஏறி அனைவரும் விசாலி நகரம் வந்து சேர்ந்தார்கள்.
இதற்குப் பிறகுதான் தொல்லை தொடங்கியது.
அன்னை, தந்தை, அண்ணன் மூவரும் ஆளுக்கு ஆள் வாக்குறுதி தந்தபடி தங்களுக்குத்தான் தேவப்பிரபாவை மணம் செய்து தரவேண்டும் என்று மூவரும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்களுக்குள் பெரும் விவாதம் நடந்தது.
‘தேவப்பிரபாவைத் தூக்கிக்கொண்டு போன அரக்கன் எங்கிருக்கிறான் என்று நான் கண்டு பிடித்துச் சொல்லாவிட்டால் நீங்கள் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? எனவே எனக்குத்தான் தேவப்பிரபா சொந்தமாக வேண்டும்!’ என்றான் ஞான தேசிகன்.
‘இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டால் போதுமா? யாரும் எளிதில் போக முடியாத அந்தக் கானகப் பகுதிக்கு நான் எனது அதிசய விமானத்தில் அழைத்துச் சென்றிருக்காமல் போனால் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? என்னால்தான் அது சாத்தியமானது! எனவே தேவப்பிரபா எனக்கே சொந்தம்!’ என்றான் சூத்திரவான்.
‘நீங்கள் இருவரும் என்ன செய்திருந்தாலும், அரக்கனுடன் சண்டையிட்டு நான் அவனைக் கொன்றிருக்கா விட்டால் மீண்டும் தேவப்பிரபா எப்படிக் கிடைத்திருப்பாள்? எனவே அவள் எனக்கே மனைவியாக வேண்டும்’ என்றான் சூரசேனன்.
‘இப்படி மூன்று மாப்பிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்த ஹரிதாஸர் குடும்பத்தார் செய்வதறியாமல் தவித்து நின்றார்கள்’ என்று கதையை முடித்த வேதாளம், ‘ஐயா விக்கிரமாதித்தரே! நீங்கள் சொல்லுங்கள்! ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபா யாருக்குச் சொந்தமாவாள்? மூன்று மாப்பிள்ளைகளில் யாரை அவள் மணந்துகொள்ள வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தும் நீர் சொல்லாவிட்டால் உமது தலை சுக்குநூறாகச் சிதறிவிடும்’ என்றது.
விக்கிரமாதித்தன் வேறு வழியில்லாமல் தனது மௌனம் கலைத்துப் பதில் கூறினான்: ‘காதல் என்றாலே வீரம்தான் முன்னணி வகிக்கும். எனவே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அரக்கனுடன் சண்டையிட்டுக் கொன்ற வீரனுக்கே அந்தப் பெண் உரிமையாவாள். மற்றபடி விஞ்ஞானச் சாஸ்திரம் அறிந்தவனும், ஞானம் கொண்டவனும் வீரனுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். பெண்ணை அடையும் முதல் உரிமை அவர்களுக்கில்லை!’
விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்று தலைகீழாகத் தொங்கியது.
(தொடரும்)