விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, ‘வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட மன்னவனே! பொழுது போக உனக்கொரு கதை சொல்கிறேன் கேள்!’ என்று வேதாளம் தனது அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கியது.
‘பூலோகத்தின் புண்ணிய நதியான கங்கை ஆற்றின் கரையில் உள்ள பாடலிபுத்திரம் என்னும் நகரை விக்கிரமசேனன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்ல ஒழுக்கமும், பண்பும் கொண்டவன். மகா தர்மசீலன். நேர்மை தவறாதவன். அவன் ஒரு பஞ்சவர்ணக் கிளியை வளர்த்து வந்தான். அதன் பெயர் விதேகன்.
விதேகன் எனப்படும் அந்த ஆண் கிளி, ஒரு பேசும் கிளி! முக்காலமும் உணர்ந்த, சகல சாஸ்திரங்களும் அறிந்த புத்திசாலியான கிளி. அதனாலேயே மன்னன் விக்கிரமசேனன், அந்தக் கிளியின் மேல் அலாதியான பாசம் கொண்டிருந்தான்.
நாட்டை அரசாட்சி செய்வதிலிருந்து தனது சொந்த வாழ்க்கையின் பிரச்னைவரை எல்லாவற்றுக்கும் அந்தக் கிளியைக் கலந்து ஆலோசித்து அதன் சொற்படிதான் விக்கிரமசேனன் செயல்பட்டு வந்தான். அவ்வளவு ஏன்? மன்னன் விக்கிரமசேனனுடைய திருமணம்கூட அந்தக் கிளியின் ஆலோசனைப்படிதான் நடந்தது. ஆமாம்! விக்கிரமசேனனுக்கு மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்த ஏராளமான ராஜகுமாரிகளின் ஓவியங்களிலிருந்து மகதராஜ்ஜியத்தின் மன்னன் மகளான மதிவதனியை கிளிதான் தேர்ந்தெடுத்தது. அவளைத்தான் தனது மனைவியாக்கிக் கொண்டான் விக்கிரமசேனன்.
ஆச்சரியம் என்னவென்றால் ராணி மதிவதனியும் ஒரு கிளியை வளர்த்து வந்தாள். அதுவோர் பெண் கிளி. அதன் பெயர் சோபிகை. அதுவும் ஆண் கிளி விதேகனைப் போன்றே பேசும் திறனும், அறிவும் கொண்ட அழகுக் கிளியாகத் திகழ்ந்தது.
மகத இளவரசி மதிவதனி மன்னன் விக்கிரமசேனனை மணந்துகொண்டு பாடலிபுத்திரம் வந்ததும் இரண்டு கிளிகளும் அந்தப்புரத்தில் அவர்களது பள்ளியறையில் ஒரே கூண்டிலேயே சேர்ந்து வசித்து வந்தன. மன்னனையும், மகாராணியையும் தங்களது அறிவார்ந்த பேச்சுத் திறத்தால் நகைச்சுவை உணர்வுடன் பேசி மகிழ்வித்து வந்தன.
இப்படியிருக்கும்போது ஆண் கிளியான விதேகனுக்கு பெண் கிளி சோபிகை மேல் காதல் உண்டாகி, ஒருநாள், ‘சோபிகை, எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது!’ என்று கேட்டது.
அவ்வளவுதான் சோபிகைக்கு வந்ததே கோபம்! அது மிகுந்த கடுகடுப்புடன், விதேகனிடம், ‘ஆண்கள் எல்லோருமே நன்றியில்லாதவர்கள். கொடுமைக்காரர்கள். துர்புத்தி கொண்டவர்கள். எனவே நான் எந்த ஆணையும் கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை!’ என்று துடுக்காகச் சொன்னது.
சோபிகையின் இந்தப் பதிலால் எரிச்சலுற்ற விதேகன், ‘ஒட்டு மொத்தமாக ஆண் வர்க்கத்தையே இப்படித் தூற்றுவது சரியில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பெண்கள்தான் கொடூரமான குணமும், துரோக புத்தியும் கொண்டவர்கள்!’ என்றது.
இப்படியே இரண்டும் மாற்றி மாற்றி ‘ஆண்கள்தான் கெட்டவர்கள்’, ‘இல்லையில்லை பெண்கள்தான் மோசமானவர்கள்’ என்று சண்டை போட்டுக்கொண்டன. விவாதம் ஒரு முடிவுக்கு வருவதாயில்லை. எனவே தங்கள் வழக்கை மன்னன் விக்கிரமசேனனிடம் சொல்லி முடிவை அவனது தீர்ப்புக்கே விட்டுவிடலாம் என்று தீர்மானித்தன. ஆண் கிளி ஜெயித்தால் பெண் கிளி சோபிகை, விதேகனை மணந்து கொள்ளவேண்டும். பெண் கிளி ஜெயித்தால் ஆண் கிளி விதேகன் காலம் முழுவதும் சோபிகையின் அடிமையாகக் கிடக்கவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
மன்னன் விக்கிரமசேனன் இருதரப்பு வழக்கையும் கேட்டான். பின், அவன் புன்னகையுடன், பெண் கிளியிடம், ‘சோபிகை! ஆண்கள் நன்றி கெட்ட கொடுமைக்காரர்கள், துரோகிகள் என்கிறாயே! எதைக் காரணமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டான்.
‘அரசே, இதற்கு ஆதாரமாகக் கதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள்!’ என்று சொல்லத் தொடங்கியது.
‘சதுர்மங்கலம் என்னும் ஊரில் ஜெயதத்தன் என்னும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரேயொரு செல்வ மகன்; பெயர் நாகதத்தன். தாயில்லாப் பிள்ளை என்று தந்தை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்ததில் நாகநத்தன் சீர்கெட்டுப் போய் பொறுப்பில்லாத ஊதாரியாக வளர்ந்தான். எந்த வேலையும் செய்யாமல் தந்தைக்கும் வியாபாரத்தில் உதவியாக இல்லாமல் வெறுமனே ஊர் சுற்றி வந்தவனுக்கு, தீயவர்கள் பலர் நண்பர்களானார்கள். ஒருவன் கெட்டுப் போவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது அவனது தீய சகவாசம்தான் என்பது நிஜம்தானே!
தனது பொல்லாத நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது, மாது, சூது என்று பலப்பல தீயபழக்கங்களுக்கு ஆளாகி மனம் போல் திரிந்தான் நாகதத்தன். இதனால் மனம் உடைந்து போன ஜெயதத்தன் அந்தக் கவலையிலேயே நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி இறந்தே போனான். தந்தை மரணமடைந்ததில் சிறிதும் மனம் வருந்தாத நாகதத்தன் சொத்தெல்லாம் கைக்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டான். நாளொரு பெண்ணும், பொழுதொரு மதுவும், சதாசர்வ காலமும் சீட்டாட்டமுமாகத் தனது தீய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மொத்தச் சொத்தையும் செலவழித்துத் தீர்த்தான். வீடு வாசல் நிலபுலன்கள் அனைத்தும் போய் விரைவிலேயே அடுத்த வேளைச் சோற்றுக்கே வழியில்லாத நிலையில் நடுத்தெருவுக்கு வந்தான்.
பெரும் பணக்காரனாக இருந்து, சொத்து முழுவதும் போய் ஏழ்மை நிலைக்கு வந்த நாகதத்தன் அதற்கும் மேல் அதே ஊரிலேயே வசிக்க விருப்பமில்லாமல் கால்போன போக்கில் புறப்பட்டான். ஊர் ஊராக, நாடு நாடாகத் திரிந்தான். ஆங்காங்கே கிடைத்ததைச் சாப்பிட்டு நினைத்த இடத்தில் தூங்கி வலம் வந்தான்.
அப்படிச் சுற்றி வந்த தருணத்தில் ஒருநாள் அவன் வாணியபுரம் என்னும் நகரத்தை அடைந்தபோது அங்கே தனநாயகர் என்ற வணிகர் அவனுக்கு அறிமுகமானார். ஏனோ தெரியவில்லை தனநாயகருக்கு நாகதத்தனை முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. அவனைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவிட்டு உபசரித்த தனநாயகர் அவனை அங்கேயே தம்முடனே தங்க வைத்துக் கொண்டார்.
நாகதத்தன் அங்கிருந்த சிறிது காலத்திலேயே தனநாயகரிடமும் அவரது வீட்டாரிடமும் மிகுந்த நல்லவன் போல் நடித்து அனைவரது மனத்தையும் கவர்ந்து கொண்டான். அவனொரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை அறியாத தனநாயகர் தனது ஒரே மகளான ரத்னாவளியை நாகதத்தனுக்குத் திருமணம் செய்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொண்டார்.
பிறகென்ன? நாகதத்தனுக்கு சந்தோஷத்துக்குக் குறைவேயில்லை. பெரும் செல்வச் சீதனத்தோடு வந்த அன்பான
மனைவி, ஆனந்தமான இல்லறம், படாடோபமான வாழ்க்கை, பெரும் மதிப்புடன் கொண்டாடும் மாமனார், மாமியார் எனச் சுகபோகமாகக் காலம் கழிந்தது.
ஆனாலும் என்ன? ஆடின காலும், பாடின வாயும் சும்மாயிருக்காது என்பதுபோல, தீய பழக்கங்களிலேயே மூழ்கி குருட்டாம்போக்கில் செலவு செய்த நாகதத்தனுக்கு மாமனார் வீட்டில் இருப்பது கட்டிப் போட்டது போல இருந்தது. ஆசை தீர செலவு செய்யக் கைகளில் ஏராளமான செல்வம் இருக்கும்போது அதற்கும் மேல் அங்கே தங்கியிருக்க நாகதத்தனுக்குப் பிடிக்கவில்லை.
ஒருநாள் அவன் தனது மாமனார் தனநாயகரிடம் சென்று, ‘ மாமா! நான் ஊரை விட்டு வந்து நெடுநாள்களாகி விட்டன. தந்தை இறந்த துக்கத்தில் வீட்டை விட்டுப் புறப்பட்டவன், ஊர் ஊராகத் தலயாத்திரை செய்து, இங்கே தங்களைச் சந்தித்த பிறகு அப்படியே தங்கிவிட்டேன். பாவம்! அங்கே எனது உற்றார் உறவினர்கள் எல்லோரும் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே நான் ஒருமுறை, ஊருக்குப் போய் அனைவரையும் பார்த்து தகவல் சொல்லிவிட்டு வருகிறேன். ரத்னாவளியுடன் புறப்பட்டுச் செல்ல என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்!’ என்று கேட்டான்.
ஒரே மகளான ரத்னாவளியைப் பிரிந்திருக்க தனநாயகருக்குச் சம்மதம் இல்லையென்றாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு, நாகதத்தனுக்கு மேலும் கொஞ்சம் பொன் பொருளைக் கொடுத்து, மகளை அவனுடன் அனுப்பி வைத்தார். கூடவே ஒரு வேலைக்காரக் கிழவியையும் மகளுக்குத் துணையாகப் போகச் சொல்லி அனுப்பினார்.
பயணம் புறப்பட்ட மூவரும் மாலை மங்கும் நேரத்தில் ஒரு காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். நாகதத்தன் மனைவி ரத்னாவளியிடம், ‘ரத்னா, இருட்டப் போகிறது. இங்கே காட்டுப் பகுதியில் திருடர் பயம் அதிகம்! எனவே உனது நகைகளை எல்லாம் கழட்டி என்னிடம் கொடுத்து விடு’ என்று சொல்லி எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டான்.
அப்படி அவன் வாங்கிக் கொண்டதன் பின்னணியில் ஒரு பெரும் சதித்திட்டம் ஒளிந்திருந்தது. பொதுவாக மது, மாது, சூது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான கயவர்கள் எப்பேர்ப்பட்ட பஞ்ச மாபாதங்கங்களுக்கும் அஞ்ச மாட்டார்கள் என்று பெரியோர் சொல்வார்கள். நாகதத்தனும் அப்படிப்பட்டவன்தானே! அதனால்தான் அவன் மிகப் பெரிய பாதகம் ஒன்றுக்குத் திட்டமிட்டிருந்தான். மனைவி ரத்னாவளியைக் கொன்றுவிட்டு அவளது பொன் பொருள் நகைகளுடன் ஓடிப் போய் விடுவது என்பதுதான் அந்தத் திட்டம்.
இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் அவர்கள் மூவரும் ஒரு மலைப்பாங்கானப் பகுதியைக் கடந்தபோது அவன் தனது திட்டத்தை நிறைவேற்றினான். மலையின் மறுபுறம் இருந்த அதலபாதாளத்தில் மனைவி ரத்னாவளியையும், அவளுடன் துணைக்கு வந்த கிழவியையும் பிடித்துத் தள்ளிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
நாகதத்தனால் தள்ளி விடப்பட்ட கிழவி மிக வேகமாகக் கீழே உருண்டுபோய் ஒரு பெரும் பாறையில் மோதிக்கொண்டாள். அதனால் அவள் மண்டை உடைந்து அக்கணமே இறந்துபோனாள். பின்னால் தள்ளி விடப்பட்ட ரத்னாவளி கிழவியின் மேல் போய் விழுந்ததால் அடிபடாமல் தப்பித்துக் கொண்டாள்.
ரத்னாவளி பெரும் அதிர்ச்சியடைந்தாள். கணவனின் இந்தத் துரோகத்தை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் இரவு முழுதும் மனம் உடைந்துபோய் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள். பின் ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டு, பொழுது விடிந்ததும் சுற்றிலுமிருந்த செடி கொடிகளைப் பிடித்துக் கொண்டு மேலேறி வந்தாள். பின் திக்கு திசைத் தெரியாமல் அலைந்து திரிந்து எதிர்ப்பட்டவர்களிடம் வழி கேட்டுக்கொண்டு, தனது ஊருக்கு வந்து சேர்ந்தாள்.
அலங்கோலமாக வந்து சேர்ந்த மகள் ரத்னாவளியின் நிலை கண்டு தனநாயகர் பதறிப் போனார். ‘என்னம்மா, என்னாயிற்று? உனது கணவர் எங்கே? நீ ஏன் இப்படி அலங்கோலமாக வந்திருக்கிறாய்? என்னாயிற்று மகளே?’ என்று படபடத்தார்.
மனைவியையே கொல்லத் துணிந்த கயவன்தான் என்றாலும், உத்தமியான ரத்னாவளிக்குத் தன் கணவனைக் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. தந்தையிடம் பொய் கூறினாள்.
‘அப்பா! நாங்கள் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கொள்ளைக் கும்பல் ஒன்று எங்களை மடக்கி நகை, பொருள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு விட்டது. அதைத் தடுக்க முனைந்து சண்டையிட்டதால் எனது கணவரை அந்தக் கொள்ளைக் கூட்டம் கட்டித் தூக்கிக்கொண்டுபோய் விட்டது. அந்த மோதலில் மண்டையில் அடிபட்டுக் கிழவி இறந்துவிட்டாள். நான் மட்டும் தப்பித்து வந்துவிட்டேன்!’
‘ம்ஹும்! போனது போகட்டும்.தெய்வத்தின் கருணையால் நீயாவது உயிர் பிழைத்து வந்தாயே மகளே! கவலைப்படாதே! நாம் எப்படியாவது உனது கணவனைத் தேடிக் கண்டுபிடிப்போம்!’ என்று அவளது தந்தையும் தாயும் ரத்னாவளிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். ரத்னாவளியோ சதாசர்வ காலமும் தன்னைப் பிரிந்து போன கணவன் நாகதத்தன் நினைவாகவே இருந்து மனம் கலங்கி வருந்தினாள். என்றாவது ஒருநாள் அவன் மனம் திருந்தி வரமாட்டானா என்று காத்திருந்தாள்.
மாமனார் கொடுத்த பொன் பொருளுடன், மனைவியின் நகைகளையும் சேர்த்து பெரும் செல்வக் குவியலுடன் சொந்த ஊர் திரும்பிய நாகதத்தன் பழையபடியே தனது சகாக்களுடன் கொண்டாட்டங்களில் இறங்கி, விரைவிலேயே மொத்தச் செல்வத்தையும் செலவழித்துத் தீர்த்தான்.
கையில் செப்பாலடித்த காசு கூட இல்லாமல் போனதும் மீண்டும் அவனுக்குத் தனது மாமனார் தனநாயகரின் நினைவு வந்தது. அவரிடம் சென்று ஏதாவது வியாபாரம் செய்யப்போவதாகச் சொல்லி பொன் பொருள் கேட்டு வாங்கலாம் என்று புறப்பட்டான்.
மகள் ரத்னாவளியைப் பற்றி தனநாயகர் கேட்டால் அவளை ஊரிலேயே அறுவடையைப் பார்த்துக் கொள்வதற்காக விட்டு வந்ததாகச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம்.’ என்று திட்டமிட்டான்.
நாகதத்தன் ஊருக்குள் நுழைந்து தெருமுனைக்கு வரும்போதே ரத்னாவளி அவனைப் பார்த்து விட்டாள். மிகுந்த சந்தோஷத்துடன் ஓடோடிச் சென்று அவனை எதிர்கொண்டாள்.
ரத்னாவளி செத்துப் போயிருப்பாள் என்று நினைத்திருந்த நாகதத்தன் உயிருடன் அவளை எதிரே கண்டதும் திகிலடைந்து போனான். பயந்து நடுங்கினான்.
உடனே ரத்னாவளி அவனை ஆறுதல்படுத்தி, காட்டில் நடந்த எதையுமே தான் தந்தையிடம் கூறவில்லை என்று சொல்லி, அவரிடம் தான் சொல்லியிருந்த பொய்யை நாகதத்தனுக்குச் சொல்லி அதன்படியே அவனை சமாளிக்கச் சொன்னாள்.
ஆசுவாசம் கொண்ட நாகதத்தன் பயம் நீங்கி, ரத்னாவளியுடன் வீட்டுக்குச் சென்றான். தன்னை கட்டித் தூக்கிப் போன கொள்ளையரிடமிருந்து அவர்கள் ஏமாந்த சமயத்தில் மிகுந்த சாமர்த்தியமாகத் தப்பி வந்ததாகக் கதை சொல்லிச் சமாளித்தான்.
மாப்பிள்ளை தப்பிப் பிழைத்து வந்ததை தனநாயகர் பெரும் விருந்து வைத்துக் கொண்டாடினார். மனைவி ரத்னாவளியும் கணவனது துரோகத்தை மறந்து அவனுடன் சந்தோஷமாக இல்லறம் நடத்தினாள். நாகதத்தனும் வழக்கம் போல தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர்ந்தான்.
ஆனாலும் கலங்கிய சேற்றுக் குட்டையில் மூழ்கி அதையே சுகமாகக் கருதும் எருமையைப்போல தீய பழக்கங்களில் மூழ்கித் திளைத்த அந்தக் கொடியவனுக்கு ஒழுக்கமான வாழ்க்கையில் நீடித்திருக்க முடியவில்லை.
ஒருநாள் அந்தத் துரோகி நாகதத்தன், இரவு தன்னுடன் படுத்திருந்த மனைவி ரத்னாவளியைக் கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, அவளது நகைகளைப் பறித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான்.
இப்போது சொல்லுங்கள் மகராஜா! பசி பட்டினியிலிருந்து காப்பாற்றி, தனது மகளையே அளித்த தனநாயகருக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசமில்லாமலும், உத்தமியான மனைவி ரத்னாவளிக்குப் பெரும் துரோகத்தை இழைத்தவனுமாகிய நாகதத்தன் போன்ற ஆண்கள் கொடுமைக்காரர்கள்தானே? இந்தக் கதை மூலம் ஆண்கள் எல்லோரும் பெரும் மோசக்காரர்கள் என்பது விளங்குகிறதில்லையா?’ என்றது சோபிகைக் கிளி.
உடனே ஆண் கிளியாகிய விதேகன், ‘பெண்கள் மட்டுமென்ன? பொய், பித்தலாட்டம், சோரம், அக்கிரமம், அயோக்கியத்தனம் போன்றவற்றின் மொத்த உருவம்தானே அவர்கள்! அதற்கு நான் சொல்லப்போகும் இந்தக் கதையே உதாரணம். கேளுங்கள், மகாராஜா!’ என்று கதை சொல்லத் தொடங்கியது.
புருஷபுரம் என்னும் நகரத்தில் ரத்னாகர் என்னும் வியாபாரி இருந்தார். பெரும் செல்வந்தராகிய அவருக்கு வசுந்தரா என்பவள் ஒரே மகள். மிகுந்த அழகியான அவளைப் பக்கத்து நகரத்தில் பெரும் பணக்காரனாகத் திகழ்ந்த சாத்துவன் என்கிற இளைஞனுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். அவர்களது இல்லறம் இனிமையாகவே நடந்தது.
ஒருசமயம் வசுந்தராவின் கணவன் வியாபார விஷயமாக வெளிதேசம் சென்றதால் அவள் தனது பிறந்தகத்துக்கு வந்து தங்கியிருந்தாள். அந்தச் சமயத்தில் கோயிலுக்குச் செல்லும்போதும், கடைத் தெருவுக்குச் செல்லும்போதும் அதே ஊரிலிருந்த அழகான இளைஞன் ஒருவனை அவள் அடிக்கடி காண நேர்ந்தது. அவன் பெயர் இளமாறன். அழகில் மன்மதனாகத் திகழ்ந்த இளமாறன்மேல் வசுந்தராவுக்கு நாட்டம் ஏற்பட்டது. அவனைக் கண்டநாள் முதல் விரகதாபத்தால் தவித்த வசுந்தரா, தனது வேலைக்காரியை அவனிடம் தூது அனுப்பி இளமாறனை தினமும் தனிமையில் சந்தித்துப் பேசினாள். யாருக்கும் தெரியாமல் அவர்களது கள்ளக்காதல் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்தது.
இந்தத் தருணத்தில் வெளிதேசம் போயிருந்த வசுந்தராவின் கணவன் ஊர் திரும்பினான். வந்ததுமே மனைவியைக் காணும் ஆவலில் அவள் வீட்டுக்கு ஓடோடி வந்திருந்தான். கணவன் வந்ததில் வசுந்தராவுக்குச் சிறிதளவும் சந்தோஷமில்லை. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாகக் கணவன் வந்து விட்டானே என்றெண்ணி மனம் குமுறினாள். கணவன் வந்த நாள் முதல் அவள் தனது கள்ளக் காதலனைச் சந்திக்க முடியவில்லை. தவித்து மருகினாள்.
ஒருநாள் இரவு, கணவன் நன்கு உறங்கியதும் வசுந்தரா தனது கள்ளக் காதலனைக் காண்பதற்காகத் திருட்டுத்தனமாகப் புறப்பட்டாள். வழக்கமாகத் தாங்கள் சந்திக்கும் இடத்துக்கு அவனை வரச்சொல்லி முன்னதாகவே தகவல் அனுப்பியிருந்தாள். வெகுநாள்களுக்குப் பின் காதலனைச் சந்திக்கச் செல்வதால் தன்னிடம் இருந்த எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு சர்வ அலங்காரபூஷிதையாகக் கிளம்பினாள்.
இப்படி இவள் கிளம்பியதை அவளது வீட்டுக்குள் பதுங்கியிருந்த திருடன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். மிகச் சரியாக அன்றைக்குத்தான் அவன் வசுந்தராவின் வீட்டுக்குத் திருட வந்திருந்தான். மொத்த நகைகளையும் அணிந்துகொண்டு வசுந்தரா புறப்பட்டுச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் பதறினான். ‘அய்யய்யோ! நான் திருட வந்த மொத்த நகைகளையும் அணிந்து கொண்டு செல்கிறாளே! அப்படி இவள் இந்நேரத்தில் எங்கே செல்கிறாள்?’ என்று நினைத்துக்கொண்டு ஆவலுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.
ஆசையுடனும் பெரும் ஆவலுடனும் தனது கள்ளக் காதலனைச் சந்திக்கச் சென்ற வசுந்தராவுக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வசுந்தராவின் கள்ளக் காதலன் இளமாறன் அங்கிருந்த மரத்தடி ஒன்றில் பாம்பு கடித்து இறந்துபோய் நீலம் பாரித்துப் பிணமாகக் கிடந்தான். அப்படிப் பிணமாகக் கிடந்தவன் உடலுக்குள் அம்மரத்து வேதாளம் ஒன்று புகுந்து கொண்டிருந்தது.
இது ஏதும் அறியாத வசுந்தரா தனது ஆசை நாயகன் மாண்டு கிடந்ததில் மனம் வருந்தி அவனை மடியில் எடுத்துக் கிடத்திக் கொண்டு அழுதாள். அளவுகடந்த துக்கமும் அழுகையுமாகக் காதலனின் பிணத்துக்கு ஓர் ஆசை முத்தம் இட அவள் நெருங்கியபோது, பிணத்தின் உடலுக்குள் இருந்த வேதாளம் வசுந்தராவின் மூக்கைக் கவ்விப் பிடித்துக் கடித்தது. மூக்கின் முனைப் பகுதி துண்டிக்கப்பட்டு பிணத்தின் வாய்க்குள்ளேயே விழுந்தது.
வசுந்தரா வலியில் துடிதுடித்துப் போனாள். ரத்தம் சொட்டச் சொட்டப் பதறி எழுந்தாள். பிணத்துக்குள் ஏதோ பேய் நுழைந்திருக்கிறது என்று உணர்ந்து திடுக்கிட்டவள் அதற்கும் மேல் அங்கே தாமதிக்காமல், ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினாள்.
அவளது மனம் முழுவதும் திகிலாக இருந்தது. காலையில் தன்னைக் காண்பவர்கள் எல்லோரும் துண்டிக்கப்பட்ட தனது மூக்குக்கு விளக்கம் கேட்பார்களே என்ன சொல்வது என்று எண்ணியவள், தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். மனத்தில் ஓர் யோசனை தோன்ற, பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.
‘ஐயையோ! எல்லோரும் வாருங்களேன். என் கணவன் என்கிற இந்த மகாபாவி, ஒரு சாதாரணச் சண்டையில் எனது மூக்கை வெட்டி விட்டானே.’ என்று கதறினாள்.
அவளது அலறலைக் கேட்டு முதலில் விழித்துக் கொண்டவன் வசுந்தராவின் கணவன் தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். அடுத்து வசுந்தராவின் தந்தையும், தாயும் இன்னும் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அங்கே ஓடோடி வந்தனர். மூக்கு வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட நிற்கும் மகளையும், அவள் பக்கத்தில் திகைத்து நிற்கும் கணவனையும் கண்டு, கோபம் கொண்டனர். அவனை எதுவுமே விசாரிக்காமல், அவன் சொல்ல வந்ததையும் கேட்காமல் வெறியுடன் அவனை அடித்து உதைத்தனர். வசுந்தராவின் கணவன் மயங்கி விழுந்தான்.
இது நடந்தது அத்தனையையும் வசுந்தராவைப் பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொண்டிருந்த திருடன் இதற்கும் மேல் இங்கிருந்தால் தனக்கு ஆபத்து என்றெண்ணி ஓசைப்படாமல் நழுவி வீடு போய்ச் சேர்ந்தான்.
மறுநாள், வசுந்தராவின் வழக்கு அரசவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசன் முன்னிலையில் விசாரணை நடந்தது. வசுந்தராவின் கணவன், தான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றும், அவளது மூக்கு எப்படி அறுபட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் சொல்ல, அவனை யாரும் நம்பவில்லை. வசுந்தராவின் சொல்லையே அனைவரும் நம்பினார்கள். இறுதியாக மனைவியின் மூக்கை அறுத்தக் குற்றத்துக்காக வசுந்தராவின் கணவனுக்கு மரணதண்டனை விதித்தான் மன்னன்.
இந்த வழக்கு எவ்விதமாகப் போகிறதென்று காண்பதற்காக திருடனும் அந்த அரசவைக்கு வந்து மக்களோடு நின்று கவனித்துக் கொண்டிருந்தான். மன்னன் வசுந்தராவின் கணவனுக்கு மரண தண்டனை விதித்ததும் திருடன் திடுக்கிட்டுப் போனான். அவனுக்கு அதற்கு மேல் மனம் தாளவில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதைக் காணச் சகிக்காமல் நடந்த உண்மையைச் சொல்லி விடுவதென்று தீர்மானத்துக்கு வந்தான்.
‘மன்னவா! தங்கள் விசாரணையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்!’ என்று சொல்லியபடி சபையின் மையப்பகுதிக்கு வந்து அரசன் முன் பணிந்து நின்றான்.
‘அரசே, இந்தப் பெண்ணின் கணவன் நிரபராதி! ஏதும் அறியாத அப்பாவி! நடந்தது அனைத்தையும் நான் அறிவேன்!’ என்றவன், முன் தினம் இரவு வசுந்தராவின் வீட்டுக்குத் தான் திருடச் சென்றது முதல், கள்ளக் காதலன் வாயில் சிக்கி அவளது மூக்கு அறுபட்டது வரை விளக்கிச் சொன்னான்.
‘மன்னா, இவள் பெரிய சூழ்ச்சிக்காரி! வஞ்சகி! இழிவான பிறவி இவள்! நான் கூறியதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், இறந்து கிடக்கும் இவளது கள்ளக் காதலனின் பிணத்தின் வாயில் பார்த்தால் உண்மை விளங்கும். இந்தப் பெண்ணின் மூக்கு அந்தப் பிணத்தின் வாயில் கிடக்கும்!’ என்றான்.
மன்னனும் அதுபோலவே காவலர்களை அனுப்பிப் பரிசோதிக்க, திருடன் சொன்னது ஊர்ஜிதமானது. மன்னன் வசுந்தராவின் கணவனை விடுதலை செய்து, வசுந்தராவை மொட்டையடித்துக் கழுதை மேல் ஏற்றி நாடு கடத்தும்படிக் கட்டளையிட்டான். வழக்கில் தவறான தீர்ப்பு வழங்காமல் காத்த திருடனுக்குப் பரிசுகள் அளித்து இனி திருடக் கூடாது என்று சொல்லி அரண்மனை உத்தியோகமும் கொடுத்தான்.
இப்போது சொல்லுங்கள் மகாராஜா, பெண்கள்தானே கொடுமைக்காரிகள்? வஞ்சகிகள்?’ என்று ஆண் கிளி விதேகன் கதை சொல்லி முடித்துக் கேட்டதுமே அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
கதைகள் சொல்லிய இரண்டு கிளிகளும் தேவலோகக் கந்தர்வனாகவும், தேவலோகக் கன்னியாகவும் உருமாற்றம் பெற்றன.
‘மன்னவா, நாங்கள் இந்திரன் அளித்த சாபத்தால் இதுவரை கிளிகளாகக் கிடந்தோம். தங்களுக்குச் சொல்லிய இந்தக் கதைகள் மூலம் சாபவிமோசனம் பெற்றோம்!’ என்று சொல்லி இருவரும் விடை பெற்றுக் கொண்டு வானுலகம் மீண்டார்கள்.
இவ்வாறாகக் கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், ‘நீர் சொல்லும் மகாராஜனே! அந்த இரண்டு கிளிகளும் சொன்ன கதைகளில் வரும் ஆண், பெண் இருவரில் மிக மோசமானவர், கொடியவர் யார்? சரியான விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உமது தலை சிதறி விடும்! பதில் சொல்லும் உத்தமரே!’ என்று கேட்டது.
‘வேதாளமே! இந்த இரண்டு கதைகளில் வரும் ஆண், பெண் இருவரில் பெண்தான் மிகவும் மோசமானவள். கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்துவதை விட, அமைதிக்கும், கருணைக்கும், பொறுமைக்கும் உதாரணமாகச் சொல்லப்படும் பெண்ணானவள் தன் கணவனைக் கொடுமைப்படுத்துவதுதான் மிகவும் மோசமான செயலாகும். இக்காலத்தில் பெரும்பாலும் பெண்கள்தான், ஆண்களை விடவும் பொய்யானவர்களாக, துரோகிகளாக இருக்கிறார்கள்!’ என்றான்.
விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் எப்போதும் போல வேதாளம் அவனது தோளை விட்டு முருங்கை மரத்துக்குப் பறந்தது. விக்கிரமாதித்தன் அதைத் துரத்திக் கொண்டு விரைந்தான்.
(தொடரும்)