விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தை இறக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் அடுத்த கதை சொல்லத் தொடங்கியது.
‘அளகாபுரி என்னும் பட்டணத்தை ராஜசிம்மன் என்பவன் ஆண்டு வந்தான். நீதி நெறி வழுவாத அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மிகுந்த மனநிறைவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவனது ஆட்சியில் பசி, பட்டினி, பஞ்சம் என்பதே இல்லை. அவனது பட்டணத்தில் ஏழைகளும் இல்லை. எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவாக வாழ்ந்து வந்தார்கள். இன்னும் சொல்லவேண்டுமானால் பூமியைத் தாங்கி அருள்பாலிக்கும் மாதா பூமாதேவியே மன்னன் ராஜசிம்மனின் நற்குணத்தால் கவரப்பட்டு அவனை ஆசீர்வதித்து அவன் மீது மிக்க அன்புடன் திகழ்ந்தாள்.
இத்தனை சிறப்பு மிக்கவனான ராஜசிம்மன் அரசவைக்கு ஒருநாள் வீரபாலன் என்பவன் அவனது மனைவி வேதவதி, மகன் விஜயன், மகள் லீலாவதி என தனது குடும்பத்தினருடன் மன்னனைக் காண வந்தான். ராஜசிம்மனைக் கண்டு பணிந்து வணங்கினான்.
‘அரசே, நான் ஒரு வீரன். மத்வ தேசத்திலிருந்து வருகிறேன். நானிலமே போற்றிப் புகழும் தங்களின் கீழ் பணியாற்றவே தங்களை நாடி வந்துள்ளேன். தங்களின் அந்தரங்கப் பாதுகாவலனாக என்னை ஏற்றுக் கொண்டால் தங்களுக்கு எந்தத் தீங்கும் ஆபத்தும் நேராமல் காப்பேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்!’ என்று தலை தாழ்த்தி விண்ணப்பித்தான். அவனது குடும்பத்தினரும் மன்னன் முன் கை கூப்பி நின்றிருந்தனர்.
வீரனுக்கே உரிய வாள், கேடயத்துடன் கம்பீரமாகத் தன் முன் நின்று தன்னம்பிக்கையுடன் பேசும் வீரபாலனை மன்னன் ராஜசிம்மனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
மலர்ந்த புன்னகையுடன், வீரபாலனைப் பார்த்து, ‘அப்படியே ஆகட்டும் வீரனே! உன்னை எனது பாதுகாவலனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ நாளையிலிருந்து பணிக்கு வரலாம். இந்த உனது பணிக்குச் சன்மானமாக மாதம் 100 பொற்காசுகள் பெற்றுக் கொள்ளலாம்! ’ என்று கட்டளையிட்டான்.
வீரபாலனும், அவனது குடும்பத்தாரும் மன்னனுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.
மறுதினமே வீரபாலன் பணியில் சேர்ந்தான். அரண்மனை வாசலில் உருவிய வாளுடன் நடைபயின்று அல்லும் பகலும் காவல் காத்தான். வெயில், மழை, காற்று, புயலே அடித்தபோதிலும் தனது கடமையிலிருந்து தவறாமல் சொட்டச் சொட்ட நனைந்தபடி அவன் காவல் புரிந்ததை மன்னன் ராஜசிம்மன் பலநாள்கள் கண்டு வியந்தான். மனத்துக்குள் பாராட்டினான்.
காலம் விரைந்தது.
ஓர்நாள் இரவு மன்னன் தனது பள்ளியறையில் இருந்தான். வீரபாலன் வழக்கம்போல் அரண்மனை வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி காவல்காத்துக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் யாரோ ஒரு பெண் கதறியழும் ஒலி கேட்டது. அந்த அழுகையொலி கேட்பவர்களின் மனத்தை வருத்திப் பிசைந்தது.
மன்னன் ராஜசிம்மன் அந்த அழுகைச் சப்தத்தினால் பாதிக்கப்பட்டு மேன்மாடத்துக்கு வந்து நின்று நாலாதிசையிலும் பார்த்தான். அந்த அழுகைச் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மன்னன் ராஜசிம்மன், வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்த வீரபாலனைப் பார்த்து, ‘வீரபாலா! ஒரு பெண்ணின் அழுகையொலி உனக்குக் கேட்கிறதா?’ என்று கேட்டான்.
‘ஆமாம் அரசே! அந்தச் சப்தத்தை நானும் கேட்டேன்!’ என்றான் வீரபாலன்.
‘நமது ஆட்சியில் இந்த அவலக் குரல் எதிரொலிப்பது மனத்துக்குச் சங்கடமாயிருக்கிறது. யார் அந்தப் பெண்? எதற்காக அழுகிறாள் என்று விசாரித்து வா!’
வீரபாலன் புறப்பட்டுச் சென்றாலும் மன்னன் ராஜசிம்மனுக்கு மனம் கேட்கவில்லை. தனது குடிமக்களில் ஒருத்தி கதறி அழுகிறாள் என்றால் அதில் தனது ஆட்சியின் தவறு ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி அவன் மனத்தைத் துளைக்க, அரண்மனையில் அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனும் அரண்மனையை விட்டு வெளியே வந்து வீரபாலன் போன திசையிலேயே பின் தொடர்ந்தான்.
மன்னனின் கட்டளைப்படி அழுகுரல் கேட்ட திசை நோக்கி விரைந்த வீரபாலன், நகரத்தின் எல்லையில் இருந்த நதிக்கரையை அடைந்தான். நதிக்கரையின் ஓரத்தில் இருந்த மண்டபம் ஒன்றில் சர்வ அலங்கார லட்சணங்களுடன் பெண்ணொருத்தி அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
‘ஐயோ விதியே உனக்குக் கொஞ்சமும் இரக்கமில்லையா? தர்மவானான மகா வீரனை அழைக்கிறாயே! அவனது வாழ்க்கையோடு விளையாடுகிறாயே! இது நியாயமா?’ என்று புலம்பிக் கொண்டு விம்மினாள்.
வீரபாலன் அவளை அணுகி, ‘தாயே! நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா? இந்த அர்த்தராத்திரியில் எதற்காக இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
அப்பெண், ‘மகனே! நான் பூமாதேவி. இந்நாட்டு அரசன் ராஜசிம்மன், என் அன்புக்குரிய மகன். தர்மநெறி தவறாமல் நல்லாட்சி நடத்தும் அந்த நல்லவன் இன்னும் இரண்டொரு நாளில் இறக்கப் போகிறான். அந்தத் துக்கம் தாளாமல்தான் அழுது கொண்டிருக்கிறேன்!’ என்றாள்.
இதைக் கேட்ட வீரபாலன் திடுக்கிட்டுப் போனான். பதறித் துடித்தான்.
அவன் பூமாதேவியிடம், ‘தாயே! பராக்கிரமசாலியும், தயாள குணம் கொண்டவரும், தனது குடிமக்களை, தான் பெற்ற மக்களைப் போல் அரவணைத்துக் காப்பவருமாகிய எனது அன்புக்குரிய மன்னருக்கா மரணம் வரப் போகிறது என்கிறீர்கள்? இல்லை, இல்லவேயில்லை! அப்படி நேரக் கூடாது! தாயே! கடவுளுக்கு நிகரான அன்னை பூமாதேவியே! சொல்லுங்கள் தாயே! நான் மன்னர் ராஜசிம்மனின் பாதுகாவலன். அவரது உயிரைக் காப்பாற்றும் கடமை எனக்கிருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து மன்னரைக் காப்பாற்ற ஏதாவது வழியிருக்கிறதா? தயவுசெய்து உதவுங்கள் தாயே!’ என்று கெஞ்சினான்.
உடனே பூமாதேவி, ‘இருக்கிறது வீரனே! இந்த அபாயக் கண்டத்திலிருந்து ராஜசிம்மனைத் தப்புவிக்கும் வழி ஒன்றிருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றுவது ஆகாத காரியம்!’என்றாள்.
‘தாயே எத்தனை கஷ்டமானதாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றியே தீருவேன்! சொல்லுங்கள் தாயே! என்ன செய்தால் என் மன்னனின் உயிரைக் காப்பாற்ற முடியும்?’
‘வீரபாலா! இந்நகரத்தின் தென் எல்லையில் வனபத்ரகாளியின் கோயில் இருக்கிறது அல்லவா? அக் கோயிலின் பலி பீடத்தில் தகப்பன் ஒருவன் தனது மகனை மனமுவந்து பலி கொடுத்தால் மன்னன் ராஜசிம்மன் இந்த மரணகண்டத்திலிருந்து தப்பித்து விடலாம். இல்லாவிட்டால் இரண்டொருநாளில் அவன் மரணமடைவது நிச்சயம்!’ என்றாள்.
வீரபாலன், ‘தாயே! இதை நான் நிச்சயம் நிறைவேற்றி விடுவேன்! இனி நீங்கள் வருத்தம் கொள்ளவேண்டாம்!’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து விரைந்தான்.
இவ்வாறு வீரபாலனும், பூமாதேவியும் பேசிக்கொண்டு இருந்த சகல விஷயங்களையும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருந்த மன்னன் ராஜசிம்மன் மறைந்திருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தான். இனி வீரபாலன் என்ன செய்யப் போகிறான்? எங்கே செல்கிறான்? என்கிற ஆர்வத்துடன் மன்னன் ராஜசிம்மன் வீரபாலனைப் பின் தொடர்ந்து செல்லலானான்.
நதிக்கரை மண்டபத்திலிருந்து புறப்பட்ட வீரபாலன் நேராக தனது வீட்டை அடைந்தான். அங்கே தனது மனைவியிடம் பூமாதேவி தன்னிடம் கூறியது அனைத்தையும் விளக்கமாகச் சொன்னான்.
இதைக் கேட்ட அவனது மனைவி வேதவதி, ‘குடிமக்கள் சௌக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கவேண்டுமானால் அதற்கு முதலில் நாட்டின் மன்னன் பூரண ஆயுளுடன் நலமாக இருப்பது அவசியம். அவன் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அரசனுடைய நலனுக்காக எதையும் நாம் தியாகம் செய்யலாம்!’ என்றாள்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வீரபாலனின் மகனாகிய சிறுவன் விஜயனும் தன் தந்தையிடம், ‘அப்பா, நமது மன்னர் மிகவும் நல்லவர். இந்நாட்டின் லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கும் கடமையில் இருப்பவர். அவரது உயிரைப் பாதுகாக்கும் கடமை உங்களுக்கு இருப்பது போலவே, தகப்பனின் கடமையில் பங்கேற்பது மகனாகிய எனது கடமையாகும். எனவே நமது மன்னரின் உயிரைக் காப்பாற்ற நான் என் உயிரைத் தரச் சித்தமாயிருக்கிறேன். தாமதிக்க வேண்டாம். வாருங்கள், வனபத்ரகாளியின் கோயிலுக்குச் செல்வோம்.’ என்றான்.
உடனே வீரபாலனின் குடும்பத்தார் மனைவி, மகன், மகள் உட்பட அனைவரும் அந்த நள்ளிரவு நேரத்திலேயே வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குப் புறப்பட்டனர்.
இவ்வளவையும் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த மன்னன் ராஜசிம்மன், வீரபாலன் குடும்பத்தாரின் தியாகத்தை நினைத்து உள்ளம் நெகிழ்ந்து போனான். மேலும் அவர்களைத் தொடர்ந்து சென்றான்.
கோயிலை அடைந்ததும் வீரபாலனின் மகன் விஜயன், தேவியைப் பணிந்து வணங்கி, ‘தாயே, பத்ரகாளி, எனது இந்தச் சிறு உயிரைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, நீதிமானான மன்னர் ராஜசிம்மனுக்கு நீண்ட ஆயுளைத் தா!’ என்று வேண்டிக் கொண்டு பலி பீடத்தில் தனது தலையைப் பொருத்திக் கொண்டான்.
அடுத்தநொடி தனது கூரிய வாளால் மகனின் தலையை வெட்டியெடுத்து அம்மனின் காலடியில் காணிக்கையாக வைத்த வீரபாலன், ‘தகப்பனொருவன் மனமுவந்து தனது மகனின் உயிரைப் பலி கொடுத்தால் மன்னன் உயிர் காக்கப்படும் என்று சொன்னார்கள். நான் அதைச் செய்து விட்டேன். தேவி பத்ரகாளி, இனி நீதான் மன்னர் ராஜசிம்மனை மரண அபாயத்திலிருந்து காப்பாற்றவேண்டும்!’ என்று வேண்டினான்.
அப்போது அசரீரி ஒலித்தது. ‘வீரபாலா, உனது தியாகம் வீணாகாது. மன்னன் உயிர் தீர்க்காயுசாக நீட்டிக்கப்பட்டு விட்டது. இன்னும் பல நூறு வருடங்கள் அவன் நல்லாட்சி புரிவான்!’ என்று கூறியது.
அப்போது மாண்டு போன தனது அண்ணன் விஜயனின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த வீரபாலனின் மகள் லீலாவதி அழுது அழுது அதீதத் துக்கத்தால் இதயம் வெடித்து இறந்து போனாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரபாலனின் மனைவி வேதவதி, கணவனிடம், ‘சுவாமி! கணவனது காரியத்தில் பங்கேற்பது மனைவியின் கடமை. இது முடிந்து விட்டது. மன்னனைக் காப்பாற்ற வேண்டிய உங்களது கடமையில் துணை நின்று காரியம் பூர்த்தியாகி விட்டது. இதில் நமது இரண்டு குழந்தைகளும் இறந்த பிறகு இதற்கு மேல் இவ்வுலகில் எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை. எனவே குழந்தைகளின் உடலுக்குச் சிதை மூட்டி அவர்களுடனே நானும் உயிர் விடச் சித்தமாகி விட்டேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும்!’ என்று சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு, அதுபோலவே குழந்தைகளுடன் எரிந்து சாம்பலானாள்.
பின் பத்ரகாளியின் முன் நின்ற வீரபாலன், ‘தாயே, அசரீரி சொன்ன வாக்கின்படி, மன்னர் ராஜசிம்மர் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி பூரணநலமாக இருந்து நாடாள்வார் என்பது உறுதியாகி விட்டது. நான் எனது குடும்பத்தை இழந்து இவ்வுலகில் துக்கமும் துயரமுமாக வாழ்வதை விட எனது உயிரை விடுத்து அவர்களுடனே போய் விடுவதுதான் சரியானது!’ என்று சொல்லியபடி தனது வாளால் தலையை ஒரே வீச்சில் துண்டித்துக் கொண்டு மாண்டு விழுந்தான்.
இதுவரையிலும் அங்கே நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ராஜசிம்மன் உணர்ச்சிப் பிழம்பாக திகைத்துப் போய் நின்றான். அதிசயப்படுவதா, ஆச்சரியப்படுவதா, துக்கப்படுவதா, வேதனைப்படுவதா ஒன்றும் விளங்கவில்லை.
வீரபாலனின் குடும்பத்தவர் தன் ஒருவனுக்காகச் செய்த தியாகம் அவனுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தி மனத்தை நடுங்கச் செய்திருந்தது. இதயம் நெகிழ்ந்து தவித்தது.
‘எந்த ஒரு மனிதனும் செய்யத் துணியாத பெருந்தியாகத்தைச் செய்த இக்குடும்பத்தினரை நான் எப்படிப் போற்றுவேன்? அர்த்தராத்திரியில் காட்டுக்குள் வந்து இக்குடும்பத்தினர் செய்த தியாகம் யாருக்குமே தெரியப்போவதில்லை. ஆனாலும் எந்தப் பாராட்டையும், புகழ்ச்சியையும் எதிர்பாராமல் என் ஒருவனது உயிருக்காக நான்கு உயிர்களைப் பலியிட்டு விட்டார்களே! இவ்வுலகில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருப்பார்களா? இவர்களை நான் எப்படிக் கௌரவிப்பேன்?’ என்றெல்லாம் நெகிழ்ந்தான்.
அவனது மனம் துயரத்தில் தத்தளித்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாக தேவி பத்ரகாளியின் முன் வந்து நின்றவன், ‘தாயே, மனித உயிர்களில் பெரியது என்ன; சிறியது என்ன? உயர்ந்தது என்ன; தாழ்ந்தது என்ன? உயிர்களின் மதிப்பு ஒன்றேதான்! என் ஒருவனுக்காக நான்கு உயிர்கள் மரித்தது எனக்குக் குற்ற உணர்வாக இருக்கிறது. நானும் இனி உயிர் வாழப் பிரியப்படவில்லை. இந்தா எனது உயிரும் உனக்குக் காணிக்கை!’ என்று சொல்லி வாளை எடுத்து தலையை வெட்டிக் கொள்ள முனைந்தான்.
அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.
‘ராஜசிம்மா அவசரப்படாதே! மற்றவர் வேதனையைப் பொறுக்காத, தியாகத்தை மதிக்கத் தெரிந்த நீதிமானே! வருந்தாதே! இதோ உன் பொருட்டு உயிர் துறந்த அனைவரும் உயிர் பிழைப்பார்கள்!’ என்று சொல்லியது.
மறுகணமே மாண்டுபோன வீரபாலன் குடும்பத்தினர் அனைவரும் உயிர் மீண்டு எழுந்தனர். அவர்களின் கண்களில்படாமல் மன்னன் ராஜசிம்மன் அங்கிருந்து நழுவி அரண்மனை சேர்ந்தான்.
உயிர் மீண்ட வீரபாலன் குடும்பத்தினர் இது அன்னை பத்ரகாளியின் அருள் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி வீடு மீண்டனர்.
மறுநாள் வீரபாலன் எப்போதும்போல் அரண்மனை வாசலில் பணியாற்றச் சென்று காவலிருந்தான். அப்போது மன்னன் ராஜசிம்மன் அவனைத் தர்பாருக்கு அழைத்து வரச் சொல்லி, தானே தனது மந்திரி பிரதானிகளுடன் வந்து வீரபாலனை எதிர்கொண்டு வரவேற்றான். வீரபாலனுக்குத் தனி இருக்கை அளித்து கௌரவித்து, சபையில் உள்ளோருக்கு, முன் தினம் நடந்த நிகழ்வை முழுவதும் கூறினான். சபையோர் திகைத்துத் திக்குமுக்காடி வீரபாலனையும் அவனது குடும்பத்தாரையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.
மன்னன் ராஜசிம்மன் வீரபாலனுக்குப் பெரும் பதவியளித்து, பொன்னும் பொருளும் ஏராளமாகத் தந்து தன்னுடன் இணை பிரியாத நண்பனாக வைத்துக் கொண்டான்’ என்று கதை சொல்லி முடித்த வேதாளம் வழக்கம் போல் கேள்வி தொடுத்தது.
‘மன்னனுக்காகப் பெரும் தியாகம் செய்த வீரபாலன் மற்றும் அவனது குடும்பத்தினர், தனது பணியாளன் செய்த தியாகத்தின் காரணமாக வேதனையில் தனது உயிரையே போக்கிக் கொள்ள முனைந்த மன்னன் ராஜசிம்மன் இவர்களுள் யார் மிக உயர்ந்தவர்? சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே!’
‘ நிச்சயமாக மன்னன் ராஜசிம்மன் தான் உயர்ந்தவன்!’ என்றான் விக்கிரமாதித்தன்.
வேதாளம் திகைப்புடன் கேட்டது. ‘என்ன! விக்கிரமாதித்தரே யோசித்துத்தான் சொல்கிறீரா? மன்னன் உயிருக்காகத் தனது மகன் உயிரையே பலி கொடுத்த வீரபாலன் உயர்ந்தவனில்லையா? பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை மன்னனது நலனுக்காகப் பலி கொடுக்க ஒப்புக் கொண்ட தாய் வேதவதி உயர்ந்தவளில்லையா? மன்னன் உயிர் காக்கத் தனது உயிரையே துணிச்சலாகத் தர ஒப்புக் கொண்ட சிறுவன் விஜயன் உயர்ந்தவனில்லையா? இவர்களையெல்லாம் விட ராஜசிம்மன் எப்படி உயர்ந்தவனாவான்?’
‘அரசனின் கீழ் பணி புரியும் வீரனும், அவனது குடும்பத்தினரும் மன்னனுக்காக உயிர்த் தியாகம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதுதான் உலக நியதி. அதுபோலவே மன்னர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்களின் கீழ் உள்ளவர்களைப் பலி கொடுப்பதென்பதும் சர்வ சாதாரணமான நிகழ்வுதான். இப்படியிருக்கையில் மன்னன் ராஜசிம்மன் தன் கீழ் பணிபுரியும் ஒரு சாதாரண வேலைக்காரனுக்காகவும், அவனது குடும்பத்தினர் செய்த தியாகத்துக்காகவும் மனம் வேதனைப்பட்டு தனது உயிரையே தரச் சித்தமானான் அல்லவா? எனவே அவனது செயலே மிகப் பெரியது. அவனே மிக உயர்ந்தவன்!’ என்று சொன்னான்.
விக்கிரமாதித்தனின் இந்த விளக்கம் மிகச் சரியான பதிலாக அமைய வேதாளம் அவனது தோளிலிருந்து விடுபட்டு தனது இடத்துக்கே சென்று சேர்ந்தது.
(தொடரும்)