Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

விக்கிரமாதித்தன் கதைகள்

தலைகீழாக மரத்தில் தொங்கிய வேதாளத்தை இறக்கி எடுத்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் முனிவன் சுசர்மன் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டான்.

சிறிது தூரம் வரை அமைதியாக வந்த வேதாளம், ‘விக்கிரமாதித்தரே! உம்மைப் பார்த்தால் எனக்கு இரக்கமாக இருக்கிறது. எதற்கு இந்த வீண் முயற்சி? இதனால் நீர் அடையப் போவதுதான் என்ன?’ என்று ஏளனம் செய்து, ‘போகட்டும்! நான் சொன்னால் கேட்கப் போவதில்லை. பொழுது போக ஒரு கதை சொல்கிறேன். அதையாவது கேளும்!’ என்றது. குரலைக் கனைத்துக்கொண்டு கதை சொல்லத் தொடங்கியது.

‘மகத தேசத்தில் தாராவிதாரம் என்னும் ஊரில் விஷ்ணுவர்மன் என்னும் அந்தணன் வசித்து வந்தான். அவன் நல்ல திறமைசாலி. சகல வேத சாஸ்திரங்களும் கற்றுத் தேர்ந்தவன். ஆனால் அவனிடம் ஒரு தீய பழக்கம் இருந்தது. அவனொரு பெரும் சூதாடி. விஷ்ணுவர்மனுக்குக் கல்யாணம் ஆகவில்லை. அவனுக்கு தாய் தந்தையும் இல்லை. எனவே புரோகிதம் பார்த்துச் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சூதாடியே தொலைத்தான் விஷ்ணுவர்மன். ஆனாலும் அவனுக்குச் சூதாட்டத்தின் மீது உண்டான மோகம் கொஞ்சமும் குறையவேயில்லை.

எப்போதும் போல ஒருநாள் விஷ்ணுவர்மன் சூதாட்ட மண்டபத்துக்குச் சென்று சூதாடத் தொடங்கினான். அன்றையநாள் அவனுக்கு நல்லவிதமாக அமையவில்லை. ஓர் ஆட்டத்தில் ஜெயிப்பதும், இரண்டு ஆட்டத்தில் தோற்பதுமாகவே அதிர்ஷ்டம் அவனிடம் கண்ணாமூச்சி ஆடியது. கடைசியில் தன் கைப்பணம் முழுமையும் இழந்தான் விஷ்ணுவர்மன். ஆனாலும் விட்டதைப் பிடித்து விடலாம் என்ற பேராசையுடன் மேலும் மேலும் கடன் சொல்லி சூதாடினான்.

அன்றைய நாள் முடியும் தருணம், கடைசிவரை விஷ்ணுவர்மனுக்கு ஜெயம் கிட்டவேயில்லை. சூதாட்ட விடுதியின் சொந்தக்காரன் விஷ்ணுவர்மனிடம் கடன் பணத்தைக் கேட்க, அவனால் கொடுக்க முடியவில்லை. கோபம் கொண்ட சூதாட்ட விடுதிக்காரன் விஷ்ணுவர்மனை தனது ஆட்களுடன் சேர்ந்து கொண்டு ஆத்திரம் தீர அடித்து உதைத்தான். அடி தாங்காமல் விஷ்ணுவர்மன் மூர்ச்சித்து விழுந்தான்.

இதைக்கண்டு பயந்து போன சூதாட்ட விடுதிக்காரன், விஷ்ணுவர்மன் இறந்து போய்விட்டானென்று நினைத்துப் பயந்துபோய், தனது ஆட்களிடம், ‘டேய்! இவன் பிணத்தைத் தூக்கிப் போய் காட்டில் போட்டு விடுங்கள். மிருகங்கள் இவன் உடலைச் சாப்பிட்டுத் தீர்த்து விடும். நாமும் சிக்கிக்கொள்ள மாட்டோம்!’ என்றான்.

அதன்படியே விஷ்ணுவர்மனைத் தூக்கிப் போன ஆட்கள், ஊர் எல்லையின் காட்டுப் பகுதியில் அவனைத் தூக்கி வீசி விட்டு ஊர் திரும்பினார்கள்.

அவர்கள் அங்கிருந்து போன சிறிது நேரத்துக்கெல்லாம் விஷ்ணுவர்மன் மயக்கம் தெளிந்து எழுந்தான். உடலெல்லாம் வலித்தது. தாகமும் பசியும் வாட்டி வதைத்தது. நடந்ததெல்லாம் அவனுக்கு நினைவு வந்தது. மறுபடியும் ஊருக்குள் போனால் சூதாட்டம் நடத்துபவன் தன்னைச் சும்மா விடமாட்டான் என்பதால் இரவுப்பொழுதை அங்கேயே கழித்துவிட்டு, விடிந்ததும் புறப்பட்டு வேறு ஊருக்குச் சென்று விடலாம் என்று முடிவெடுத்தான்.

அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தபோது கானகத்தினுள் ஒரு பாழடைந்த சிவன் கோயில் இருப்பதைக் கண்டான். உறங்குவதற்கு அதுதான் பத்திரமான இடமென்று விஷ்ணுவர்மன் அந்தக் கோயிலுக்குள் சென்று ஒரு மூலையில் படுத்துக்கொண்டான்.

நள்ளிரவில் பாதி உறக்கத்தில் யாரோ வரும் சப்தம் கேட்டு கண் விழித்தான் விஷ்ணுவர்மன். கோயிலுக்குள் ஒரு திகம்பர சந்நியாசி உள்ளே நுழைந்தார். தலையில் ஜடாமுடியும், கையில் சூலமும், விபூதி பூசிய நிர்வாண உடலுமாகப் பார்க்கவே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்பட்டார் சந்நியாசி.

கோயிலுக்குள் விஷ்ணுவர்மனைப் பார்த்த சந்நியாசி ஆச்சரியத்துடன், ‘அப்பனே! யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார்.

விஷ்ணுவர்மன் சந்நியாசியிடம் தனது கதை முழுவதையும் சொன்னான்.

அதைக் கேட்டு அதிரச் சிரித்த திகம்பர சந்நியாசி, ‘போகட்டும்! கவலைப்படாதே மகனே! அந்தப் பசுபதீஸ்வரன் உனக்கு அருள் செய்வார்!’ என்று சொல்லி, ‘அதிதியாக எனது இடத்துக்கு வந்திருக்கிறாய். பசியுடன் இருப்பாய். வா! நான் பிக்ஷை எடுத்து வந்திருக்கும் உணவில் உனக்கும் தருகிறேன். சாப்பிட்டு விட்டு இளைப்பாறு. விடிந்ததும் புறப்பட்டுச் செல்லலாம்!’ என்றான்.

அதற்கு விஷ்ணுவர்மன், ‘சுவாமி! தயவுசெய்து மன்னியுங்கள். நான் அந்தணன். அப்படியிருக்கும்போது நீங்கள் பிட்சை எடுத்து வந்திருக்கும் உணவை நான் எப்படிச் சாப்பிடுவது? பரவாயில்லை. நீங்கள் சாப்பிடுங்கள்.’ என்றான்.

மீண்டும் இடி இடிப்பதுபோல சிரித்த சந்நியாசி, தனது மந்திர உபாசனையால் வித்யா தேவதையை வரவழைத்தார். ‘தேவி! நமது ஆசிரமத்துக்கு வந்திருக்கும் இந்த அதிதியை நன்றாக உபசரி!’ என்றார்.

‘அப்படியே ஆகட்டும்!’ என்றது வித்யா தேவதை.

அடுத்த கணம் அங்கே ஓர் அற்புதமான அரண்மனை உருவானது. அன்னங்கள் நீந்தும் அழகிய குளங்கள், அருவிகள் கொட்டும் செயற்கைக் குன்றுகள், சலசலத்து ஓடும் எழில் ஓடைகள், அங்கங்கே விதவிதமான ரத்தின மண்டபங்கள், பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிவீடுகள், அவற்றில் தொங்கும் தங்க ஊஞ்சல்கள் என அந்தப் பிரதேசமே மனத்தை மயக்கியது.

அரண்மனைக்குள்ளிருந்து வெளிப்பட்ட அழகழகான பணிப்பெண்கள் விஷ்ணுவர்மனைப் பணிவுடன் அழைத்துச் சென்று பன்னீரால் குளிப்பாட்டி, பட்டுடைகளால் அலங்கரித்து, வாசனைத் திரவியங்கள் தெளித்து சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அறுசுவையிலும் உணவுகள் பரிமாறப் பட்டன. அந்த அழகுப் பெண்களிலேயே பேரழகாகக் காணப்பட்ட வசீகரப் பெண் ஒருத்தி தனது திரண்ட அவயங்களால் விஷ்ணுவர்மனை உரசி அமர்ந்து தானே அவனுக்கு ஊட்டி விட்டாள். பின் அவனுடனேயே படுக்கைக்குச் சென்று அள்ளியணைத்து இரவுபொழுதை இன்பமயமாக்கினாள். அவளின் உபசரணைகளில் விஷ்ணுவர்மன் மயங்கிக் கிறங்கி கண் மூடினான்.

காலைப் பொழுது புலர்ந்து விஷ்ணுவர்மன் கண்விழித்தபோது, அரண்மனையைக் காணவில்லை. அவன் பாழடைந்த சிவன் கோயிலில்தான் கிடந்தான்.

‘என்ன விஷ்ணுவர்மா! இரவுப்பொழுதைச் சந்தோஷமாகக் கழித்தாயா?’ புன்சிரிப்புடன் கேட்டார் திகம்பரர்.

‘ஆம்! சுவாமி! மிக மிக இன்பகரமாகக் கழித்தேன். மனத்தையும் தேகத்தையும் மயக்கத்தில் ஆழ்த்திய அந்த இன்ப சுகம் மீண்டும் மீண்டும் வேண்டும்போல இருக்கிறதே சுவாமி! அது இல்லாவிட்டால் இனிமேல் என் உடலில் உயிர் தரிக்காது என்றே தோன்றுகிறது!’ என்று புலம்பினான் விஷ்ணுவர்மன்.

திகம்பர சந்நியாசிக்கு விஷ்ணுவர்மன் மீது இரக்கம் தோன்றியது. ‘வருந்தாதே விஷ்ணுவர்மா! நீ விரும்பும்வரை இங்கேயே தங்கியிரு. ஒவ்வொரு இரவும் சொர்க்கபோகத்தை அனுபவிக்கலாம்!’ என்று ஆறுதல் கூறினான்.

அதுபோலவே சந்நியாசியின் கருணையால் விஷ்ணுவர்மன் வகைவகையான உணவும், விதவிதமான பெண்களுமாக ராஜபோகமாக நாட்களைக் கழித்தான்.

சிறிதுநாளிலேயே விஷ்ணுவர்மன் மனத்தில் சஞ்சலம் எழுந்தது. இந்த உல்லாசம் சல்லாபமெல்லாம் எத்தனை நாளைக்கு? சந்நியாசிக்குத் தன் மீது அன்பு இருக்கும்வரைதான்! திடீரென அவர் தன்னை விரட்டி விட்டால் பிறகு தன் கதி என்னாவது? விஷ்ணுவர்மன் யோசித்தான்.

வாழ்நாள் முழுவதும் இப்போது போலவே இன்பமாக இருக்கவேண்டுமென்றால் எப்படியாவது சந்நியாசியின் வித்யா மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, கைகால்களில் விழுந்து பணிந்தாவது அந்த மந்திரவித்தைகளை கற்றுக் கொள்வது என்று தீர்மானித்தான்.

ஒருநாள் விஷ்ணுவர்மன் மிகுந்த பணிவுடன் திகம்பரரிடம் கேட்டான்: ‘சுவாமி! தங்கள் கருணையால் இந்த எளியவன் மிகுந்த சந்தோஷமாக வாழ்கிறேன். இந்தச் சுகபோகவாழ்வு இப்படியே நீடிக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறேன். எனவே தயவுசெய்து தாங்கள் இந்த இன்பலோகத்துக்கான மந்திரவித்தைகளை எனக்கு உபாசித்து அருளவேண்டும் சுவாமி!’ என்று இறைஞ்சினான்.

திகம்பர சந்நியாசி, ‘விஷ்ணுவர்மா நீ ஆசைப்படுவதில் தவறொன்றுமில்லை. ஆனால் இதைக் கற்றுக் கொள்வது மிகவும் சிரமம். நீ இந்த வித்தை பயிலும்போது மந்திர உச்சாடனத்தின்போது ஒரு புதிய மாயா உலகமே உன் முன் உருவாகும். அந்த உலகில் நீயும் ஒரு புதிய மனிதனாக உலவுவாய்! அங்கொரு தனி வாழ்க்கையையே நீ வாழத் தொடங்கி விடுவாய்! அந்த அளவுக்கு வசீகரமாக அவ்வுலகம் உன்னை ஈர்க்கும். நீ மந்திரவித்தை பயில்வதற்காக நிஷ்டையில் இருக்கிறாய் என்பதோ, என்ன காரியத்துக்காக இறங்கியிருக்கிறாய் என்பதோ எதுவும் உன் நினைவிலேயே இல்லாதபடி மறக்கடிக்க முயலும். ஆனாலும் நீ முழுக்க அந்த மாய உலகில் மூழ்கும் தருணத்தில் குருவாகிய நான் உனக்கு அதை எனது மந்திரச் சக்தியால் நினைவூட்டுவேன். அதை நீ புரிந்துகொண்டு, அத்தருணத்தில் உன் கண்ணெதிரே தோன்றும் நெருப்பு ஜுவாலையில் சட்டென்று தயங்காமல் உள்ளே புகுந்து விட வேண்டும். அப்படிச் செய்தால் மந்திரவித்தைகள் உனக்குப் பூரணமாகச் சித்தியாகி விடும். அப்படிச் செய்யாமல் விட்டால் நீ ஏமாற்றமடைவாய் என்பதுமட்டுமல்ல தகுதியல்லாத ஒருவனுக்கு மந்திர உபதேசம் செய்த காரணத்துக்காக நானும் மந்திர சக்திகள் அற்றுப் போய் விடுவேன்! இவ்வளவு சிரமம் எதற்கு விஷ்ணுவர்மா? எனது சக்தியைக் கொண்டே இப்போது போலவே என்றும் சந்தோஷமாக இருந்து விட்டுச் செல்லேன்!’ என்றார்.

ஆனால் விஷ்ணுவர்மன் அதற்கு உடன்படாமல் தினம் தினம் அவரை நச்சரித்துக்கொண்டே இருந்தான். வேறுவழியில்லாமல், மனம் இரங்கிய திகம்பர சந்நியாசி அவனுக்கு மந்திர உபதேசம் செய்ய ஒப்புக்கொண்டார்.

நள்ளிரவு நேரத்தில் அவனை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, விஷ்ணுவர்மனின் காதில் சில மந்திரங்களைச் சொல்லி, ‘விஷ்ணுவர்மா! நான் உபதேசித்த இந்த மந்திரங்களை ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கி உச்சாடனம் செய்யத்தொடங்கு. நீ உச்சாடனம் செய்வதை நான் கண்காணித்துக் கொண்டேயிருப்பேன். மாயாலோகத்தில் நீ மதி மயங்கிப் போனால் அப்போது நான் உன்னை எச்சரிக்கை செய்வேன்! நீ உடனே அதைப் புரிந்துகொண்டு, என்னை நம்பி உன் கண்ணெதிரே தோன்றும் நெருப்புக்குள் தைரியமாகக் குதித்து விடு. அப்படிச் செய்தால் வித்தை பூரணமாகச் சித்தியாகி விடும்.’ என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினான்.

விஷ்ணுவர்மன் ஆற்றின் மையத்துக்கு வந்து நீரில் மூழ்கி மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினான். மெல்ல மெல்லத் தன்னை மறக்கத் தொடங்கினான். அவன் கண் முன் ஒரு புதிய உலகம் தோன்றியது. அவ்வுலகில் ஒரு பெரும் பணக்காரனுக்கு மகனாகப் பிறந்து வளர்ந்தான். கல்வி கற்றான். வாணிபம் செய்தான். ஓர் அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவன் மிகுந்த சந்தோஷமாக இல்லறம் நடத்தினான். குடும்பத்தினரோடு குதூகலமாக இருந்தான். அப்போது அவன் கண் முன் ஒரு பெரும் நெருப்புப் பிழம்பு உருவானது. காதில் திகம்பர சந்நியாசியின் குரல் ஒலித்தது. ‘மயக்கத்திலிருந்து விடுபடு! போ! நெருப்பில் குதி!’ குரல் திரும்பத் திரும்பச் சொன்னது. விஷ்ணுவர்மன் குதிக்கப் போனான். அப்போது மாயா உலகின் குடும்பத்தினர் மனைவி, மகன், அவனது தாயார் எல்லோரும் அழுது கதறினார்கள். ‘எங்களை விட்டுப் போகாதே!’ என்று மன்றாடினார்கள். விஷ்ணுவர்மன் நெருப்பில் குதிக்கப்போய் தயங்கினான். அவன் மனது சஞ்சலப்பட்டது. ‘ஐயோ! நான் நெருப்பில் குதித்து இறந்துவிட்டால் என் மனைவி பிள்ளைகள் துன்பப்படுவார்களே! தாயார் துயரத்தில் மூழ்கிப் போவாளே!’ என்றெல்லாம் சலனப்பட்டான். அதனாலேயே நெருப்பில் இறங்காமல் பின் வாங்கினான். தனது மனைவி குழந்தையை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

மீண்டும் சந்நியாசியின் குரல் அவனை அதட்டியது. ‘விஷ்ணுவர்மா! ஏன் தயங்குகிறாய்? போ! சீக்கிரம் நெருப்பில் குதி! பயப்படாதே! குதி! நெருப்பில் குதி!’ விஷ்ணுவர்மன் சுதாரித்துக்கொண்டு கனவுலகிலிருந்து மீண்டு சட்டென்று நெருப்பில் குதித்தான்.

அட! என்ன ஆச்சரியம்! இவன் நெருப்பில் குதித்ததும் நெருப்பு குளிர்ந்துபோய் பனிக்கட்டியாகிப் போனது. உடல் குளிர்ந்து நடுங்கியது! மாயா உலகம் மறைந்து விஷ்ணுவர்மன் நதியில் நின்றிருந்தான். அவன் நீரிலிருந்து கரைக்கு வந்தான்.

சந்நியாசியிடம் நடந்தது அனைத்தையும் தெரிவித்தான்.

‘என்ன நெருப்பு பனிக்கட்டியாகி குளிர்ந்ததா? அதை நீ உணர்ந்தாயா? விஷ்ணுவர்மா நீ மந்திர உச்சாடனம் செய்வதில் ஏதோ தவறு செய்திருக்கிறாய்! இல்லாவிட்டால் நெருப்பு குளிர்ந்திருக்காது!’ என்றார் சந்நியாசி.

‘இல்லை சுவாமி! நிச்சயமாக உச்சாடனத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை!’ என்றான் விஷ்ணுவர்மன்.

திகம்பர சந்நியாசி இந்த நிகழ்வில் என்ன தவறு நேர்ந்திருக்கிறதென்று தெரிந்து கொள்வதற்காக வித்யா தேவதையை அழைக்க மந்திர உச்சாடனம் செய்ய முயன்றார். ஆனால்…ஆனால்… என்ன முயற்சித்தும் அவருக்கு மந்திரங்கள் ஏதும் நினைவுக்கு வரவில்லை.

குரு மந்திரோபதேசம் செய்தும் விஷ்ணுவர்மனுக்கு வித்தை கைகூடவில்லை. அவனுக்கு உபதேசித்த சந்நியாசியோ மந்திர வித்தைகள் முற்றிலும் மறந்து சக்தியற்றுப் போய் விட்டார்.’

இவ்வாறாகக் கதையை முடித்த வேதாளம் கேட்டது: ‘விக்கிரமாதித்த மன்னனே! விஷ்ணுவர்மன் சிரத்தையாக மந்திர உச்சாடனம் செய்தும் அவனுக்கு ஏன் மந்திரவித்தை சித்தியாகவில்லை? அவனுக்கு மந்திரோபதேசம் செய்த திகம்பர சந்நியாசி தன் சக்தியை இழந்தது எதனால்? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உனது தலை சுக்குநூறாகச் சிதறிப் போய் விடும்.’ என்றது.

விக்கிரமாதித்தன் பதிலுரைத்தான். ‘தானம், தர்மம், விரதம், கல்வி, காரியம் ஏதானாலும் செய்யும் செயலில் சிரத்தை மிக முக்கியம். மனதை ஒருநிலையாகக் குவித்து வைத்துச் செயல்பட்டால் எந்தக் காரியமும் ஜெயமாகும். அல்லாதபோது அது அஜெயமாகிறது. சந்நியாசியிடம் உபதேசம் பெற்றாலும் விஷ்ணுவர்மன் மனதில் திடமில்லை. அவன் தனது காரியத்தில் கவனமாக மனத்தைக் குவிக்கவில்லை. அவன் மனத்தில் சலனமும் சஞ்சலமும் தோன்றிவிட்டபோதே எடுத்த காரியத்தில் தோற்றுப் போனான் எனலாம். அதனால்தான் அவனுக்கு மந்திரவித்தை கிட்டவில்லை. திகம்பர சந்நியாசியோ பாத்திரம் அறியாமல் பிச்சையிட்டதுபோல, நிலையில்லாத மனத்தை உடைய சிஷ்யனுக்கு மந்திரோபதேசம் செய்ததால் அதற்குரிய தண்டனையாகத் தனது சக்தியை இழந்தார்!’

விக்கிரமாதித்தனது இந்தச் சரியான பதிலால் வேதாளம் அவனை விட்டுப் பறந்தது.

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *