Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

பறந்து போன வேதாளத்தைத் துரத்திச் சென்று, மீண்டும் அதை இறக்கித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன்.

வேதாளம் தனது அடுத்த கதையைத் தொடங்கியது.

‘விதேகபாலன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக தேசத்தில் குபேரதத்தன் என்னும் வணிகன் இருந்தான். பெரும் பணக்காரனான அவனுக்கு ஒரேயொரு மகள். பெயர் மதனமஞ்சரி. தேவலோகத்தின் கந்தர்வகன்னிகளைப் போன்ற பேரழகி. மதனமஞ்சரியின் அழகைப் பார்த்து அவ்வூரின் அநேக இளைஞர்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டார்கள். அவளது கடைக் கண் பார்வையாவது தன் மேல் படாதா என்று தவமிருந்தார்கள்.

ஆனால் மதனமஞ்சரி அவர்கள் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் தயாராயில்லை. ஏனெனில் அவள் மனத்தில் ஏற்கெனவே ஒருவன் குடியேறி இருந்தான். அவனொரு பிராமண வாலிபன். ஓடிப் பிடித்து விளையாடிய பால்ய வயதிலேயே அவள் இதயத்தில் இடம் பிடித்து விட்ட அந்த வாலிபனின் பெயர் வித்யாசாகரன். இருவரும் ஒருவரை ஒருவர் மனமாற நேசித்தார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஒன்று சேருவோமா என்பது அவர்களுக்குக் கேள்விக்குறியாகவே இருந்தது.

மதனமஞ்சரி பெரும் செல்வந்தரின் மகள். வித்யாசாகரனோ ஓர் ஏழைப் பிராமணன். இவர்களின் காதலை மஞ்சரியின் தந்தை எப்படி ஏற்றுக்கொள்வார்?

காதலன் வித்யாசாகரன் ஒருநாள், தங்களது வழக்கமான இடத்தில் மதனமஞ்சரியைச் சந்தித்தபோது, ‘மதனா! நான் பக்கத்து நாட்டுக்குச் சென்று வரலாம் என்று நினைக்கிறேன். அங்கிருக்கும் எனது நண்பன் பொருள் சம்பாதிப்பதற்கு அங்கே பல வழிகள் இருப்பதாகச் சொல்லி என்னை அழைத்துள்ளான். நான் போய் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு உனது தந்தையின் அந்தஸ்துக்குத் தக்கவாறு செல்வந்தவனாக வந்து உன்னைப் பெண் கேட்டு திருமணம் செய்துகொள்கிறேன். அதுவரை பயப்படாமல் இரு. விரைவிலேயே வந்து விடுகிறேன்!’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுப் போனான்.

போனவன் போனவன்தான். நாட்கள் விரைந்தன. வாரம், மாதம், வருடங்கள் கடந்தன. இரண்டு வருடங்கள் கடந்த பிறகும் வித்யாசாகரன் திரும்பவில்லை.

மதனமஞ்சரியின் தந்தை குபேரதத்தன் தனது மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கினார். பக்கத்து நாட்டில் இவர்களைப் போலவே வியாபாரம் செய்து வந்த வணிகக் குடும்பத்தின் பிள்ளையான வர்த்தமானன் என்பவனைத் தனது மகளுக்கு மணாளனாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தார்.

மதனமஞ்சரிக்கு மனமுடைந்து போனாள். மனதுக்குப் பிடித்தவன் காணாமல் போய்விட்டான். இவளுக்குத் தாலி கட்டியவனோ மனதுக்குப் பிடிக்காதவன் ஆகிப் போனான். ஆமாம்! கணவன் வர்த்தமானனை அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தலைவிதியே என்று உணர்ச்சியற்ற ஒரு மரப்பொம்மை போல் இல்லறம் நடத்தினாள்.

ஆனால் வர்த்தமானனோ மதனமஞ்சரி மீது தனது உயிரையே வைத்திருந்தான். பெரும் பேரழகியான ஒருத்தி தனக்கு மனைவியாகக் கிட்டியதில் மிகுந்த சந்தோஷம் கொண்ட வர்த்தமானன், மாமனார் வீட்டோடே தங்கி குபேரதத்தனின் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு மதனமஞ்சரியுடன் உல்லாசமாகக் குடும்பம் நடத்தினான்.

ஒருமுறை குபேரதத்தனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவருக்குப் பதிலாக வர்த்தமானன் வியாபார விஷயமாகப் பக்கத்து நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.

இதற்காகவே காத்திருந்த மதனமஞ்சரி அப்போது ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். வர்த்தமானனுடன் போலியாகக் குடும்பம் நடத்திக் காலம் கழிப்பது அவளுக்கு நரகவேதனையாக இருந்தது. வாழ்நாள் முழுக்க இந்தத் துன்பத்தைத் தொடர முடியாது என்று தோன்றியது. இதிலிருந்து விடுபட மரணம்தான் ஒரேவழி என்று தீர்மானத்துக்கு வந்தவள், வீட்டுத் தோட்டத்திலிருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து கயிற்றுடன் விரைந்தாள்.

அப்போது மதனமஞ்சரியின் தோழி சத்யவதி அவ்விடம் மூச்சிரைக்க ஓடோடி வந்தாள்.

‘மதனா! உனக்கு விஷயம் தெரியுமா? உனது காதலர் வித்யாசாகரன் மீண்டும் ஊர் திரும்பி விட்டாரடி!’ என்று கூறினாள்.

மதனமஞ்சரிக்கு உலகமே ஒருகணம் ஸ்தம்பித்து விட்டதுபோலத் தோன்றியது. மனத்துக்குள் சந்தோஷம் பீறிட்டது. ‘என்ன! என்ன சொன்னாய்? வித்யாசாகரன் வந்துவிட்டாரா? அவரை நீ நேரில் பார்த்தாயா?’ படபடப்புடன் கேட்டாள்.

‘ஆமாம் மதனா! நானே அவரைப் பார்த்துப் பேசினேன்! பல நாடுகளையும் சுற்றித் திரிந்து தொழில் செய்து ஏராளமாகச் செல்வம் சேர்த்துக்கொண்டு பெரும் செல்வந்தராகத் திரும்பியிருக்கிறார். ஆனால் என்ன? உனக்குத் திருமணம் ஆகிவிட்டதைச் சொன்னதும் மனம் உடைந்து போய்விட்டார். கண்களில் கண்ணீர் திரண்ட அவரது முகத்தை என்னால் காணச் சகிக்காமல் விடை பெற்று வந்து விட்டேன்!’ என்றாள் சத்யவதி.

தோழி கூறியதைக் கேட்டதும் மதனமஞ்சரி முகம் வாடிப் போனாள். அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் திரண்டு கொட்டியது. விம்மலுடன் சத்யவதியிடம் சொன்னாள்.

‘சத்யா! எனக்கு அவரைப் பார்க்கவேண்டும். அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும். ஒரேயொருமுறை அவரைச் சந்திக்க எனக்கு உதவி செய்வாயா?’

நொடி நேரம் யோசித்த சத்யவதி, ‘கலங்காதே மதனா! உங்கள் இருவர் சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்!’ என்று சொல்லி வித்யாசாகரன் வீட்டுக்குச் சென்றாள். மதனமஞ்சரி அவனை காண விரும்புவதைச் சொல்லி, மதனமஞ்சரி வீட்டை விட்டு வருவது கடினம் என்பதால், மறுநாள் அந்திப்பொழுது இருட்டும் நேரத்தில் வித்யாசாகரனை மதனமஞ்சரியின் வீட்டுத் தோட்டத்துக்குப் பின்வாசல் வழியாக வந்து காத்திருக்கச் சொன்னாள்.

அதன்படி மறுநாள் மாலை வித்யாசாகரன் மதனமஞ்சரியின் வீட்டுப் பின்புறத்தில் தோட்டத்து மண்டபத்தில் காத்திருந்தான்.

வீட்டுக்குள்ளிருந்து தோட்டத்துக்கு வந்த மதனமஞ்சரி, மண்டபத்தில் இருந்த வித்யாசாகரனைப் பார்த்ததும் ஓடோடி வந்தாள். ‘அன்பரே! என் காதலரே!’ என்று கதறி அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். ஆவேசத்துடன் முத்தமிட்டாள். ஆசையுடன் அவன் தோளில் சாய்ந்தாள்.

அவ்வளவுதான்! அவளது சுவாசம் நின்று போனது. பல வருடங்களுக்குப் பிறகு திடீரெனக் காதலனைச் சந்தித்த அதிர்ச்சி, ஆனந்தம், உச்சக்கட்டச் சந்தோஷத்தின் காரணமாக அவளது இதயம் நின்று போய்விட்டது. மதனமஞ்சரி மாண்டு போனாள்.

‘மஞ்சரி! மஞ்சரி! என்னாயிற்று உனக்கு!’ மதனமஞ்சரியை எழுப்பிப் பார்த்த வித்யாசாகரன் அவள் இறந்து போனதைக் கண்டு அதிர்ந்து போனான். அவளைக் கட்டித் தழுவிக் கதறினான். அதீதத் துயரத்தின் காரணமாக அவனது இதயமும் வெடித்து ரத்தம் வெளிப்பட்டு மஞ்சரியைக் கட்டித்தழுவியபடியே மண்ணில் இறந்து வீழ்ந்தான்.

மஞ்சரியின் அறையில் காத்துக் கொண்டிருந்த தோழி சத்யவதி நேரமாகியும் மதனமஞ்சரி வராததால் அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்துக்கு வந்தவள், இருவரும் இறந்துகிடப்பதைப் பார்த்து அலறினாள். அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்தனர்.

மதனமஞ்சரியும், வித்யாசாகரனும் இறந்து கிடந்ததைக் கண்டு தோழி சத்யவதியின் மூலம் நடந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டார்கள். திருமணம் ஆகியும் திருட்டுத்தனமாக மாற்றானைச் சந்தித்திருக்கிறாளே என்று உறவினர்கள் சிலர் திட்டினார்கள். சிலர் உன்னதக் காதல் என்று பரிதாபப்பட்டார்கள். குபேரத்தத்தன் பெற்ற பெண்ணால் குடும்ப மானம் போயிற்றே என்று மனம் குமுறினார்.

அப்போது வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்த வர்த்தமானன் வீடு திரும்பினான். வீட்டுத் தோட்டத்தில் ஏக களேபரமாக மக்கள் கூடியிருப்பதைப் பார்த்து அவனும் அங்கே வந்தான்.

மண்ணில் இறந்து கிடப்பவர்களைப் பார்த்தான். மாற்றானுடன் கை கோர்த்த நிலையில் தனது ஆசைக்குரிய மனைவி மாண்டு கிடப்பதைக் கண்டான். மனைவி மீதான ஆசை ஒருபுறமும், இன்னொருவன் பக்கத்தில் மனைவி படுத்துக் கிடப்பதைக் கண்ட துயரம் ஒருபுறமும் அவனது இதயத்தைத் தாக்க அதிர்ச்சியில் அவனது உயிரும் அவன் உடலை விட்டு விலகியது. வர்த்தமானனும் பிணமாக மண்ணில் விழுந்தான்.

ஒரே சமயத்தில் மூவர் இறந்ததைக் கண்டு அந்த ஊரே ஒப்பாரி வைத்து அழுதது.’ என்று கதையை முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது.

‘மன்னவரே! விரகதாப மோகத்தால் மாண்டு போன இந்த மூவரின் மரணத்தில் யாருடைய மரணம் உன்னதமானது?’ என்று கேட்டது.

பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் தலை சிதறி விடும் என்பதனால் விக்கிரமாதித்தன் பதிலுரைத்தான்.

‘இந்த விரகதாப மோக மரணத்தில் வர்த்தமானனின் மரணமே உன்னதமானது. மற்ற இருவரும், வித்யாசாகரனும், மதனமஞ்சரியும் பால்யபருவத்தில் இருந்தே பழகி வளர்ந்து நேசம் வளர்த்தவர்கள். அந்தப் பரஸ்பர நேசத்தின் காரணமாக அவர்கள் உயிர் துறந்தார்கள் என்பது சாதாரணமானதுதான். ஆனால் தனது மனைவியை மாற்றான் அருகில் பார்த்த பிறகும் அவள் மீது கோபமோ, ஆத்திரமோ கொள்ளாமல் அளவு கடந்த பிரியத்தின் காரணமாக உயிர் நீத்த கணவன் வர்த்தமானனின் மரணமே மிக உன்னதமானது!’

மேற்கண்ட சரியான பதிலைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் தோளில் இருந்து முருங்கை மரத்துக்கே தாவிச் சென்று தொங்கியது வேதாளம்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *