விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைப் பிடித்துக் கட்டி தனது தோள்மீது தூக்கிக் கொண்டு நடந்தான். மயானப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்ததுமே, வேதாளம், மீண்டும் கதை சொல்லத் தொடங்கியது.
‘பொறுமையிலும் வீரத்திலும் சிறந்த மன்னவனே, போகும் வழிப்பயணம் அலுக்காது இருக்கச் சுவாரஸ்யமான கதையொன்று சொல்கிறேன் கேள்!’
விக்கிரமாதித்தன் கதையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
விஷ்ணுஸ்தலம் என்னும் ஊர் மகத தேசத்தில் இருக்கிறது. அவ்வூரில் பிராமணச் சகோதரர்கள் நால்வர் வசித்து வந்தார்கள்.
பிராமணச் சகோதரர்கள் இளமைப் பருவத்தை அடைந்தபோது அவர்களின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள். சொத்து சுகம் ஏதுமில்லை. இவர்களை ஆதரிக்கவோ, உதவிசெய்யவோ யாருமேயில்லை. உறவினர்களும் ஒதுக்கித் தள்ளினார்கள். நால்வரும் ஊருக்குள் சின்னச் சின்னப் புரோகித வேலைகள் பார்த்துக் காலம் கழித்தார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா நாட்களிலும் வேலை இருக்கவில்லை. பாதி நாள் பட்டினியாகவே இருக்க நேர்ந்தது.
ஒருநாள் வறுமையின் வேதனை தாளாமல் சகோதரர்களில் மூத்தவன் மனம் வெறுத்துப்போய் தற்கொலை செய்துகொள்வதென்று முடிவெடுத்தான். ஊரின் இடுகாட்டுக்குச் சென்று அங்கிருந்த மரத்தின் கிளையொன்றில் கயிறு கட்டித் தூக்கில் தொங்கினான். கயிறு கழுத்தில் இறுகி அழுத்தியது. வலி தாங்காமல் உடல் துள்ளியது. அதன் வேகத்தில் மரக்கிளை முறிந்து கீழே விழுந்தான்.
அப்போது மூத்த சகோதரனைக் காணாமல் அவனைத் தேடிக்கொண்டு வந்த மற்ற மூன்று சகோதரர்களும் கீழே விழுந்து கிடந்த அண்ணனைக் கண்டார்கள். நடந்ததைப் புரிந்துகொண்டு கண்கலங்கினார்கள்.
‘அண்ணா! ஏன் இந்த விபரீத முடிவுக்கு வந்தாய்? மிக்க அறிவாளியாகிய நீ இந்த ஏழ்மையையும் வறுமையையும் கண்டு அஞ்சலாமா? இது எப்போதும் நீடிக்குமென்றா அஞ்சுகிறாய்? இல்லை… இல்லைவேயில்லை. இரவில் பயத்தை விதைக்கும் இருளானது விடியலில் காணாமல் போய்விடும். அதுபோலவே நமது ஏழ்மையும் கஷ்டமும் நிச்சயம் விரைவில் நம்மை விட்டு நீங்கி விடும். அதற்கான வழி என்னவென்றுதான் நாம் சிந்திக்கவேண்டும்!’ என்றான்.
இதைக் கேட்ட மற்ற சகோதரன், ‘நாம் நமது வறுமையில் இருந்து விடபட வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது வித்தையையோ, பெரும் சக்தியையோ பெறவேண்டும். அப்படி நாம் நம்மை உயர்த்திக் கொண்டால் அளவில்லா செல்வாக்கையும், செல்வத்தையும் பெற்றுவிடலாம்!’ என்றான்.
கடைசி சகோதரன், ‘ஆம்! இதுதான் சரியான வழி! நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு திசையில் பிரிந்து செல்வோம். உலகம் முழுக்கச் சுற்றி மாய மந்திர வித்தைகள் கற்றுத் திரும்புவோம். இன்னும் ஆறு மாதக் காலம் கழித்து இதே பௌர்ணமி தினத்தன்று இதே இடத்தில் சந்திப்போம்! என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
அனைவரும் ஒப்புக்கொண்டு நான்கு திசைகளிலும் திசைக்கொருவராகப் பிரிந்து சென்றார்கள்.
நாட்கள் அசுரவேகத்தில் விரைந்தன. ஆறுமாத காலம் சென்றதும் நான்கு சகோதரர்களும் திட்டமிட்ட இடத்திலேயே ஒன்று கூடினார்கள். யார் யார் என்னென்ன வித்தைகள் கற்றுக்கொண்டு வந்துள்ளார்கள் என்று பரஸ்பரம் பகிர்ந்துகொண்டார்கள்.
முதல்வனான அண்ணன் கூறினான்: ‘என்னிடத்தில் எந்தவொரு பிராணியின் சிறு எலும்புத் துண்டு கிடைத்தாலும் போதும். அதன் மூலம் மற்ற எலும்புகளை உருவாக்கி அந்தப் பிராணியின் மாமிசக் கூடை என்னால் உருவாக்கி விட முடியும். அப்படியொரு வித்தையை நான் கற்றுக்கொண்டு வந்துள்ளேன்!’
அதைக் கேட்டதும் அடுத்தவன், ‘ஏதாவது ஒரு பிராணியின் மாமிசக்கூடு கிடைத்தால் நான் அப்பிராணிக்குச் சதை, நரம்புகள், மயிர், தோல் போன்றவற்றை உருவாக்கி விடுவேன். அம்மாதிரி வித்தையைத்தான் நான் கற்றுள்ளேன்!’ என்று கூறினான்.
உடனே மூன்றாவது சகோதரன், ‘நீங்கள் அம்மாதிரி மாமிசக் கூடு, தோல், சதை, நரம்புகள் போன்றவற்றை உருவாக்க முடியுமானால், என்னால் அப்பிராணிக்கு ரத்த ஓட்டம், மற்ற உடல்பாகங்களையும் கூட உருவாக்கி விட முடியும். இவ்வித்தையில் நான் கைதேர்ந்திருக்கிறேன்!’ என்றான்.
கடைசி சகோதரன், ‘அண்ணன்மார்களே, இவ்விதமாக ஒரு பிராணியின் எலும்புக் கூடு, மாமிசம், நரம்புகள், இரத்தஓட்டம் எல்லாம் அமைந்து விட்டால் நிச்சயம் அப்பிராணிக்கு என்னால் உயிர் ஊட்டமுடியும். அந்த அற்புத வித்தையை நான் கற்று வந்திருக்கிறேன்!’ என்று சொல்லி அனைவரையும் வியக்க வைத்தான்.
இப்படியாக நால்வரும் அவரவர் கற்ற வித்தையைக் கூறி முடித்ததும் அனைவரும் அருகிலிருந்த காட்டிற்குச் சென்றார்கள். தாங்கள் கற்ற வித்தையைப் பரிட்சித்துப் பார்த்து விடலாம் என்ற முடிவுடன், ஏதேனும் பிராணியின் எலும்பு கிடைக்குமா என்று தேடினார்கள்.
சில நிமிடங்களிலேயே அங்கே ஒரு பிராணியின் எலும்புத் துண்டு ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அந்த எலும்பு சிங்கத்தினுடையது என்று அவர்களுக்குத் தெரியாது.
முதல் சகோதரன் அந்த எலும்புத் துண்டை வைத்து தனது வித்தையின் மூலம் அந்த மிருகத்துக்கு மாமிசப் பிண்டத்தை உருவாக்கினான். அடுத்தவன் அதற்குத் தோல், நரம்புகள், சதை அனைத்தையும் உருவாகினான். மூன்றாமவன் பிற அவயங்கள், நரம்புகள், அதற்கு இரத்த ஓட்டம் என அனைத்தையும் உருவாக்கி முடித்தான். நான்காமவன் அந்த மிருகத்துக்கு உயிர் கொடுத்தான்.
அவ்வளவுதான்! அடுத்தநொடி பிடரிமயிர் சிலிர்த்து, கோரப்பற்கள், நகங்களுடன் கர்ஜனை செய்தபடி ஒரு கம்பீரமான, ஆஜானுபாகுவான சிங்கம் ஒன்று அங்கே உயிர் பெற்றெழுந்தது. எழுந்து நின்றதுமே கண்ணெதிரே நின்ற நால்வரையும் பார்த்தது. உடனே, அது முதல் காரியமாகத் தனக்கு உயிர் கொடுத்த அந்த நால்வரையும் கொன்று உணவாக்கிக்கொண்டது. வயிறு நிரம்பிய திருப்தியுடன் காட்டுக்குள் சென்று மறைந்தது.
விதி வலியது என்பார்கள். யாரால் அதை மாற்றமுடியும்? சகோதரர்கள் நால்வரும் வித்தை கற்றுத்தான் என்ன? அவர்கள் திறமைசாலிகளாக இருந்துதான் என்ன? எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்கிற விவேகம் இல்லாமல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் அகம்பாவத்துடன் கொஞ்சம்கூட யோசனையின்றிச் செயல்பட்டு மரணத்தை வரவழைத்துக் கொண்டார்கள்.’ என்று சொல்லி கதையை முடித்தது வேதாளம்.
பின் விக்கிரமாதித்தனிடம் கேட்டது: ‘சலிப்படையாத வேந்தனே! இந்தக் கதையில் நால்வரையும் கொன்ற சிங்கத்தை உருவாக்கிய பழியானது யாரைச் சேரும்? பதிலைச் சொல்!’ என்று கேட்டது.
வேதாளம் மீண்டும் மரத்துக்குத் தாவிச் செல்லத் தயாராகி விட்டது என்று புரிந்து கொண்ட விக்கிரமாதித்தன், மறுபடியும் அதை துரத்திச் சென்று தூக்கி வர மனதளவில் மீண்டும் தயாரானவனாக, வேதாளத்திடம் கூறினான்.
‘சிங்கத்துக்கு உயிர் கொடுத்தவனையே அந்தப் பழி சேரும். ஏனெனில் மற்றவர்கள் மாமிசப் பிண்டம், தோல், மயிர், நரம்புகள் என்று அவரவர் வித்தையினால் அந்த மிருகத்தை உருவாக்கும்போது அவர்கள் தாம் எந்தப் பிராணியைச் சிருஷ்டிக்கிறோம் என்பது தெரியாமலே அதைச் செய்தனர். ஆனால் அந்தப் பிராணி முழு உருவமாக ஒரு சிங்கமாக உருவாகி நிற்கும்போது, அதைக் கண்ணால் பார்த்தும் அண்ணன்களுக்குத் தனது திறமையை நிரூபிப்பதற்காக உயிர் ஊட்டினானே அவனையே பழி, பாவம், பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும்!’
விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் மறுபடியும் அவனது தோளில் இருந்து நீங்கி முருங்கை மரம் அடைந்தது. விக்கிரமாதித்தன் திரும்பி முருங்கை மரம் நோக்கி விரைந்தான்.
(தொடரும்)