மீண்டும் வேதாளம் பறந்து சென்ற திசை நோக்கி விரைந்த விக்கிரமாதித்தன் சலிப்பின்றி மரத்தின் மீது ஏறினான். வேதாளம் புகுந்திருந்த அந்த சடலத்தை மறுபடியும் மரத்திலிருந்து இறக்கித் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, பயணத்தைத் தொடங்கினான் விக்கிரமாதித்தன்.
சிறிது தூரம் நடந்தவுடனேயே வேதாளம், ‘வீர ராஜனே உனக்கொரு கதை சொல்கிறேன் கேள்!’ என்று அடுத்த கதையை ஆரம்பித்தது.
‘சந்திரபாஹா நதிக்கரையில் இருந்த கலிங்க தேசத்தை ருக்மதாங்கன் என்கிற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த நற்குணங்கள் நிறைந்தவன். மற்ற மன்னர்கள் போல நாடு பிடிக்கும் ஆசை இல்லாதவன். தனது குடிமக்களை அன்போடும் பண்போடும் அரவணைத்து ஆண்டு வந்தான்.
அவனது தேசத்தில் தங்கபாலன் என்கிற பெரிய வியாபாரி ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரே மகள். பெயர் ரத்னபிரபை. தேவமகளிர் போன்ற பேரழகு கொண்டவள். அவளது அழகில் மயங்காதவர்களே கிடையாது எனலாம்.
ரத்னபிரபை திருமண வயது அடைந்ததுமே அவளை மன்னனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என வியாபாரி தங்கபாலன் எண்ணம் கொண்டான். அதுபோலவே ஒருநாள் அவன் ருக்மதாங்கன் அரண்மனைக்குச் சென்று மன்னனைச் சந்தித்துப் பேசினான்.
‘அரசே! எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவலோகத்துப் பெண்களுக்கு நிகரான அழகு கொண்டவள். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவள். உலகின் சிறந்தவை அனைத்தும் முதலில் அரசனின் பார்வைக்கே வரவேண்டுமென்பதால்,பேரழகியான எனது மகளைப்பற்றி முதலில் தங்களிடம் தெரிவித்து தங்கள் கருத்தைத் தெரிந்து போக வந்துள்ளேன்’ என்றவன், தொடர்ந்து சொன்னான். ‘அவளைத் தங்களுக்கு மணம் செய்துகொடுக்கவேண்டுமென்பது எனது ஆசை. மற்றபடி அவளை ஏற்றுக்கொள்வதோ ஏற்றுக் கொள்ளாததோ தங்கள் விருப்பம். தாங்கள் பதில் அறிந்த பிறகே நான் மற்றதை உத்தேசிக்கவேண்டும்’ என்று கூறினான்.
மன்னன் வியாபாரியின் விருப்பத்தைப் புறந்தள்ள விரும்பாமல், தனது முக்கிய மந்திரி பிரதானிகளை அழைத்து அந்தப் பெண்ணைச் சென்று பார்த்து வரச் சொன்னான். மன்னனின் மனைவியாவதற்கு உரிய சாமுத்ரிகா லட்சணமும், மங்கலக் குறிகளும் அப்பெண்ணிடம் தென்படுகிறதா என்று கண்டு வருமாறு அனுப்பி வைத்தான்.
மன்னன் கட்டளைப்படியே மந்திரி பிரதானிகள் வியாபாரியின் வீட்டுக்குச் சென்றார்கள். ரத்னபிரபையைக் கண்டார்கள். அவளது பேரழகில் மலைத்துப் போனார்கள். இத்தனை பேரழகு கொண்ட ரத்னபிரபையை மன்னன் மணந்து கொண்டால் நிச்சயம் கெடுதல்தான் வரும் என்று எண்ணினார்கள். மன்னன் நிச்சயம் இப்பெண்ணின் அழகில் மயங்கி நாட்டைக்கூடக் கவனிக்காமல் அந்தப்புரமே கதியாகக் கிடந்து விடுவான் என்று கருதினார்கள். எனவே இப்பெண்ணிடம் மன்னனை மணந்துகொள்ளக்கூடிய மங்கலக்குறிகள் தென்படவில்லை என்று மன்னனிடம் பொய் சொல்லி விட்டார்கள்.
எனவே, மன்னன் வியாபாரியிடம் அவனது மகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பின்னர், வியாபாரி தனது மகள் ரத்னபிரபையை மன்னனின் படைத்தளபதியான வீரவில்வலன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான். ரத்னபிரபை தனது கணவனுடன் புகுந்த வீடு சென்று சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினாள். ஆனாலும் மன்னன் தன்னிடத்தில் மங்கலக் குறிகள் இல்லை என்று புறக்கணித்தது அவளது மனதில் ஒரு குறையாகவே உறுத்திக் கொண்டிருந்தது.
நாட்கள் கடந்தன. ஒருநாள் மன்னன் ருக்மதாங்கன் நகர்வலம் புறப்பட்டான். நாட்டு மக்களின் நலம் அறிவதற்காக வீதி வீதியாக வலம் வந்தான். மன்னன் வருகையைச் சேவகர்கள் முரசறைந்துத் தெரிவித்தபடி முன்னால் சென்றார்கள். மன்னனின் நகர்வலம் ரத்னபிரபை வசித்த தெரு வழியே வந்தபோது, ரத்னபிரபை தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு தனது மாளிகையின் மேன்மாடத்துக்கு வந்து நின்றாள்.
அவள் எதிர்பார்த்தபடியே அவளது மாளிகையின் அருகே வந்தபோது மன்னன் ருக்மதாங்கன் மேன்மாடத்தில் நின்றிருந்த ரத்னபிரபையைக் கண்டான். திகைத்தான். அவளது அழகில் தாக்குண்டவனாகப் பிரமித்துப் போனான். இதைக் கண்ட ரத்னபிரபை திருப்தி கொண்டாள். அத்துடன் அதை மறந்து போனாள்.
மன்னன் அரண்மனை அடைந்ததும் மாளிகையின் மேன்மாடத்தில் தான் கண்ட அந்தப் பெண் யார் என்று விசாரித்தான். அவள் முன்பு தன்னால் நிராகரிக்கப்பட்ட வியாபாரியின் மகள் என்று அறிந்ததும் அவன் மிகுந்த கோபம் கொண்டான். அவளை அடையவிடாமல் சதி செய்த அந்த மந்திரி பிரதானிகளைத் தண்டித்து நாடு கடத்தினான்.
ஆனால் என்ன செய்துதான் என்ன? கை விட்டுப் போன அழகியை மீண்டும் அடைய முடியுமா என்ன? இப்போது அவள் இன்னொருவரின் மனைவி. மன்னன் ருக்மதாங்கனால் ரத்னபிரபையை மறக்க முடியவில்லை. அவளது பேரழகு அவனை இம்சித்தது. கனவிலும் நனவிலும் அவள் நினைவாகவே தவித்தான். அந்த ஏக்கத்திலேயே இளைத்துப் போனான். உடல் நலம் கெட்டான்.
மன்னனைச் சுற்றியிருந்தவர்கள் அவனது உடல்நிலையைக் கண்டு கவலை கொண்டார்கள். மன்னனை விசாரித்துப் பார்த்தார்கள். எதுவானாலும் எங்களிடம் சொல்லுங்கள்; தங்கள் குறையை உடனடியாகத் தீர்த்து வைக்கிறோம் என்று கெஞ்சினார்கள். மன்னனால் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தனது மனத்தைத் துளைத்தெடுக்கும் மோகம் குறித்து மன்னனால் எப்படி வெளியே சொல்லமுடியும்? அதுவும் அடுத்தவன் மனைவியின் மேல் ஆசை என்றால் எவ்வளவு வெட்கக்கேடு!
ஆனாலும் அவனது அந்தரங்க நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு அவனை அன்பால் நெருக்க, ஒரு கட்டத்தில் தாள முடியாமல் தனது வேதனையை ருக்மதாங்கன் அவர்களிடம் பகிர்ந்துகொண்டான்.
இதைக் கேட்டதும் நண்பர்கள், மன்னனுக்கு ஆறுதல் கூறினார்கள். ‘அடடா! இதுதானா உன் பிரச்னை? நீ ஆணையிடு போதும்! உனது ஆணையை யாரால் மீற முடியும்? அதுவும் படைத்தளபதி வீரவில்வலன் உன் மேல் பக்தியும் விசுவாசமும் கொண்டவன். அவனிடம் சொல்லி ரத்னபிரபையை சுலபமாக நீ இங்கே அழைத்துக் கொள்ளலாம்!’ என்று வழி கூறினார்கள்.
ஆனால் ஒழுக்கசீலனும் நீதி தவறாதவனுமான ருக்மதாங்கன் அதை மறுத்துவிட்டான்.
இந்தத் தகவலானது ஒருகட்டத்தில் அரசல்புரசலாகப் படைத்தளபதி வீரவில்வனுக்குத் தெரியவந்தது. அவன் மனம் வேதனைப்பட்டது. மன்னன் மேல் ராஜபக்தியும், விசுவாசமும் கொண்ட வீரவில்வலன் மன்னனை அணுகி மண்டியிட்டுக் கூறினான்.
‘எங்கள் அன்பு மன்னவா! ஒரு நல்ல படைத்தலைவனாக தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது எனது முதல் கடமையாகும். அதுமட்டுமல்ல, இந்நாட்டுக் குடிமக்கள் அனைவரும் நாடாளும் மன்னரின் அடிமைகள்தான். எனவே ரத்னபிரபையைத் தாங்கள் ஓர் அடிமையாகத்தான் பார்க்கவேண்டும். அவளைத் தங்கள் அரண்மனைக்கு அழைத்துக்கொள்ளவேண்டும். பிரபு நான் மனதாரச் சொல்கிறேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமோ ஆதங்கமோ கிடையாது. தங்கள் விருப்பம் நிறைவேறி பூரண உடல்நலம் பெற்றால் நான் மனதார மகிழ்வேன்! ஒருவேளை அவள் என் மனைவி என்பதாக தாங்கள் குற்றவுணர்வு கொண்டால் நான் அவளைக் கோயிலுக்குத் தானம் செய்து விடுகிறேன். அதன்பிறகு தாங்கள் அவளை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இருக்காது.’ என்று யோசனையும் கூறினான்.
தளபதி வீரவில்வலன் இப்படிச் சொல்லச் சொல்ல மன்னன் ருக்மதாங்கன் மிகுந்த கோபம் கொண்டான்.
‘படைத்தளபதி நீங்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பிற்கும் விசுவாசத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் கூறியது ஏழேழு பிறவியிலும் என்னை நரகத்தில் தள்ளி விடக் கூடிய ஆலோசனையாகும். மன்னனாகிய நானே நீதிநெறியைக் காப்பாற்றாது போனால் குடிமக்கள் எவ்வாறு அதைப் பின்பற்றுவார்கள். மன்னன் நீதி பிறழ்ந்தால் தடுத்து புத்தி சொல்லி நேர்வழி நடத்தவேண்டிய தளபதியே இப்படியோர் யோசனை அளிப்பது தவறல்லவா? நீ இவ்வாறு சொல்வது உன் பத்தினி மனைவியை அவமதிப்பதாகும். ஒரு உத்தமப் பெண்ணின் கற்பென்பது அத்தனை துச்சமாகிவிட்டதா உனக்கு? இனியொருமுறை இவ்விதம் பேசாதே.’ என்று சொல்லி அவனை விரட்டி விட்டான்.
நாட்கள் செல்லச் செல்ல ரத்னபிரபையின் மீதான வெளிப்படுத்த முடியாத மோகமும், பகிர்ந்துகொள்ள முடியாத காமமும் மன்னனை அணுவணுவாகக் கொன்று கடைசியில் அவனது உயிரையே பறித்துக்கொண்டது. மன்னன் இறந்தபிறகு, குற்றவுணர்வின் காரணமாகப் படைத்தலைவன் வீரவில்வனும் வாளால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர்நீத்தான்.
விக்கிரமாதித்த மன்னனே இப்போது சொல். இந்த இருவருள் யார் சிறந்தவர்? மன்னனா? படைத்தலைவனா?’ கேட்டது வேதாளம்.
விக்கிரமாதித்தன் தயங்காமல் பதில் கூறினான். ‘வேதாளமே நிச்சயமாக அந்த மன்னனே உயர்ந்தவன்!’
‘நீர் சொல்வது விசித்திரமாக இருக்கிறது விக்கிரமரே. தனது மனைவியின் பெருமையை நன்கு அறிந்தவன் வீரவில்வலன். இருந்தும் மன்னனுக்காக அவளைத் தானமளிக்க முன் வந்தான். மன்னன் இறந்ததும் மனம் வேதனைப்பட்டு தானும் உயிரை மாய்த்துக்கொண்டான். இப்படி இருக்க, யாரோ சொன்னதை நம்பி ரத்னபிரபையைப் பற்றிச் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் அவளை ஏற்க மறுத்த மன்னன் எப்படி உயர்ந்தவனாவான்?’ என்றது வேதாளம்.
‘வேதாளமே வாதத்துக்காக நீ சொல்வது சரிதான் என்றாலும், மன்னனுக்கு விசுவாசமாக இருப்பதும், அவனுக்காக உயிர் துறப்பதும் சேவகர்களின் கடமைதானே? இதில் வியப்படையவோ சிலாகிக்கவோ என்ன இருக்கிறது? ஆனால் ஒரு மன்னன் என்பவன் தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆணவமும் அதிகாரமும் கொண்டவன். அதுவும் மோகமும் காமமும் கொண்ட மன்னர்கள் எந்த அறநெறியையும் கொள்ளமாட்டார்கள் என்பதற்குப் புராணத்திலும் சரித்திரத்திலும் எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவ்வாறிருக்க மன்னன் ருக்மாங்கதனோ மனம் வெதும்பி உடல் நலிந்து வேதனைப்பட்டாலும் எள்ளளவும் அறநெறியிலிருந்து தவற விரும்பவில்லை. ஒழுக்கத்தின் பாதையில் திடமனத்துடன் நடந்த அம்மன்னன்தான் இருவரில் மிகச் சிறந்தவன்!’
விக்கிரமாதித்தன் பதில் சரியென்பதால் வேதாளம் அவனிடம் இருந்து நீங்கி மீண்டும் முருங்கை மரத்துக்கே விரைந்தது.
(தொடரும்)