Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தியரே, பூர்வ ஜென்மத்தில் தேவதேவன் என்கிற பெயர் கொண்ட நான், ஒரு சிவன் கோயில் அர்ச்சகராக வாழ்க்கை நடத்தி வந்தேன். நாளெல்லாம் ஈஸ்வரப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, வரும் பக்தர்களுக்குத் தீபாராதனை செய்வித்து என் கடமையைச் செய்வித்து காலங்கள் கழித்தேன். ஒருநாள் வழக்கம் போல் சிவபெருமானுக்கான பூஜா புனஸ்காரங்கள் செய்து நைவேத்தியம் செய்வித்து முடித்து திருக்கோயில் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

சிறிதுதூரம் சென்றதும்தான் பிரசாதத்தை எடுக்காமல் விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. எனவே மறுபடியும் கோயிலுக்குத் திரும்பி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது கர்ப்பக்கிரகத்தில் பேச்சுச் சப்தம் கேட்டது. ஆர்வம் தாங்காமல் சாவித்துவாரத்தின் வழியே கர்ப்பக்கிரகத்தினுள் பார்த்தபோது, அங்கே ஈஸ்வரப் பெருமான், தனது மனையாளான உமையை மடிமீது வைத்துக்கொண்டு கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் இதுவரை உம்மிடம் சொன்ன அத்தனைக்கதைகளையும் சிவபெருமான், தன் மனையாளான பார்வதி தேவிக்குச் சொல்லி, அக்கதைகளுக்கான விடைகளையும் தெரிவித்தார். அவர் இறுதியாகச் சொன்ன கதை, ‘உறவு முறை தெரியாக் கதை’ என்றும் அதற்கான விடை யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.

அதற்குப் பிறகு நான் சப்தமெழுப்பாமல் மெல்ல வீடு திரும்பி விட்டேன். கோயிலில் நான் கண்ட அந்தத் தெய்வீகக் காட்சியை எனது மனைவியிடம் சொல்லி மனம் பூரித்துப் போனேன். அப்படி நான் அவளிடம் தெரிவித்ததுதான் தவறாகப் போனது.

என் மனைவி பகவான் தனது மனைவியிடம் சொன்ன கதைகளை எனக்கும் சொல்லுங்கள் என்று கேட்டாள். அவள் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லை என்று கருதி நானும் அக்கதைகள் அனைத்தையும் அவளுக்குச் சொன்னேன். அதற்கான விடைகளையும் தெரிவித்தேன். மேலும், இக்கதைகளை வேறு யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவளிடம் சொல்லியிருந்தேன்.

ஆனால் பெண்களின் ரகசியம் நிற்குமா என்ன? அவள் மறுநாளே ஒரு பெண்கள் கூட்டத்தையே கூட்டி அவர்களிடம் எல்லாக் கதைகளையும் கூறிவிட்டாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் என் முன்பு தோன்றி, ‘தேவதேவா! நான் எனது பத்தினிக்கு ரகசியமாகச் சொன்ன கதைகளை ஒட்டுக் கேட்டு உன் மனைவியிடம் கூறியதால் நீ வேதாளமாகத் திரிந்து வா!’ என்று சாபமிட்டு விட்டார்.

பின் நான் ஆண்டவனின் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டு, அறியாமல் நான் செய்த பிழையைப் பொறுத்துக்கொண்டு என்னை மன்னித்து சாபவிமோசனம் அளிக்குமாறு அழுது துதித்தேன். விமோசனம் கேட்டுக் கெஞ்சினேன்.

மனம் இரங்கிய சிவபெருமான், ‘வேதாளமே, உஜ்ஜயினிப் பட்டினத்தின் மயானமொன்றில் முருங்கை மரத்தில் நீ வேதாளமாகத் தொங்கிக் கொண்டிருப்பாய். ஒரு சமயத்தில் சுசர்மன் என்ற முனிவன் வேதாளமாகிய உன்னை வசப்படுத்திக்கொண்டு அதன் மூலம் அஷ்டமாசித்திகளையும் அடைய முயற்சிப்பான். இதற்காக அவன் பலப்பல சூழ்ச்சிகள் செய்து உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தனையே ஏமாற்றி உன்னிடத்தில் அனுப்பி உன்னைப் பிடித்து வரச்செய்வான். இறுதியில் அம்மன்னனையே பலி கொடுக்கவும் முற்படுவான்.

அதுபோல் விக்கிரமாதித்தன் உன்னைக் கொண்டு செல்ல வரும் தருணத்தில், நீ விக்கிரமாதித்தனிடம் நான் சொன்ன கதைகளைக் கூறி விடைகளைக் கேள். எல்லாக் கதைகளுக்கும் விடை சொல்லி வரும் விக்கிரமாதித்தன் இறுதிக் கதையான உறவுமுறைத் தெரியாக் கதைக்கு விடை தெரியாமல் திகைத்து நிற்பான். அப்போது நீ விக்கிரமாதித்தனிடம் அனைத்தையும் சொல்லி முனிவனின் சூழ்ச்சியைத் தெரிவித்து அவனை அழிப்பதற்கு வழி சொல்லிக் கொடு. அதன் பிறகு நீ விக்கிரமாதித்தனின் அடிமையாக இரண்டாயிரம் வருடங்கள் அவனுடன் இருந்துவிட்டு முடிவில் சாபம் நீங்கிப் பின் என்னை வந்து அடைவாயாக!’ என்று எனக்குச் சாபவிமோசனம் தெரிவித்தார்.

ஆகவே மன்னனே, அருளாளன் ஈஸ்வரனின் ஆணைப்படி இன்று முதல் நான் உங்கள் அடிமை. தங்களின் துணைவன். இனி அந்த வஞ்சக முனிவன் சுசர்மனை அழிக்கும் வழியைப் பார்ப்போம்!’ என்று சொல்லி முடித்தது.

வேதாளம் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போய், அதிலிருந்து மீண்ட விக்கிரமாதித்தன் வேதாளத்துக்கு நன்றி தெரிவித்தான். பின் அதனிடம் கேட்டான்.

‘அந்த முனிவன் சுசர்மன் அத்தனை கெடுமதி கொண்டவனா?’

‘ஆம் மன்னவா! அவன் இதுவரையிலும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது மன்னர்களைக் கொன்று தலைகளைக் கைப்பற்றி விட்டான். இறுதியாக ஆயிரமாவது தலைக்காகத்தான் அவன் உங்களைப் பலி கொடுக்க திட்டமிட்டுள்ளான். நாம் அவனிடம் சென்றதும் என்னை ஆவாஹனம் செய்து வசப்படுத்த முயற்சிப்பான். அதற்கு முன்னதாக உம்மை நரபலி கொடுப்பதற்காக, யாககுண்டத்தின் முன் உம்மை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யச் சொல்வான். உடனே நீர் அவனையே முதலில் செய்து காட்டும்படி சொல்லுங்கள். அதன்படி அவன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததும் அவனது தலையைத் துண்டித்து யாககுண்டத்தில் போட்டு விடுங்கள். உடனே காளிதேவி பிரசன்னமாகி உங்களுக்கு வேண்டிய வரம் அருளுவாள். நீங்கள் மிக எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய தருணம் இது. நீங்கள் தந்திரமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவன் உம்மை பலி கொடுத்து விடுவான் எச்சரிக்கை!’ என்றது வேதாளம்.

‘ஆகட்டும் வேதாளமே! நீ சொன்னபடியே செய்து முடிக்கிறேன்!’ என்றான் விக்கிரமாதித்தன்.

பின் வேதாளத்தைத் தோளில் சுமந்தபடியே அவன் கானகத்தின் மையப் பகுதியிலிருந்த வன துர்க்கை அம்மன் கோயிலை வந்தடைந்தான். தான் சுமந்து வந்த வேதாளத்தை யாககுண்டத்தின் அருகில் கிடத்தினான்.

‘முனிவர் பெருமானே, இதோ தங்கள் விருப்பப்படியே நீங்கள் கேட்ட பிணத்தைக் கொண்டு வந்து விட்டேன்.அடுத்து நான் செய்யவேண்டிய காரியம் என்ன?’ என்று கேட்டான்.

‘மன்னவா! பிணத்தைச் சுமந்து வந்து தீட்டு போக, அதோ அந்த நதிக்குச் சென்று நீராடி விட்டு வா. அடுத்துச் செய்யவேண்டியதைக் கூறுகிறேன்!’

மன்னனும் சுசர்மன் கூறியபடியே அருகிலிருந்த நதிக்குச் சென்று நீராடி விட்டுத் திரும்பினான்.

முனிவன் அவனைப் பார்த்து, ‘விக்கிரமாதித்தரே, இப்போது நீங்கள் இந்த யாக குண்டத்தை மும்முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குங்கள்’ என்றான்.

அதற்கு விக்கிரமாதித்தன் அவனிடம், ‘பெருமானே, நான் ஒரு சத்திரியன். எனக்கு இந்தப் பூஜை, யாகம், சடங்கு, சம்பிரதாயங்கள் போன்றவற்றின் வழிமுறைகள் எதுவும் துளியும் தெரியாது. எனவே நான் தாங்கள் கூறுவதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதன் காரணமாக தங்களது யாகமே கெட்டுப் போகலாம். எனவே நான் என்ன செய்யவேண்டுமென்பதை முழுவதும் தாங்கள் ஒருமுறை செய்து காட்டி விட்டால் நான் அதன்படியே செய்து விடுவேன்!’ என்று தெரிவித்தான்.

விக்கிரமாதித்தனின் பேச்சை உண்மையென்று நம்பிய சுசர்மன், யாககுண்டத்தை மும்முறை வலம் வந்து தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். உடனே விக்கிரமாதித்தன் தனது வாளை உருவி முனிவன் சுசர்மனின் தலையைத் துண்டாகி வெட்டி யாககுண்டத்தில் போட்டான்.

உடனே அங்கு காளிமாதேவி பிரசன்னமாகி தரிசனம் தந்தாள். ‘மகனே விக்கிரமாதித்தா, உனது செயலால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்!’ என்றாள்.

‘தாயே! தயாபரியே! உனது பக்தனாகிய நான் என்றும் எப்போதும் ஏழைகளிடத்தில் இரக்கமும், எனது ராஜ்ஜியத்தின் மக்களிடத்தில் காருண்யமும், பரிசுத்த மனமும், நேர்மையும், சகல வல்லமையும் கொண்டவனாகத் திகழவேண்டும். நான் நினைத்த தருணத்தில் நீ எனக்குத் தரிசனம் தந்து உன்னைக் காணும் பாக்கியத்தை இந்தச் சிறியோனுக்கு அருளவேண்டும். தவிர, முனிவன் சுசர்மனால் கொல்லப்பட்ட தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது மன்னர்களும் உனது கருணையால் உயிர் பெற்று எழுந்து அவரவர் ராஜ்ஜியத்தைப் பரிபாலித்து வரவேண்டும். இந்த எனது விருப்பங்களை தயைகூர்ந்து நிறைவேற்றித் தரவேண்டும் தாயே!’ என்று வேண்டினான்.

‘அப்படியே ஆகட்டும்!’ என்று வரமருளி மறைந்தாள் காளிதேவி.

காளி மாதாவின் அருளால் உயிர் பெற்றெழுந்த மன்னர்கள் விக்கிரமாதித்தனுக்கு நன்றி சொல்லி அவரவர் ராஜ்ஜியம் சென்றார்கள். பின்னர் வேதாளத்தை அழைத்துக் கொண்டு தனது உஜ்ஜயினி ராஜ்ஜியத்துக்கு வந்து சேர்ந்த விக்கிரமாதித்தன் இந்திரன் தனக்களித்த நவரத்தினச் சிம்மாசனத்தில் அமர்ந்து நாலாதிசையெட்டும் பரவிய புகழுடன் ஆட்சி புரிந்தான்.

முற்றும்.

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *