கடந்த ஜூலை 12ஆம் தேதி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த ஐந்து வண்ணப் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. பார்ப்பதற்குக் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்த அந்தப் புகைப்படங்களை உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அறிவியல் திருவிழா போல கொண்டாடினர்.
கடந்த சில வருடங்களாகவே அறிவியலைப் புறக்கணித்து பழம்பெருமையும், பகுத்தறிவுக்கு எதிரான கருத்துகளையும் தூக்கிப் பிடிக்கும் சூழல் உருவாகி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப்பின் புகைப்படங்கள் மக்களுக்கு மீண்டும் அறிவியல்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, அதைப் பற்றி ஆலோசிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
ஜேம்ஸ் வெப் புகைப்படங்கள் பிரபஞ்சத்தின் கவித்துவ அழகை உணர்த்துகின்றன. SMACS 0723 என்ற ஆழ்புல புகைப்படம் (Deep Field Image) வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் நமக்குக் காட்டுகிறது. இத்தனைக்கும் அந்தப் புகைப்படத்தில் நாம் விண்வெளியின் பத்து சதவீதத்தைக்கூடப் பார்க்கவில்லை.

ஒரு சிறிய மண் துகளை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தால் அதில் என்ன தெரியுமோ, அதே அளவிலான பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத்தான் அந்தப் புகைப்படம் காட்டுவதாக நாசா கூறுகிறது. அத்தனை சிறிய துகளுக்குள், எத்தனை நட்சத்திர மண்டலங்கள்!
நம் சூரியக் குடும்பம் அமைந்திருக்கும் பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் (மில்கிவே கேலக்ஸி) சுமார் 4 கோடி வரையிலான நட்சத்திரங்களும் கோள்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியென்றால் அத்தனை சிறிய துகளுக்குள் காட்சியளிக்கும் நட்சத்திர மண்டலங்களுக்குள் எத்தனை எத்தனை கோடி நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கும் என்று நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
நம் பிரபஞ்சம் உருவாகி சராசரியாக 1380 கோடி ஆண்டுகள் இருக்கும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நம் பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திர மண்டலங்களைப் படம் எடுத்துள்ளது. அந்த நட்சத்திர மண்டலங்கள் இப்போது இருக்கின்றனவா, இல்லையா என்பதுகூட நமக்குத் தெரியாது.
பிறகு எப்படி அவற்றை புகைப்படம் எடுக்க முடியும்? ஒரு தொலைநோக்கியால் தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க முடியும். ஆனால் கடந்த காலத்திற்குச் சென்று ஒரு நிகழ்வைப் பார்க்க முடியுமா?

ஸ்டெஃபானின் ஐந்து நட்சத்திர மண்டலங்கள் (Stephan’s Quintet) என்ற மற்றொரு புகைப்படம் நட்சத்திர மண்டலங்களின் ஒருங்கிணைந்த பிரபஞ்ச நடனத்தைக் காட்சிப்படுத்துகிறது. இந்த நட்சத்திர கூட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கோளில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கியை உருவாக்கி நம் பூமியைப் பார்த்தால், அவர்கள் கண்களுக்கு மனிதர்கள் தெரிய மாட்டார்கள். டைனோசர்கள்தான் தெரியும். இது எப்படிச் சாத்தியம்?
நாசா வெளியிட்ட மற்ற புகைப்படங்களான தென்வளைய நெபுலா (Southern Ring Nebula) நட்சத்திரத்தின் இறப்பையும், கரினா நெபுலா (Carina Nebula) நட்சத்திரத்தின் பிறப்பையும் பதிவு செய்கின்றன. ஓர் உயிர் தோன்றி மறைவதுபோல ஒரு நட்சத்திரத்தின் மரணமும் ஜனனமும் நமக்குள் சொல்லில் அடங்காத உணர்வுகளைக் கடத்துகின்றன.


ஆனால் அந்த அதிசயக் காட்சிகளைத் தாண்டி வேறோர் உண்மையும் அதில் மறைந்திருக்கிறது. இன்று நீங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்து இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் மரணித்த ஒரு நட்சத்திரம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். இது எப்படிச் சாத்தியம்?
இந்த அழகிய புகைப்படங்களைவிட ஆச்சரியமானது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தந்துள்ள WASP-96b என்றழைக்கப்படும் புறக்கோள் (Exoplanet) பற்றிய தகவல்கள்தான். WASP-96b வாயுக்களால் ஆன ஒரு ராட்சதக் கோள். அந்தக் கோள் தனது நட்சத்திரத்தைச் சுற்றுவதற்கு வெறும் 3-4 நாட்களைதான் எடுத்துகொள்கிறது. நாம் இரண்டுநாள் தூங்கி எழுந்தால் பாதி வருடம் முடிந்துவிடும்.
அந்தக் கோளில்தான் நீரின் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்களை ஜேம்ஸ் வெப் கண்டறிந்துள்ளது. மேலும் அந்தக் கோளின் வளிமண்டலத்தில் மேகங்களும் மூடுபனிகளும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதேபோல் விண்வெளியில் இருக்கும் வேறு சில புறக்கோள்களிலும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்டவை இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஒரு கோள் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள். அப்படியென்றால் வேறு கோள்களில் உயிர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா?
ஒரு தொலைநோக்கியைக் கொண்டு அனைத்தையும் நம்மால் எப்படி அறிந்துகொள்ள முடிகிறது? இத்தனைக்கும் அந்தக் கோள் நம் அருகில்கூட இல்லை, தொலைதூரத்தில் உள்ள ஏதோ ஒரு நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள்தான் இந்த WASP-96b. பக்கத்தில் சென்று பார்க்காமலேயே ஒரு கோளில் என்னென்ன தனிமங்கள், வாயுக்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை எப்படி நம்மால் சொல்ல முடியும்?
நம் பிரபஞ்சத்தைப் பற்றிய பல ஆச்சரியமான விஷயங்களைத்தான் ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம். எதுவொன்றையும் முழுக்க விளக்குவது இதன் நோக்கமல்ல. நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு அதிசயங்களைத் தினம் தினம் அறிவியல் வெளிக்கொணர்ந்து தருகிறது. அவற்றை எல்லாம் ஒரு சில கட்டுரைகளில் விளக்கிவிட முடியாது.
ஒரு நிகழ்வுக்குப் பின் இருக்கும் அறிவியல் உண்மையை சூத்திரங்கள் மூலமும் கோட்பாடும் மூலமும் புரிய வைக்கும் முயற்சியும் அல்ல இது. இந்தப் பிரபஞ்சத்தில் காணக் கிடைக்கும் எண்ணற்ற அதிசயங்களை ஒரு கதைபோல் கூறி, ஆழ்ந்த அறிவியல் அனுபவத்தை உருவாக்குவதே இந்தத் தொடரின் நோக்கம்.
(தொடரும்)