ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு குழந்தையைப்போல கருவாகி, உருவாகி, வளர்ந்து, மடிகிறது. நமது சூரியனுக்கு ஆயுள் பல கோடி வருடங்கள் என்று பார்த்தோம். இதுபோன்ற நீண்ட ஆயுளைக் கொண்ட சிறிய நட்சத்திரங்களில் மிக எளிய தனிமமான (Element) ஹைட்ரஜன் மட்டுமே இருக்கும்.
இந்த நட்சத்திரங்களின் உள்ளே அடக்கும் அணுசேர்க்கை (Nuclear Fusion) ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றுகிறது. இந்த அணுசேர்க்கை தொடர்ந்து நடைபெறும்போது அதீத அளவிலான ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் பிற வகை கதிர்களாகவும் வெளிப்படுகின்றன.
நாம் ஏற்கெனவே ஒரு நட்சத்திரம் விரிவடைவதும், பின் ஈர்ப்பு விசையால் சுருங்குவதும் தொடர்ந்து ஒரு சமநிலையில் நடைபெறுகிறது என்று பார்த்தோம் அல்லவா? அதனால் அந்த நட்சத்திரம் பல கோடி ஆண்டுகளுக்கு ஆற்றலை வெளிப்படுத்தியபடி ஒரு சமநிலையான அளவிலேயே இருக்கிறது.
ஆனால் காலப்போக்கில் அதன் எரிபொருள் தீரும்போது நட்சத்திரத்தின் சமநிலை குலையத் தொடங்குகிறது. பின் ஈர்ப்புவிசையின் ஆதிக்கம் அதிகமாகி நட்சத்திரத்தை மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
ஒரு நட்சத்திரம் பிறந்து, வளர்ந்து, அழிவதை நம்மால் பார்க்க முடியாது. ஒரு நட்சத்திரத்தின் முழு ஆயுட்காலத்தைப் பார்க்கும் அளவிற்கு நமக்கு ஆயுள் வழங்கப்படவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக வானியலாளர்களால் தொலைநோக்கியின் உதவியுடன் விண்வெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் பார்க்க முடியும் என்பதால், அவர்கள் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர்.
நாம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படத்தில் பார்த்த கரினா நெபுலா போன்ற வாயு மற்றும் தூசு மேகங்களிடையே புதிதாகப் பிறக்கும் குழந்தை நட்சத்திரங்களையும், சூரியன் போன்ற நடுவயது நட்சத்திரங்களையும் தனது கடைசி நாட்களை எண்ணிக் காத்திருக்கும் முதிய நட்சத்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை கதை இப்படித்தான் இருக்கும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. நமது சூரியனுக்கும் சில ஆயிரம் கோடி வருடங்களில் என்ன நடக்கும் என்ற ஜாதகத்தைக் கணிக்க முடிகிறது.
வானியலாளர்கள் ஒவ்வொரு அளவில் இருக்கும் நட்சத்திரங்களையும் வகைப்படுத்தி, அதன் வளர்ச்சி நிலையைக் குறித்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, எப்படி அழியும் என்ற மொத்த கணக்குகளும் நம்மிடம் உள்ளன.
அந்த வகையில் பார்க்கும்போது சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜன் தீர்ந்துபோய், ஹீலியமை எரிக்கத் தொடங்கும். (உண்மையில் அங்கு எரிக்கும் செயல் நடப்பதில்லை, வேதியல் வினை நடைபெறுகிறது. எளிமைப்படுத்துவதற்காக எரிக்கும் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது).
அந்தக் கட்டத்தில் நமது சூரியன் சிவப்பு பெருமீன் (Red Giant) என்ற நிலையை அடையும். அதற்கு இன்னும் 500 கோடி வருடங்கள் ஆகும். அதற்கு முன்பே நமது பூமியில் வெப்பம் கடும் அளவில் அதிகரிக்கத் தொடங்கி, உயிர்கள் வாழ்வதற்கான தகுதியையே இழந்துவிடும். இன்னும் 200 கோடி வருடங்களில் சூரியன் இப்போது இருப்பதைவிட 15 சதவிகிதம் வெப்பமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.
அதாவது இன்று வெள்ளி கோள் எப்படி இருக்கிறதோ அப்படி நமது பூமி இருக்கும். இன்றைய வெள்ளி கோளில் யாராலும் வாழ முடியாது. அதன் வெப்ப நிலை 400 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமானது. அதேபோன்ற நிலைதான் பூமிக்கும் ஏற்படும்.
ஆனால் கவலை வேண்டாம், 200 கோடி வருடங்களுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. அதற்குள் மனித இனமே முற்றிலும் அழிந்துவிடலாம். யாரும் சூரியனில் கருகி கருவாடு ஆகும் நிலை வராது. அப்படியில்லை என்றால் மனிதர்களாகிய நாம் புதிவித தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்து பூமியை விட்டு வேறு கோளுக்கு சென்றுவிடுவோம். அல்லது பூமியின் சுற்றுப்பாதையைச் சூரியனின் தூரத்தில் இருந்து கொஞ்சம் நகர்த்தி வைத்துவிடுவோம். யார் கண்டது?
இப்படி சூரியனில் ஹீலியம் எரியத் தொடங்கி, அதுவும் தீரும்போது சூரியன் தூசு மண்டலங்களுக்கு இடையே துண்டுத்துண்டாகச் சிதைந்து, மறைந்துப்போகும். சூரியனின் சிறிய மையம் மட்டும் குளிர்ந்து, மங்கிய நிலையில் மிச்சம் இருக்கும். அவற்றை வெள்ளைக் குள்ளன் (White Drawf) என்று அழைக்கின்றனர்.
நாம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பார்த்த தென்வளைவு நெபுலாவின் நட்சத்திரம் ஒருகட்டத்தில் வெள்ளைக் குள்ளனாகத்தான் இருக்கும்.
சூப்பர் நோவாக்கள்
சூரியனைவிடப் பெரிதான, அதிக வெப்பத்தினைக் கொண்ட நட்சத்திரங்களின் கதை வேறு வகையில் முடிவடையும். அந்த நட்சத்திரங்களில் நடைபெறும் ஹைட்ரஜன் அணுசேர்க்கை, ஹீலியம் உட்கருட்களை உருவாக்குவதோடு நின்றுவிடாது. நட்சத்திரத்தின் சூடான களம் ஹீலியம் உட்கருட்களையும் ஒன்றோடு ஒன்று மோதவிட்டு கனமான தனிமங்களை உருவாக்கத் தொடங்கும்.
இந்தச் செயல்பாட்டில்தான் கார்பன், ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் இரும்பு போன்ற கனமான தனிமங்கள் உருவாகின்றன. இந்தத் தனிமங்கள்தான் இன்று பூமியில் எக்கச்சக்கமாகக் காண கிடைக்கின்றன. நம் அனைவருக்குள்ளும் இருக்கின்றன.
இவ்வாறு கனமான தனிமங்கள் உருவான சிறிது காலத்தில் இந்தப் பெரிய நட்சத்திரங்கள் பெரும் வெடிப்பில் அழிந்துபோகின்றன. இந்த நிகழ்வை நாம் பேரொளிர் மீன் (Super Nova) என அழைக்கிறோம். இந்த வெடிப்பில்தான் இரும்பைவிடக் கனமான தனிமங்கள் தோன்றுகின்றன.
நாம் முன்பு பார்த்த UY Scuti நட்சத்திரம் வெடித்தால் சாதாரண ஒரு சூப்பர் நோவா நட்சத்திர வெடிப்பைத் தவிர 100 மடங்கு ஆற்றல் அதில் இருந்து வெளியாகும் என அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். ஆனால் கவலை வேண்டாம். அந்த நட்சத்திரம் வெடித்தால் 5219 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால் அதில் இருந்து வெளிப்படும் ஒளி நம் பூமியை அடைய அத்தனை காலம் எடுத்துக்கொள்ளும். (ஒளியை விட வேகமான எதுவும் நம்மை அடையாது என்பதால் வெடிப்பின் தாக்கம் நம்மை அடைய மேலும் பல வருடங்கள் ஆகும்).
ஒருவேளை 5,219 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நட்சத்திரம் வெடித்திருந்தால் இந்நேரம், எப்போது வேண்டுமானாலும் அதன் ஒளியும், பிற அதிர்களும் நம்மை வந்து அடையலாம். எதற்கும் வானில் பார்த்துக்கொண்டே தயாராக இருங்கள்.
0
மனிதகுல வரலாற்றில் இதுவரை 20 சூப்பர் நோவா வெடிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1604ஆம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி, புகழ்பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஜொஹனஸ் கெப்லர் ஒரு சூப்பர் நோவா வெடிப்பைக் கண்டார். அதிலிருந்து வெளியான சிதைவுகள் இன்றும் வானில் விரிந்தபடி இருக்கின்றன.
ஆனால் அவர் கண்ட சூப்பர் நோவா வெடிப்பு எப்போது நிகழ்ந்தது தெரியுமா? 20,000 வருடங்களுக்கு முன்பு. அதாவது நியண்டர்தால் மனிதர்கள் என அறியப்பட்ட ஓரினம் அழிந்தபோது ஏற்பட்ட வெடிப்பைதான் கெப்லர் 1604இல் கண்டார்.
(தொடரும்)