சூப்பர் நோவா நட்சத்திர வெடிப்பு இரும்பைவிடக் கனமான ஈயம் (Lead), யுரேனியம் உள்ளிட்ட பல தனிமங்களை உருவாக்கும் என நாம் கண்டோம்.
அந்தத் தனிமங்கங்கள் பெரு வெடிப்பின் அதிர்ச்சியில் விண்வெளியின் பல திசைகளில், பல்வேறு தொலைவுகளுக்கு வீசியடிக்கப்படுகின்றன. அவை காலப்போக்கில் தூசு மண்டலங்களாகவும் வாயுக்களாகவும் விண்வெளியில் உலா வருகின்றன. இந்தத் தூசு மண்டலங்கள் மீண்டும் ஒன்றாக இணையத்தொடங்கி புது நட்சத்திரமாகவோ அல்லது கோளாகவோ மாறும்.
அவ்வாறு உருவான கோளில் மேற்சொன்ன தனிமங்கள் இடம்பெற்றிருக்கும். இப்படிதான் நம் பூமி உருவானபோது அதில் உயிர்களை உண்டாக்குவதற்குத் தேவையான கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல தனிமங்கள் வந்து சேர்ந்தன.
இன்று பூமியில் காணப்படும் தனிமங்கள் எல்லாம் என்றோ மறைந்த ஒரு நட்சத்திரத்தின், சூப்பர் நோவா வெடிப்பில் எஞ்சிய தூசுக்களின் மிச்சங்களே. சூப்பர் நோவா பெரு வெடிப்புகள் அவ்வப்போது நடக்கவில்லை என்றால் தனிமங்கள் எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்திருக்காது. அதனால் நம் பூமியும் உருவாகி இருக்காது. அதனால் பிற உயிர்களும் நாமும் இங்கு தோன்றி இருக்க மாட்டோம்.
ஆங்கிலத்தில் ‘We are speck of Stardust’ என்ற புகழ்பெற்ற வாசகம் இருக்கிறது. நாமெல்லாம் நட்சத்திர தூசுக்களின் எச்ச மிச்சங்கள் என்பது இதன் அர்த்தம். இங்கே கார்ல் சாகன் என்ற விஞ்ஞானி எழுதிய ‘தி காஸ்மிக் கனெக்ஷன்’ என்ற புத்தகத்தில் இருந்து ஒரு வரியை குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன். அந்த வாக்கியம் இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை பற்றிய மேலும் ஓர் ஆழ்ந்த அனுபவத்தை நமக்குத் தரும்.
‘மனிதர்களாகிய நாம் நட்சத்திர தூசு எனப்படும் அசாதாரண பொருளால் உருவாக்கப்பட்டிருக்கிறோம். நம் டி.என்.ஏவில் உள்ள அதே மூலப்பொருள்தான் நாம் இரவில் கண்டு ரசிக்கும் அற்புதங்களான நட்சத்திரங்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் பிரகாசிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளோம்.’
இன்று மனிதர்களாகிய நாம் எனது இனம்தான் பெரியது, எனது மதம்தான் சிறந்தது, எனது சாதிதான் பெருமை வாய்ந்தது என்று பல்வேறு வகைகளில் பிரிந்து, சண்டையிட்டு மடிந்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பிரபஞ்சத்தின் பெரும் நிகழ்வில் நம்முடைய இடம் ஒரு தூசுக்கு கூட சமமானது இல்லை என்பதுதான் உண்மை.
நாம் பெருமைக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அது, இந்த பிரபஞ்சத்தின் பிரமாண்ட செயல்பாட்டை புரிந்துக்கொள்ளும் அறிவை நாம் பெற்றிருக்கிறோம் என்பதுதான்.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றுவதற்கும், அவை நீடித்து இருப்பதற்குமான ஆதாரங்களாக இருப்பவை நட்சத்திரங்களே என்று பார்த்தோம். அதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.
நாம் முன்னரே பார்த்ததுபோல சூப்பர்நோவா நட்சத்திர வெடிப்புகள்தான் பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாவதற்கும், உயிர்கள் தோன்றுவதற்கு தேவையான தனிமங்கள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தவை. இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிர்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அமையுமானால் அது நட்சத்திரங்களுக்கு அருகே உள்ள கோளில்தான் தோன்ற முடியும். அருகே என்றால் நட்சத்திரங்களுக்கு பக்கத்திலேயோ, வெகு தொலையிலோ இல்லை. உயிர்கள் தோன்றுவதற்கு சரியான இடைவெளியில் உள்ள கோளில்.
நாம் ஏற்கெனவே பார்த்தது போல UY Scuti போல அது பிரமாண்ட நட்சத்திரமாக இருந்தால் அதற்கு ஏற்ற சரியான தொலைவு. அதாவது அந்த நட்சத்திரத்தில் இருந்து கிடைக்கும் வெப்பம், சூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் அதே வெப்ப அளவையொட்டி இருக்க வேண்டும்.
ஏன் உயிர்கள் நட்சத்திரங்களுக்கு அருகில்தான் இருக்க வேண்டும்? காரணம் உயிர்களுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் (Energy) அதன் நட்சத்திரங்களில் இருந்துதான் கிடைக்கின்றன. நட்சத்திர ஒளிதான் நம் உயிர்கள் அனைத்திற்குமான ஆதாரம். நம் பூமியை எடுத்துக்கொள்வோம். இங்கே உள்ள உயிரினங்கள் அனைத்தும் சூரியனைச் சார்ந்துதான் வாழ்கின்றன.
விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் உணவு சங்கிலியில் கீழே உள்ள தாவரங்களில் இருந்து தொடங்குவோம். தாவரங்கள் அனைத்தும் சூரிய ஒளியைச் சேகரித்து, அதன் ஆற்றலைப் பிற உயிர்களுக்கு தேவையான வடிவில் மாற்றி வழங்குகிறது. ஒரு தாவரம் காற்றில் உள்ள கரிய அமில வாயு (Carbon dioxide), நீர் மற்றும் பூமியில் உள்ள தாது ஆகியவற்றை உட்கொள்கிறது.
ஆனால் அவற்றை உணவாக்குவதற்கான ஆற்றல் சூரிய ஒளியில் இருந்துதான் கிடைக்கிறது. தாவரங்கள் சூரிய ஒளியை கொண்டு சர்க்கரையை உருவாக்குகின்றன. சர்க்கரைதான் அந்தத் தாவரம் இயங்குவதற்கான எரிபொருள் ஆகும்.
ஆற்றல் இல்லாமல் சர்க்கரையை உருவாக்க முடியாது. சர்க்கரை கிடைத்துவிட்டால், அதை எரித்து மீண்டும் நாம் ஆற்றலைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்மால் அனைத்து ஆற்றலையும் திரும்பப் பெற முடியாது. அந்தச் செயல்பாட்டில் சில ஆற்றல்கள் வீணாகும். இதுபோல ஆற்றல் வீணாகாமல் இருப்பதற்கு நாம் சில பல வழிகளை கண்டறிந்துள்ளோம். இதற்கென்று அறிவியலில் தனிப்பிரிவுகளே உள்ளன. அவற்றை இப்போது பார்க்க வேண்டாம்.
தாவரங்கள் என்பது சூரிய ஆற்றலைச் சேகரித்து வைக்கும் தொழிற்சாலை. தாவரங்களின் இலைகளைச் சூரிய ஒளி தகடு (Solar Panels) போல கருதிக்கொள்ளுங்கள். சூரிய ஒளியை அதிகம் உள்வாங்கும் வகையில் தட்டையான, விரிவடைந்த அமைப்புகளில் இலைகள் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இலைகளில் சூரிய ஒளி விழும்போது அவற்றை ஒரு சில வேதியல் செயல்பாடுகள் மூலம் பல்வேறு வகையான சர்க்கரைகளாக தாவரங்கள் உருமாற்றுகின்றன.
பின் அவை இலை நரம்புகள் மூலம் தாவரங்களின் பிற பகுதிகளுக்கு சென்று மாப்பொருள் (Starch) போன்ற பொருட்கள் உருவாகுகின்றன. மாப்பொருள் சர்க்கரையை விட ஆற்றலைச் சேமித்து வைப்பதற்குச் சிறந்த வடிவமாகும். இறுதியில், இந்தச் சர்க்கரை அல்லது மாப்பொருளில் இருந்து வெளியாகும் ஆற்றலைக் கொண்டுதான் தாவரத்தின் மற்ற அனைத்து பாகங்களும் உருவாக்கப்படுகின்றன.
ஆடு, மாடு, முயல் உள்ளிட்ட தாவர உண்ணிகள் (Herbivores) இந்தத் தாவரங்களை உண்ணும்போது அவற்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் அந்த விலங்குகளுக்குக் கடத்தப்படுகிறது. (இந்த செயல்பாட்டில் மீண்டும் சிறிது ஆற்றல் வீணாகிறது.)
தாவரவுண்ணிகள் தங்கள் உடலை இந்த ஆற்றலைக் கொண்டுதான் கட்டமைக்கின்றன. விலங்குகள் நடக்கும்போதும், ஓடும்போதும், உண்ணும்போதும், சண்டையிடும்போதும், இனப்பெருக்கம் செய்யும்போதும் தசைகள் இயங்குவதற்கு போதுமான எரிபொருள் இந்த ஆற்றலில் இருந்துதான் கிடைக்கிறது.
பிறகு மாமிச உண்ணிகள் (Carnivores) தாவரவுண்ணி விலங்குகளை வேட்டையாடி உண்ணும்போது ஆற்றல் அந்த விலங்குகளுக்கு மடைமாற்றப்படுகின்றது. இந்த ஆற்றல்தான் மாமிச உண்ணிகள் தங்கள் பணிகளை செய்வதற்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது. இதே ஆற்றல்தான் தாய்ப்பால் மூலம் அந்த விலங்குகளின் அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தப்படுகின்றன.
இறுதியாக இந்த விலங்குகளோ, தவாரங்களோ இறந்தால் அதன் உடல்களை பிணந்திண்ணிகள் (Scavengers) உண்கின்றன. அல்லது பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவை தின்று அந்த உடல்களை மக்கிப்போக செய்கின்றன.
இப்படியாக இந்தப் பூமியில் அனைத்து வகை விலங்குகளும் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்டு, பல்வேறு வகைகளில் பிற உயிர்களை சென்றடைகிறது.
இவ்வாறு ஆற்றல் ஒவ்வொரு இடத்திற்கும் கடத்தப்படும்போது, அந்த ஆற்றலின் குறிப்பிட்ட பகுதி வெப்பமாக இழக்கப்படுகிறது. இதனால்தான் இறந்த தாவரங்களோ, விலங்குகளோ மக்கி உரமாகும்போது வெப்பமாக இருக்கின்றன. இந்த வெப்பம் அனைத்தும் தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆற்றல்தான்.
மெகாபோட்ஸ் எனப்படும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒருவகை பறவை இந்த மக்கும் உரக்குவியலில்தான் முட்டையிடுகின்றன. பிற பறவைகள்போல் தனது உடல்வெப்பத்தால் குஞ்சு பொறிக்காமல், உரக்குவியலில் முட்டையிட்டு, அதன் வெப்பத்தில் குஞ்சு பொறிக்கின்றன.
அடைகாக்க தேவையான வெப்பத்தை கட்டுப்படுத்த உரக்குவியலைக் குவித்து வைப்பதும், பிறகு அவற்றை அகற்றுவதையும் இந்தப் பறவைகள் செய்கின்றன. மற்ற பறவை இனங்களும்கூடத் தங்கள் முட்டைகளை அடைகாக்க வேண்டிய உடல் வெப்பத்தைச் சூரிய ஆற்றலில் இருந்துதான் பெற்றிருக்கின்றன.
(தொடரும்)