Skip to content
Home » விண்வெளிப் பயணம் #5 – விஞ்ஞானிகள்மீது போர் தொடுத்த கவிஞர்கள்

விண்வெளிப் பயணம் #5 – விஞ்ஞானிகள்மீது போர் தொடுத்த கவிஞர்கள்

வானவில்

விலங்குகளால் உண்ணப்படாத தாவரங்கள் இறந்தவுடன் மக்கி மண்ணுடன் இறுகி மட்கரிச் சதுப்பு (Peat Bogs) நிலமாக மாறிவிடுகின்றன. பல வருடங்களாக இவ்வாறு மக்கும் தாவரங்களும் விலங்குகளும் அந்த நிலத்தில் சேர்ந்து சேர்ந்து அழுத்தப்பட்டு பீட் (Peat) எனப்படும் முற்றா நிலக்கரி அடுக்குகளாக உருமாற்றம் அடைகின்றன.

அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் இதுபோன்ற நிலங்களில் உள்ள முற்றா நிலக்கரி அடுக்குகளைத் தோண்டி எடுத்து, அவற்றை செங்கற்கல் வடிவத்தில் எரிபொருளாகச் சேகரித்து வைத்திருப்பர். குளிர்காலத்தில் சமைக்கவும் வீடுகளுக்கு வெப்பம் அளிக்கவும் இவை பயன்படுகின்றன.

இந்த முற்றா நிலக்கரி அடுக்குகள் மேலும் பல லட்சம் வருடங்களுக்கு திடமான நிலையில் இருக்கும்போது, மேலும் இறுகி நிலக்கரியாக (Coal) உருமாறிவிடுகிறது. நிலக்கரி என்பது மிகச்சிறந்த எரிபொருள். நிலக்கரி இன்றைய சூழலில் எப்படிப் பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கும், மனித நாகரிகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கும் மனிதன் நிலக்கரியில் இயங்கும் இயந்திரங்களைத் தயாரிக்க தொடங்கியதுதான் காரணம்.

Peat Bogs
Peat Bogs

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலக்கரியால் இயங்கும் உருக்கு ஆலைகளும், இரும்பு ஊதுலைகளும் ஐரோப்பிய நகரங்களை ஆக்கிரமித்தன. தடதடவென ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும் நீராவி இயந்திரங்களுக்கும் தேசங்களைச் சூரையாட கடலில் போட்டியிட்டு சென்றுக்கொண்டிருந்த கப்பல்களுக்கும் தேவையான அனைத்து எரிபொருட்களும் 3 கோடி வருடங்களுக்கு முன் சூரிய ஒளியைச் சேகரித்துவைத்து இறந்துபோன தாவரங்களில் இருந்தும், விலங்குகளில் இருந்தும்தான் கிடைத்தன.

நாம் பயன்படுத்தும் நீராற்றலுக்கான ஆதாரம்கூட சூரியன்தான். கடல், ஏரி, ஆறுகளில் உள்ள நீர் ஆவியாகி மழையாக மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது. இதன்மூலம் உருவாகும் ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும் நீராற்றலாக மாற்றப்பட்டு நமக்கு மின்சாரம் தயாரிக்கவும் ஆலைகளை, எந்திரங்களை இயக்கவும் பயன்படுகின்றன. இவ்வளவு ஏன் இன்று நீங்கள் செய்தித்தாளை திறந்தால் அன்றாடம் பார்க்கும் உலக அரசியல் அதகளங்களை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய்க்கும்கூடச் சூரியன்தான் ஆதாரம்.

இவ்வாறு சூரியனில் இருந்து தாவரங்களுக்கு, தாவரங்களில் இருந்து விலங்குகளுக்கு, விலங்குகளில் இருந்து மனிதப் பயன்பாடுகளுக்கு என்று உயிர்கள் இயங்குவதற்குத் தேவையான ஆற்றல் அனைத்திற்கும், ஒரு வகையில் இந்த உலகம் இயங்க அனைத்திற்கும் ஆதாரம் சூரியன்தான். தெரிந்தோ தெரியாமலோ பழங்காலத்தில் இருந்து பல்வேறு நாகரிகங்களைச் சேர்ந்த மக்களும் சூரியனை வழிப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த உலகில் உயிர்கள் நிற்பதும் நடப்பதும் ஒரு நட்சத்திரத்தின் தயவால்தான்.

0

இப்போது நமக்கு தோன்றக்கூடிய முக்கியமான கேள்வி என்றால், இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பல கோடி கோள்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் என்ன இருக்கிறது என்று எப்படி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது?

ஒரு நட்சத்திரத்தில் ஹைட்ரஜன் இருக்கிறது என்கிறோம்; ஹீலியம் இருக்கிறது என்கிறோம்; அதைச் சுற்றி உள்ள கோளில் என்னென்ன தனிமங்கள் எல்லாம் இருக்கின்றன என புட்டுப்புட்டு வைக்கிறோம். இதையெல்லாம் நேரில் சென்று பார்க்காமல் எப்படி நம்மால் சொல்ல முடிகிறது?

அதைத் தெரிந்துகொள்வதற்கு நாம் ஒரு குழந்தையைப் போல வானவில் ரசிக்க கற்றுகொள்ள வேண்டும்.

பெஞ்சமின் ஹெய்டனின் ’ஜெருசேலம் நகருக்குள் கிறிஸ்துவின் பிரவேசம்' ஓவியம்
பெஞ்சமின் ஹெய்டனின் ’ஜெருசேலம் நகருக்குள் கிறிஸ்துவின் பிரவேசம்’ ஓவியம்

ஒரு குட்டிக்கதை. 1817ஆம் வருடம். பிரிட்டனை சேர்ந்த புகழ் பெற்ற ஓவியரான பெஞ்சமின் ஹெய்டன் லண்டனில் உள்ள தனது ஸ்டூடியோவில் இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தில் அவருடைய நண்பர்களான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஜான் கீட்ஸ், சார்லஸ் லேம்ப் உள்ளிட்ட கவிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விருந்திற்கு வந்தவர்கள் ஹெய்டனின் புதிய ஓவியம் ஒன்றை விவாதித்திக் கொண்டிருந்தனர். அந்த ஓவியம் இயேசு கிறிஸ்து ஜெருசேலம் நகருக்குள் வருகை புரிந்ததைப் பற்றியது. அவர் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த ஓவியத்தில் ஹெய்டன் தனக்குப் பிடித்த ஆளுமைகளான கீட்ஸ் மற்றும் வேர்ட்ஸ்வொர்த்துடன் நியூட்டனையும் இடம் பெற செய்திருந்தார்.

இது அங்கிருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்கொரு காரணம் இருந்தது. நியூட்டன் மட்டுமல்ல பெரும்பாலான விஞ்ஞானிகள்மீது அந்தக் காலத்து கவிஞர்களுக்கு ஒவ்வாமை இருந்தது. இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்கா அழகிய விஷயங்களை தன்னிடத்தே வைத்துள்ளது. இந்த பூமியில் பெய்யும் மழை, பறவைகளின் ஒலி, மரம், செடி, கொடிகள், அதில் பூக்கும் வண்ண வண்ண மலர்கள் என அனைத்தும் கவித்துவம் வாய்ந்தவை.

ஆனால் இந்த விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் ஆச்சரியங்களை ஒருசில கோட்பாடுகளுக்குள் சுருக்கி விடுகின்றனர். கேட்டால் அறிவியல் என்கின்றனர். இது கவிஞர்களுக்கும் கவிதைக்கும் செய்யும் துரோகம் இல்லையா? மனித குலம் இன்புறவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அழகியல் நிகழ்வுகளை அறிவியலின் துணை கொண்டு உடைத்தெறிவது அநியாயம் இல்லையா? இதனாலேயே கிறிஸ்துவின் ஓவியத்தில் புகழ்வாய்ந்த கவிஞர்களுடன் விஞ்ஞானியான நியூட்டனும் இடம்பெற்றிருந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

குனிந்த தலையுடன் வேர்ட்ஸ்வொர்த்; அவருக்குப் பின்னால் கீட்ஸ்

இதை எழுத்தாளர் சார்லஸ் லேம்ப், ‘நியூட்டனுக்கு எல்லா விஷயங்களும் முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்கள் போலத் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாததை அவர் நம்ப மாட்டார்’ என விமர்சனம் செய்தார். அதை ஆமோதித்த கீட்ஸ், ‘நியூட்டன், வானவில்லின் பிரம்மாண்ட அழகை வெறும் கண்ணாடி குடுவைக்குள் பிரியும் வண்ணங்கள் என்ற மட்டத்திற்கு சுருக்கிவிட்டார்’ எனக் குற்றம்சாட்டினார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, கீட்ஸ் ‘லாமியா’ என்ற நீண்ட கவிதை ஒன்றை வெளியிட்டு அதிலும் நியூட்டன் மீதான தனது கசப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதில்,

‘வறட்டுத் தத்துவத்தின் தொடுதலில்
அனைத்து வசீகரங்களும் பறந்துவிட்டன அல்லவா?
ஒருகாலத்தில் சொர்க்கத்தில் வானவில் ஒன்று இருந்தது
அதன் இழையோடும் ஆச்சரியத்தை நாம் அறிந்திருந்தோம்;
இன்று சாதாரண விஷயங்களின் பட்டியலில் அதுவும் இணைந்துவிட்டது
தத்துவம் (அறிவியல்) தேவதைகளின் சிறகுகளை இறுக்கி பிடித்துவிட்டது
அனைத்து மர்மங்களையும் வரை கோடுகளுக்குள் அடைத்துவிட்டது
வானவில்லை இழையுரித்துவிட்டது…’

எனக் குறிப்பிட்டு, வானவில் என்ற அதிசயத்தக்க நிகழ்வை நியூட்டன் அறிவியலின் மூலம் விளக்கச் செய்து, அதன் அழகைக் கெடுத்துவிட்டதாக கீட்ஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

கீட்ஸைக் குறை சொல்லி அர்த்தமில்லை. நாம் அனைவருமே வானவில்லை வெறும் அழகியல் நிகழ்வாக மட்டுமே இன்று வரை ரசித்து வருகிறோம். ஆனால் அந்த வானவில்லுக்குள்தான் பிரபஞ்சத்தின் ரகசியமே ஒளிந்திருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வாருங்கள் அதைதான் பார்க்கப்போகிறோம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *