ஒரு பொருள் எப்படி வண்ணத்தைப் பெறுகிறது? ஒளி என்பது நம்மால் பார்க்க முடிந்த அலைநீளங்களை கொண்ட மின்காந்த அலைகள் என்று பார்த்தோம். இந்த ஒளி ஒரு பொருளின் மீது விழும்போது அதிலுள்ள அலைநீளங்களை (வண்ணங்களை) அந்தப் பொருள் உள்ளிழுத்து கொண்டு, ஒரே ஒரு அலைநீளத்தை (வண்ணத்தை) மட்டும் வெளியிடுகிறது.
அந்த அலைநீளமே அந்த பொருளின் வண்ணமாக நமக்குக் காட்சியளிக்கிறது. இவ்வாறு வண்ணங்கள் உள்ளிழுக்கப்படுவதற்கு காரணம் அந்தப் பொருளின் அணுக் கட்டமைப்பு (Atomic Structure).
உதாரணத்திற்கு ஒரு நீல நிறப் பொருள் நம் கண்முன்னே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அறிவியலின்படி, சூரிய ஒளி அந்தப் பொருளில்படும்போது, அது சூரிய ஒளியில் உள்ள அனைத்து வண்ணங்களையும் உள்ளே உறிஞ்சிவிட்டு, நீல நிறத்தை மட்டும் வெளியே தெறிக்கவிடுகிறது. அதனால் அந்தப் பொருள் நமக்கு நீல நிறமாகத் தெரிகிறது.
இவ்வாறு நியூட்டனின் வானவில் கண்டுபிடிப்பில் தொடங்கிய ஆய்வுகள்தான் இன்று நாம் மருத்துவத்திற்கு பயன்படும் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், நாம் பயன்படுத்தும் ரேடார்கள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளுக்குத் தொடக்கமாக அமைந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா?
நியூட்டனின் நிறமாலை ஆய்வுகள் வானவில் தோற்றத்திற்கான காரணங்களை கண்டறிந்ததோடு மட்டும் நிற்கவில்லை, பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த புரிதலையும் நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
வானவில் ரகசியம்
மனிதன் முன்னுள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று, இந்தப் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதுதான். இதற்கு கடவுள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனிதன் கற்பித்தாலும், உண்மை காரணத்தை கண்டறியும் அவனது தேடல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கான விடையையும் அறிவியல் கண்டறிய முயற்சிக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் மையத்தில் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதற்கு இரண்டு அறிவியல் கோட்பாடுகள் சொல்லப்பட்டன. ஒன்று மாறா நிலைக் கோட்பாடு (Steady State Theory), மற்றொன்று அண்ட பெருவெடிப்பு கோட்பாடு (Big Bang theory).
மாறா நிலை கோட்பாடு மிக எளிமையானது. பிரபஞ்சம் விரிவடைகிறது. அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சத்திற்கு தொடக்கம் என்பது இல்லை. இப்போது எப்படி இருக்கிறதோ அப்படிதான் எப்போதும் பிரபஞ்சம் இருந்து வருகிறது. இனிமேலும் இருக்கப்போகிறது.
பிரபஞ்சத்திற்குள் பருப்பொருட்கள் இருக்கின்றன. பிரபஞ்சம் விரிவடையும்போது, அதைச் சமன் செய்வதற்கு புதிய பருப்பொருட்கள் தோன்றுகின்றன. இதனால்தான் புதிய புதிய நட்சத்திரங்களும் கோள்களும் உருவாகின்றன என்கிறது இந்தக் கோட்பாடு.
இவற்றை நிரூபிக்க முடியாததால் இந்தக் கோட்பாடு தற்போது தவறு என்று நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதைத்தவிர அறிவியலாளர்கள் கூறும் மற்றொரு கோட்பாடு பெரு வெடிப்பு கோட்பாடு.
பெருவெடிப்பு கோட்பாடு இதுதான். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விநோத பெரு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் இந்தப் பிரபஞ்சம் உருவாகி நட்சத்திர மண்டலங்களும் நட்சத்திரங்களும் தோன்றியிருக்கின்றன. அப்படியே படிப்படியாக நாம் இருக்கும் நிலையைப் பிரபஞ்சம் அடைந்திருக்கிறது.
அறிவியலாளர்களுக்கு மத்தியில் இந்த கோட்பாடே இப்போது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஏன் ஏற்றுக்கொள்கிறோம்? எந்த ஒரு யூகத்தையும் உறுதி செய்வதற்கு அறிவியல் சில பல ஆய்வு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதையெல்லாம் அந்த யூகம் பூர்த்தி செய்தபின்தான் அவை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு பெரு வெடிப்பு கோட்பாடு அறிவியல் சோதனைகளை வெற்றிக்கொண்டது மூலம் இன்று பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதையும் இறுதி உண்மை என அறிவியல் கூறிவிடவில்லை. தொடர்ந்து தேடல் நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் நவீன அறிவியல் புரிதலின்படி நாம் அறியக்கூடிய (Observable) பிரபஞ்சம் 1300 – 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பால் தோன்றி இருக்கிறது. ஆனால் இதை ஏன் அறியக்கூடிய பிரபஞ்சம் என்கிறோம்?
அறியக்கூடிய பிரபஞ்சம் என்றால் இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அறிந்து வைத்திருக்கும் பிரபஞ்சம். இன்னும் நாம் பிரபஞ்சத்தை பற்றி அறியாத விஷயங்களும் நிறைய இருக்கலாம் அல்லவா?
இப்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு பிரபஞ்சம் இருக்கிறது என்பதைதான் நாம் உறுதி செய்திருக்கிறோம். நம் புலன்களுக்கும் நாம் உருவாக்கி வைத்திருக்கும் கருவிகளுக்கும் (தொலைநோக்கி உட்பட) புலப்படாத பல பிரபஞ்சங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனை பல்பிரபஞ்சம் (Multiverse) என்று அழைக்கின்றனர்.
சோப்பு நுரையில் தோன்றும் சிறிய சிறிய குமிழிகளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதில் ஒரே ஒரு குமிழிதான் நாம் வாழும் பிரபஞ்சம். நேரடி ஆதாரங்களுடன் நாம் அறியக்கூடிய பிரபஞ்சம். நுரையில் இருக்கும் பல்வேறு குமிழிகளைப் போல பல்வேறு பிரபஞ்சங்கள் நம்முடைய பிரபஞ்சத்தையொட்டியே இருக்கின்றன.
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நீங்களும், நானும் பிறந்து வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. அவற்றை நம்மால் உணரவோ அறியவோ முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவும் ஒரு கோட்பாடுதான். அறுதி உண்மை என சொல்லிவிட முடியாது.
இப்படியாக நாம் அறியக்கூடிய பிரபஞ்சம்தான் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கிறது. அதேபோல காலம் (Time) மற்றும் வெளி (Space) ஆகியவைகூட பெரு வெடிப்புக்குப் பிறகே தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சரி அப்படியென்றால் பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது? தெரியாது. ஏனென்றால் அவற்றை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது என்பதே உண்மை. ஒரு புழுவால் வானத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி சிந்திக்க முடியுமா? ஒரு புலியால் காலம், நேரத்தை பற்றியெல்லாம் சிந்திக்க முடியுமா? அதேபோல்தான் பரிணாம வளர்ச்சியின் பலனாக மனித இனம் அடைந்த மூளை காலம், நேரத்திற்கு உட்பட்டுதான் அனைத்தையும் சிந்திக்கும். அவற்றை கடந்த ஒன்றை அதனால் கற்பனையால் கூட சிந்திக்க முடியாது. (ஏனென்றால் பொருளில் இருந்துதானே கருத்து வந்தது).
அதனால் பிரபஞ்சம் உருவாவதற்கு முன் என்ன இருந்தது என்பதை அறிவதற்கான திறன் நம் மூளைக்கு இல்லை என்றே ரிச்சர்ட் ஃபெயின்மேன் என்ற விஞ்ஞானி கூறுகிறார். ஆனால் அதற்காக மனித இனம் தனது தேடலை நிறுத்திவிடுமா என்ன?
முதலில் பிரபஞ்சம் உருவானபோது என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வோம். பிறகு அதற்கு அடுத்தது என்ன என்று பார்ப்போம் என தொடருகிறது மனித ஆராய்ச்சி.
சரி, எப்படி 1400 கோடிக்கு முன் பிரபஞ்சம் உருவானது என விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தார்கள்? அவர்களுக்கு எப்படி இந்தப் புரிதல் ஏற்பட தொடங்கியது? இதற்கான விடையை அறிய நாம் மீண்டும் நட்சத்திரங்களுக்கே திரும்ப வேண்டும்.
நாம் ஏற்கெனவே இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் அனைத்தும் பெரும் இடைவெளி விட்டு அமைந்திருக்கின்றன என்று பார்த்தோம். ஒரு நட்சத்திரத்திற்கும் அதைச் சுற்றியுள்ள கோள்களுக்கும் இருக்கும் இடைவெளியைவிட, இரண்டு நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் தூரம் மிக அதிகம்.
ஆனால் நாம் அகன்ற கோணத்தில் விண்வெளியை கவனிக்கும்போது இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கூட்டமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் இடையேயான இடைவெளி பெரிதாக இருந்தாலும் தூரத்தில் இருந்து கவனிக்கும்போது அனைத்தும் கூட்டமாகவே இருக்கின்றன. இந்த மண்டலங்களைதான் நாம் நட்சத்திர மண்டலங்கள் அல்லது விண்மீன் மண்டலங்கள் என்று சொல்கிறோம்.
ஆங்கிலத்தில் இதனை Galaxy என்று அழைக்கின்றனர். விண்வெளி ஆய்வாளர்கள் சக்திவாய்ந்த தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்கும்போது இந்த நட்சத்திர மண்டலங்கள் சுழற்சி வடிவத்தில் இருக்கின்றன எனத் தெரிகிறது. ஒவ்வொரு கூட்டங்களிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் வாயு மற்றும் தூசு மண்டலங்களும் காணப்படுகின்றன.
நமது நட்சத்திரம், அதாவது சூரியன் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர மண்டலத்தைப் பால்வீதி நட்சத்திர மண்டலம் என்று அழைக்கிறோம். இதற்குக் காரணம், நாம் இருண்ட வானத்தைப் பார்க்கும்போது நமது நட்சத்திர மண்டலம் முடிவு பெறும் இடத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியும். அது பார்ப்பதற்கு, விண்வெளியில் பால்வெண்மை நிறத்தில் ஏதோ ஒன்று விரவிக்கிடப்பது போலத் தோன்றும்.
அதனால் நாம் அதை பால்வீதி என அழைக்கிறோம். நாம் பால்வீதியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் அருகே அமைந்துள்ள ஒரு கோளில்தான் இருக்கிறோம் என்பதால் நாம் இருக்கும் இடத்தை நம்மால் முழுமையாகக் கண்டுகளிக்க முடியாது.
ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களும் நமது பால்வீதியை விட்டு எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை நம்மால் கூறிவிட முடியும். எப்படி? இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும், நட்சத்திர மண்டலமும், ஒரு கோளும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
(தொடரும்)