Skip to content
Home » விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?

விண்வெளிப் பயணம் #8 – நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன?

நட்சத்திரங்கள்

முதலில் அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரத்தை எப்படி அறிந்துகொள்வது என்பதைத் தெரிந்துகொள்வோம். இதன் பெயர் இடமாறு முறை (Parallax Method). உங்கள் முகத்திற்கு நேராக ஒரு விரலை நீட்டுங்கள். அந்த விரலை இடதுக் கண்ணை மூடிக்கொண்டு வலதுக்கண்ணால் பாருங்கள். இப்போது வலதுக்கண்ணை மூடிக்கொண்டு இடதுக்கண்ணால் பாருங்கள்.

இப்படியே ஒவ்வொரு கண்ணாலும் மாறி மாறிப் பாருங்கள். உங்கள் விரல் ஒரே இடத்தில் இருந்தாலும் வலது பக்கமும், இடதுபக்கமும் மாறிக்கொண்டே இருப்பதுபோல தோன்றுகிறதா? இதற்குக் காரணம் நம்முடைய இரு கண்களின் பார்வைக் கோணத்திற்கும் இருக்கும் வித்தியாசம்.

இப்போது உங்கள் விரலை இரு கண்களுக்கும் நடுவில் கொஞ்சம் பக்கத்தில் கொண்டு வாருங்கள். இப்போது விரல் இடம் மாறுவது நன்றாகத் தெரியும். உங்கள் விரலை முகத்தில் இருந்து தூரம் கொண்டு சென்று இப்போது இரு கண்களாலும் மாறி மாறிப் பாருங்கள். இப்போது விரல் இடம் மாறுவதைக் குறைவாகத்தான் உணர முடியும்.

இப்படியாக உங்களுடைய இரு கண்களுக்கும் இருக்கும் இடைவெளி என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, விரல் தூரம் செல்லச் செல்ல இடம் மாறும் கோணத்தை ஒப்பிட்டு உங்கள் கண்களுக்கும் விரலுக்கும் உள்ள இடைவெளி என்ன என்பதைக் கண்டுபிடித்து விடலாம். இதே வழிமுறைதான் அருகில் உள்ள நட்சத்திரத்தின் தூரத்தை அளப்பதற்கும் பயன்படுகிறது.

நீங்கள் விரலை பார்ப்பதற்கு பதில் இரவில் வானில் உள்ள நட்சத்திரத்தைப் பார்க்கப்போகிறீர்கள். ஆனால் ஓரிடத்தில் இருந்து நட்சத்திரத்தைப் பார்த்துவிட்டு, பிறகு கொஞ்சம் தூரம் நகர்ந்து நின்று மீண்டும் நட்சத்திரத்தைப் பார்த்தால் அது இடம் மாறுவது நமக்குச் சுத்தமாகத் தெரியாது.

அதனால் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருந்து அந்த நட்சத்திரம் இருக்கும் இடத்தைக் குறித்துக்கொண்டு, பிறகு பல லட்சம் தூரத்திற்குச் சென்று அந்த இடத்தில் இருந்து நட்சத்திரத்தை மீண்டும் பார்க்க வேண்டும். இப்போது நாம் சென்ற தூரத்தையும் நட்சத்திரம் இடம் மாறியதையும் கணக்கிட்டு நமக்கும் நட்சத்திரத்திற்கும் இருக்கும் தூரத்தைச் சொல்லி விடலாம்.

ஆனால் இதற்காக நாம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணித்துச் செல்ல வேண்டுமே என்று நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம். அதற்கும் இயற்கை ஒரு வழியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. நம் பூமிதான் சுற்றிக்கொண்டே இருக்கிறதே? அதனால் நாம் நிற்கும் இடத்தில் இருந்தே அந்த நட்சத்திரத்தைக் கணக்கிட்டு விடலாம். எப்படி?

இடமாறு முறை (Parallax Method)
இடமாறு முறை (Parallax Method)

எளிமைப்படுத்திச் சொல்கிறேன். நாம் ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு மேற்கு திசையில் இருந்தால், அடுத்த ஆறு மாதத்தில் கிழக்கு திசைக்குச் சென்றிருப்போம். ஆனால் அந்த நட்சத்திரம் அதே இடத்தில்தான் இருக்கும். இதை வைத்து நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

நம் பூமி சூரியனைச் சுற்றி வரும் தொலைவு தோராயமாக 1.51 கோடி கிலோ மீட்டர். இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் வானில் எங்கு இருக்கிறது என்று குறித்துக்கொள்ளலாம். ( ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் இடத்தை அறிய அதன் பின் இருக்கும் நட்சத்திரங்களையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்).

பின் நம் பூமி 6 மாதம் கழித்து சூரியனுக்கு மறுபக்கத்தில் வந்திருக்கும்போது மீண்டும் அந்த நட்சத்திரம் இருக்கும் இடத்தைக் குறித்துக்கொள்ளலாம். இப்போது அந்த நட்சத்திரம் இடம் மாறி இருக்கும் தூரத்தை, சூரியனின் சுற்றுப்பாதை தூரத்துடன் ஒப்பிட்டு நமக்கும், நட்சத்திரத்திற்கும் இருக்கும் இடைவெளியை அறிந்துகொண்டு விடலாம்.

இங்கே குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் பூமியின் சுற்றுப்பாதை வட்டப்பாதை கிடையாது. அது நீள் வட்டப்பாதை. அதை வைத்துதான் நாம் நட்சத்திரத்தின் தூரத்தை அளக்க வேண்டும். நான் எளிமைப்படுத்துவதற்காக கிலோ மீட்டர் தூரம் எல்லாம் சொல்லி விளக்கியிருக்கிறேன்.

இப்போது நாம் பார்த்த இடமாறு முறை அருகில் உள்ள நட்சத்திரங்களின் தூரத்தை மட்டுமே அளவிட உதவும். தொலைவில் உள்ள நட்சத்திரத்தையோ நட்சத்திர மண்டலத்தையோ கணக்கிட வேண்டுமென்றால் இந்தக் கணக்கீட்டு முறை உதவாது. இதற்காக நாம் வேறு சில வழிமுறைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

நட்சத்திரம் ஒளிரக்கூடியது. அதனால் நட்சத்திர மண்டலமும் ஒளிரக்கூடியது. அப்படியென்றால் ஒரு நட்சத்திர மண்டலம் ஒளிரும் பிரகாசத்தை வைத்து அது பக்கத்தில் இருக்கிறதா, தூரத்தில் இருக்கிறதா என்று சொல்லி விடலாம் இல்லையா? இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

இரண்டு வெவ்வேறு தூரத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்கள் ஒரே அளவில் ஒளிர்ந்தால் என்ன செய்வது? உதாரணத்திற்கு இரண்டு மெழுகுவர்த்திகளை கொளுத்தி, ஒன்றை பக்கத்திலும், மற்றொன்றை தொலைவிலும் வைக்கிறோம். அருகில் உள்ள மெழுகுவர்த்தி மங்கலாக எரிந்து, தொலைவில் உள்ள மெழுகுவர்த்தி பிரகாசமாக எரிந்தால், நாம் அதில் இருந்து வரும் ஒளியை மட்டும் வைத்து பிரகாசமான மெழுகுவர்த்திதான் பக்கத்தில் இருக்கிறது என்று கூறிவிட முடியுமா?

இந்தப் பிரச்சினையைச் சரி செய்வதற்கும் விஞ்ஞானிகள் ஒரு வழியை கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர். வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் இருந்து சில சிறப்பு நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் தேர்வு செய்து வைத்திருக்கின்றனர். அதை அவர்கள் தரநிலை மெழுகுவர்த்திகள் (Standard Candles) என்ற அழைக்கின்றனர்.

அந்தச் சிறப்பு நட்சத்திரங்களை முழுமையாக ஆராய்ந்து அந்த நட்சத்திரத்தின் அளவு, அதில் இருந்து வெளிவரும் ஒளி மற்றும் பிற கதிர்களின் தன்மை ஆகிய தகவல்களைக் குறித்து வைத்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்தில் இருந்தும் ஒரே ஒரு தரநிலை மெழுகுவர்த்தியைக் கண்டுபிடித்துவிட்டால் போதும், அந்த நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் ஒளியை அளவிட்டு அந்த மொத்த கூட்டமும் எத்தனை தொலைவில் இருக்கிறது என்பதை சில கணக்கீடுகள் மூலம் கண்டுபிடித்திடலாம்.

சரி, நாம் அருகில் உள்ள நட்சத்திரங்களை அறிய இடமாறு முறையும், கொஞ்சம் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலங்களின் தூரத்தைக் கண்டறிய தரநிலை மெழுகுவர்த்திகளும் இருக்கின்றன. ஆனால் பல லட்சம், கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தை, தூரத்தை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

அத்தனை தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை வைத்து அவை எவற்றால் உருவாக்கப்பட்டிருக்கிறது? அதன் வயது என்ன என்பதை எப்படி அறிய முடியும்? இங்குதான் நியூட்டனின் வானவில் நமக்கு மீண்டும் உதவுகிறது. நியூட்டனின் வானவில்லை வைத்து நாம் நட்சத்திரங்களையும் நட்சத்திர மண்டலங்களை மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தின் வயது என்ன? இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கிறதா? இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதையும் அறியப்போகிறோம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *