ஆர்தர் கிளார்க் என்ற புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் எழுதிய வாக்கியம் இது.
‘இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்டிருக்க வேண்டும், அல்லது அப்படியில்லாமல் இருக்க வேண்டும். இரண்டுமே அச்சம் ஏற்படுத்தக்கூடியவைதான்.’
அகன்று விரிந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிர்கள் இருக்கின்றவா அல்லது பிற கிரகங்களிலும் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளவா என்ற கேள்வி மனிதர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது.
அதற்கான தேடல் பண்டைய காலத்திலேயே தொடங்கிவிட்டாலும், நவீன கருவிகளும், விண்வெளி முன்னேற்றமும் ஏற்பட்ட பின்னரே நமது தேடலில் ஒழுங்கமைப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் வேற்று கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நம்பும் அளவிற்கு சதிக்கோட்பாடுகள் (Conspiracy Theories) எனப்படும் கதைகள் அவர்களது எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் வானில் வேற்றுகிரக வாசிகள் பயன்படுத்தும் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாகவும், தங்களையே ஏலியன்கள் கடத்திச் சென்றதாகவும் மக்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள் அதிகாரப்பூர்வமாகவே ஆவணம் செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் மக்கள் நம்பிக்கையில் விதைத்ததற்கு ஊடகங்களுக்கும் பெரும் பங்குண்டு.
இணையம் பரவலானதற்குப் பிறகு தமிழகத்திலேயேகூட சோழர்கள் ஏலியன்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், நாம் கும்பிடும் கடவுள்கள் எல்லாம் ஏலியன்கள் என ஏராளமான யூடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. ஆனால் எந்தவொரு கதைக்குப் பின்னாலும் அறிவியல்பூர்மான ஆதாரங்கள் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் வேற்று கோள்களில் உயிர்கள் இருந்தால், அவை பூமியில் இருப்பது போன்றுதான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. இதற்கு 1891ஆம் ஆண்டு ஜூலியஸ் செயினர் என்ற விஞ்ஞானி வேற்று கிரகங்களில் சிலிகான் வகை உயிர்கள் இருக்கலாம் என்று கணிப்பை வெளியிட்டார்.
அது என்ன சிலிகான் வகை உயிரினங்கள்? நம் பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் கார்பனால் உருவானவை. இந்தப் பிரபஞ்சத்தில் அதிகம் காணப்படும் தனிமமும் கார்பன்தான். கார்பனுடைய சிறப்பு அதன் அணு அமைப்புதான். கார்பன் மற்ற அணுக்களுடன் இணைந்து 4 இணைப்பு அமைப்பை உருவாக்கும் (4 Bonds) தன்மை கொண்டது. கார்பன் ஆக்சிஜன் உள்ளிட்ட அணுக்களுடன் இணைந்து உயிர் கட்டமைப்பு எனப்படும் பலபடி சேர்மமாக (Polymer) உருவாகக்கூடியது.
இந்த உலகில் நாம் எந்த உயிரினத்தை எடுத்துகொண்டாலும், அதன் அடிப்படை கட்டமைப்பில் கார்பன் இருக்கும். நம்முடைய டி.என்.ஏக்கள் கூட கார்பன் அணுக்களால் உருவானவைதான். கார்பன் அணு மற்ற அணுக்களுடன், மற்ற தனிமங்களுடன் சரியான இணைப்பில், சரியான அமைப்பில் இணைவதால்தான் இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு அடிப்படையான புரதம், வைட்டமின், ஹார்மோன், நியூட்ரியண்ட்ஸ் ஆகியவற்றைக் கட்டமைக்க முடிகிறது. நம் மனித உடல்கூட பதினெட்டு சதவிகிதம் கார்பனால் உருவானது.
இதனால்தான் கார்பன் அணுக்களை மற்றவற்றை விட சிறப்பு வாய்ந்தவையாகக் கருதுகிறோம். அதனால்தான் வேதியியலில் கார்பன் பற்றி படிப்பதற்கு என்றே கரிம வேதியியல் (Organic Chemistry) என்ற தனிப்பிரிவே இருக்கிறது. கார்பனின் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் தனியாக பார்க்க வேண்டும் என்பதால் இப்போதைக்கு இங்கேயே நிறுத்திக்கொள்வோம்.
0
நம் பூமியில் உள்ள காற்று, நீர், கார்பன் உள்ளிட்டவற்றால்தான் உயிர்கள் உண்டாகியுள்ளது. இதுவே வேற்று கோள்களில் ஆக்சிஜன், நீர், கார்பன் இல்லாமல் உயிர்கள் தோன்ற முடியுமா?
கோட்பாடு ரீதியாக முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கு வேண்டியது சிலிக்கான். சிலின்கானை கார்பனின் கார்பன் காப்பி என்றே சொல்லலாம். ஏனென்றால் சிலிகானும் கார்பனைப் போன்று மற்ற அணுக்களுடன் நான்கு அமைப்பு இணைப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால் சிலிகானை அடிப்படையாக வைத்தும் உயிர்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சிலிகான் அடிப்படையிலான உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை எந்தக் கோள் கொண்டிருக்கிறது என்றால் நம் அருகிலேயே இருக்கும் சனி கிரகத்தின் துணைக்கோளான டைடன் என்ற சிறிய நிலவுதான். டைடனில் 95% நைட்ரஜனும், 5% மீத்தேனும் இருக்கிறது. ஆனால் அங்கு ஆக்சிஜன் கிடையாது. நீர் உறைந்த நிலையில் இருக்கிறது.
பொதுவாக சிலிகான் அடிப்படை உயிரினங்கள் இருந்தால் அவற்றிற்கு நீர் தேவையில்லை என்றே கூறப்படுகிறது. அந்த உயிரினங்கள் திரவ வடிவ மீத்தேனைதான் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் டைடன்தான் சிலிகான் அடிப்படை உயிரினங்களுக்கு உகந்த இடம் என்றே கூறலாம். சிலிகான் நீருடன் சேரும்போது அதன் கட்டமைப்பு உடைந்துவிடும் என்பதால் அங்கு நீர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல் சிலிகான் உயிரினங்களுக்கு ஆக்சிஜனும் தேவையில்லை. ஏனென்றால் ஆக்சிஜனுடன் சிலிகான் கலக்கும்போது சிலிகான் டை ஆக்சைடு என்ற கண்ணாடி உருவாகி விடுகிறது. இதனால் சிலிகான் உயிரினங்கள் பூமிக்கு வந்தால் கண்ணாடியாக மாறிவிடும் தன்மை கொண்டவை. அதேபோல் நீரிலும் ஆக்சிஜன் இருக்கும் என்பதால் தண்ணீர் குடித்தாலும் கதை கந்தல்தான்.
மேலும் சிலிகான் இணைப்பு பலவீனமாக இருப்பதால் அதனால் அதீத உஷ்ணத்தை தாங்க முடியும். இதனால் டைடன் கிரகத்தின் மேற்பகுதியை விட அதன் அடியில் இருக்கும் உஷ்ணத்தில்தான் இந்த உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த சிலிகான் அடிப்படை உயிரினங்களின் இணைப்பு பலவீனமாக இருப்பதால் அதற்குள்ள எலும்பு போன்ற உடலமைப்புகள் பார்ப்பதற்கு ஜெல்லி போலத் தோற்றமளிக்கலாம். இதனால் இவற்றால் பெரிய மிருகங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும் நுண்ணுயிர்களாக இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கருதப்படுகிறது.
ஆனால் நாம் ஒரு கோட்பாடு மற்றும் யூகத்தின் அடிப்படையிலேயே சிலிகான் உயிரினங்கள் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பதால், உண்மையில் அந்த வகை உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பார்ப்பதற்கு இப்படிதான் இருக்குமா போன்ற எந்த ஆதாரங்களும் நம்மிடம் இல்லை.
சரி, இந்தக் கதைகளை எல்லாம் விட்டுவிடுவோம். உண்மையிலேயே இந்தப் பிரபஞ்சத்தில், வேறு ஏதாவது கோளில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அதற்கான சூழல் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? அப்படி உயிர்கள் இருந்தால் நாம் திரைப்படங்களில் பார்க்கும் ஏலியன்கள் போலத்தான் இருக்குமா? அவர்கள் மனிதர்களைபோல அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பார்களா?
இதற்கான பதில் யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை. உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் நேரடி ஆதாரம் கிடையாது. அதை தேடித்தான் நாம் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.
(தொடரும்)