நாம் ஏற்கெனவே பார்த்தபடி உயிர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கான சூழல்கள் அமைந்த கோள்களும், அந்தக் கோள்களின் அருகே நட்சத்திரமும் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் நாம் தினம்தினம் ஏகப்பட்ட நட்சத்திரங்களையும், அவற்றைச் சுற்றி வட்டமடிக்கும் கோள்களையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம். நம் சூரிய குடும்பத்தில் இல்லாமல் மற்றொரு நட்சத்திரத்தை சுற்றி இயங்கியபடி இருக்கும் கோள்களை நாம் புறக்கோள்கள் (Exoplanets) என்கிறோம். இந்தப் புறக்கோள்களில்தான் நாம் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
புறக்கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை எப்படி அறியமுடியும்? நம்முடைய தொலைநோக்கிகள் தூரத்தில் உள்ள கோள்களைப் படம் பிடிக்கலாம். ஆனால் ஒரு கோளில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது கடினம்.
அது மட்டுமில்லாமல் கோள்கள் நட்சத்திரங்களைப் போன்று ஒளி வீசுவது கிடையாது. அருகிலுள்ள நட்சத்திரத்தின் ஒளியில் மட்டுமே நாம் அதைக் காண முடியும். அதனால் ஒரு குறிப்பிட்ட கோளில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கு நாம் வேறு பல வழிகளை பயன்படுத்துகிறோம்.
அவற்றில் சிறந்த வழி வானவில் வழிதான். ஸ்பெக்ட்ரோஸ்கோப் எப்படி ஒரு நட்சத்திரத்தின் மூலை முடுக்கையெல்லாம் தெரிந்துகொள்ள உதவுகிறது எனப் பார்த்தோம். அதையேதான் நாம் இங்கேயும் பயன்படுத்தி ஒரு கோளைத் தெரிந்துகொள்ள முயல்கிறோம்.
முதலில் ஒரு நட்சத்திரத்தின் அருகே கோள்கள் இருக்கின்றனவா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? வெகு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் நகர்வதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் அதன் நகர்வை, அது நகரும் வேகத்தை, அதிலிருந்து வெளிவரும் ஒளியின் துணைக்கொண்டு ஸ்பெக்ட்ரோஸ்கோப் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
ஒரு நட்சத்திரம் நம்மை விட்டு அகன்று சென்றால் சிவப்பு பெயர்ச்சியும், நம்மை நோக்கி நெருங்கி வந்தால் நீலப் பெயர்ச்சியும் நடைபெறும் என ஏற்கனவே பார்த்தோம். இப்போது அந்த நட்சத்திரத்தை ஒரு கோள் சுற்றி வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்தக் கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருக்கும்போது நட்சத்திரத்தின் ஒளி தெளிவாக வந்தடையும். அப்போது நட்சத்திரம் அருகில் இருப்பதைபோல நமது ஸ்பெக்ட்ரோஸ்கோப்பில் நீல பெயர்ச்சியில் நிறங்கள் அமைந்திருக்கும்.
அதே கோள் நட்சத்திரத்தைச் சுற்றி அதற்கு முன் வந்து நிற்கும்போது அந்த நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் ஒளி கொஞ்சம் தடைப்படும். இப்போது அந்த ஒளியை ஆராயும்போது அந்த நட்சத்திரம் சற்று விலகி சென்றிருப்பதைபோல சிவப்புப் பெயர்ச்சியில் நமக்கு தெரியவரும். இவ்வாறு நட்சத்திரத்தின் ஒளி தொடர்ந்து சிவப்பு பெயர்ச்சியையும், நீலப் பெயர்ச்சியை மாற்றி மாற்றி காட்டிக்கொண்டிருந்தால், நிச்சயம் அந்த நட்சத்திரத்தை ஏதோ ஒரு கோள் சுற்றி வருகிறது என்பதை நாம் யூகித்துவிடலாம்.
அதேபோல் சிவப்பு, நீலப் பெயர்ச்சியின் மாறுபாட்டை வைத்து அந்தக் கோள் அந்த நட்சத்திரத்தில் இருந்து எத்தனை தூரத்தில் இருக்கிறது, அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வர எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்பதைக் கணித்துவிடலாம்.
இன்றைய தேதியின்படி 4000க்கும் மேற்பட்ட புறக்கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவற்றை பாறை கோள்கள், சூப்பர் பூமிகள், மினி நெப்ட்யூன்கள், ஐஸ் கோள்கள் மற்றும் வாயு கோள்கள் என வகைப்படுத்தியுள்ளனர்.
இந்த கோள்களில் உயிர்கள் வாழ முடியுமா?
இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான நட்சத்திர மண்டலங்களும் கோள்களும் இருக்கின்றன. ஒவ்வொரு கோளும் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. நம்முடைய பால்வீதியில் மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 சதவீத நட்சத்திரங்கள் மட்டுமே சூரியனைப் போன்றவை. இந்த நட்சத்திரங்களும் சூரியனைவிட வித்தியாசமானவை. அந்த நட்சத்திரங்களைச் சுற்றி கோள்கள் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் அவற்றில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இல்லாமல் அமைந்திருக்கிறது.
உதாரணமாக ஒரு கோளின் அருகே உள்ள நட்சத்திரம் மிகப்பெரியதாக இருந்தால், அது குறுகிய ஆயுளையே கொண்டிருக்கும். அதனால் உயிர்கள் உருவாகத் தொடங்குவதற்கான சூழல் ஏற்படும் முன்னே நட்சத்திரம் அழிந்துவிடும்.
சரி, அப்படியென்றால் எத்தனை கோள்கள், உயிர்கள் வாழும் சூழலை ஏற்படுத்தி தரும் சரியான நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றன? நாம் கண்டுபிடித்த பெரும்பான்மையான கோள்கள் வியாழனைப் போன்றவை. அப்படியென்றால் அவை உயர் அழுத்தத்தில் உள்ள வாயுக்களால் ஆன கோள்கள். அவற்றில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் அமையாது.
வியாழன் போன்ற பெரிய அளவில் இல்லாத கோள்களைக் கண்டறியவும் விஞ்ஞானிகளுக்குக் கடினமாக இருக்கிறது. அதற்காக வாயுக்கோள்களில் நம் பூமியைப் போல் இல்லாமல் வேறு வகையான உயிர்கள் வாழவே முடியாது என்பது கிடையாது.
நாம் ஏற்கெனவே சிலிகான் உயிரினங்கள் குறித்து பார்த்ததுபோல, வாயுக்கோளில் வாழும் உயிரினங்களும் இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு நாம் அறிந்தவகையில் உயிர்கள் வாழ வேண்டுமென்றால் அந்தக் கோளில் நீர் இருக்கவேண்டும். அதனால் விஞ்ஞானிகள் பெரும்பாலும் ஒரு கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு நீர் ஆதாரங்களையே தேடுகின்றனர்.
புறவெளி உயிரியல் (Exobiologist) விஞ்ஞானிகள் ஓர் உயிர் வாழ்வதற்கு நீரே அவசியம் எனக் கருதுகின்றனர். அதனால் நாம் உயிர்கள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்வதற்கு நீர் உள்ள கோள்களைத் தேடுவதே சரியான வழியாக அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் நீர் உள்ள கோள்களையும் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இங்குதான் ஒரு விஷயம் இருக்கிறது. நாம் தேடும் கோள்களில் உள்ள நீர் திரவ வடிவில் இருக்கவேண்டும். ஆனால் நாம் கண்டறிந்த கோள்களில் உள்ள நீர் அனைத்தும் உறைந்த வடிவத்திலேயே இருக்கிறது. உதாரணமாக நமக்கு பக்கத்திலேயே இருக்கும் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மேலும் வியாழனைச் சுற்றும் நிலவுகளில் ஒன்றான ஐரோபாவில் நீர் உறைந்த நிலையில் இருக்கிறது. அங்கு உறைந்த பனிக்கட்டிகளுக்கு அடியில் திரவ வடிவில் நீர் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் கீழ்ப்பரப்பில் கால்வாய்கள் இருப்பதாக பெர்சிவல் லோவல் என்ற விஞ்ஞானி ஆருடம் கூற, இதைத் தொடர்ந்துதான் செவ்வாயில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரத்தைத் தேடி நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாயைப் பலதரப்பட்ட வகைகளில் புகைப்படம் எடுத்து வருகிறது. மேலும் செவ்வாயைப் போன்று ஐரோப்பாவும் நம்முடைய சூரியக் குடும்பத்திலேயே உயிர் வாழும் உறவினர்களைக் கொண்டிருக்கிறதா என்ற தேடலிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
வாழத்தகுந்த புறக்கோள்கள்
சரி, உயிர்கள் வாழ்வதற்கு நீர் மட்டும் போதுமா? வெப்ப நிலை வேண்டாமா? ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்குச் சரியான வெப்ப நிலையும் அமைய வேண்டுமல்லவா? இதனை விஞ்ஞானிகள் கோல்டிலாக் பகுதி (Goldilock Zone) என்று அழைக்கின்றனர்.
அதாவது, உயிர்கள் வாழ்வதற்கான புறச்சூழலைக் கொண்டிருக்கும் கோள் சூரியனுக்குப் பக்கத்திலும் இருக்கக்கூடாது. வெகு தொலைவிலும் இருக்கக்கூடாது. பக்கத்தில் இருந்தால் சூரிய வெப்பத்தில் நீர் எல்லாம் கொதித்து ஆவியாகிவிடும். நட்சத்திரத்தில் இருந்து தூரத்தில் இருந்தால் நீர் உறைந்துவிடும்.
இரண்டுக்கும் இடைப்பட்ட, உயிர்கள் வாழும் சூழல் அமைந்த சரியான இடத்தைதான் தெய்வீக மண்டலம் என்று அழைக்கிறார்கள். நம்முடைய அறியப்பட்ட பிரபஞ்சத்தில் கோடானுக்கோடி கோள்கள் இருந்தாலும் நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவையும், சரியான வெப்பத்தையும் கொண்ட கோள்கள் மிக அரிதாகவே இருக்கின்றன.
2011ஆம் ஆண்டு மே மாதம் விஞ்ஞானிகள் Gliese 581 என்ற நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தனர். அந்த நட்சத்திரங்களுக்குப் பக்கத்தில் உள்ள Gliese 581e, b, c, d, e, f என அனைத்துக் கோள்களும் பூமியைப் போன்ற பாறைகளால் உருவான கோள்கள். இவற்றில் 581d தெய்வீக மண்டலத்தில் இருப்பதாகவும், அவற்றில் திரவ வடிவ நீர் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதேபோல் 1999ஆம் ஆண்டு முதலே TRAPPIST-1 என்ற நட்சத்திரத்தின் அருகில் பூமியைப் போன்ற அளவுடைய 7 கோள்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றிலும் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதேபோல் கெப்ளார் 186 நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள 5 கோள்களும் தெய்வீக மண்டலத்தில், நீர் மற்றும் உயிர்கள் இருப்பதற்கான சூழல்கள் அமைந்துள்ளன.
இவ்வாறு நாம் நீர் இருப்பதற்கான பல கோள்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். சரி, ஒரு கோளில் நீர் இருந்தால் மட்டும் அங்கு உயிர்கள் வாழும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியுமா? இங்குதான் நாம் மற்றொன்றையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
(தொடரும்)