Skip to content
Home » விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்

விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்

European Extremely Large Telescope

தொலைதூரத்தில் உள்ள ஒரு கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு விண்வெளி உயிரியலாளர்கள் அந்தக் கோளின் பரப்பு அல்லது வளிமண்டலத்தின் வழி ஊடுருவி வரும் நட்சத்திர ஒளியை (அதாவது அந்த கோள் சுற்றிக்கொண்டிருக்கும் சூரியனின் ஒளி) ஆராய்கிறார்கள். ஒருவேளை கோளின் வளிமண்டலத்திலோ பரப்பிலோ உயிர் இருந்தால், அவற்றின் வழியாக ஊடுருவி வரும் ஒளி அதற்கான தடயங்களை கொண்டிருக்கும். இதைத்தான் உயிர்குறியீடுகள் (Bio Signature) என்கிறோம்.

நம் பூமியையே எடுத்துக்கொள்வோம். ஒளியை வைத்து பூமி என்ற கோளை பற்றி எப்படி அறிய முடியும்? நாம் ஏற்கெனவே பார்த்த வானவில் ஆய்வு முறைதான். நம் சூரியனில் இருந்து வெளிவரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தில் ஊடுருவி செல்லும்போது, அதன் குறிப்பிட்ட சில அலைநீளங்கள் பூமியின் வளிமண்டலத்தில் நிரம்பியுள்ள வாயுக்களிலும், பருப்பொருட்களாளும் உட்கொள்ளப்படும்.

உதாரணமாக பூமியின் பரப்பில் உள்ள தாவரங்களில் உள்ள பச்சையம் (Chlorophyll) ஒளியில் உள்ள சிவப்பு, நீலம் உள்ளிட்ட அலைநீளங்களை உள்வாங்கிவிட்டு பச்சை நிறத்தை மட்டும் வெளியிடுகிறது. இவ்வாறு புறகோளின் ஒவ்வொரு பொருளிலும் ஊடுருவி வெளி வரும் ஒளியை வானியல் ஆய்வாளர்கள் ஆராயும்போது அதன் வளிமண்டலம் எவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என அறிந்துக்கொள்வர். இதை வைத்து அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா எனத் தெரிய வரும்.

இவ்வாறு உயிர்குறியீடுகளை தேடும் ஆய்வாளர்கள், ஒரு கோளில் நீருடன் ஆக்ஸிஜன், மீத்தேன் உள்ளிட்ட உயிர்களுடன் தொடர்புடைய வளிமண்டல வாயுக்களும் தென்படுகிறதா என்றும் தேடுகின்றனர்.

இப்படியாக மேற்சொன்ன ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது நமது பால்வீதியில் மட்டும் 30,000 கோடி கோள்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கிறது. மேலும் பூமியை போன்ற அளவுடைய உயிர் வாழ்வதற்கான கோள்கள் நமது பூமியில் இருந்து வெறும் 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது அங்கு உயிர்கள் இருந்தால் நாம் ஒரே நட்சத்திரக் கூட்டத்தில் வசிக்கும் அண்டைக் கோள்காரர்கள் ஆகிவிடுவோம்.

ஆனால் நாம் எத்தனைய உயிர்க் குறியீடுகளை கண்டறிந்தாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சில சூழல்களில் உயிர்கள் இல்லாமலேயே உயிர்க் குறியீடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உதாணத்திற்கு பசு மாடு மட்டும் மீத்தேன் வாயுவை வெளியிடாது. எரிமலைகளும் மீத்தேனை வெளியிடும். தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆக்சிஜனை உண்டு பண்ணும். அதேபோல சூரிய ஒளிகளும் ஆக்சிஜனை உண்டுப்பண்ணும் வாய்ப்பு இருக்கிறது. சூரிய ஒளி நீரில் விழும்போது அது நீரின் மூலக்கூறுகளை பிரித்து ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் தனித்தனியாக பிரித்துவிடும்.

அதனால் வேற்று உலக உயிர்களை பற்றி ஆராயும் வானியலாளர்கள் தவறான குறியீடுகளையும் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு கோளில் இருந்து தவறான உயிர்க் குறியீடுகளை பெற்று, அந்த கோளில் உயிர்கள் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

அதேபோல், ஒரு கோளில் உயிர்கள் இருந்தாலும் அங்கு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடும் நிலையும் இருக்கிறது. உதாரணமாக, பூமியையே எடுத்துகொள்வோம். பூமி என்ற கோள் உருவாகி பல கோடி ஆண்டுகளாக அதன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் கிடையாது. இருப்பினும் ஒற்றை செல் உயிரினங்கள் பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருந்தன.

இதனால் அப்போது நம் பூமியை வேறு யாராவது ஆராய்ந்திருந்தால் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய உயிர்குறியீட்டின் அடிப்படையில் பூமியில் உயிர்கள் இல்லை என்ற முடிவுக்குதான் வந்திருக்க வேண்டும். 200 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் புதுவகை பாசிக்குடும்பம் (Algae) ஒன்று பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவாகி இருந்தது. இந்தப் பாசிதான் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்ற வேதியல் வினைப்புரிந்து, பிற தனிமங்களுடன் வேதியல்ரீதியாக பிணைப்பில் இல்லாத தனி-ஆக்சிஜன்களை (Free Oxygen) உற்பத்தி செய்தது.

அதன்பின்தான் நம் பூமி ஆக்சிஜன் நிரம்பிய வளிமண்டலத்தை பெற்றிருக்கிறது. இப்போது நம் பூமியை வேற்று கிரகவாசிகள் யாராவது ஒளியின் மூலம் ஆய்வு செய்தால், அவர்களுக்கு வலுவான உயிர்க்குறியீட்டு அடையாளங்கள் கிடைக்கும்.

இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு அந்தக் கோளின் நிலபரப்புகளையும் ஆராய வேண்டும். ஒரு கோளின் புவியியல் அமைப்பும் வளிமண்டலங்களும் போலி உயிர்க்குறியீடுகளை வெளியிடுகின்றனவா என அறிய வேண்டும். இவற்றைச் செய்வதற்கு நமக்கு சக்தி வாய்ந்த கருவிகள் தேவைப்படுகின்றன.

ஜேம்ஸ் வெப் செய்யப்போகும் சாதனைகள்

மேற்குகூறிய வகையில் நாம் ஒரு கோளில் இருந்து வெளிவரும் ஒளியின் மாற்றத்தை வைத்து உயிர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் முதலில் சக்திவாய்ந்த தொலைநோக்கி தேவைப்படுகிறது. இதற்குமுன் இருந்த ஹப்பிள் தொலைநோக்கியும் கெப்லார் தொலைநோக்கியும் உயிர் வாழ தகுதியான கோள்களைக் கண்டறிய பெரும் பங்களிப்பைத் தந்திருந்தாலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தப்போகிறது.

கடந்த ஜூலை 12ஆம் தேதி ஜேம்ஸ் வெப் வெளியிட்ட புகைப்படங்களில் WASP-96b என்ற ராட்சச வாயு கோளில் இருந்து கிடைத்த ஸ்பெட்ரோஸ்கோப் தரவுகளும் இடம்பெற்றிருந்தன. அதில் WASP-96bல் நீர் மற்றும் மேகங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அத்தனை பெரிய WASP-96b கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் என்பது குறைவுதான்.

ஆனாலும் ஜேம்ஸ் வெப்பில் இடம்பெற்றுள்ள NIRISS என்ற சென்சார் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி மிகவும் துல்லியமான வகையில் புறக்கோளில் உள்ள வளிமண்டலங்களை படம்பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி இதற்குமுன் உள்ள தொலைநோக்கிகளில் காணப்படாத பல்வேறு வகை அலைநீளங்களையும் (1.6 மைக்ரானுக்கு அதிகமான அலைநீளங்களை) படம்பிடிக்கும் தன்மை கொண்டது.

நிறமாலையின் இந்தப் பகுதி நீரை மட்டுமல்ல, ஆக்சிஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்டவைகளைத் துல்லியமாக அறியும் தன்மை கொண்டது. இப்போது வெளியிட்ட WASP-96bஇல் பிற வாயுக்கள் கண்டறியப்படவில்லை, ஆனால் ஜேம்ஸ் வெப் ஆராயப்போகும் பிற கோள்களில் இருந்து அவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.

அதனால் வரும் மாதங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகளைக் கொண்ட, பூமி அளவிலான TRAPPIST-1e கோளை ஜேம்ஸ் வெப் ஆராயப்போகிறது. மேலும் அந்தக் கோள் பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் மட்டுமே இருப்பதால் அங்கு கிடைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும் உதவக்கூடியதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் உயிர் குறியீடுகளின் ஆதாரங்களை அறிவதற்கான தன்மையை வெப் கொண்டிருந்தாலும், அந்தத் தொலைநோக்கி உயிர்களை கண்டறியும் நோக்கத்திற்காகக் கட்டமைக்கப்படவில்லை. அதனால் வெப் தொலைநோக்கியால் ஒரு கோளின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நீராவிகளின் அளவை மட்டுமே கண்டுபிடித்து கூறமுடியும்.

இந்தச் சேர்க்கைகள் உயிர்கள் இருப்பதற்கான பரிந்துரைகளைத் தந்தாலும், வெப்பால் இணைப்பில்லாத ஆக்சிஜனைக் கண்டறியமுடியாது. இணைப்பில்லாத ஆக்சிஜன்தான் உயிர்கள் வாழ்வதற்கான வலுவான சமிக்ஞைகள் ஆகும்.

ஆனாலும் வெப் கொடுக்கப்போகும் தகவல்கள் வரும் காலத்தில் எடுக்கப்போகும் முன்னெடுப்புகளுக்குச் சரியான தொடக்கத்தை உருவாக்கி தரலாம். அதுமட்டுமின்றி இனிமேல் வரும் தொலைநோக்கிகள் உயிர்களைக் கண்டறிவதற்கான பிரத்யேக தன்மையைக் கொண்டிருக்கும் எனக் கூறலாம்.

உதாரணமாக எதிர்காலத் தொலைநோக்கிகள் நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் நேரடி ஒளியைத் தடுத்து, கோள்களில் பட்டு, தெரிக்கும் ஒளியை மட்டும் படம்பிடித்து, ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன.

நாம் பகல் நேரத்தில் தூரத்தில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றால், ஒரு கையை உயர்த்தி சூரிய ஒளியை மறைத்து அந்தப் பொருளை தெளிவாகப் பார்ப்போம் இல்லையா? அதுபோலத்தான் தொலைநோக்கிகள் செயல்படவுள்ளன. இதற்காக எதிர்கால தொலைநோக்கிகளில் கவசம் அல்லது குடை போன்ற கருவிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு நட்சத்திர ஒளியைத் தடுத்துவிட்டால், கோளில் பட்டு வெளிவரும் ஒளியை மட்டும் நாம் தெளிவாகப் பார்த்து ஆராயலாம்.

மேலும் விண்வெளி தொலைநோக்கியை தவிர பூமியில் இருந்து வானைப் படம்பிடிக்கும் தொலைநோக்கிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து உயிர் குறியீடுகளைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ராட்சச மகேலன் தொலைநோக்கி (Giant Magellan Telescope), முப்பது மீட்டர் தொலைநோக்கி (Thirty Meter Telescope) மற்றும் ஐரோப்பிய மிகப்பெரிய தொலைநோக்கி (European Extremely Large Telescope) ஆகிய தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொலைநோக்கிகளால் நம் பூமிக்கு அருகில் உள்ள கோள்களில் ஆக்சிஜன் இருக்கிறதா என்று கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எதிர்காலத் தலைமுறையினர் புறக்கோள்களைப் பற்றி ஆராயும்போது உயிர்களின் இருப்பை நிரூபிப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறியலாம். ஜேம்ஸ் வெப்பில் இருந்து வெளியாகியுள்ள முதற்கட்ட தரவுகள் அதற்கான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளது.

(நிறைந்தது)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *