Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்

எஞ்ஜின் என்றாலே ஜேம்ஸ் வாட்தான் நினைவுக்கு வருவார்.

சமையல் அறையில் தேனீர் செய்ய நீர் கொதிக்கும்போது நீராவியின் சக்தியால் பாத்திர மூடி துள்ளிக் குதிக்க, அதன் சக்தியைப் புரிந்துகொண்டு எஞ்ஜின் அமைத்தார் என்று பரவலாக ஒரு கதை உண்டு.

சீனாவிலிருந்து தேனீர் குடிக்கும் பழக்கத்தைப் பதினாறாம் நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர் கற்றுக்கொண்டனர். அதற்கு முன் ஆயிரம் ஆண்டுகள் நீரைக் கொதிக்கவைத்துத் தேனீர் சமைத்த ஒரு சீன விஞ்ஞானி ஏன் இந்த நீராவிச் சக்தியைக் கண்டுபிடிக்கவில்லை?

ஐந்தாம் நூற்றாண்டில் சீனம் சென்ற காஞ்சிபுரத்துப் பல்லவ இளவரசன் போதிதர்மன்தான் அங்கே தேனீர் அருந்தும் பழக்கத்தைக் கற்றுத்தந்தார் என்பது சீன மரபு. மாமல்லபுரத்தில் தேனீர் கல்வெட்டு ஏதும் உண்டா என்று வினவும் முன், தமிழகத்தில் இட்லியையும் அரிசியையும் வென்னீரில் கொதிக்க வைத்த எந்த விஞ்ஞானிக்கும் இது ஏன் தோன்றவில்லை என்று கேட்கலாம்.

நீராவி என்றாலே ஊட்டி டார்ஜீலிங்க் மலை ரயில்கள் நினைவுக்கு வரும். அந்த நீராவி ரயிலின் எஞ்ஜினைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட் என்றும் நாம் தவறாக நினைக்கிறோம். இன்று பாரதமெங்கும் நம் வீட்டு மொட்டை மாடிகளில் தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் மின்சார பம்பு மோட்டாரின் முன்னோடியே ஜேம்ஸ் வாட்டின் எஞ்ஜின்.

வருடத்தில் எட்டு மாதங்கள் மழை பெய்யும் இங்கிலாந்தில் எதற்கு நீரேற்றும் விசை என்று நமக்குத் தோன்றலாம். ஐரோப்பியக் கண்டமே பாதிவருடம் குளிரில் நடுங்கும் பூமி. சமையலுக்கும் கொல்லுப்பட்டறைக்கும் மட்டுமல்லாமல் குளிரில் சாகாமல் வாழவும்கூட வருடத்தில் ஆறு மாதங்கள் ஏழைக் குடிசை முதல் மன்னர்களின் அரண்மனைவரை வெப்பம் ஊட்ட விறகுகள் தேவை.

மின்சார ஹீட்டர்களால் சுகமான வெப்பம் பரப்பும் இந்தக் காலத்திலும்கூட பல அமெரிக்க, ஐரோப்பிய வீடுகளில் ஃபயர்பிளேஸ் என்று ஓர் இடமிருக்கும். இன்று அது அலங்காரச் சின்னம். அன்று அது அடிப்படை தேவை.

சமையலுக்கு மட்டுமல்லாமல் வீடுகளைச் சூடாக்க விறகும் மரமும் என்றுமே தேவைப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் இந்த விறகுத் தேவையால் இங்கிலாந்தின் அனைத்துக் காடுகளும் விறகாயின.

வெளிநாடுகளிலிருந்து விறகிற்கு மரங்களை இறக்குமதி செய்யும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலக்கரி கிடைத்ததால், நிலக்கரி பரவலாகத் தோண்டி எடுத்து விற்கப்பட்டது. பத்தடி இருபதடி ஆழத்திலுள்ள நிலக்கரி வேகமாகத் தீர்ந்துபோக, ஆழமான சுரங்கத்தில் நிலக்கரியை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

நிலக்கரியைத் தோண்டத் தோண்ட நிலத்தடி நீர் சுரங்கத்துக்குள் புகுந்து வேலையைக் கடினமாக்கியது. கிணற்றிலிருந்து நீரை ஏற்றுவதுபோல் கயிறு கட்டிய வாளிகளாலும் மாடு பூட்டிய ஏற்றங்களாலும் மட்டும் சுரங்கநீரை அகற்றி சமாளிக்க முடியவில்லை. மற்ற ஐரோப்பிய நாடுகள் எதுவும் தீவு இல்லை. அந்நாடுகளில் மரங்கள் இன்னும் முழுமையாக அழியாததால் நிலக்கரி தேவைப்படவில்லை.

1690களில் தாமஸ் சேவரி என்கிற இரும்புக்கொல்லர் ஓர் இயந்திர ஏற்றத்தை உருவாக்கினார். குறுக்குக் கம்பத்தின் ஒரு புறம் நீண்ட கயிற்றில் வாளி தொங்கியது. இது சுரங்கத்துக்குள்ளே சென்றது. மறுபுறம் மாடோ மனிதனோ இல்லை. நீர் நிரம்பிய ஒரு பெரும் தவலை. கீழே அடுப்பு.

அதன் மேல் மூடியும், மூடிமேல் செங்குத்தான் பிஸ்டன் எனும் கம்பும் அமைக்கப்பட்டிருக்கும். நீர் கொதித்து ஆவியாகும்போது நீராவியின் சக்தியால் மூடி மெதுவாக மேலே எழும். அப்போது பிஸ்டன் மேலே தள்ளப்படும். ஏற்றத்தின் குறுக்கு கம்பத்தை மேலே தள்ளும். அப்போது மறுபக்கம் அமைந்துள்ள வாளி சுரங்கத்துக்குள்ளே இறங்கும்.

வாளி சுரங்கத்தில் தேங்கிய நீரில் இறங்கி நிரம்பியவுடன், சேவரி, தவலையின் மீது நாலு சொம்பு குளிர்ந்த நீரை வீசுவார். உடனே தவலைக்குள் நீராவி திடீர் குளிரில் வெப்பம் இழந்து, உள்ளே நீரழுத்தம் (Pressure) மடமடவென குறையும். மேலே தள்ளும் நீராவியின் அழுத்தம் குறைந்ததால் தவலையின் மூடியும், பிஸ்டன் கம்பமும், ஏற்றமும் கீழே இறங்கும். மறுபக்கம் சுரங்கநீரோடு வாளி மேலே எழும். சுரங்கத்துக்கு வெளியே வந்த வாளி நீரை வெளியே வீசிவிடுவர்.

இப்போது மீண்டும் அடுப்பின் சூடால் தவலை சூடாகி மூடி பிஸ்டன் ஏற, வாளி சுரங்கத்தில் இறங்கும்.

இந்தத் தவலைக்கு பாய்லர் என்று பெயர். இந்த பாய்லரின் அடுப்பிற்கும் நிலக்கரிதான் எரிபொருள். இதை சேவரி, நீராவி எஞ்ஜின் என்ற பெயரிடவில்லை. நெருப்பு எஞ்ஜின் என்றே பெயர் சூட்டினார்.

அரசாங்கத்திடம் பதிவு செய்து காப்புரிமை பெற்றார். நிலக்கரி சுரங்க அதிபர்கள் சேவரியிடம் பல நெருப்பு எஞ்ஜின்களை வாங்கினர். தலா 200 பவுண்ட் விலை. ஆனால் அவை ஆபத்தானவை. காஸ்ட் அயர்ன் எனப்படும் சாதா இரும்பில் செய்யப்பட்ட பாய்லர் தவலைகள் அவ்வப்போது வெடித்துவிடும்.

சேவரியிடம் காப்புரிமைக்குப் பணம் கொடுத்து லைசன்ஸ் வாங்கி, அவரது எஞ்சின்களை உருவாக்கி வேறு சிலரும் இங்கிலாந்தில் பல்வேறு சுரங்கங்களுக்கு விற்றனர். சேவரி இறந்தபின் அவர் வாரிசுகளாகிய மகன்கள் காப்புரிமை லைசன்ஸ் பணத்தில் சம்பாதித்தனர். அப்படி லைசன்ஸ் வாங்கிய ஒருவர் தாமஸ் நியூகமென் எனும் இன்னொரு இரும்புகொல்லர். நியூகமென் திறமைசாலி.

சேவரி எஞ்ஜினைப் பல்வேறு யுக்திகளால் சீராக்கினார். பாய்லர் தவலையின் மூடிமேல் சிலிண்டர் ஒன்றை வைத்து, பிஸ்டனை சிலிண்டருக்குள் ஏற இறங்க வைத்தார். உச்சியைத் தொடும்போது ஒரு கம்பால் ஒரு கோப்பை நீரை சிலிண்டர் மேல் வீசவைத்து சிலிண்டரை குளிரவைத்தார். ஒரு ஆள் இதைச் செய்யத் தேவையில்லை. பிஸ்டனின் இயக்கமே தானாக இதைச் செய்யும்படி வடிவமைத்தார்.

நியூகமென் எஞ்சின்
நியூகமென் எஞ்சின்

நம் இல்லங்களில் ஃபில்டர் காபி போடும் பாத்திரம் போன்ற அமைப்பு. மேலே காபி பொடியால் நிரப்பும் பாத்திரம் சிலிண்டர். அதற்குள்ளே வடிகட்டியோடு உள்ள தண்டு பிஸ்டன். கீழே டிகாசன் இறங்கும் பாத்திரம் பாய்லர்.

1733இல் சேவரியின் காப்புரிமை காலாவதியான பின் நியூகமென் தான் உருவாக்கிய சீர்திருத்தங்களோடு அதற்குக் காப்புரிமை வாங்கினார். சேவரி எஞ்ஜினுக்கு முப்பது அடி ஆழம் எல்லை. நியூகமெனின் எஞ்ஜின் 150 அடி ஆழம் வரை செயல்பட்டது. நாற்பது லிட்டர் நீர் இறைத்து, நிமிடத்துக்கு பன்னிரண்டு முறை இயங்கும் வடிவில் இருந்தது. முக்கியமாக இவரது எஞ்ஜினில் தவலை வெடிக்காது, சிலிண்டரும் வெடிக்காது!

அடுத்த முப்பது ஆண்டுகள் நியூகமென் எஞ்ஜின்களே இங்கிலாந்தில் கோலோச்சின. நிலக்கரிச் சுரங்கம், இரும்புச் சுரங்கம், தகரச் சுரங்கம் என்று பற்பல சுரங்க அதிபர்கள் சுமார் 450 பவுண்டு விலைக்கு நீயூகமென் எஞ்ஜின்க்ளை வாங்கி நிர்மாணித்தனர்.

0

1736இல் ஸ்காட்லாந்து தேசத்து கிளாஸ்கோ நகரில் ஜேம்ஸ் வாட் பிறந்தார். ஒரே பெரும் தீவின் வடபகுதி ஸ்காட்லாந்து, தென் பகுதி இங்கிலாந்து. நூறாண்டுகளுக்கு முன்பே இரு தேசங்களும் ஒன்றாக இணைந்து விட்டன. சிறுவயதிலேயே ஜேம்ஸ் வாட்டின் தச்சு திறமைகள் மற்றவர்களை வியக்கவைத்தன. பள்ளி வகுப்புகளில் வானியலும் கணிதமும் விரும்பி கற்ற ஜேம்ஸ் வாட்டிற்கு இலக்கிய ஆர்வம் குறைவு. அக்காலத்தில் பள்ளிகளில் ஆங்கிலத்தைவிட கிரேக்க லத்தின் மொழிகள்தாம் பிரதானம். தனித்தமிழ் இயக்கம்போல் தனி ஆங்கில இயக்கம் அப்போது பிறக்கவில்லை – இருபதாம் நூற்றாண்டில்தான் ஆங்கில மொழி பிரதான கல்விமொழியானது.

பதினெட்டாம் வயதில் கல்வி கற்க ஜேம்ஸ் வாட் லண்டன் சென்றார். கிளாஸ்கோவிலிருந்து லண்டன் 700 கி.மி. தூரம். அக்காலத்தில் நடந்தும், குதிரைவண்டி பிடித்தும் போக 12 நாள் ஆகும். வழிபறிக் கொள்ளை, விபத்து, என்று பல்வேறு ஆபத்துக்கள் நேரலாம். ஊரே கூடி அவர் ஆபத்தில்லாமல் லண்டன் சேர சர்ச்சில் பிரார்த்தனை செய்தது.

பல இடையூறுகளைக் கடந்து ஜான் மார்கன் என்பவரிடம் கணித இயந்திரங்களின் செய்முறைகளையும், பழுது பார்க்கும் முறைகளையும் ஜேம்ஸ் வாட் கற்றுக்கொண்டார். வானியலில் பயன்படும் தொலை நோக்கி, கடிகாரம், திசைகாட்டும் காந்த காம்பஸ், தராசு, கோணங்களை அளவிடும் செக்ஸ்டாண்ட், நீள உயர அளவுகோல்கள் போன்றவை கணித இயந்திரம் என்று பொதுவாக அழைக்கப்பட்டன. ஓராண்டு பயிற்சிக்குப் பின் மீண்டும் சொந்த ஊர் கிளாஸ்கோ திரும்பி அவர், அங்கேயே கடை வைத்தார். ஆனால் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. தன் திறமையால் இசைக்கருவிகள், மூக்குகண்ணாடி, கடிகாரம் இத்யாதி எனப் பழுதுபார்த்துக் கொஞ்சம் சம்பாதித்தார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சில பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாட்டிற்கு நண்பர்களாகினார்.

பல்கலைகழகத்தில் ஒரு சிறிய நியூகமென் எஞ்ஜினின் மாதிரி இருந்தது. அது பழுதானபோது அதையும் சரிசெய்தார். ஏன் இந்தச் சூடான சிலிண்டரைத் தண்ணீர் தெளித்து குளிர வைத்து எஞ்ஜின் வேலை செய்கிறது என்று அவருக்குச் சந்தேகம் வந்தது.

அவ்வாறு சேய்வதினால் வெப்பமும் கரியும்தான் வீண் என்று நினைத்தார். அந்த எஞ்ஜினோடு சோதனைகள் செய்யும்போது நீராவியின் சில குணங்களை புரிந்துகொண்டார். லேடண்ட் ஹீட் (மறை வெப்பம் அல்லது உள்ளுறை வெப்பம்) என்ற கொள்கை அவருக்குப் புரிந்தது. ஆவலுடன் பேராசிரியர் ஜோசப் பிளாக்கிடம் தன் கண்டுபிடிப்பை விளக்கியபோது, இந்தக் கொள்கையைச் சமீபத்திலே அதே பேராசிரியர் பிளாக் கண்டுபிடித்து ஓர் ஆய்வு கட்டுரையாக வெளியிட்டார் என்று தெரிந்தது.

அது என்ன மறைவெப்பம்? நீரை கொதிக்க வைத்தால் அதன் வெப்பம் அதிகமாகி கொண்டே போகும். 100 டிகிரி செல்சியலில் (212 டிகிரி பாரன்ஹீட்) அது நீராவியாக மாறும். ஆனால் நூறு டிகிரி அடைந்த உடனேயே நீராவியாக மாறாது. 60 டிகிரி நீரை கொதிக்கவைத்தால் 60 முதல் 100 டிகிரி வரை கிடுகிடுவென்று அதன் வெப்பநிலை ஏறிக்கொண்டே போகும். ஆனால் 100 டிகிரி நீராகவே பல நிமிடங்கள் இருக்கும். அடுப்பில் எரிபொருள் எரிந்துகொண்டே நீரைச் சூடாக்கினாலும் நீரின் வெப்பநிலை 100 டிகிரியில் தொடரும். அப்போது சில வெப்பம் உள்வாங்கப்படும். ஒரு காலச்செலவின் பின்தான் அது நீராவியாக மாறும். அதன் பின் அடுப்பு எரிந்துகொண்டு போனால் நீராவியின் வெப்பநிலை மீண்டும் கிடுகிடுவென்று 105,110,120 என்று ஏறும்.

இப்போது வெப்பநிலை மாறாமல் உள்வாங்கப்படும் வெப்பமே மறைவெப்பம் ஆகும். இதன் விளைவு என்ன வென்றால் 100 டிகிரி நீரைவிட 100 டிகிரி நீராவியின் வெப்பச் சக்தியும் அதனால் ஏற்படும் அழுத்த சக்தியும் மிகவும் அதிகம். ஒரு வாளி நிறைய 60 டிகிரி நீர் என வைத்துக்கொள்வோம். இதில் ஒரு லிட்டர் 100 டிகிரி வெப்ப நீரை கலந்தால் அந்த மொத்த வாளி நீரும் 61 டிகிரி வெப்பமடைய சூடேறும். ஆனால் 100 டிகிரி வெப்பத்தில் ஒரு லிட்டர் நீரில்லாமல் ஒரு லிட்டர் நீராவியைக் கலந்தால் அதே வாளி 70 டிகிரி வெப்பத்திற்கு வேகமாக சூடேறும். இதுவே மறைவெப்பத்தின் மகிமை. நீராவியின் சக்தி.

இந்த உண்மையை வைத்து தவலையை (உண்மையில் பிஸ்டன் இயங்கும் சிலிண்டரை) குளிரூட்டாமல் நியுகமெனைவிடச் சிறப்பான எஞ்ஜின் செய்யலாம் என்று ஜேம்ஸ் வாட்டிற்குத் தோன்றியது. சிலிண்டர் குளிர்வதைத் தவிர்த்தால் நீராவியின் மறைவெப்பம் வீணாகாது. இதனால் நிலக்கரியைக் குறைவாக செலவழிக்கலாம், எஞ்ஜினை வேகமாக அதிகச் சக்தியுடன் இயங்க வைக்கலாம் என்று எண்ணினார்.

அப்போதுதான் ஜான் ரோபக் என்று கடைக்காரர் வாட்டிற்கு அறிமுகமானார். வாட்டின் திறமையை வியந்த ரோபக், அவருக்கு நீராவி ஆராய்ச்சி செய்ய ஆயிரம் பவுண்ட் பணம் தர முன்வந்தார். ஆராய்ச்சி வெற்றிபெற்றால் எஞ்ஜின் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு ரோபக்குக்கும், ஒரு பங்கு வாட்டுக்கும் செல்ல ஒப்பந்தமாயிற்று.

ஆனால் சில வணிக நஷ்டங்களால் ரோபக்கின் வியாபாரமே குன்றிப்போனது. தன் கடன்களை அடைக்க முடியாமல் தவித்த ரோபக்கால், வாட்டின் ஆய்விற்குப் பணம் கொடுக்க முடியவில்லை.

அப்போது செல்வப் பிரபுக்கள் இங்கிலாந்தில் பல்வேறு கால்வாய்களை உருவாக்கி வந்த காலம். கால்வாய்களை வெட்டும் நில அளவை பணி செய்ய ஜேம்ஸ் வாட்டிற்கு வாய்ப்பு கிட்டியது. அடுத்த பத்து வருடம் இதுவே அவர் தொழிலானது. படகு துறைகள், பாலங்கள் அமைக்கும் வேலையும் வாட்டிற்குக் கிடைத்தது.

விசித்திரம் என்னவென்றால் சுரங்கங்களிலிருந்து நிலக்கரி, இரும்பு தகரம் போன்ற தாது பொருட்களின் போக்குவரத்திற்கே இந்தக் கால்வாய்கள் வெட்டப்பட்டன, விவசாயத்திற்கு அல்ல.

மௌரியருக்கு முன்பே நந்த மன்னர் காலத்திலிருந்து வடவிந்தியாவிலும் பல்லவர் பாண்டிய காலத்தில் தமிழகத்திலும் கால்வாய்கள் வெட்டும் பணிகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கிலாந்திலோ பதினெட்டாம் நூற்றாண்டில்தான் கால்வாய் தோண்டும் பணிகள் நடந்தன. நதிகளைத் தாண்டியும் மற்ற கால்வாய்களைத் தாண்டியும் பாலம் அமைத்து, பாலத்தின் மேல் செல்லும் கால்வாய்கள் என்றுகூடக் கால்வாய்கள் தோன்றின. மிகக் குறுகிய கால்வாய்களும் உண்டு. கரையில் செல்லும் குதிரை கயிறுகட்டி கால்வாயில் படகை இழுத்துச்செல்லும்.

இக்காலத்தில் பேராசிரியர் ஜோசப் பிளாக் மூலம் மேத்யூ பௌல்டன் என்ற ஒரு தொழிலதிபர் வாட்டிற்கு நண்பரானார். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் நடுத்தர வர்க்கம் உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. வீட்டை அலங்கரிக்கக் கடிகாரம், கூஜா, ஜாடி, சுவற்றில் மாட்டும் படங்கள், அப்படங்களுக்குச் சட்டம், பீங்கான் தட்டு, கோப்பை, மெழுகுவர்த்தி தாங்கிகள், கவரிங் நகைகள், செம்பு வெங்கலம் வெள்ளி தங்கக் கிண்ணங்கள், தட்டுகள் என்று பல பொருட்கள் தயாராகி நடுத்தர மக்களும் வாங்கும் விலைகளில் கிடைக்கெப்பெற்றன.

இவற்றைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை பெர்மிங்காம் எனும் நகரில் நடத்தி வந்தார் பௌல்டன். லண்டனுக்கு 180 கி.மீ. மேற்கே உள்ளது பெர்மிங்காம்.

தமிழ்நாட்டில் ஜமீந்தார்களும் செட்டியார்களும், புலவர்களையும் இசைக்கலைஞர்களையும் ஆதரித்துக் கலை வளர்த்ததுபோல் பௌல்டன் போன்ற தொழிலதிபர்கள் சில விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் ஆதரித்து வந்தனர்.

பௌர்ணமி மாலைகளில் அவர் இல்லத்தில் பெஞ்சமின் பிராங்க்ளின், ஜோசப் பிரீஸ்ட்லீ, ஜோசப் பிளாக், ஆடம் ஸ்மித், எராஸ்மஸ் டார்வின் (சார்ல்ஸ் டார்வினின் தாத்தா), ஜோசையா வெட்ஜ்வுட் போன்ற அக்காலத்துச் சாதனையாளர்கள் விருந்துக்கு வந்து நள்ளிரவில், பௌர்ணமி நிலவொளியில், குதிரையிலோ, கோச்சு வண்டியிலோ வீடு திரும்பினர். அந்த வட்டத்தில் ஜேம்ஸ் வாட் நுழைந்தார்.

வாட்டின் திறமையின் மேல் பௌல்டனுக்குத் தீவிர நம்பிக்கை பிறந்தது. அவரை மீண்டும் நீராவி எஞ்ஜின் ஆய்வைத் தொடரக் கேட்டுக்கொண்டார். ஜான் ரோபக்கிடம் முடங்கியிருந்த ஒப்பந்தத்தைத் தன்னோடு மீட்டுருவாக்க வற்புறுத்தினார். ரோபக்கின் கடன்களை அடைத்து அந்த ஒப்பந்ததில் ரோபக்கை நீக்கிவிட்டு தன்னை சேர்த்துக் கொண்டார் பௌல்டன். ஜேம்ஸ் வாட்டின் ஆராய்ச்சி தொடர பணம் தந்தார். வாட் வெற்றிகரமாக எஞ்ஜின் செய்தால் தன்னுடைய தொழிற்சாலையில் அதைச் செயல்பட வைக்கலாம், இதனால் தனக்குப் பெரும் லாபம் கிடைக்கும் என்று நம்பினார்.

தொழில்புரட்சியின் பிறப்பிடம் என்று கொண்டாடப்படும் இங்கிலாந்திற்கு அப்பொழுது தொழில் தரத்திற்கு நல்ல பெயரில்லை. இந்தியா, சீனாவைத் தவிர பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளே தொழில்நுட்பத்தில் அப்போது புகழ்பெற்றவை. தன் தொழிற்சாலையில் தயாரான பொருட்களை ஒரு ஊரில் இருந்து படகில் ஏற்றி, வேறு ஒரு ஊரில் சென்று இறக்கி, பிரான்சிலிருந்து இறக்குமதி செய்தவை என்று ஒரு மகா நாடகம் ஆடி கடைகளில் பொருட்களை விற்றுவந்தார். பெர்மிங்காமிலிருந்து கடலுக்கு கிழக்கே இருநூறு கி.மீ.,மேற்கே இருநூறு கி.மீ. பௌல்டனின் வணிகத்திறனுக்கு இதுவே சான்று.

அவருக்கு அடித்த யோகம் ஒரு நாள் இளவரசர்கள் ஆல்ஃப்ரெடும் ஜார்ஜும் அவர் தொழிற்சாலையில் செய்யப்பட்ட வாள்களை வாங்கினர். அரச குடும்பத்துக்கு சப்ளையர் என்ற புகழில் பௌல்டனின் பொருட்களின் விற்பனை பெருகின. ருஷிய இளவரசி கேத்தரின் அவர் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்த்துவிட்டு பிரெஞ்சு சரக்குகளைவிட பௌல்டன் சரக்குகள் சிறப்பானவை என்று பாராட்டிய பின் அவர் புகழும் செல்வமும் வளர்ந்தன.

ஆனால் அதே கேத்தரின் ஜேம்ஸ் வாட்டை ருஷியாவுக்கு வந்து ஆராய்ச்சி செய்ய அழைத்தார். ருஷியாவில் ஏற்கெனவே லெனர்ட் ஆய்லர் என்ற கணித மேதை ஆராய்ச்சிகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வந்தார். ருஷியாவுக்கு இடம் பெயராமல் இங்கிலாந்தில் ஜேம்ஸ் வாட்டைத் தக்க வைக்க, பௌல்டன் பெருமுயற்சி எடுக்கவேண்டியதாயிற்று. அவருடைய நட்பினாலும் தன் தேசப் பக்தியினாலும் கேத்தரினின் அழைப்பை வாட் ஏற்றுக்கொள்ளவில்லை. நீராவி எஞ்ஜினை ஜேம்ஸ் வாட் ருஷியாவில் உருவாக்கியிருந்தால் உலக வரலாறு எப்படி மாறியிருக்கும்?

பௌர்ணமி மனிதர்களில் ஜான் வில்கின்ஸன் என்றொருவர். இரும்புப் பித்தன் என்று புகழ் பெற்றவர். இரும்புக் கலையில் பல புதுமைகளைப் படைத்தவர். இரும்பில் குழாய்கள் செய்வதில் இவர் செய்த புதுமைகளால் போர் பீரங்கி செய்வதில் வல்லவரானார். பாறைகளில் உடையாமல் தடுக்க, மரக்கப்பல்களுக்கு இரும்புக் கவசம் அமைத்து அந்தத் துறையிலும் புகழ் பெற்றார்.

நீராவி எஞ்ஜின் செய்வதில் பெரும் சிக்கல் வலுவான வெடிக்காத சிலிண்டரை உருவாக்குவது. வில்கின்சனின் பீரங்கி தொழில்நுட்பத்தால் வலுவான சிலிண்டரும் பிஸ்டனும் உருவாயின. பீரங்கியே ஒருவகை சிலிண்டர்தான். அதைத் துழாவி குழாயாக்கும் கலையில் வில்கின்சன் ஈடில்லாதவர்.

சிலிண்டரில் விழும் ஓட்டைகளை அடைத்து நீராவி ஒழுகுவதைத் தடுக்கக் காகிதம், துணி, தொப்பி, குதிரைச் சாணி என்று பல பொருட்களை வைத்துப் பரிசோதித்துத் தவித்த வாட்டிற்கு வில்கின்சனின் சிலிண்டர்கள் வரப்பிராசதமாக அமைந்தன.

மாறி மாறி சூடேற்றியும் குளிறவைத்தும் இயங்கும் சிலிண்டரை வெப்பம் குறையாமல் இயக்க வாட்டிற்கு ஒரு யுக்தி தோன்றியது. சிலிண்டரின் உச்சியில் ஒரு வெளியேற்ற குழாய் மூலம் நீராவியை வெளியே செலுத்தி, கண்டென்சர் (ஆற்றும் பாத்திரம்) எனும் தனி பாத்திரத்தில் நீராவியை ஆற வைக்கலாம் என்பதே அந்த யுக்தி.

வெடிக்காத சிலிண்டரோடும் தனிக் கண்டென்சரோடும் உருவாக்கிய எஞ்ஜின் ஒழுங்காக வேலை செய்ய ஜேம்ஸ் வாட் சில உபரிக் கருவிகளையும் உருவாக்கினார்.

1775இல் பௌல்டனின் செல்வாக்கினாலும் அரசியல் தொடர்புகளாலும் இந்தப் புதிய எஞ்ஜினுக்கு 25 வருடக் காப்புரிமையை இங்கிலாந்தின் பாராளுமன்றம் அளித்தது. தன்னுடைய இரும்புப் பட்டறைக்கு ஜேம்ஸ் வாட்டின் எஞ்ஜினை வில்கின்சன் வாங்கினார். நிலக்கரி சுரங்கங்கள் பலவும் வாட் எஞ்ஜினை வாங்கின.

பௌல்டன் அண்டு வாட் எஞ்ஜின்
பௌல்டன் அண்டு வாட் எஞ்ஜின்

கடையில் மோட்டார் வாங்கி சுரங்கத்திலோ பட்டறையிலோ உடனே பணியில் இறக்குவது இன்று போல் அன்று எளிமையான காரியமில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, முழு எஞ்ஜினையும் அங்கேயே நிர்மாணிக்கும் வேலை ஜேம்ஸ் வாட் தலையில் விழுந்தது. பணியில் சேர்பவர்களுக்கு வெப்பத்தின் அறிவியல், எஞ்ஜின் இயங்கும் முறை, கருவி பயிற்சி, பல்வேறு அபாயங்கள், விபத்து தவிர்க்கும் முறை எல்லாம் ஜேம்ஸ் வாட் கற்றுத்தர வேண்டியிருந்தது. எஞ்ஜினியர்கள் எனும் பட்டம் பெறத் தொடங்கினார்கள். கல்லூரியில் கற்று பெற்ற பட்டமல்ல, ஆலைகளில் பயின்று அனுபவத்தால் பெற்ற பட்டம்.

வில்லியம் மர்டாக் என்ற மிகத் திறமையான ஒரு உதவியாளர் வாட்டிற்குக் கிடைத்தார். மற்றபடி நாணயமான, ஆர்வமான தொழிலாளிகள் (எஞ்ஜினியர்கள்) கிடைக்கப் பல வருடங்கள் ஆயின.

நியூகமெனின் எஞ்ஜினைவிட மிகக்குறைவாக நிலக்கரித் தேவை என்பது வாட் எஞ்ஜினின் வெற்றிக்கும் விற்பனைக்கும் முக்கிய காரணம். ஆனால் அவருக்கு வணிகத்திறன் கம்மி. விலைபேசுவது, பணம் வசூலிப்பதெல்லாம் மேத்தியூ பௌல்டன் பார்த்துக்கொண்டார்.

ஏற்றம்போல் மேலும் கீழும் ஏறியிறங்கி பம்பு வேலை மட்டுமே செய்யும் எஞ்ஜின், வட்டமாக ஒரு சக்கரத்தை இயக்கினால் பல்வேறு துறைகளில் பயன்படும் என்று பௌல்டன் ஆலோசனை கூறினார். தன்னுடைய தொழிற்சாலையிலேயே, ஓடைநீரில் இயங்கும் வாட்டர்மில்லை (நீர் ஆலை) விட, சக்கரத்தை இயக்க அந்த எஞ்ஜினை மாற்றமுடிந்தால் லாபத்தைப் பெருக்கலாம் என்றும் கூறினார்.

ஆரம்ப காலத்தில் தான் கற்ற வானியல் கொள்கைகள் ஒருவேளை தூண்டியதோ என்னவோ, சூரிய கிரக கியர் என்னும் கருவியை ஜேம்ஸ் வாட் உருவாக்கினார். மேலும் கீழும் செல்லும் பிஸ்டன் மறுபக்கம் வேறு ஒரு கம்பத்தை மேலும் கீழும் நகர்த்தும். அதன் நுனியில் ஒரு வட்டமான கியர் இருக்கும். அந்த கியரின் பற்கள் ஒரு பெரிய சக்கரத்தின் நடுவே உள்ள சிறிய சக்கரத்தின் பற்களோடு இணைந்து சிறிய சக்கரத்தை வட்டமிட செய்யும். சிறிய சக்கரத்தின் சுழற்சியால் பெரிய சக்கரம் சுழலும்.

இந்தக் கருவியை பொருத்திய பின், மாவு அரைக்கும் ஆலைகள், மதுபான ஆலைகள், காகித ஆலைகள், நெசவாலைகள் என்று பற்பல ஆலைகளில் இங்கிலாந்து முழுதும் வாட் எஞ்ஜினுக்கு வரவேற்பு கிடைத்தது. பௌல்டன் அண்டு வாட் எஞ்ஜின் என்றே இதற்குப் பெயர் அமைந்தது. இந்த ஆலைகளில் அதுவரை செக்கிழுக்கும் மாடுபோல் குதிரைகள்தான் இயந்திரங்களை இயக்கிவந்தன. குதிரைகளுக்குப் பதிலாக தங்கள் எஞ்ஜினை வாங்கி வருடா வருடம் எவ்வளவு பணம் செய்யலாம் என்று கணக்கு போட்டுக் காட்டி, இதனால் சேமித்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கை சந்தா பணமாக பௌல்டன் வசூலித்தார். எட்டுக் குதிரைக்கு சமம், பத்துக் குதிரைக்கு சமம் என்று ஆலை அதிபருக்குப் புரியும்படி எஞ்ஜின்களின் சக்திக்கு ஜேம்ஸ் வாட் அளவு வகுத்தார்.

இதுவே குதிரைச் சக்தி அல்லது ஹார்ஸ்பவர் என்று பெயர் வாங்கியது. பிற்காலத்தில் அதை மாற்றி இயந்திர சக்தியின் அளவுக்கு வாட் என்றே இங்கிலாந்தின் அரசின் அறிவியல் கழகம் அறிவித்தது.

1800இல் வாட் எஞ்ஜினின் காப்புரிமை காலாவதியாகும் வரை பௌல்டனும் வாட்டும் நன்றாக பணம் சம்பாதித்தனர். ஆனால் மற்றவர்கள் யாரும் புதிய கருவியை உருவாக்கவிடாமல் இந்தக் காப்புரிமை தடுத்தது.

நியூகமென் எஞ்ஜினில் தவழ ஆரம்பித்த தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு தொழில்புரட்சியாக ஜேம்ஸ் வாட்டின் எஞ்ஜினால் மாறியது. அவர் புகழ் உலகெங்கும் பறவியது. இங்கிலாந்து உலகின் வல்லரசாக மாற ஒரு முக்கிய காரணம் வாட் எஞ்ஜின்.

வாட் இத்தொடு நின்றுவிடவில்லை. எஞ்ஜினின் வேகத்தைக் கட்டுபடுத்த கவர்னர் என்று ஒரு கருவியையும், பிஸ்டன் கீழே செல்லும்போது மட்டுமின்றி மேலே செல்லும்போதும் இயங்கும் இரட்டிப்புச் சக்தி எஞ்ஜின், என்றும் புதுமைகள் செய்தார்.

படகுகளில் தன் எஞ்ஜினைப் பொருத்தி போக்குவரத்தில் புரட்சி உருவாக்க நினைத்தார். அதற்காக புரொபெல்லர் என்னும் கருவியையும் படைத்தார். ஆனால் போக்குவரத்தில் குறிப்பாக ரயில் வண்டியை இயக்கும் எஞ்ஜின் ஒன்றை அவரால் வடிவமைக்க முடியவில்லை. அந்தப் புகழ் ரிச்சர்ட் டிரெவித்திக்காகக் காத்திருந்தது.

பௌல்டனின் தொழிற்சாலைக்கும் நாடெங்கும் உள்ள ஆலைகளுக்கும் சுரங்கத்திலிருந்து படகுகளிலும் குதிரைவண்டிகளிலும் கரி வந்தது. நான்கைந்து மைல் நீண்ட சுரங்களில் மரத்திலும் இரும்பிலும் தண்டவாளங்கள் செய்து, அதில் சிறிய வண்டிகளைச் செலுத்தி கரி சுமக்க ஏற்பாடுகள் நடந்தன. மனிதர்களும், போனி என்ற குள்ளரக குதிரைகளும் இந்த வண்டிகளை இழுத்தன.

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவன் வாக்கை மாற்றி – நீராவியின்றி இயங்காது இயந்திர உலகு என்ற புதிய விதியைச் சமைத்தவர் ஜேம்ஸ் வாட். அவரையும் அவரது இணைபிரியா நண்பரும், வணிகப் பங்காளியுமான மேதியு பௌல்டனைக் கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் இங்கிலாந்து அரசு அவர்கள் படங்களுடன் 50 பவுண்ட் நோட்டை அறிமுகம் செய்தது.

நாம் இயந்திர உலகத்தில் வாழ்கிறோம். ஆயிரக்கணக்கான தொழில்களை இயந்திரங்கள் செய்கின்றன. அந்த இயந்திரங்களையே இயக்கும் எஞ்ஜினை உலகிற்கு தந்தவர் ஜேம்ஸ் வாட், என்று ஆண்ட்ரூ கார்ணகி முழங்கினார். ஆண்ட்ரூ கார்ணகி 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர், உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற்றவர். ஜேம்ஸ் வாட்டின் மேலிருந்த மரியாதையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

0

________
உதவிய நூல்கள்

– ஜேம்ஸ் வாட் வாழ்க்கை வரலாறு – ஆண்ட்ரூ கார்னகி
– இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய கதை – வஷ்லவ் ஸ்மில்
– இண்ட்ஸ்ட்ரியல் ரெவெலேஷன்ஸ் – பிபிசி தொடர்
– விக்கிப்பீடியா

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

1 thought on “விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்”

  1. ஒரு அருமையான ,விறுவிறுப்பான நடையில், மிகவும் அறிய வேண்டிய பயனுள்ள கட்டுரை. மக்கள்,குறிப்பாக பொறியியல் மாணவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. கோபு ரங்கரத்னம் மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். கிழக்கு today க்கு மிகவும் நன்றி

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *