‘யாத்திசை’ என்றால் ‘தென் திசை’ என்று பொருள்.
ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் மன்னர்கள் காலத்துக் கதையாக இப்படம் துவங்குகிறது.
கோச்சடையான் ரணதீரன் என்கிற பாண்டிய மன்னன் சேரர் சோழர்களைப் போரில் வென்று பேரரசனாகத் தனது ஆட்சியை நிலைநாட்டுகிறான். தோற்றுப் போன சோழர்கள் பின் வாங்கி காட்டுக்குள் சென்று மறைந்து வாழ்கிறார்கள். இந்தச் சூழலில் அந்தப் பாண்டியனை வீழ்த்துவதற்காக எயினர் என்கிற பழங்குடி மக்களின் தலைவனான கொதி களத்தில் இறங்கிறான். பாண்டியனுக்கு எதிரானவர்களைக் கூட்டுச் சேர்க்க முனைகிறான்.
ஓர் எளிய பழங்குடிக் கூட்டம் ஒரு பேரரசனை வீழ்த்த முடிந்ததா? போரில் யார் வென்றார்கள் என்பதுதான் யாத்திசையின் கதை.
‘அதிகாரம்தான் இங்கு முக்கியம். அதற்காக அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்ற மையக் கருத்துடன், ஓர் ஒரிஜினல் கதையை எழுதி இயக்கிய தரணி இராசேந்திரன் மற்றும் குழுவினருக்கும், படத்தைத் துணிவுடன் தயாரித்த திரு. கே.ஜெ. கணேஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!
இரண்டாவதாக, எட்டாம் நூற்றாண்டில் பேசிய தமிழை ஆராய்ச்சி செய்து வசனமெழுதி, அதற்கே இன்றைய தமிழில் துணை மொழி (சப்டைட்டில்) போட்ட ஒரே தமிழ்த் திரைப்படம், இதுவாகத்தான் இருக்கும். அதனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன். சிலர் இதனைக் குறையாகச் சொல்வார்கள். ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தமிழ் மீது போலிப் பாசம் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
மூன்றாவதாக, படத்தின் நாயகன் சக்தி மித்ரனின் நடிப்பு, மிக அபாரம். கோச்சடையான் ரணதீரனாக ஒரு மிரட்டு மிரட்டி விட்டார். அவரது அறிமுகக் காட்சியில், அவர் எயினர்களுடன் பாய்ந்து கொண்டு சண்டை செய்ய வரும் காட்சி புல்லரிக்க வைத்தது. ‘தமிழ் மன்னன் என்றால் இவன் தானடா!’, என்று காட்சிக்குக் காட்சி, சபாஷ் போட வைத்தது.
நான்காவதாக, கொதி எனும் பெயரில் எயினர் குழுத் தலைவனாக நடித்த சேயோன். அவரது நடிப்பும் மிகவும் அபாரம். சரியான திட்டமிடுதல் இல்லாத அவரது ஆசை, அரசனாக ஆகிவிட வேண்டும் என்ற அவரது வெறி, கூட்டத்தின் அழிவுக்குத் தானே காரணமாகி விட்ட வருத்தம், நடனப் பெண்ணின் மீது ஈர்ப்பு, இறுதியில் ரணதீரனுடன் நேருக்கு நேர் துணிந்து போர் செய்யும் வீரம், என அனைத்து உணர்ச்சிகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த இருவர் மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள்தான். நடனப் பெண்ணாக நடித்த ராஜலக்ஷ்மியின் பாவனைகள், நடனம், வசன உச்சரிப்பு மற்றும் சோக நடிப்பு, ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தன.
தெரிந்த நடிகர்கள் என்றால் இருவரைச் சொல்லலாம். குரு சோமசுந்தரம், எயினர்களின் பூசாரியாக வந்து, ஒரே காட்சியில் தன் நடிப்பால் மிரட்டுகிறார். சுபத்ரா ராபர்ட், காட்டுப் பள்ளிக் குழுக்களின் தலைவியாக, ஓர் அருமையான அரசியல் ஒப்பந்தத்தை, ரணதீரனுடன் செய்யும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
ஐந்தாவதாக, படத்தின் அனைத்து ஆண் நடிகர்களும், தினவெடுத்த தோள்களோடு, எரியும் கண்களோடு, எல்லையில்லா வீரத்தோடு நடித்துள்ளனர். பலருக்கு வசனமே இல்லையென்றாலும், அவர்களின் நடிப்பு, நம்மைக் கவர்ந்து விடுகின்றன. இப்படிப்பட்ட ஆட்களைப் பிடித்து நடிக்க வைத்த இயக்குனர் மற்றும் படக்குழுவினரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஆறாவதாக, ஒளிப்பதிவு, ஆடைகள், காட்சியை எடுத்த படப்பிடிப்புத் தலங்கள், பின்னணி இசை, கலையலங்காரம் என்ற இந்த நான்கு பிரிவுகளும், படத்தின் தரத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. ஒளிப்பதிவு செய்த அகிலேஷ் காத்தமுத்து மற்றும் இசையமைப்பாளர் சக்கரவர்த்திக்கு வாழ்த்துகள்.
இவையெல்லாம் நிறைகள். சில குறைகளும் படத்தில் உள்ளன.
எட்டு கோடி என்ற குறுகிய பட்ஜெட்டில் படமெடுக்கும் போது, சி.ஜி.ஐ. கிராஃபிக்ஸ் துறையில் பெரிதாக நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களால் முடிந்த அளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்றாலும் சில இடங்களில் அது உறுத்தலாகவே தெரிவதைச் சொல்லத்தான் வேண்டும்.
படத்தொகுப்பினை இன்னும் சிறப்பாக, நேர்த்தியாகச் செய்திருக்கலாம். சில நீளமான காட்சிகளைக் கத்தரித்து இருக்கலாம். சில இடங்களில் காட்சிகளில் தொடர்பில்லை.
இப்போதும், எப்போதும், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் மிகவும் இழிவுபடுத்தும் அரசியல், இப்படத்திலும் தொடர்கிறது. இதனையும் தவிர்த்திருக்கலாம். அந்தக் கதாபாத்திரம், இரண்டாம் பாகத்திலும் வரும் என்று கூறுகிறார்கள். அப்போதேனும், இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
வன்முறைக் காட்சிகள் மிகவும் அதிகம். இக்கதைக்கு அவை தேவையென்றாலும் கூட, சில காட்சிகள் மிகக் கொடூரமாகவும், நீளமாகவும் உள்ளன. மெல் கிப்சன் இயக்கிய படமான ‘அபோகாலிப்டோ’வின் பாதிப்பு, சில காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.
சில இடங்களில், தமிழர்களின் கருப்பு நிறத்தைக் காட்டுகிறேன் என்று கூறி, அனைவருக்கும் அட்டைக் கரியாக நிறத்தைப் பூசியுள்ளனர், இறுதிக் காட்சியில் சோழ மன்னர் உட்பட. இப்படிப்பட்ட கருப்பு நிறமடிக்கும் வேலை, இன்றைய சூழலில் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
பாண்டியர்களை பலகாலமாக இந்தத் தமிழ் சினிமா தவறாகவே காட்டி வந்துள்ளது, அது வரலாற்றுக் கதையாக இருந்தாலும் சரி, இன்றைய கதையாக இருந்தாலும் சரி. அதனை உடைக்கும் விதமாக, சேர சோழர்களை நிஜவாழ்வில் தோற்கடித்த கோச்சடையான் ரணதீரனை அடிப்படையாகக் கொண்டு, வந்திருக்கும் இந்தப் புனைகதை கொண்ட திரைப்படத்தை, இன்முகத்துடன் வரவேற்கலாம். இரண்டாம் பாகத்திலும், பாண்டியர்களை நல்லவிதமாகக் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
நல்ல ரசனை கொண்ட நம் தமிழ் மக்கள் ‘யாத்திசை’ போன்ற வித்தியாசமான படைப்புகளுக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் அருமையான பதிவு… கண்டிப்பாக இந்த படம் பார்க்க வேண்டும் என்று அவா எழுகிறது.. நிச்சயம் பார்ப்போம் … நிறை குறைகளை கூறி வாசகர்களுக்கு தெளிவு கொடுத்தமைக்கு நன்றி.