அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள். அம்மாவின் கதை, எப்பொழுதுமே சின்னச் சின்ன சம்பவங்களால் ஆனது.
அம்மா வழியில், அம்மா ஒருவர்தான் படித்தவர். தாத்தாவுக்கு ஐந்து பெண் மக்கள். கடசாரி, ஆண். பெண்களில் வேறு யாரையும் படிக்க வைக்கவில்லை. கடசாரித் தம்பி (எங்களுக்குத் தாய்மாமா) படித்திருந்தார். நான்காவது பெண்ணான அம்மா மட்டும் எப்படிப் படிக்க முடிந்தது என்பதுதான் பூனைகள்.
ஆரம்பத்தில், அம்மாவையும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை.
ஆனால், ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது. தொடக்கப்பள்ளி. அதுவும் தாத்தா வீட்டின் அருகில் கீழத்தெருவிலேயே இருந்தது. மேலத்தெரு பிள்ளைகளும் இங்கு வந்தே படித்துக் கொண்டிருந்தார்கள்.
அது ஓராசிரியர் பள்ளி. வாத்தியார் மேலத்தெருவில் இருந்தார். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும்போது, அம்மா போன்ற பிள்ளைகள் ஜாலியாகத் தெருவில் விளையாடும். அப்படி ஒரு நாள், அம்மா எறிந்த கல் ஒன்று, படிக்கப் போன பிள்ளையைப் பதம் பார்த்துவிட்டது.
விவகாரம் தாத்தா வரைக்கும் போக, ஆத்திரத்தில் தாத்தா ஒரு காரியம் செய்தார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அம்மாச் சிறுமியை தர தரவென்று இழுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி நடந்தார்.
‘இவள வெளிய விடாதீங்க சாரே. இங்கனயே அடைச்சி வைங்க’.
பிள்ளையார் என்ற பெயர் கொண்ட அந்த ஓராசிரியர், அன்றிலிருந்து அம்மாவைப் பகல் முழுவதும் பள்ளிக்கூடத்தில் அடைத்து வைக்க ஆரம்பித்தார்.
0
அன்றிலிருந்து சுமார் நாற்பது வருடங்கள் சென்று, நாட்டுப்புறவியல் ஆய்விற்காக நான் அந்த ஊருக்குச் சென்றேன். ஆறு மணி கடைசி பேருந்து போய்விட்டது. சங்கரன்கோவில் – ராஜபாளையம் நெடுஞ்சாலையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஊருக்கு இன்னுமொரு 12 கிலோமீட்டர் போக வேண்டும். அந்த விலக்கிலிருந்த ‘டீ – சைக்கிள் கடையில்’ மறுநாள் காலையில்தான் பேருந்து என்றார்கள்.
‘வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போங்கய்யா. காலைல வந்து விட்டுருங்க.’
இந்த யோசனை சரியெனப் பட்டது. ஒரு மாதம் போல் தங்குவதற்கானப் பெட்டி என்னிடம் இருந்தது. நடந்து போவது சிரமம். சைக்கிளில் போவது என்று முடிவு செய்தேன்.
‘ஊருக்குள்ள அட்ரஸ் சொல்லுங்க’ என்றார் கடைக்காரர்.
‘யார் வீட்டுக்குப் போறீங்கனு சொல்லுங்க போதும்’.
‘பரமசிவம்’. தாத்தா பேரைச் சொன்னேன். அங்கிருந்த யாருக்கும் அவரைத் தெரியவில்லை.
‘வேற ஏதாவது விவரம் சொல்லுங்கய்யா…’
தாத்தா பற்றி வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லாமே பரமசிவம் போல பொத்தாம் பொதுவான தகவல்கள் தான். விவசாயி. வயசு, எழுபது இருக்கும். நல்ல உயரம். மாநிறம். கொஞ்ச காலம் எஸ்டேட்டில் வேலை செய்தார். பிள்ளைகள் யாரும் ஊரில் இல்லை. வயதான தாத்தாவும் பாட்டியும் தான் வீட்டில் இருக்கிறார்கள். ம்ஹூம். அங்கிருந்த யாருக்கும் தாத்தாவைத் தெரியவில்லை.
ஏற்கெனவே இருட்டத் தொடங்கி விட்டது. நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறேன்.
‘அடையாளம் தெரியாம சைக்கிள எப்படிக் கொடுக்கிறது?’
ஏதோவொரு யோசனையில், ‘பிள்ளையார் வாத்தியாரத் தெரியும்’ என்றேன். நிஜமாகவே அவரைப் பார்த்தது இல்லை. அம்மா கதையில்தான் அவரைப் பழக்கம்.
அடுத்த நொடி, நிலைமை தலைகீழாக மாறியது.
‘அதான் பிள்ளையார் வாத்தியாரச் சொல்றாருல்ல. சைக்கிள கொடுத்து விடு.’
‘வாத்தியார் பேரச் சொன்னதுக்கு பிறவு, வேறென்ன?’
நான் சைக்கிளுக்குத் தயாராகும்போது என்னை இன்னொருவர் கூப்பிட்டார்.
‘தம்பி, இங்க வாங்க’.
திரும்பிப் பார்த்தேன்.
அவர் ஒரு டிராக்டரை மறித்து நின்று கொண்டிருந்தார்.
‘டிராக்டர், ஊர் வழிதான் போகுது. நீங்க, இதுல போய் இறங்கிக்கங்க’.
நான் அன்று, டிராக்டரில் வந்து தாத்தா வீட்டில் இறங்கினேன்.
0
ஆறாவது படிக்க, அம்மாவை ஶ்ரீவில்லிபுத்தூர் கான்வெண்ட்டில் சேர்த்துவிட்டார் தாத்தா. அதுவொரு அனாதை ஆசிரம் மாதிரி. துணிமணி, சாப்பாடு எல்லாமும் இலவசமாகக் கொடுத்தார்கள். பதிலுக்குக் கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சகல வேலைகளையும் செய்ய வேண்டும். அம்மா அங்கேதான் சமைக்கவும் கற்றுக்கொண்டது.
ஆறாவதில் சேர்த்துவிட்ட தாத்தா, ஐந்து வருடங்கள் கழித்துதான் ஊருக்குக் கூட்டி வந்தார். அப்பொழுது அம்மா, டீச்சராகியிருந்தார்.
ஒவ்வொரு வருட கோடை விடுமுறையிலும் பெற்றோர் வந்து பிள்ளைகளைக் கூட்டிப் போவார்கள். தாத்தாவும் வருவார். பார்ப்பார்.
‘நீ, இங்கயே இருந்துக்கோ தாயி. அம்மாமாருக்கு ஒத்தாசையா இருந்துக்கோ. அங்க வந்து எங்களோட ஏன் கஷ்டப்படனும்?’
கோடை விடுமுறைகளில் அம்மா, கன்னிமடத்தின் முழுநேர சமையல் பணியாளராக மாறிவிடுவார். இந்தக் கதைகள் இன்னும் சுவராஸ்யமானவை. கதை நெடுக வான்கோழிகளும், தமிழ் தெரியாத வெள்ளைக் கன்னியாஸ்திரிகளும், ரகசியமாய் பதுக்கி வைத்து சாப்பிடப்படும் பட்சணங்களும், தேங்காய் திருட வரும் திருடர்களும், விசும்பும் பேய்களும் வந்தபடியும் போனபடியுமாக இருப்பர்.
0
அம்மாவுக்கு முதல் டீச்சர் வேலை, உள்ளூர் பள்ளிக்கூடத்திலேயே கிடைத்தது. அப்பொழுதும் பிள்ளையார்தான் வாத்தியார். இப்பொழுது அவர் தலைமை ஆசிரியர். தாத்தாவுக்குத் தலைகால் புரியவில்லை.
இதனிடையே, அம்மாவைப் பெண் கேட்டு பலரும் வர ஆரம்பித்தனர். அதில் அம்மாவின் மூத்த அக்கா கணவரும் ஒருவர். சம்பாதிக்கிற பொண்ண வெளிய ஏன் கொடுக்கனும்? தங்கச்சியையும் நானே கட்டிக்கிறேன் என்றார். இது, அந்த நாட்களில் சகஜம்.
தாத்தா சம்மதிக்கவே இல்லை. ‘இன்னொரு வாத்தியாருக்குத்தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்.’ ரொம்பப் பிடிவாதமாக இருந்தாராம். அக்காவின் கணவர் மட்டுமல்ல, அக்காவே வந்து பலமுறை கேட்க ஆரம்பித்தது. ‘அவள வச்சு நாங்களும் கொஞ்சம் பொழச்சுக்கரோம்!’
நாயாய் பேயார் அலைந்தார் என்று சொன்னார்கள். அப்பா, பக்கத்து ஊரில்தான் வாத்தியாராக இருந்தார். ஆனால், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க தாத்தாவுக்கு ஒரு வருடம் சென்றது.
*
‘உங்கள மட்டும் தாத்தா ஏன் படிக்க வச்சார்?’ பெரியம்மாக்களோ, சித்தியோ படித்திருக்கவில்லை.
‘அதான் சொன்னேன்ல. ஸ்கூல் போய்ட்டுருந்த புள்ளைய கல்ல கொண்டு எறிஞ்சிட்டேன். இவள சும்மா விட்டா அடங்கமாட்டானு, தாத்தா ஸ்கூல்ல கொண்டு சேத்துருச்சு’.
இந்தப் பதிலில் நாங்கள் யாரும் சமாதானம் அடைந்ததில்லை. அம்மாவை விடவும் அடங்காத பிள்ளைகள் பெரியம்மாவும் சித்தியும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
‘கான்வெண்ட்ல படிக்கும்போது ஒரு தரம் கூட வீட்டுக்கு வர்லியா?’
‘தாத்தா வரும். வந்து, நீ இங்கயே இருந்துக்கோப்பான்னுட்டு போயிரும்.’
‘தனியா இருக்க கஷ்டமால்லியா?’
‘கஷ்டமாதான் இருக்கும். ஆனா, ஊருல் இன்னும் கஷ்டம். இங்கயாச்சும் சாப்பாடு கிடைக்கும். அப்புறம், சிஸ்டர்க எல்லாம் பாசமா பாத்துப்பாங்க. ‘வாத் து து?’ ‘வாத் து து?’ னே ஒரு சிஸ்டர் கேட்டுட்டுருக்கும். அது, வெள்ளைக்கார சிஸ்டர். தமிழ் அவ்வளவா தெரியாது. அதுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். அது தான் கிச்சனுக்கு இன்சார்ஜ். கறி எடுத்தா, எனக்கு தர்ரதுக்கு ஒரு சின்ன கிண்ணத்துல எடுத்து வச்சி, ராத்திரி எல்லாரும் தூங்கனப்புறம் போய்ச் சாப்புட்டுக்கோனு சொல்லும்.’
0
‘உங்கள மட்டும் படிக்க வச்சாரே, ஏன்?’
‘சித்தியையும் படிக்க சொன்னாருடா. அவதான் போகலன்னுட்டா’.
‘பெரியம்மா…?’
‘அவுகல்லாம் சிறுசுலயே கல்யாணம் முடிச்சி போய்ட்டாங்கல்லா? உங்க சின்ன பெரியம்மா கல்யாணம் முடிச்சது வேற சாதி. பெரியப்பாவோட ஓடிப் போயிருச்சு. தாத்தா போட்டாவ தூக்கி உடைச்சிட்டாரு. பக்கத்து ஊர்லதான் இருந்தாங்க. பத்து பதினைஞ்சி வருசம் போல பெரியம்மாட்ட பேசவே இல்ல.’
0
அம்மா மட்டும் என்ன விசேஷம்? மற்ற பெண் பிள்ளைகளையெல்லாம் விட்டுவிட்டு அம்மாவை மட்டும் தாத்தா ஏன் படிக்க வைத்தார் என்பதற்குத் தற்செயலாய் எனக்கொரு காரணம் கிடைத்தது.
தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். இப்போதிருக்கும் பாட்டி, இளைய மனைவி. அம்மா, மூத்த தாரத்து மகள். இந்தச் செய்தியை அதிர்ச்சிகரமாகவே நாங்கள் எதிர்கொண்டோம். ஏனென்றால், இப்படி இருக்கலாமோ என்று யோசிப்பதற்குத் தோதுவான எதையும் நாங்கள் யாரும் எதிர்கொண்டதே இல்லை. பேச்சிலும் சரி, பழக்கவழக்கத்திலும் சரி, அம்மா மூத்த தாரத்துப் பெண் என்பதை யாரும், எப்பொழுதும் உணர்த்தியிருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேல், அம்மாகூட சொன்னதில்லை.
அம்மாவின் அம்மா இள வயதிலேயே இறந்துவிட்டது. தாத்தா முதலில் அந்தப் பாட்டியையே திருமணம் செய்திருக்கிறார். கல்யாணம் முடிந்த சில நாட்களில் அந்தப் பாட்டி நோய்வாய்ப்பட்டிருக்கிறது. சிக்கிரத்தில் இறந்துபோகும் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு பெண் வந்து தாத்தாவை அபகரிப்பதற்கு முன் சொந்தத்திற்குள் முடித்துவிடலாம் என்ற முடிவில், பாட்டியின் தங்கையையே இரண்டாவதாகத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
தங்கையைத் திருமணம் செய்த நேரமோ என்னவோ, அக்கா பிழைத்துக்கொண்டது. இதனிடையே, தங்கைக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன. அதுதான் பெரியம்மா. பிழைத்துக் கொண்ட அக்காவுக்கு அதன்பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது – அம்மா. குழந்தை பிறந்த கையோடு, அந்தப் பாட்டி நிஜமாகவே இறந்துபோனார்.
அம்மாவை மட்டும் படிக்க அனுப்பியதற்கு, ‘சித்தி கொடுமை’ என்ற காரணம் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்படியொரு சம்பவம் அம்மாவின் வாழ்வில் நடந்திருக்கவில்லை. இதை வேறு விதமாகவும் சொல்ல முடியும். அப்படியொரு குடும்ப வன்முறை நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் விதமாகவே தாத்தா அம்மாவைப் படிக்க அனுப்பினார் என்றும் யோசிக்க முடியும்.
தாத்தாவின் இது போன்ற முன்னெச்சரிக்கைகளை நான் வேறு சில தருணங்களில் பார்த்திருக்கிறேன். நாங்கள் எப்பொழுது ஊருக்குச் சென்றாலும், தாத்தா செய்யும் முதல் காரியம் தூக்குவாளியில் டீ வாங்கி வருவதுதான். சில நேரம் பேருந்திலிருந்து இறங்கும் எங்களை வரவேற்ற கையோடு, ‘நீங்க வீட்டுக்குப் போங்க, நான் டீ வாங்கிட்டு வாரேன்’ என்று தூக்குவாளியோடு கிளம்பி விடுவார். படித்த மருமகனான அப்பாவுக்கு, தாத்தா காட்டும் மரியாதை என்று மட்டுமே நான் இதை ரொம்ப காலம் நினைத்திருந்தேன்.
கள ஆய்வுக்காக அந்தக் கிராமங்களில் நான் தங்கியிருந்தபோதுதான், டீக்கடைகளில் இரட்டைக் குவளை இருந்ததைப் பார்த்தேன். தூக்குவாளியில் ஏன் டீ வாங்கி வந்தார் என்பதை அப்பொழுதே நான் விளங்கிக் கொண்டேன். இதே போன்றவொரு எச்சரிக்கையுடன் தாத்தா அம்மாவை மட்டும் படிக்க அனுப்பியிருக்கலாம்!
0
கடந்த ஒரு நூற்றாண்டாகக் கல்வி மிக முக்கியமான ஆயுதமாக மாறியிருக்கிறது. ஆயுதம் என்ற வார்த்தை கனமானது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதே நேரம் நம்மை திசைதிருப்பவும் கூடியது. அதனால், முக்கியமான ‘கருவி’ என்று மாற்றிவிடுகிறேன்.
கடந்த ஒரு நூற்றாண்டாகக் கல்வி மிக முக்கியமான கருவியாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களிலும்கூடத் தவறாமல் இடம்பெறக்கூடிய, மிக சாந்தமாய் தோற்றமளிக்கும் பள்ளிக்கூடங்கள், நிஜத்தில் பலரும் அஞ்சக்கூடிய தன்மையையே கொண்டிருக்கின்றன. நான் சொல்லக்கூடிய அச்சம் ‘மழைக்குக்கூட ஒதுங்கியதில்லை’ என்று சொல்லும் நக்கலுக்குப் பின்னுள்ள அச்சம் அல்ல.
கரடுமுரடான பழமையிலிருந்து ஒரு தலைமுறையை அனாயாசமாக வெளியேற்றக்கூடிய அவற்றின் வல்லமை விளைவிக்கக்கூடிய அச்சம். அயலியின் இறுதிப் பகுதியில், ஊர் ஆண்கள் திரண்டு பள்ளிக்கூடத்தை நொறுக்கித் தீ வைக்கும் காட்சி நிஜமாகவே என்னை அதிர்ச்சியடைய வைத்தது. நாடகத்தன்மைக்காக அக்காட்சி மிகைப்படுத்தப்பட்டது என்றாலும், வரலாற்று நோக்கில் பார்க்க முடிகிற பழமைவாதிகளால் அப்படிச் செய்யவும் முடியும்.
ஆனாலும் தமிழ்ச் சூழலில் அக்காட்சி மிகைப்படுத்தப்பட்ட வன்முறையாகவே தோன்றுகிறது. ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில் கல்வி புரட்சிகர ஆயுதமாகப் பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வெகுஜன இறையாண்மையின் (Popular Sovereignity) வடிவமாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்பதன் மீதான விருப்பம் கோட்பாடு சார்ந்தோ, விடுதலை இயக்கங்களின் கருத்தியல் சார்ந்தோ அல்லது சமூக முரண்கள் கூர்மையடைந்ததன் காரணமாகவோ புரட்சிகர நடவடிக்கையாக உருவானதல்ல.
மாறாக, தமிழ்ச் சமூகத்தில் கல்வியின் மீது தன்னிச்சையாகவே ஒரு பொது விருப்பம் (General Will) உருவாகியிருக்கிறது. (Popular Sovereignity, General Will போன்ற பதங்கள் ரூஸோவின் ‘The Social Contract’ என்ற புத்தகத்திற்குப் பின் பயன்பாட்டிற்கு வந்தன. வெகுஜனவியம் குறித்து ஆராயக்கூடியவர்கள் பொத்தாம் பொதுவான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு (பிறருக்கு ‘சாமானியர் – உயர்குடியினர்’, திராவிட அரசியலுக்கு ‘பிராமணர் – பிராமணரல்லாதோர்’) வெகுஜன அரசியல் எவ்வாறு வடிவெடுக்கிறது என்பதை விளக்குவதற்கு General Will என்ற கருத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூடுதலாகத் தெரிந்து கொள்ள, Cas Mudde எழுதிய Populist Radical Right Parties in Europe (2007) என்ற நூலை வாசிக்கலாம்.)
தமிழ்ச் சமூகத்தில் அறிவின்மீது தோன்றிய இத்தகைய பொது விருப்பத்திற்குக் காரணம் என நாம் பல்வேறு காரணிகளைச் சுட்டிக்காட்ட முடியும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து, எழுத்து மரபில் மட்டுமல்லாது சொல் மரபிலும் வழங்கி வரக்கூடிய பதினென்கீழ்க்கணக்கு சொற்றொடர்களிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு இக்கட்டான சூழலிலும் கைவிடக்கூடாத பழக்கம் கல்வி (பிச்சைப்புகினும் கற்கை நன்று) என்ற யோசனை மரபாகவே வழங்கி வந்திருக்கிறது. ஏகலைவன் கதாபாத்திர வடிவமைப்பும்கூட கல்வி மீதான பொது விருப்பத்தையே பிரதிபலிக்கக்கூடியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதற்கொண்டு இந்த நாட்டில் தோன்றிய எல்லா சமூக சீர்திருத்தவாதிகளும் கல்வியின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வழியுறுத்தி வந்திருக்கிறார்கள். பெளத்தமும் கிறிஸ்தவமும் கல்வி மீதான இவ்வெகுஜன விருப்பத்தைத் தாமதமாகவேணும் கண்டுகொண்ட இரண்டு மத நிறுவனங்கள்.
நமது சமூகத்தில் கல்வி மீது நிலவக்கூடிய இந்த விருப்பத்தை அரசியல் என்று அழைக்க முடிந்தாலும், புரட்சிகர நடவடிக்கை என்று சொல்ல முடியவில்லை. கல்வி மீதான் விருப்பத்தை அறிவின் மீதான வேட்கை என்று சொல்லலாம். எந்தவொரு அறிவும், ஒருவர் தன்னைத் தானே விளங்கிக் கொள்ளவே முதலில் உதவி செய்கிறது. அதாவது, நாம் பெற்றுக்கொள்ளும் அறிவு, முதலில் நம்மையே நமக்குப் புதிதாக அறிமுகம் செய்கிறது. அதன் பின், நம் சூழலை நமக்குச் சொல்லித் தருகிறது. அதன் சிடுக்குகளை காட்டித்தருகிறது. தொடர்ச்சியாக, சமூக முரண்களை அடையாளப்படுத்துகிறது. அதன்மூலம், சமூக மாற்றத்திற்கான உத்வேகத்தை அளிக்க ஆரம்பிக்கிறது.
உதாரணமாக, பிச்சை எடுத்து நீங்கள் கற்றுக் கொள்ளும் கல்வி, நீங்கள் ஏன் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள் என்பதையே முதலில் உங்களுக்கு விளங்க வைக்க வேண்டும். அநியாயமாக உங்கள் கட்டைவிரலைக் கேட்பவரின் மீதே நீங்கள் கற்றுக்கொண்ட போர்க்கலைகள் பயன்பட்டிருக்க வேண்டும். இதுவெல்லாம், கல்வியைப் புரட்சிகர நடவடிக்கையாக உள்வாங்கிக் கொண்டாலே நிகழமுடியும். மிக ‘எளிய கருத்தியலால்’ (Thin ideology) செய்யப்பட்ட ‘பிராமணர் – பிராமணரல்லாதோர்’ முரணில் கட்டப்பட்ட வெகுஜன அரசியலில் மேற்கூறிய சுயபரிசோதனைக்கு வழியில்லை. அது இல்லாதபட்சத்தில், கல்வி இன்னதென்று சொல்லமுடியாத மேம்பாட்டைக் கொண்டு வரும் என்று மட்டுமே வெகுஜனம் நம்புகிறது. இதையே நாம் ‘பொது விருப்பம்’ என்று சொல்கிறோம்.
அற நூல்கள் முதல் சமூக சீர்திருத்தவாதிகள் வரை கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய பலரும் கல்வியின் புரட்சிகரத் தன்மையைத் தவிர்த்து வந்தனர் என்பதே வரலாறு. அவர்களால் கல்வி விளைவிக்கக்கூடிய மாற்றத்தை அனுமானிக்க முடிந்ததேயொழிய, அதைக் கையாள வேண்டிய முறையைச் சொல்லித்தர முடியவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், தமிழகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி (Pedagogy of the Oppressed) என்ற உரையாடல் உருவாகியிருக்கவில்லை. (பார்க்க, Freire, Paulo, 1970, Pedagogy of the Oppressed, Continuum, New York).
புரட்சிகரத் தன்மையற்று, ஆயுதமாக உருமாற்றம் அடைவதற்கு முன் வெறும் கருவியாக மட்டுமே விளங்கும் கருத்தாக்கங்களும் கூட வெளித்தெரியும் படியான சமூக மாற்றங்களை விளைவிக்க முடியும் என்பதற்கு கல்வி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய கருத்தாக்கங்கள் ஜனநாயக அரசமைப்பில் வெகுஜன இறையாண்மையின் கேந்திரங்களாகச் செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறவர்களும் தத்தமது மேம்பாட்டிற்கான வழிவகைகளை இத்தகைய கேந்திரங்களில் கண்டடைய முடியும் என்பதே ஜனநாயக அமைப்பு வழங்கும் வாய்ப்பு. அந்த வகையில் தமிழகத்தின் கிராமப்புறங்களெங்கும் நீக்கமற நிறைந்துள்ள கல்விக்கூடங்கள் இப்படியான சமூக நகர்வுகளுக்குக் காரணகர்த்தாக்களாக விளங்குகின்றன.
0
அயலியில் கல்வியை மேற்கொள்வதற்கு ஏற்படும் தடைகளும் அவற்றைக் கடப்பதும் என்றொரு கதையைச் சொல்ல முயற்சிக்கிறார்கள். எல்லா தமிழ்நாட்டுக் குடும்பங்களுக்குள்ளும் இதே போன்று ஒரு கதை இருக்க முடியும். அயலியில் சித்தரிப்பதைப் போல புலி மாதிரியான கதை இல்லையென்றாலும், பூனைகள் போலத் திரியும் கதைகள் உள்ளன.
அனுமானித்த குடும்ப வன்முறையிலிருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற தாத்தா முன்னெடுத்த நடவடிக்கையைப் போன்ற கதை இப்படியொரு உதாரணம். இந்தக் கதைகளில் முரண்கள் துலங்குவதில்லை. ஏனெனில் அக்கதாப்பாத்திரங்கள் தடைகளிலிருந்து விலகிச் செல்வதையே இயல்புகளாக வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு விலகிச் செல்வதற்கே புதிய சமூக அமைப்புகள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.
கிராமங்களிலிருந்து வெளியேறித் தேயிலைத் தோட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், பெரு நகரங்களுக்கும் இடம்பெயரும் குடும்பங்களின் கதைகளும் இந்த வகையைச் சார்ந்தவையே. இடம்பெயர்வதன் மூலம் தடைகளை விலக்கிச் செல்கிறார்கள். வரலாற்றின் வெவ்வேறு தருணங்களில் பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாமில் நடைபெற்ற மதத்தழுவல்களும் இத்தகைய குணம் படைத்தவையே. கல்வியைக் கருவியாகப் பாவிப்பது போலவே, மதத்தையும் கருவியாக மட்டுமே பாவிக்கிற பண்பு. அவற்றின் சித்தாந்தங்களை விடவும் அவை வழங்கும் புதிய வாய்ப்புகளே மக்களை ஈர்க்கின்றன.
எந்தவொரு வெகுஜன நகர்வும் நிஜமான சமூக முரண்களை நிலைநிறுத்தவும் முயல்வதில்லை, அழித்தொழிக்கவும் நினைப்பதில்லை. அவற்றைத் தவிர்ப்பதற்கான சூழலையே ஏற்படுத்த விரும்புகின்றன. இதனால், சமூக முரண்கள் முற்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை. அயலி சித்தரிப்பதைப் போன்ற நாடகத்தருணங்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாததற்கான காரணமும் இதுவே.
0
கற்பதற்கான உரிமை மறுக்கப்படுதல் என்பதே அயலி பேச எடுத்துக் கொண்ட விஷயம். அத்தகைய மறுப்பை மீறி கல்வியை மேற்கொள்ளும் நாயக பாத்திரத்தின் கதையைச் சொல்ல முற்படும் பொழுது, கண்ணுக்குத் தெரிகிற ஒரு எதிரி தேவைப்படுகிறார். ‘கதை’ செய்யும் நிர்பந்தம் இது.
கண்ணுக்குப் புலப்படாத எதிரி இடம்பெறும் கதையைக் கற்பனை செய்வதற்கு முன்மாதிரிகள் இல்லை. உதாரணத்திற்கு, கற்கும் உரிமை மறுக்கப்படுதலின் சமீபத்திய நிகழ்வுகளை யோசித்துப் பாருங்கள். மருத்துவக் கல்வி கற்பதற்கான தேசிய நுழைவுத் தேர்வு ஒரு வகையில் கல்வி மறுப்பே; தேசியக் கல்விக் கொள்கையில் முன்மொழியப்படும் நான்கு வருட இளங்கலைப் பட்டப்படிப்பும், அதில் மாணவர்கள் இடைநிற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதும் இன்னொரு வகையான கல்வி மறுப்பே. இவையிரண்டும் ஜனநாயக அரசமைப்பால் முன்மொழியப்படுகிறது. காலம்காலமாய் சனாதனம் பேசிக் கொண்டிருந்த மொழியில் அரசும் பேச ஆரம்பிக்கிறது.
வலதுசாரி ஜனநாயக அரசால் திணிக்கப்படும் உரிமை மறுப்புகளை அவ்வளவு எளிதில் உணர முடிவது இல்லை. ஏனென்றால், அம்மறுப்புகள், தாங்கள் தர நிர்ணயம் செய்வதாகவும் (தேசிய நுழைவுத் தேர்வு), கற்பவருக்கு சுதந்திரம் வழங்குவதாகவுமே (தேசியக் கல்விக் கொள்கை) தங்களை பிரஸ்தாபிக்கின்றன.
எதிரி கண்ணுக்குப் புலப்படமாட்டார் என்பதை விடவும், நேர்மையாளரைப் போலவும் தேசப் பற்றாளர் போலவும் வேஷம் கட்டியிருப்பார் எனும் போது சிக்கல் இன்னும் தீவிரமடைகிறது. கல்வி என்ற வெகுஜன மேம்பாட்டுக் கேந்திரத்தை ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும்’ என்று மாற்றுவது எத்தனைக் கொடூரமான உரிமை மறுப்பு என்பதை வெகுஜனம் இன்னும் சில தலைமுறைகள் கடந்தே உணர ஆரம்பிக்கும்.
0
இந்தச் சூழலில் உரிமை மறுக்கப்படுவதையும் அதை மீறி ஒரு பெண் வெற்றி பெறுவதையும் சித்தரிக்க விரும்பிய வகையில் அயலி முக்கியமான படைப்பு என்றே நான் நினைக்கிறேன். அதில் சொல்லப்படும் தமிழ்செல்விக்கு, ஏறக்குறைய, சமீபமாக பத்திரிகை செய்திகளில் அதிகம் இடம்பெற்ற, உரிமை மறுக்கப்பட்டதால் இறந்து போன அனிதாவின் சாயல். ஆனால், கதை சொல்லலில் நிகழ்ந்தது என்ன?
நான் ஏற்கெனவே சொன்னது போல, கதை முரண்களையே விரும்புகிறது. தேசியத்தையும், தரநிர்ணய முறைகளையும், கல்வி கற்கும் சுதந்திரத்தையும் எதிரியாகச் சித்தரிப்பது எப்படி என்பதற்கு நம்மிடம் முன்மாதிரிகள் இல்லை. நம்மிடமிருக்கும் பழைய முரண்கள், ‘பெண் கல்விக்கு எதிரான ஆண்’ – ‘ஏழையின் கல்விக்கு எதிரான பணக்காரர்’ – ‘திராவிடரின் கல்விக்கு எதிரான பிராமணர்’ போன்றவை மட்டுமே. இதில், ‘பெண் – ஆண்’ என்ற முரணைக் கதை எடுத்துக் கொள்கிறது.
இனி, அயலியின் கதையை ஆரம்பிப்பதில் அவர்களுக்குச் சிக்கல் இல்லை. ஊர்க்கட்டுப்பாடு, பாரம்பரியம், ஆண் அதிகாரம் என்று ஒரு பக்கமும், ஒடுக்கப்படும் இளம் பெண்கள் என்று இன்னொரு பக்கமுமாக கதை வளர ஆரம்பிக்கிறது.
இந்த முரணோடு கதை சொல்வதிலும் என்ன இடர்பாடு உள்ளது என்று நாம் பார்க்கலாம். பெண் கல்வி மறுப்பு என்பது ஒரு சமூகக் கேடு. ஆனால், அது என்றைக்குமே ஒற்றைக் கேடாக இருந்ததில்லை என்பது வரலாறு. பெண்ணுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட வரிசையில் கல்வி மறுப்பும் இருந்தது. உதாரணத்திற்கு, பொதுவெளியில் புழங்குவது, விரும்பிய உடையை உடுத்துவது, அதிரப் பேசுவது, சடங்கு சம்பிரதாயங்களில் முன்னிலை வகிப்பது போன்றவற்றின் வரிசையில் கல்வி கற்பதும் மறுக்கப்பட்டது. மேலும், என்றைக்கு கல்வி ஜனநாயக உரிமையாக சொல்லப்பட்டதோ அன்றே பெண்ணுக்குச் சொல்லப்பட்ட மறுப்பும் காணாமல் போனது. அதாவது, நமது ஜனநாயக அமைப்பில் கல்வி கற்கும் உரிமையில் ஆண், பெண் இருக்கவில்லை. ஆனாலும் அயலியில் பெண் கல்வி மறுக்கப்பட்ட கதையொன்றைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
கதை நடப்பதாகச் சொல்லப்படும் தற்காலமும் கிராமப்புறமும் பெண் அடிமைத்தனத்தைப் பேணிய காலவெளி என்று நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. இதற்காக ஒரு வினோத நாட்டுப்புற சமய நம்பிக்கையைக் காரணம் காட்டுகிறார்கள். அந்த நாட்டுப்புற நம்பிக்கை பெண்களின் திருமண வயதையும், சடங்கியல் முக்கியத்துவத்தையும் வரையறுக்கிறது.
பூப்படைந்த சில மாதங்களிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்பது தெய்வத்தின் கட்டளை என்கிறார்கள். அப்படியொரு வழக்கம் இருக்குமானால், அது ஒரு கிராமத்தில் மட்டும் இருந்திருக்க முடியாது என்பது உண்மை. குறைந்தபட்சம், திருமண உறவுகள் வாழும் வட்டாரம் முழுமைக்கும் அவ்விதி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கதையில் அப்படி இல்லை. இது அக்கிராமத்தின் சிக்கல் என்று தனிமைப்படுத்துகிறார்கள்.
இந்த இடத்தில் இன்னொரு சிக்கலும் முளைக்கிறது. பதினான்காம் நூற்றாண்டில் வேறொரு நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து ‘வீரப்பண்ணை’ என்ற ஊருக்கு வந்து குடியேறியதாகச் சொல்லும் மக்கள், இந்த ஆறு நூற்றாண்டுகளில் குறைந்தபட்சம் பத்திருபது ஊர்கள் என்றாவது பெருகியிருக்க வேண்டும். ஆனால், கதையின் படி அந்த ஊர் மட்டிலும் பல நூற்றாண்டுகளுக்கு உறைந்து நிற்கிறது.
வலிந்து செய்யப்படும் ஆண் – பெண் முரணில் தோன்றும் கோளாறுகளில் இதுவொன்று. ஏனெனில், ‘ஆண் – பெண்’ முரண் உலகப்பொதுவானது. ஒவ்வொரு நாட்டிற்கும், வட்டாரத்திற்கும் அல்லது ஊருக்குமே கூட ஆண் அதிகாரச் செயல்பாட்டில் வித்தியாசங்கள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த உலக அசைவிற்கேற்ப இம்முரண் மாறியே வந்திருக்கிறது. உலகம் முழுக்க பெண்களுக்கான உரிமைகள் பேசப்படும் பொழுது, ஒரு ஊர் மட்டிலும் அதிலிருந்து விலகி நிற்பது சாத்தியமில்லை. பெண் சிசுக்கொலை என்றொரு வழக்கம் கண்டறியப்பட்ட போது, ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் அதற்கு எதிராக நின்றதை நாம் கவனிக்க வேண்டும்.
மேலும், எந்தவொரு பெண் உரிமை மறுப்பிற்குப் பின்னாலும் ஆண்கள் சொல்லும் வலுவான ‘நியாயம்’ ஒன்றும் இருந்து வந்திருக்கிறது. இந்த நியாயம், சமூக வரலாற்றுக் காரணங்களால் உருவாக்கப்படுகிறது. பொட்டுகட்டி விடும் தேவதாசி முறை இதை விளக்க உதவும். பெண்ணுடல் மீதான அத்தனைக் கொடூர அடக்குமுறையையும் பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களால் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால் அதற்குச் சொல்லப்பட்ட ஆன்மீக நியாயமே காரணம். ஆனால், வரலாற்றுச் சூழல்கள் மாற ஆரம்பித்தபொழுது அதன் நியாயமும் வீழ்ந்தது, அவ்வழக்கமும் ஒழிந்தது.
இரண்டாவதாக, அவ்வூரின் ஆண்கள் அத்தனைக் கொடூரர்களாகவும் தெரியவில்லை. அங்கே பெண் கல்வி மறுக்கப்படுவது போல ஆண் கல்வியும் கூட மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்செல்வி பத்தாவது பொதுத்தேர்வில் வெற்றி பெறும் வரை எந்தப் பையனும் கூட அத்தேர்வில் வெற்றி பெற்றிருக்கவில்லை. அவ்வூரின் ஆண்கள் யாரும் படித்து, உத்தியோகத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை. ஒரே ஒரு விதிவிலக்காக இருக்கும் அவ்வூர் ஆசிரியரே (ஆமை என்று உருவக்கேலி செய்யப்படுபவர்) பிரதான வில்லனாகவும் இருக்கிறார். அதாவது, கதையின்படி, கல்வி அவ்வூரின் ஆண்களை மேலும் மேலும் பழமையில் ஆழ்த்துகிறது என்று அர்த்தம்.
மேலும், தெய்வ வழிபாட்டில் அவ்வூர் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அக்கோவிலுக்குள் ஆண்கள் நுழையவே முடியாது. பெண்களோ அக்கோவிலில் வழிபட முடியும்; பூப்படைவதற்கு முன் அயலியைத் தொட்டு வணங்க முடியும்; ஒரு பெண்ணே அக்கோவிலின் சடங்கு அதிகாரத்தையும் மேற்கொள்ள முடியும். அந்த வகையில், அயலி என்ற தெய்வம் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் ஒதுக்கி வைக்கிறது.
ஆண் – பெண் முரணை மையமாகக் கொண்டு கதை சொல்வதில் ஏற்படும் பிரதானச் சிக்கல் இது. ஒரு கட்டத்தில் பாத்திரங்களின் இயல்புகள் மயங்க ஆரம்பிக்கின்றன. எது ஆணவம், யார் ஏதிலி என்ற குழப்பம் மேலோங்கி விடுகிறது. அதன் பின் கதையை வளர்ப்பது முடியாமல் போகிறது. அல்லது, அயலி போன்ற படைப்புகளில் வருவது போன்ற நம்பகத்தன்மையற்ற சம்பவங்களைக் கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது.
0
சமகால வாழ்வின் சிக்கல்களைப் பேசுகிற கலைப்படைப்புகள் இந்தப் பிரச்சினையை நிச்சயமாய் எதிர்கொள்கின்றன. அதாவது, மைய முரண்களின் மயங்கும் சிக்கல். இதிலிருந்து விடுபடுவதற்காக, வகைமாதிரிக் கதாபாத்திரங்களை உருவாக்குவது ஒரு யுக்தி. மிக நல்லவர், மிகக் கொடூரர், மிக ஏமாளி, மிகக் கொடையாளி, மிக வஞ்சகன், சிறந்த பெண்.….இப்படி. இந்த வகைமாதிரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் இயல்பாகவே நாடகத்தருணங்களாக மாறிவிடுகின்றன. இறுதியில் நமக்குக் கிடைப்பது தொன்மங்களின் சாயலைக் கொண்ட காவியங்கள் மட்டுமே. இப்பொழுது, அந்தப் படைப்பு காலாதீத குணத்தை எட்டியதாக நினைக்கிறோம். அதனால் சாகாவரம் பெற்றதாகச் சொல்கிறோம். ஆனால், உண்மையில் அது நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் திராணியற்றிருக்கிறது என்பதே நிஜம்.
நம்மிடம் புழக்கத்திலிருக்கும் கதை சொல் முறை, தொன்மக் கதைகளுக்கானது என்பதை யாரும் உணர்வதில்லை. நிகழ்காலத்தைச் சித்தரிப்பதாய் சொல்லும் நவீன படைப்புகளும் கூட, கதை என்ற சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது, ‘முரண் – வகைமாதிரிப் பாத்திரங்கள் – நாடகீயம்’ என்ற சட்டகத்திலிருந்து வெளிவரமுடியாமல் போகின்றது. அயலியில் நிகழும் கோளாறு, ‘கதை’யினால் வந்தது என்று சொன்னால் திகைப்பாய் இருக்கும். ஆனால், உண்மை அதுதான்.
கதை என்று சொன்னால், ‘சம்பவத் தொடர்ச்சி, பாத்திர குணவார்ப்பு, துலக்கமான மைய முரண், முரண் முற்றுதல், பெரு வெடிப்பு, இறுதி’ என்பதே விதி. நவீன கதை சொல் முறையிலும் பார்க்க முடிகிற இந்தச் சூத்திரம், நிஜத்தில் தேவதைக் கதைகளுக்கானது என்பதை விளாதிமிர் ஃப்ராப் 1960களில் சொல்லிச் சென்றார். (பார்க்க, Propp, Vladimir, 1968, Morphology of the Folktale, Indiana Univesity).
அப்படியானால், சமகால வாழ்வைப் பேசும் படைப்பாக்க முறை என்ன என்று நாம் விவாதிக்க வேண்டும்.
0
நவீன சமூகம் குறித்து நமக்குக் கிடைக்கும் வலுவான தகவல், ஜனநாயக அரசியலமைப்பு வெகுஜன இறையாண்மையை உருவாக்கியிருக்கிறது என்பதே. அதாவது, கொண்டாடப்பட்ட வகைமாதிரிக் கதாபாத்திரங்களின் யுகம் முடிந்து, கூட்டங்களின் யுகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நன்மை அல்லது தீமை என்பது நிரந்தர அடையாளமாக நீடிக்கவில்லை. அதனால் இரட்டை எதிர்மறைகளும் வலுவிழந்து விட்டன. முரண்கள் துலங்கவில்லை. பனிமூட்டத்தில் நடந்து செல்வது போல இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் பத்தடி தூரத்திற்கு மட்டுமே எல்லாம் நிஜம். வரலாறு, பெரும் புகைப்படலம்; எதிர்காலம், இன்னொரு புகைமூட்டம். நாம் தனித்து இல்லை என்பது மட்டுமே ஆறுதல்; அதுவே சங்கடமும். நம்மைச் சுற்றிலும் பல குரல்கள் (Polyphony) கேட்கின்றன. அதனால் நாம் கூட்டத்தில் இருப்பதாகச் சிறு சமாதானம் கொள்கிறோம்.
இந்தச் சூழலில் சமகால வாழ்வைப் பேச வரும் நவீனப் படைப்புகள், மாற்றுச் சொல் முறையைக் கைகொள்வது தவிர்த்து வேறு வழியில்லை. அடையாளங்கள் அழிந்து கொண்டிருப்பதை, தொடர்ச்சியின்மை நீடிப்பதை, முரண்கள் அவிந்து போவதை எழுதுவதற்கு முதலில் ‘கதை’யைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொரு வகையில், இன்று செயற்கை நுண்ணறிவால் ‘கதை’யை எழுத முடிகிறது என்றால், மனிதன் செய்வதற்கு என்ன இருக்கிறது?
கதையற்ற கதையை எழுதலாம்.
0
Is is possible to say that some of the anthologies that are produced in the recent times try to fit into the category that is identified as கதையற்ற கதை?
Different perception of Ayali movie review