போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தார்.
தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு பேர் மத்தியில், அல்லது ஒரு பொது இடத்தில் அல்லவா அதைச் செய்ய வேண்டும்? தீக்குளிக்கிற ஒவ்வொருவரும் அதைப் பார்வையாளர்கள் கண் முன்னே நிகழ்த்த வேண்டும் என்பதுதான் இலக்கணம். இதுதான் நமது பண்பாடும்கூட. ஆனால், கிறிஸ்டோபர் ஊரை அடுத்திருந்த முள்ளுக்காட்டில் யாருக்கும் தெரியாமல் தீக்குளித்திருந்தார். சரி, செய்ததுதான் செய்தார், தற்கொலைக் குறிப்பாக எதையாவது எழுதி வைத்திருந்தாரா? அதுவும் இல்லை.
இவ்வளவு தவறுகளோடு தற்கொலை செய்திருக்கிறார் என்றவுடன், இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கக்கூடும். ஆமாம், சரிதான். கிறிஸ்டோபர் ஒரு தலித். கூடவே, கிறிஸ்தவரும். அதாவது, நமது பண்பாட்டிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிற கூட்டம்.
பிரச்சினை என்ன என்றால், தீக்குளித்த கிறிஸ்டோபர் தப்புத்தப்பாய் தற்கொலை செய்ததால், அது கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்தத் தற்கொலையில் படிந்துள்ள மர்மத்தை அகற்ற வேண்டியது நம் கடமை!
அது, தலித் கிறிஸ்தவர் கிறிஸ்டோபரின் பண்பாட்டு அறியாமையால் நிகழ்ந்த தவறு என்று நம்மால் நிரூபிக்க முடியும். தமிழ்நாட்டுப் பண்பாட்டு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இப்படியான வழக்குகள் புதிதல்ல என்பது விளங்கும். 1999 ஆம் வருடம், ஜூலை மாதம் 23 ஆம் நாள், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கூலி உயர்வுப் போராட்டத்தில் கலந்து கொண்ட 17 பேரை போலிஸ் அடித்துக் கொன்று நதியில் வீசியது என்ற சந்தேகம் வந்தபோது, அப்படி இல்லை; நதியில் விழுந்தவர்களை தாமிரபரணியில் வசிக்கும் பிராஹ்னா வகை மீன்களே கடித்துக் கொன்றன என்று நாம் மர்மம் துலக்கவில்லையா? அப்படியொரு சம்பவம்தான், கிறிஸ்டோபரின் தற்கொலையும்.
0
ஓரியூர் கிறிஸ்டோபரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் தீக்குளிப்பதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘தீக்குளித்தல்’தான் என்னவோர் அழகான கற்பனை, இல்லை! ஒரே நேரத்தில் நீரையும் நெருப்பையும் இணைக்கிறது. வழக்கமாய் நெருப்பை அணைத்துவிடும் நீர், இந்தக் கற்பனையில் நெருப்போடு பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழ் கற்பனை வளமான மொழி என்பதற்கு மேலுமொரு சான்று.
கிறிஸ்தவ சமயத்தில் தீண்டாமை இருக்கிறது என்று வருத்தப்பட்டே 2015, ஆகஸ்ட் 31ம் தேதி கிறிஸ்டோபர் தீக்குளித்தார். இதைக் கேட்ட அவரது உறவினர்கள் உடனடியாக, தீக்குளித்துத் தற்கொலை செய்கிற அளவுக்கு கிறிஸ்டோபர் பலவீனமானவர் இல்லை என்று கருத்து தெரிவித்தனர். இதென்ன வேடிக்கை? பலவீனர்கள் என்றைக்காவது தீக்குளிப்பார்களா? அதுவொரு, மகத்தான தியாகம் இல்லையா? அதைச் செய்வதற்கு அளப்பரிய மனவுறுதி வேண்டுமே!
‘கிறிஸ்டோபர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். அதனால் சாதி வெறிபிடித்த பாதிரியார்கள் அவரைப் படுகொலை செய்து விட்டனர்’. தலித் அமைப்புகள், பிரதேப் பரிசோதனை அறிக்கையை நம்பாமல், இது தற்கொலை அல்ல கொலை என்று சொல்ல ஆரம்பித்தன.
கிறிஸ்தவ மதத்திலா இப்படி? பாதிரியார்கள் படுகொலை செய்வார்களா? என்று கேட்டால் நீங்கள் உலகம் அறியாதவர் என்று அர்த்தம். பொதுவில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல கிறிஸ்தவம் தொண்டு நிறுவனம் மட்டும் அல்ல; எல்லா மதங்களையும் போலவே லாப நஷ்டக் கணக்குப் பார்த்து செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இந்தியக் கிறிஸ்தவம், கூடுதலாக, சாதிய நலன்களைத் தந்திரமாகக் கையாளும் நரியும்கூட.
0
ஓரியூர் புனித அருளானந்தர் கோவிலின் வருடாந்திர திருவிழாவில் கொடி ஏற்றப்படுவது சம்பிரதாயம். அக்கொடியை ஊர்வலத்தில் சுமந்துவருவதற்கு ‘நான்’, ‘நீ’ என்று போட்டிப் போடுவார்கள். இது கௌரவமாம். சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போன்றவற்றில் வெற்றி பெறுகிறவருக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்தைப் போல.
இந்தக் கௌரவத்தை அப்போதைக்கப்போது தலித் கிறிஸ்தவர்களுக்கும் தாருங்கள் என்பதுதான் கிறிஸ்டோபரின் கோரிக்கை. அது உடனடியாக மறுக்கப்பட்டது. இந்த அவமானம் தாளாமலேயே கிறிஸ்டோபர் தீக்குளித்துவிட்டார் என்று பாதிரியார் தரப்பில் சொல்கிறார்கள். தலித்துகள் தற்கொலை செய்து கொள்வதற்கு இந்தச் சமூகத்தில் ஏராள வாய்ப்புகள்!
சொல்லப்போனால், கிறிஸ்டோபரின் தற்கொலை ஒரு கௌரவத் தற்கொலை! கெளரவக் கொலை இருந்தால் கெளரவத் தற்கொலை இருக்கும் தானே. கிறிஸ்தவராக இருந்தாலும், ‘மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்’ என்ற தமிழ் மரபில் கிறிஸ்டோபர் தோய்ந்து போயிருக்க வேண்டும். ஆனால், அதைத் தப்பும் தவறுமாய் செய்ததால்தான் இவ்வளவு குழப்பமும்.
கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்தை தலித் கிறிஸ்தவர்கள் நம்பவே இல்லை. அவர்களுக்குத் தெரியாதா என்ன? கெளரவம் பார்த்தெல்லாம் தற்கொலை செய்ய ஆரம்பித்தால் ஒரு தலித் கூட உயிரோடு வாழ முடியாது!
அதிலும், திருவிழாக் கொடியைத் தொடாதே என்று சொல்வதெல்லாம் ஒரு கெளரவப் பிரச்சினையா? இதைவிடப் பெரிய அவமானங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு தலித்துகள் இன்னமும் உயிர் வாழ்ந்து வரவில்லையா? இந்தக் கோணத்தில் யோசிக்கும் பொழுது நம்மாலும் அது தற்கொலை என்று நம்ப முடியவில்லை. அப்படியானால், கிறிஸ்டோபருக்கு என்னதான் நடந்தது?
0
2011 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், ‘தாமிரபரணிப் படுகொலை’ நினைவு நாளுக்கு முந்தைய தினம், அதாவது 22ஆம் தேதி. திருச்சியிலுள்ள தூய பவுல் குருமடத்து ஒலிப்பெருக்கிகளும் ஒலி வாங்கிகளும் மாயமாய் மறைந்து போயின. மேஜிக்கல் ரியலிசம் மீது சுத்தமாய் நம்பிக்கை இழந்திருந்த பாதிரியார்கள், யாரோ அவற்றைத் திருடியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
வழக்கம் போல மூத்த பாதிரியார்களுக்கு வேலையாட்கள் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஒலி வாங்கிகளும் பெருக்கிகளும் மீன் தொட்டியில் கிடப்பதாய் தகவல் வந்தது. இப்பொழுதாவது, மீன்கள்தான் அவற்றை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். நம்பவைல்லை. துறவிகளிடம் அதி கற்பனையை எதிர்பார்ப்பதும் நம் தவறுதான்!
அவர்களது யோசனையே வேறு மாதிரி இருந்தது. ‘நடந்தது திருட்டு இல்லை; யாரோ வேண்டுமென்றே வீசியிருக்கிறார்கள். அதாவது, நடந்திருப்பது திருட்டு இல்லை, ஒழுங்கீனம்!’ இப்படித்தான், 2011ல் ஒரு நல்ல மேஜிக்கல் ரியலிஸக் கதை, துப்பறியும் கதையாகத் தடம் புரண்டது.
வேலையாட்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது இல்லை என்று மூத்த குருக்களுக்கு நன்றாகவே தெரியும். வறுமை காரணமாக ஒன்றிரண்டு திருட்டு வேலைகளைச் செய்வார்கள். அதுவும் அபூர்வமாகத்தான்! மற்றபடி விஷமக் காரியங்களில் இறங்கவே மாட்டார்கள். கடவுள் மீதும் திருச்சபை மீதும் தீவிர விசுவாசம் கொண்டவர்கள். அப்படியானால், இதைச் செய்த அந்த விஷமி யார்?
விஷமி வெளியிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று மூத்த பாதிரியார்கள் நம்பினர். அத்தனைக் கட்டுக்காவல் நிரம்பியது குருமடம். மூத்த பாதிரியார்கள், வளரும் பாதிரியார்கள், வேலையாட்கள் – இவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது.
இப்பொழுது சந்தேகத்தின் நிழல் வளரும் பாதிரியார்கள் மீது விழுந்தது. அனைவரும் இளைஞர்கள். பாதிரியார் பட்டம் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். இன்னும் ஓரிரு மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ குருவாக மாறப்போகிறவர்கள். அவர்களின்மீதுதான் சந்தேகம் வந்தது.
பிரச்சினை சாதாரணமானது அல்ல. ஏதோவொரு ‘கறுப்பு ஆடு’ மந்தைக்குள் புகுந்துவிட்டது என்ற எல்லைக்கு அதை யோசித்தார்கள் (நமக்குத் தேவைப்படுகிற அத்தனை உவமானங்களும் எப்படிக் கச்சிதமாக ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள்). அதன் பின் நடந்தது அனைத்தும் விறுவிறுப்பான க்ரைம் கதை.
துப்பறியும் குழு அமைத்தார்கள். பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. நிகழ்ந்த பாவத்தின் விகாசத்தை வளரும் பாதிரியார்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ‘ஒழுங்கீனமே பாவத்திற்கெல்லாம் பாவம், சாவான பாவம்!’ அது, ஏவாள் தின்ற ஆப்பிளைப் போன்றது.
‘குற்றவாளி முதலில் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். பகிரங்கமாய் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றுகூட அவசியமில்லை. ரகசியமாய் வந்து சொன்னாலே போதும். அவ்வாறு செய்தால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார். அதாவது, மன்னிக்கப்படுவார்!’ என்று மூத்த பாதிரியார்கள் உறுதிமொழி வழங்கினர்.
ஆனால், குருமாணவர்கள் யாரும் குற்றத்தை ஒத்துக்கொள்ள முன்வரவில்லை. கிறிஸ்தவம் பாவிகளை மன்னிக்கிற லட்சணத்தை நம்மைவிட வளரும் பாதிரியார்களே நன்கு அறிவார்கள்!
இதனிடையே, துப்பறியும்குழு ஆறு குரு மாணவர்களைத் தனது சந்தேக வலைக்குள் கொண்டு வந்தது. ஆனால், அவர்கள் தங்களை நிரபராதி என்றார்கள். ஆறு பேரிடமும் தனித்தனியாக, விதவிதமாகப் பேசிப்பார்த்தார்கள். ’உண்மை உங்களை விடுதலை செய்யும்’ என்றுகூட சொல்லிப் பார்த்தார்கள். அவர்கள் எதற்கும் மசியவில்லை.
இப்பொழுது குற்றத்தின் கனப் பரிமாணம் கூடத் தொடங்கியது. இது இனிமேலும் ஒழுங்கீனமோ, விஷமத்தனமோ மட்டும் அல்ல, இது கலகம். குருமடத்தின் அதிகாரத்திற்கு எதிரான கலகம்! திருச்சபைக்கு எதிரான கலகம்!
கலகம், கிறிஸ்தவத்தில் கெட்டவார்த்தை. அதனைப் பொறுத்தவரை உலகில் ஒரே ஒரு கலகக்காரன்தான் உண்டு. அவனையும் கொன்று கடவுளாக்கிய பின்பு வேறு கலகக்காரர்களுக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை. எனவே கலகத்தை ஒடுக்கக் குரு மடம் தயாரானது.
2011 ஆகஸ்ட் 13ம் நாள், அக்குருமடத்தின் அதிபர், சந்தேகத்தின் பேரில் அந்த ஆறு மாணவர்களையும் குருமடத்திலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டார். ஏறக்குறைய பதிமூன்று வருடங்கள் வெவ்வேறு சமய வல்லுனர்களிடமும், அறிஞர்களிடமும் பயிற்சி பெற்று, வெகுவிரைவில் குருப்பட்டமும் பெறவிருந்த அந்த ஆறு குருமாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
ஆறு பேரும் நிலைகுலைந்து போனார்கள் என்று சொல்லவேண்டும். அவர்கள் இவ்வளவு அதிரடியான முரட்டுத்தனத்தை நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஒலிவாங்கியை யாரோ மீன் தொட்டியில் வீசியிருக்கிறான் என்பதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? இப்படியொரு சமூக விலக்கமா?
0
வரலாறு என்று சொல்லத்தக்க பழைய கதைகளை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
கிறிஸ்தவம் என்பது பொதுவான பெயர் என்றாலும், கத்தோலிக்க கிறிஸ்தவம் (Roman Catholic) வேறு, சீர்திருத்த கிறிஸ்தவம் (Protestant) வேறு. இவ்விரண்டு மதத்திற்கும் ஆகப்பெரிய வித்தியாசம், யார் கடவுள், யார் பூசாரி என்பதுதான்.
கத்தோலிக்க கிறிஸ்தவம் பூசாரிகளின் மதம். உலகளாவிய குருமார்களின் வலைப்பின்னலைக் (போப் முதல் பங்குச் சாமியார் வரை) கொண்டது. கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் சந்நியாசிகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்படுகிறது. குடும்பஸ்தர்கள் சகல பலவீனங்களையும் உடையவர்கள் என்பது அதன் நம்பிக்கை. பாலியல் வேட்கை அப்படியொரு பலவீனம்.
கிறிஸ்தவ குரு பாலியல் வேட்கையைத் தியாகம் செய்தவர். பத்துப் பதினைந்து வருடங்கள் முறையான சமயப் பயிற்சியையும் பெற்றவர். இந்தத் தனிமனித ஒழுக்கம், நிறுவன ஒழுக்கம் – இவை கலந்த கலவையே கிறிஸ்தவ சந்நியாசம். ஆனாலும் இவையெல்லாம் மானுட முயற்சிகள் மட்டுமே. குருவாக மாறுவதற்கு மானுட யத்தனங்கள் மட்டும் போதுமானதில்லை.
இதற்கெல்லாம் அப்பால், தேவனின் சித்தமும் வேண்டும் என்கிறார்கள். இதற்கு ‘தேவ அழைத்தல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, கடவுள் வெகு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்துத் தன் பின்னால் வருமாறு அழைக்கிறார்.
‘மீன் பிடிக்கிற உன்னை, மனிதர்களைப் பிடிப்பவனாக மாற்றுவேன். என் பின்னால் வா!’
‘எத்தனை ராஜ்ஜியங்களை வென்றுதான் என்ன பயன்? ஒரு மனிதனைக்கூட உன்னால் வெல்ல முடியவில்லையே! போ. போய் மனிதர்களின் ஆன்மாவை வெல்!’
இப்படி உதாரணத்திற்கு நிறைய கதைகளைச் சொல்கிறார்கள்.
இது போல கடவுள் ஒவ்வொரு குருவானவரிடமும் வந்து பேசுகிறார். ‘என் பணிக்கு வா’, என்று அழைக்கிறார். அதற்கு, தேவ அழைத்தல் என்று பெயர். அந்த ஆறு பேருக்கும் இந்தக் கொடுப்பினை இல்லை என்று சொல்லப்பட்டது. கடவுள் அவர்களை ‘வா’ என்று சொல்வதற்குப் பதில், ‘போ’ என்று விரட்டினார். அதாவது, தேவனால் விரட்டப்பட்டவர்கள்!
0
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசித்து வரும் பழங்குடியினம், காணிக்காரர். அவர்கள் பூசாரியை ‘பிலாத்தி’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒரு பிலாத்தி உண்டு. பூசாரி என்றால், கடவுள் காரியங்கள் மட்டும் அல்ல, அந்தப் பழங்குடியின் மருத்துவரும் அவர்தான். அதனால், பிலாத்திக்குத் தனி மரியாதை உண்டு. பிலாத்தியாக மாறுவது ரொம்ப சிரமம். சடங்கு, சம்பிரதாயம், மருத்துவம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. தெய்வத்தின் அனுக்கிரகமும் வேண்டும். தெய்வமா என்றால்…
‘கனவுல வந்து கூப்பிடும். ‘வந்துரு. என்கிட்ட வந்துரு.’ அப்படியே எந்திரிச்சி போறதுதான். எங்க போறம், எதுக்கு போறம், எப்ப வருவோம் எதுவுமே தெரியாது. அது நம்மள கூட்டிட்டு போகும். அப்படி சமயத்துல கண்ணு தெரியாதும்பாங்க. கூட்டிட்டு போயி காட்டுல உள்ள எல்லாத்தயும் காட்டித் தரும். ஒரு மாதிரி பித்து புடிச்ச மாதிரி இருக்கும். நினவு இருக்காது. யாரு என்னங்கிற நிதானம் தெரியாது. எந்த லெக்குன்னும் கூட புரியாது. சுத்தி காடுதான். தண்ணிக்குள்ள முங்கிட்ட மாதிரி காட்டுக்குள்ள முங்கிறது. எத்தன நாளு இப்படி திரிவாங்கனு தெரியாது. மேலெல்லாம் பாசி படந்து, ஒரு மாதிரி பச்ச வாசம் அடிக்கும். அட்ட கூட கடிக்காது. தவறி ஏறுன அட்ட கூட, ஏதோ மரமாக்கும், விழப்போகுது போலனு அவசர அவசரமா ஒத்த காலால நொண்டி அடிச்சு எறங்கிரும். எப்ப நினவு திரும்புமோ தெரியாது. ஆறு மாசமோ ஒரு வருசமோ… மொத்த காணியும் அந்த ஆளையே மறந்தாமாதி இருக்கும்போது, வந்து நிப்பாரு! பாத்தோன்னயே புரிஞ்சிரும், புது பெலாத்தினு. அதுக்கப்புறம், சாமி, சடங்கு, நோவு, நொடி… எல்லாத்துக்கும் அவருதான். அந்த ஆறு மாசமோ ஒரு வருசமோ எங்க போனோம், எங்க வந்தோம், யாரு கூட்டிட்டு போனா… எதுவுமே அவுருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது. இந்தப் பொதிக மலையில ஆயிரத்தெட்டு தெய்வம் இருக்கு. யாரு பெலாத்தினு அதுகதான் முடிவு பண்ணனும்.’
0
குருமடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆறு மாணவர்களும் இனி கேலிக்கான பொருளாகிவிடுவார்கள். சக கிறிஸ்தவர்களின் ஏளனத்தையும், எகத்தாளத்தையும் எதிர்கொண்டே இனி அவர்கள் வாழவேண்டும். இதை விடவும் முக்கியமாக, இனி அவர்களால் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் பொருளாதார அதிகாரத்தைக் கொஞ்சம்கூட நெருங்க முடியாது. அந்தப் பதவிக்காக ஏறக்குறைய தங்களது இளமைப்பருவத்தையே அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள். அவர்கள் கற்ற கல்வி (ஆங்கிலம், தத்துவம், கிறிஸ்தவ சட்டம்) வெளி உலகில் எந்தக் காசுக்கும் பிரயோஜனமில்லை. வெளியேற்றப்பட்ட அவமானமும், எதிர்காலம் குறித்த பயமும் மட்டுமே அவர்களிடம் மிச்சம் இருந்தன.
நிச்சயமாய் அதுவொரு கொடூரத் தண்டனை. எவ்வளவு தூரம் கொடுமையானது என்றால், உண்மையான குற்றவாளியை அது வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்தது. எப்பொழுதுமே தண்டனைதான் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது; மன்னிப்போ கற்பனைகளின் தோட்டம்.
அந்த ஆறு பேரில் ஒருவர் ‘நாந்தான் அந்தக் குற்றவாளி’ என்றார். அவர் பெயர் ஆரோக்கியசாமி. தனது தவறுக்காக ஐந்து நிரபராதிகள் பலியாவது குற்றவுணர்வுக்குள் தள்ளியதாய் அவர் வாக்குமூலம் கொடுத்தார். குற்றவுணர்வின் பளுவைத் தாங்கமுடியாமலேயே அவர் உண்மையை ஒப்புக்கொள்ள முன்வந்தாராம்.
அவரது வாக்குமூலத்தை மூத்த பாதிரியார்கள் வெற்றிப்புன்னகையோடு ஏற்றுக்கொண்டனர். கூடவே, காலாவதியான உண்மை என்றைக்குமே காப்பாற்றாது என்றும் தெரிவித்தார்கள். மன்னிப்பதற்கான பொழுது கடந்துவிட்டது. ரெக்ஸ்டன் கவலைப்படவில்லை; தண்டனையை முழு மனதாக ஏற்றுக்கொண்டு குரு மடத்திலிருந்து வெளியேறினார்.
‘உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்; இனி தாங்கள் நிரபராதி’ என்றே மீதமிருந்த ஐந்து மாணவர்களும் நினைத்தார்கள். ஆனால், மடம் வேறு மாதிரியாய் யோசித்தது.
கறந்த பால் மடி புகாது! நிரபராதிகள் என்றாலும், குற்றவாளியைக் காட்டித்தராததும் ஒரு குற்றமே என்றார்கள். எனவே அவர்களை மீண்டும் குருமடத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றனர்.
இப்பொழுது நிரபராதிகளுக்கு ஆதரவாய் மடத்திலிருந்தே சில குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. ‘அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். எல்லா பாவங்களுக்கும் கிறிஸ்தவத்தில் மன்னிப்பு உண்டு.’
இந்தச்சூழலில் ஒரு மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ‘அந்த ஐவரும் விரும்புகிற பட்சத்தில், அவர்கள் வேறு குருமடங்களிலோ அல்லது வேறு சபைகளிலோ சேர்ந்து கொள்ள ஆவன செய்யப்படும்!’ அதாவது, வெளியேற்றப்பட்டது இந்தக் குருமடத்திலிருந்து மட்டும்தான்; கருணையின் அடிப்படையில் அவர்கள் விரும்புகிற வேறு குருமடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
சொல்லப்போனால், இந்த மாற்றுத் திட்டம் பரவலான வரவேற்பையே பெற்றது. வெளியேற்றப்பட்ட குரு மாணவர்கள் அவசர அவசரமாய் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வேறு மடங்களிலும், சபைகளிலும் போய் சேர்ந்து கொண்டனர்.
ஒரே ஒருவரைத் தவிர!
அந்த ஒரே ஒருவரின் பெயர் அடைக்கலம்! அவர் ஒரு தலித் கிறிஸ்தவர்! ராமநாதபுர மாவட்டத்திலுள்ள ஓரியூரைச் சார்ந்தவர். நம்ம கிறிஸ்டோபரின் ஊர்.
அவர் மட்டும், ‘இந்த மாற்றுத் திட்டம் சூழ்ச்சியானது’ என்றார். ‘குற்றமற்ற எனக்கு அநீதி இழைக்கப்பட்டது; அதற்குத் தகுந்த நீதி வழங்க வேண்டும்’, என்றார். மேலும், தன்னைப் பழிவாங்கியதில் வரலாற்றுக் காரணம் இருப்பதாகவும் சொன்னார். சமய அதிகாரிகள் தனது சுயமரியாதையை கொச்சைப்படுத்தினார்கள் என்றார். தன் மீது சுமத்தப்பட்ட பழி, ஒட்டுமொத்த தலித் கிறிஸ்தவர்கள் மீது உயர் சாதி கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்விலிருந்தும், விரோதத்திலிருந்தும் உருவானது என்றார். இந்த அவமானத்திற்கு மூத்த பாதிரியார்கள் பதில் சொல்லவே வேண்டும் என்றார். தலித் கிறிஸ்தவர்களின் சுயமரியாதை மீட்கப்பட வேண்டுமென்றால், தன்னை மீண்டும் அதே குருமடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போராடத் தொடங்கினார்.
0
இப்பொழுது ஒட்டுமொத்த விவகாரமும் தடாலென்று வேறு தடத்தில் பயணிக்கத் தொடங்கியது. சாதாரணக் கலகமாக இருந்தது, தீண்டாமைக்கு எதிரான கலகமாக மாறியது. தனது தரப்பு நியாயமாக அடைக்கலம் முன்வைத்த வாதங்கள் கிறிஸ்தவத்துள் கடைபிடிக்கப்படும் தீண்டாமையின் கோரமுகத்தைக் காட்டத் தொடங்கின.
தலித் கிறிஸ்தவ அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, சிவகங்கைப் பகுதியிலிருந்து, இது நாள் வரை, எந்தவொரு பள்ளரும் பாதிரியாராக முடியாதபடிக்கு கிறிஸ்தவ சாதியமைப்புகள் கவனமாக இருந்து வருகின்றன. அந்தப் பகுதியில் கணிசமாக வாழ்ந்து வரும் உடையார் சாதியினர் இதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இது இந்திய கிறிஸ்தவத்தின் பொதுவான குணம். கிறிஸ்தவ தலித் அமைப்புகளின் கணக்குப்படி கிறிஸ்தவர்களில் 75 சதவீதத்தினர் தலித் மக்களே. ஆனால், அதிகாரம் முழுக்க உயர் சாதி கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது நீண்டகால குற்றச்சாட்டு.
இதற்கு சிவகங்கை மறைமாவட்டம் வலுவானவொரு உதாரணமாக இருக்கமுடியும். அம்மாவட்டத்தின் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் 150 பாதிரியார்களில் 85 பேர் உடையார் சாதியினர். மீதமுள்ள 65 பேரும் கூட உயர்சாதி கிறிஸ்தவர்கள்தான். மருந்துக்குக்கூட ஒரு தலித் கிறிஸ்தவப் பாதிரியார் இல்லை.
0
பிற்படுத்தப்பட்ட தமிழ்ச் சாதிகளின் வெறியாட்டம் குறித்துப் பேசுகிற எந்தப் பேச்சிலும் ‘உடையார்’ என்ற குறிப்பை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அவ்வளவு சாந்தமான சாதியோ என்று நீங்கள் சந்தேகப்படலாம். ஆனால் உண்மையில், வேறெந்தவொரு பிற்படுத்தப்பட்ட சாதியைப் போலவே உடையார்களும் முரட்டுத்தனமான சாதி அபிமானிகள்தாம். என்ன, ஒட்டுமொத்தமாய் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியர்கள் என்பதால் அதிகம் கண்டுகொள்ளப்படாதவர்கள்.
கிறிஸ்தவத்தில் சாதி என்பது இன்றைய நேற்றைய பிரச்சினை இல்லை. என்றைக்கு, ஐரோப்பிய மிஷனரிகளின் கைகளிலிருந்து அதிகாரம் இந்தியப் பாதிரியார்களின் கைகளுக்கு வந்ததோ அப்போதிருந்து இந்தப் பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வெள்ளாள கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று பிற்படுத்தப்பட்ட சாதிகள் கலகம் செய்த காலகட்டமும் கிறிஸ்தவத்துள் உண்டு. கிறிஸ்தவத்துள் பிராமணர்கள் இல்லாத குறையை வெள்ளாளர்களே தீர்த்து வைத்தனர். அதே மாதிரியான புறக்கணிப்பு; அதே மாதிரியான நக்கல், குசும்பு; அதே போன்ற சாதிப் பெருமை, சாதித் திரளள்; அதே போன்ற கோவில் ஆக்கிரமிப்பு; கிறிஸ்தவ வெள்ளாளர்கள் பிராமணர்களின் தமிழ் டப்பிங் மாதிரி.
என்ன…. சமஸ்கிருதத்திற்குப் பதில் ஆங்கிலம். ஆங்கிலம் தங்களுக்குத் தெரியும் என்ற பெருமையை மீறி, அடுத்த சாதிகளுக்கு அது தெரியாது என்று நிரூபிப்பதே அவர்களது மூலதனம். இதனால் வெள்ளாளக் குடியிருப்புகளுக்கு ‘இரண்டாம் சாதி அக்ரஹாரம்’ என்றொரு செல்லப்பெயரும் உண்டு. புபியின் நாசகார கும்பலை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளாள ஒடுக்குமுறைக்கு எதிரான பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சாதிகளின் எழுச்சிதான் ‘வடக்கன்குள கோவில் பிரச்சினை’! (ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ‘கிறிஸ்தவமும் சாதியும்’ படித்திருக்கிறீர்கள் தானே?) அதன்பின் காலப்போக்கில் வன்னிய கிறிஸ்தவர்கள், உடையார் கிறிஸ்தவர்கள், பரதவ கிறிஸ்தவர்கள், நாடார் கிறிஸ்தவர்கள் என்று கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் வளங்களை பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளத் தொடங்கின.
இந்தக் களேபரத்தில் எப்போதும் போல் தலித் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. வரலாறு மட்டுமல்ல, வரலாற்றை எழுதும்போதுகூட தலித் கிறிஸ்தவர்களை மறந்துவிட்டு எழுதுவதுதான் அடித்தளவரலாற்று எழுதியலும்கூட!
0
‘அடைக்கலம், குருமடத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்; இது வரையில் அவரை எந்தவொரு குற்றச்சாட்டும் சொல்லி வெளியே அனுப்பிவிடவில்லை; எனவே, அவர் பாதிரியாராக மாறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன’ என்பது அவரது சொந்தக்காரர்களின் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆசையாகவும் இருந்திருக்கிறது. அந்தப் பகுதியிலிருந்து உருவாகப் போகிற முதல் தலித் பாதிரியார்!
கிறிஸ்தவ குருவாக மாறுவதுதான் கிறிஸ்தவ அதிகாரக் கோபுரத்தின் தரைத் தளம். இங்கே ஆரம்பித்து நீங்கள் படிப்படியாக உயர்ந்து போப்பாண்டவராகக் கூட ஆகலாம். ஆகலாம்தான் ஆனால், விடமாட்டார்கள். மிகக் கொடூரமான இனத்துவேசம் நிலவுகிற இடம் இது. உச்சியில் இனத்துவேசம் நிகழ்கிறது என்றால், அதன் கீழ்த்தளத்தில் சாதித்துவேசம்.
தலித் சமூகத்திலிருந்து பாதிரியாராக விரும்புகிறவர்களை முளையிலேயே கிள்ளி எறியும் பல்வேறு உத்திகளை இந்தியக் கிறிஸ்தவம் கற்று வைத்திருக்கிறது. அதில் முக்கியமானது, இது போல் பாதிரியார் பயிற்சிக் கூடத்திலேயே வடிகட்டிவிடுவது. ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு, குருமடத்திலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் ஏராளம், ஏராளம்.
அடைக்கலத்தை குருமடத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தை ஓரியூர் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். அதை முன்னின்று நடத்தியவர், கிறிஸ்டோபர். வழக்கம் போல, அது அடைக்கலம் என்ற ஒற்றை பிரச்சினை மட்டுமல்லாது, கிறிஸ்தவத்தினுள் நடக்கும் எல்லாவித ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்கும் சூழலை ஏற்படுத்தித் தந்தது. தலித் கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாக சமத்துவத்தையே கேட்டு வந்தனர்.
இந்தக் கோரிக்கை, 1986லிருந்து வலுவாக ஒலிக்க ஆரம்பித்தது. கிறிஸ்தவம் சமத்துவத்தைப் போதிக்கிறது என்றால், தனது எல்லா தளங்களிலும் அதை முதலில் நடைமுறைப்படுத்தட்டும் என்பதுதான் முதலும் முடிவுமான கோரிக்கை. பிற தலித்துகள் கேட்டது போல, ஒதுக்கீடுகள் வேண்டும் என்று மட்டுமே தலித் கிறிஸ்தவர்கள் கேட்கவில்லை. அவர்கள், எல்லா இடங்களிலும் சமத்துவத்தை வலியுறுத்தினார்கள். தலித் பிஷப்புகள் வேண்டும் என்றார்கள்; தலித் குருக்கள் வேண்டும் என்றார்கள்; தலித் கல்விக்கூடங்கள் வேண்டும் என்றார்கள் (தமிழகத்தில் அவர்கள், ‘சென்னை, லோயோலா கல்லூரியை தலித் கல்லூரியாக அறிவிக்கச் சொன்னார்கள்), தலித் மறைமாநிலம் வேண்டும் என்றார்கள்; கல்விக்கூடங்களில் தலித் மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு வேண்டும் என்றார்கள்; வேலை வாய்ப்புகளில் சரி பாதி கேட்டார்கள். ஏறக்குறைய 75% கிறிஸ்தவர்கள் தலித்துகளாக இருக்கும் தமிழகத்தில் தாங்கள் கேட்பது விகிதாச்சாரப் பங்கீடு அல்ல; சமமான பங்கீடு என்று சொன்னார்கள்.
இந்திய இறையாண்மையைப் போலவே, கிறிஸ்தவ இறையாண்மையும் படிப்பதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்குமான சலுகைகளை இப்பொழுது வாங்கிக் கொள்ளுங்கள்; உங்கள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்டுவோம்; அதை நோக்கி ஜனநாயகப் பாதையில் நாம் பயணிப்போம் என்று சொன்னபோது, தலித் கிறிஸ்தவர்கள் சொன்ன பதில் முக்கியமானது, வித்தியாசமானது.
‘சலுகைகளை வேண்டி நாங்கள் வந்திருக்கவில்லை. எங்களுக்கு வேண்டியது சமத்துவம். இந்தியக் கிறிஸ்தவத்தின் எல்லா வகை அதிகார தளங்களிலும் சமத்துவம். நீங்களும் நாங்களும் சமம் என்ற புள்ளியிலிருந்தே அனைத்தையும் தொடங்க விரும்புகிறோம்.’
தமிழகத்தில் நடைபெற்ற தலித் கிறிஸ்தவர் விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக இந்தக் கோரிக்கையைச் சொல்ல முடியும். எல்லாவற்றையும் சமத்துவத்திலிருந்து ஆரம்பிக்கச் சொன்னது. ஜாக் ரான்சியர் சொல்வது போல, ‘Equality was not an end to attain but a point of departure, a supposition to maintain at every circumstance’ (The Ignorant Schoolmaster). ‘சமத்துவம் என்பது அடைய வேண்டிய இலக்கு அல்ல; தொடங்க வேண்டிய புள்ளி. ஒவ்வொரு தருணத்திலும் காக்க வேண்டிய விழுமியம்’. ஆனால், அந்தப் பயணம் குழப்பமும், கூச்சலும், தற்கொலைகளும், கொலைகளும் நிகழும் அமைதியற்ற நிலத்தை ஊடுறுவி நிகழும். ஏனெனில், நாம் அமைதி என்று நினைத்துக் கொண்டிருப்பது, ஏற்றத்தாழ்வுகளை சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி. அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு நீதி வழங்கும் அமைதி, கலவரமாகவே தெரியும்.
0